Sunday, February 12, 2017

டெக்ஸஸ் மாநிலத்தில் திருக்குறள் ஓதும் போட்டியும் தமிழ்ச்சங்க நிகழ்வுகளும்



சாஸ்தா அறக்கட்டளையின் 10வது திருக்குறள் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. வட அமெரிக்காவின் டெக்சஸ் மானிலத்தின் தலைநகரான டல்லாஸ் மானிலத்தில் இயங்கும் அமைப்பு இது. இந்த அறக்கட்டளையைத்  தோற்றுவித்து அதனை செவ்வனே செயல்படுத்தி வருகின்றனர் திரு.வேலு திருமதி விசாலாட்சி வேலு இருவரும். இந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய 10வது திருக்குறள் ஓதும் போட்டியின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நான் அழைக்கப்பட்டிருந்தேன்.




260 பேர் திருக்குறள் மனனம் செய்து ஓதும் போட்டியில் கலந்து கொண்டனர். 60 குழந்தைகள் திருக்குறள் பொருட்காட்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். 20 குழந்தைகள் திருக்குறளைப் பற்றி கட்டுரை எழுதும் போட்டியில் கலந்து கொண்டனர்.

நேற்று டாக்ஸசின் ஃப்ரிஸ்கோ நகரின் செண்டேனியல் உயர் நிலைப்பள்ளியின் அரங்கில் திருக்குறள் ஓதிய அனைவருமே சிறப்பிக்கப்பட்டனர்.

காலையில் 4 வெவ்வேறு அறைகளில் பேச்சுப் போட்டிகள் மாணவர்களின் தமிழ் அறிவு நிலைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை முடித்து திருக்குறள் பொருட்காட்சியும் அதன் விவரணையும் நடைபெற்றது. தனிப்பட்ட முறையில் என்னை மிகக் கவர்ந்த ஒரு நிகழ்வாக இந்தப் பொருட்காட்சிப் போட்டி  அமைந்திருந்தது. இதற்குக்காரணம், பெற்றோர் அல்லது ஏனைய பெரியோரின் துணையின்றி குழந்தைகள் தாமே தாங்கள் உருவாக்கிய காட்சிப்பொருளைத் தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் திருக்குறட் பாக்களோடு விளக்கிச் சொல்லி தங்கள் படைப்புக்களை வருகை தந்தோருக்கு விளக்கிக்காட்டினர்.

குழந்தைகளில் பெரும்பாலோர் தட்டுத்தடுமாறி தமிழில் பேசினாலும், திருக்குறளைத் தமிழிலேயே எழுதி வாசித்ததைப் பார்த்தபோது நான் உண்மையில் மனம் மகிழ்ந்தேன். அதுமட்டுமன்றி அக்குறளின் பொருளைத் தக்க உதாரணங்களோடு அவர்கள் விளக்கும் போது எவ்வகையில் அவர்களது புரிதல் என்பது இருக்கின்றது என்பதனையும் என்னால் அறிய முடிந்தது. பொருளுணர்ந்து சொல்வது தானே பயன். இதனை சாஸ்தா அறக்கட்டளைச் சாதித்துக் காட்டியிருக்கின்றது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

இந்தப் போட்டிகளுக்குப் பின்னர், மூன்று சொற்பொழிவாளர்களின் உரைகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் பெரியோர்கள் வந்து கலந்து கேட்டு பங்கெடுத்துக்கொண்டனர் . இந்த கருத்தரங்கில் கலிபோர்னியாவைச் சேர்ந்த திரு.நா.உதயபாஸ்கரன், ஹூஸ்டனைச் சேர்ந்த திரு.கரு.மலர்ச்செல்வன் ஆகியோருடன் எனது சொற்பொழிவும் இடம்பெற்றது.

