Saturday, May 21, 2016

ஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - வரலாற்று பார்வையில்




முன்னுரை

Dr.K.Subashini

உலகப்பொதுமறை என அழைக்கப்படும் சிறப்புடன் திகழ்வது திருக்குறள். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த தமிழ்ப் படைப்புக்களில் தலையாயதாக இடம் பெறும் நூலாகத் திகழ்கின்றது திருக்குறள். உலகில் புழக்கத்தில் உள்ள பல மொழிகளில் மொழி​ ​பெயர்க்கப்பட்ட நூலாகவும் இது திகழ்கின்றது. ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான ஜெர்மானிய மொழியில் (டோய்ச்) திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு  ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் மத்தியில் இந்த நூல், தமிழ் இலக்கியத்துக்கு ஓர் அறிமுகமாகிய வரலாற்றுச் செய்தியை விவரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஜெர்மானிய லூதரன் பாதிரிமார்களின் தமிழக வருகை
இந்திய நிலப்பரப்பில் லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு மறை ஓதும் பணியில் ஈடுபட்ட பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகையே இதற்கு தொடக்க நிலையை உருவாக்கிய வரலாற்று நிகழ்வாக அமைகின்றது.

லூதரன் கிருஸ்துவ மத பாதிரிமார்கள் மதம் பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு வருவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்க பாதிரிமார்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து தென்தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்ப நிலை பணிகளை மேற்கொண்டனர். 1612ம் ஆண்டில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி பெற்றனர்.  அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் (இவருக்கு அச்சுதப்ப நாயக்கர் என்ற பெயரும் உண்டு) அனுமதியோடு இந்த உரிமை பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். வர்த்தகம் செய்வது மட்டுமே ஜெர்மனியின் மார்ட்டின் லூதர் உருவாக்கிய லூதரேனியன் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்த டேனிஷ் அரசின் நோக்கமாக அமைந்திருக்கவில்லை. வர்த்தகத்தோடு மதம் பரப்பும் சேவையையும் செய்ய வேண்டும் என்பதை மன்னர் விரும்பியதால் 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு டேனிஷ்  அரச ஆணையுடன் முதல் அதிகாரப்பூர்வ மதம் பரப்பும் சமயக் குழு ஒன்று வந்திறங்கியது. இதில் இடம் பெற்றவர்கள் ஜெர்மானிய பாதிரிமார்கள் சீகன்பால்கும் ப்ளெட்சோவும்.

மதம் பரப்பும் பணிக்கு இவர்களுக்கு அடிப்படை தேவையாக இருந்தது தமிழ் மொழித்திறன். தமிழ் மொழியைக் கற்க ஆரம்பித்த சீகன்பால்க், லூத்தரன் பாதிரிமார்கள் தமிழ்கற்க உதவும் வகையில் இலக்கண நூற்களை எழுதினார். பல தமிழ் இலக்கிய நூல்களைத் தாம் கற்று,  ஜெர்மானிய மக்கள் தமிழ் கற்க உதவும் வகையில் சொற்பொருள் அகராதிகளை உருவாக்கினார். அவர் வாசித்த இலக்கிய நூல்களில் திருக்குறளும் அடங்கும் என்ற செய்தியை சீகன்பால்கின் கையெழுத்துக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. ( Jeyaraj, Daniel and Young, Richard Fox (transl. eds.): Hindu-Christian Epistolary Self-Disclosures: ‘Malabarian Correspondence’ between German Pietist Missionaries and South Indian Hindus (1712–1714), Wiesbaden: Harrassowitz Verlag, 2013, pp. 240 - 241.)  அப்போதைய நிலையில் திருக்குறள் அச்சு வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.

திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் 1812ம் ஆண்டில் திருக்குறள் மூலபாடம் என்னும் நூலை அச்சு வடிவில் பதிப்பித்தார் என்று அறிகின்றோம். தமிழ் மொழியில் தீவிர பற்றும் ஆர்வமும் கொண்டு நல்ல புலமை பெற்ற ஆங்கிலேயரான அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் 1819ம் ஆண்டில் ஆங்கிலத்திலும் அதன் பின்னர், ப்ரென்சு, ரசிய மொழி, ஸ்வீடிஷ் மொழி, ஜெர்மன் மொழி ஆகிய பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும், பணியை மேற்கொண்டிருந்தார் என அறிகின்றோம். இதற்கு முன்னரே போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர்  (Beschi ) அவர்கள் 1730 வாக்கில் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தார். வீரமாமு​னிவரின் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் ஐரோப்பிய சூழலுக்கு லத்தீன் மொழி வாயிலாக திருக்குறள் ஏற்கனவே அறிமுகம் பெற்றிருந்தது என்பதை நாம் அறிகின்றோம்.

ஜெர்மானிய மொழியில் திருக்குறள்






ஆயினும் முதன் முதலில் முழுமையாக ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக நமக்குக் கிடைப்பது  ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் என்ற ஜெர்மானிய லூத்தரன் மதபோதகர் (August Friedrich Cämmerer)  அவர்கள் மொழிபெயர்த்து முன்னுரையும் தந்து எழுதிய நூலாகும். எல்லிஸ் அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே ஜெர்மானிய டோய்ச் மொழியில் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.  இந்த நூல் 1803ம் ஆண்டு ஜெர்மனியில் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது.







