Sunday, February 19, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 4

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் மூன்றாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.வீ.செல்வகுமார் அவர்களின் “ இலக்கியத்தில் முசிறி, தொல்லியல் பட்டணம்” என்ற கட்டுரை.

சங்க இலக்கியத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் முசிறி என்ற நகரம் இன்று எந்த நகரம் என்ற ஆய்வினை வெளிக்காட்டும் கட்டுரையாக இக்கட்டுரை அமைகின்றது. முன்னர் இன்றைய பெரியாற்றின் வட கரையில் உள்ள கொடுங்களூர் (திருச்சூர் மாவட்டம்) என நம்பப்பட்டது. ஆனால் அண்மைக்கால ஆய்வுகள் இது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள  பரவூர் என்ற ஊரிலிருந்து அண்மையில் உள்ள பட்டணம் என்ற நகராகவே இருக்கலாம்  என்று இக்கட்டுரை முன் வைக்கின்றது.

முசிறி சேரர்களின்  கீழ் இருந்த துறைமுகமாக இருந்தது. 

1990களில் ஷாஜன் என்பவர் மேற்கொண்ட கள ஆய்வின் விளைவாகப் பட்டணம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2003ல் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வுகள் இந்த நகரின் முக்கியத்தௌவத்தை வெளிப்படுத்தின.. பின்னர் 2007 முதல் 2009 வரை கேரள வரலாற்றுக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகள், பட்டணம் மற்றும் கீழைக்கடற்கரையில் அமைந்திருந்த அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற முக்கியமான வணிக மையமாகத் திகழ்ந்தது என்பதை வெளிப்படுத்தியது.

பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  தோணி, படகுத் துறை ஆகியன, படகு பிணைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட தேக்குமரத் தூண்களும் மிகச் சிறப்பானக் கண்டுபிடிப்புக்கள். கி.மு 1 மற்றும் கி.பி.1ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இதுவரை  1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பானைகளின் துண்டுகள் கிடைத்துள்ளன. ஆக பட்டணம்  ஆய்வுகளின் அடிப்படையில் சங்க கால வாழ்விடம் என்பது உறுதியாகின்றது என இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.

பட்டணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகண்ட தமிழகத்தின் வரலாற்றுச் செய்திகள் மேலும் பல நமக்குக் கிடைக்கலாம். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பல தடைகள் இத்தகைய ஆய்வுகள் தொடரப்படாமல் இருப்பதற்கு நிகழ்ந்தன என்பது வருத்தத்திற்குறிய செய்தியே.


சுபா 

No comments:

Post a Comment