எனது உரையில் திருக்குறளின் ஐரோப்பிய மொழிகளிலான மொழிபெயர்ப்புக்கள் பற்றிய தகவல்களைக் காட்சிப்படங்களுடன் விளக்கமளித்தேன். எனது உரைக்குப் பின்னர் எழுந்த கேள்விகளும், கருத்துக்களும் வந்திருந்தோர் இத்தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் உள்வாங்கிகொண்டிருப்பதை எனக்குப் புலப்படுத்தியது. இது எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது.


இதற்குப் பின்னர் மதியம் நடந்த பரிசளிப்பு விழா மிகக் கோலாகலமாக ஃப்ரிஸ்கோ நகரப் பள்லியின் அரங்கில் நடைபெற்றது.  ஏறக்குறைய 60 பேர் அதிலும் குறிப்பாக டால்லஸ் நகரில் இயங்கு அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கான முதல் கட்ட திருக்குறள் மனனம் செய்து ஓதும் போட்டி ஜனவரி 28ம் தேதி நடைபெற்றது  என்றும் அன்றைய நாளில் மட்டும் திருக்குறள் ஏறக்குறைய எட்டாயிரத்து அறுநூறு முறை ஓதப்பட்டது என்று அறிந்த போது மெய்சிலிர்த்துப் போனேன். இந்த விழாவினை ஒட்டி நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளில் என எண்ணிப் பார்க்கும் போது நேற்றுவரை இந்த நிகழ்வின் தொடர்பில் ஏறக்குறைய பத்தாயிரம் முறை திருக்குறள் ஓதப்பட்டுள்ளது என்பது ஒரு சாதனை தானே. அதிலும் 10வது ஆண்டு நிறைவு விழாவில் பத்தாயிரம் முறை திருக்குறள் ஒதப்பட்டுள்ளது.. அதிலும் தமிழகம் கடந்த வட அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் எனும் போது இதனைச் சிறப்பித்துக் கூற வேண்டியது நம் கடமை அல்லவா?

பரிசளிப்பு மேடையில் எல்லா குழந்தைகளும் மேடையேற்றப்பட்டு நினைவுச்சின்னங்களும் பரிசகளும் பெற்றது ஒரு இனிமையான நிகழ்வு. பரிசுகள் பெற்ற குழந்தைகள் அகமும் முகமும் மலர்ந்து மழலை பேசி ஆடி ஓடி மகிழ்ந்திருந்தனர். அவர்கள் திருக்குறளைப் பெருமையுடன் சொல்லிப் பார்த்து நடமாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது எத்தகைய சாதனையை இந்த சாஸ்தா அறக்கட்டளையின் நிறுவனர்களான திரு.வேலு, விசாலாட்சி தம்பதியர் செய்திருக்கின்றனர் என நினைத்து மலைத்து வியந்து மகிழ்ந்தேன்.

இந்த நிகழ்வில் மேலும் ஒரு அதிசயமாக 1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்புவித்த செல்வி சீதாவின் சாதனையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். குடும்பத்தாரின் ஆதரவும் தூண்டுதலும் மட்டுமன்றி தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருக்குறளைக் கற்று ஓதுவது மட்டுமல்லாது மிகச் சரளமாகத் தமிழில் மேடையில் பேசினார் இந்த 17 வயது இளம் பெண்.

தமிழ் வாழுமா என பலர் பட்டிமன்றம் வைத்து விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழால் ஒன்றிணைந்தோம்.. திருக்குறளால் தமிழ் வளர்த்தோம் என சாதித்து வருகின்றனர் இந்த டால்லாஸ் பகுதி வாழ் தமிழ் மக்கள். அம்மக்களுக்குத் திருக்குறள் வழி தமிழ் முயற்சிகளை செயல்படுத்தி வரும் சாஸ்தா அறக்கட்டளை நிறுவனர்களுக்கும் ஏனைய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நான் எமது தமிழ் மரபு அறகக்ட்டளையின் நல்வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வளர்க உங்கள் தமிழ்ப்பணி!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

1 comment:

  1. வாழ்க சுபா வளர்க தமிழ் வாழட்டும் தலைமுறை !

    ReplyDelete