Saturday, February 11, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 1

ஸ்டுட்கார்ட்டிலிருந்து அட்லாண்டா பயணம் 10 மணி 45 நிமிடங்கள். 
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வெளியீடான "நாவாய்" என்ற நூலை வாசித்துக் கொண்டு வந்தேன். கடல் வணிகம், பண்டைய கப்பல் வகைகள், சங்க கால கடல் பயண முயற்சிகள், தமிழக துறைமுகப் பட்டினங்கள் என விரிவாக ஆராயும் பல ஆய்வுக் கட்டுரைகள் நிறைந்த நூல் இது. இதன் விமர்சனத்தை சிறிது சிறிதாக எழுதுகிறேன்.




நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 1

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரை தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.


இந்த நூலில் முதல் கட்டுரையாக இடம்பெறுவது தமிழறிஞர் க.வெள்ளைவாரணம் அவர்கள் எழுதிய ”தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வின் இன்றியமையாவை’ என்ற கட்டுரையைப் பற்றி சில கருத்துக்கள்.

இக்கட்டுரை ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என்றாலும் இதன் உட்பொருள் இன்றும் சிந்தனைக்கு அவசியமாகின்றது என்பதனால் நூலில் இணைத்திருக்கின்றனர்.

தமிழக நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் பற்றிய காலவிபரங்களைக் குறிப்பிடுகின்றார். அதில் குறிப்பாக தலைச்சங்க காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் ஓடிய பஃறுளி என்ற பெயருடைய குமரி ஆற்றைப் பற்றி சிலப்பதிகாரச்சான்றுக்குறிப்போடு விவரிக்கின்றார்.
தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மீனவர்கள் என அழைக்கபப்டும் பரதவர்கள் மிக விரிவாக கடல் வணிகத்தில் ஆளுமை செலுத்தியமை பற்றியும், மரக்கலங்கள், திமில் என்ற பெயர் கொண்ட படகுகளை உருவாக்கி தங்கள் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டமையை விவரிக்கின்றார்.

சங்ககாலத்தில் யவனர்கள் (கிரேக்கர்களும், ரோமானியர்களும்) இப்பகுதிகளுக்கு வணிக நோக்கமாக வந்து சென்றமை இலக்கியச் சான்றுகளுடன் குறிப்பிடப்படுகின்றது. மீன்கள் மட்டுமன்றி உப்பும் மிக முக்கிய வணிகப்பொருளாக இருந்தமையையும் அறிகின்றோம். கடற்கோளினால் முழ்கிய காவிரிப்பூம்பட்டினம், அதன் நகர அமைப்பு பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன். காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்த, பகுதியில் அரசு கடற்பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொண்டால் தமிழர் தொண்மை, நாகரிகம் பற்றிய பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புண்டு என்று குறிப்பிடுகின்றார்.

இக்கட்டுரை தமிழக கடற்கரை சார்ந்த நகரங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகளை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

இக்கட்டுரை குறிப்பிடும் கருத்துக்கள் இன்றும் தேவையான ஒன்றே. தமிழக கடற்கரைப்பகுதிகளில் போதிய அளவு ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடத்தப்பட வில்லை என்பது தொல்லியலாளர் பலரது கருத்துக்களாகவே நிற்கின்றன. அரசு விரிவான கடல்சார்ந்த தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி உதவி வழங்கி இவ்வகை ஆய்வுகள் நடைபெற உதவ வேண்டியது கடமை.
-சுபா

No comments:

Post a Comment