இந்த நூலின் பெயர் Das Thiruvalluvar Gedichte und Denksprueche என்பதாகும். இந்த நூலைப் பற்றிய விரிவான அறிமுகம் ஒன்று 1807ம் ஆண்டு ஜெர்மனியின் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் வெளிவந்த  பொது இலக்கிய நாளேடு ஒன்றில் (Allgemeine Literatur Zeitung, 29.June 1807) பதிவாகியுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது.  இந்த நாளேட்டில் ஜெர்மனியிலிருந்து மதம் பரப்பும் பணிக்காக டேனீஷ் அரசின் ஆதரவில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்குச் சென்ற லூத்தரன் பாதிரிமார்களின் இலக்கியத் தேடல்களை மையப்படுத்தி விவரிக்கும் செய்தியாக இச்செய்தி அமைந்துள்ளது. அதில் சிறு அறிமுகத்துக்குப் பின்னர் இந்த நூலைப்பற்றிய விளக்கம் வருகின்றது. குறள்களின் மொழி பெயர்ப்பு, திருவள்ளுவர் பற்றிய செய்திகள் என்ற வகையில்  காமரர் அவர்கள் படைத்திருக்கும் இப்படைப்பை விவரிக்கின்றது இந்த நாளேட்டுச் செய்தி.



Das Thiruvalluvar Gedichte und Denksprueche  என்ற இந்த  நூல் முழுமையாக ஜெர்மானிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. நூலில் காமெரர் அவர்கள் முதலில்  தனது அறிமுக உரையை பதிகின்றார். தமிழகத்தின் தெய்வ வழிபாடுகள் சமூக நிலைகள், இலக்கியம் என சில தகவல்களை இப்பகுதியில் குறிப்பிடுகின்றார். அடுத்து திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சில தகவல்களைக் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த திருவள்ளுவரைப் பற்றிய கதைகளைக் குறிப்பிட்டு திருவள்ளுவரை இந்த நூலில் அறிமுகம் செய்கின்றார்.  அதன் பின் 1330 குறள்களுக்குமான மொழி பெயர்ப்பு இந்த நூலில் பத்து பத்தாக  வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.



காமெரர் அவர்களுக்குப் பின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய அறிஞர் கார்ல் க்ரவுல் அவர்கள் Der Kural des Tiruvalluver (Graul, Karl) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது கிழக்கு ஜெர்மனியின் லைப்ஸிக் (Leipzig:) நகரில் 1856ம் ஆண்டில் நூல் வடிவம் கண்டது. இந்த நூலின் பெயரின் தமிழாக்கம் திருவள்ளுவரின் குறள் என்பதாகும். 216 பக்கங்கள் கொண்ட இந்த  நூலில் க்ரவுல் அவர்கள் தனது முன்னுரை,  பரிமேலழகரின் உரை, அதற்கான தனது முன்னுரை எனத் தொடங்குகின்றார். திருக்குறளின் நேரடி மொழி பெயர்ப்பு என்றில்லாமல் நல்லெண்ணங்கள், நற்கருத்துக்கள், அரசரின் மாண்பு, பண்பற்ற இச்சையின் பண்பு என்பது பற்றி திருக்குறள் கூறும் கருத்தை முன் வைத்து இந்த நூலைப் படைத்திருக்கின்றார். காதலில் களவு, பெற்றோர் சம்மதத்துடனான திருமணம் என்ற தகவல்களையும் குறிப்பிட்டு திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என இறுதிப்பகுதியையும் சேர்த்து இந்த நூலை உருவாக்கியிருக்கின்றார். க்ரவுல் அவர்கள் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முடிவுரை
ஜெர்மனி மட்டுமன்றி ஜெர்மன் மொழியான டோய்ச் மொழி பயண்பாட்டில் உள்ள ஏனைய நாடுகளான டென்மார்க், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் இந்த இருநூல்களும் பொது மக்கள் வாசிப்பிற்கும் ஆசிய நாடுகளின் இலக்கியங்களை ஆராய விரும்புவோர் மத்தியிலும் அறிமுகமாக வழி ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆயினும் இந்த மொழி பெயர்ப்பும் இவற்றில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் முழுமையான பார்வையைத் தரும் வகையில் உள்ளனவா என்பது ஒரு கேள்வியே. உதாரணமாக தனது சூழலில் தமிழ் சமூக கட்டமைப்பில் உயர்சாதி என அழைக்கப்படும் மக்களிடம் மட்டுமே தமிழும் தமிழ் இலக்கியமும் கற்றமையினால் திருவள்ளுவரைப் பற்றிய நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட பார்வையில் வைத்து சில பகுதிகளில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. இது திருவள்ளுவரின் பின்புலத்தையும் கருத்தின் ஆழத்தையும் மொழி பெயர்ப்பில் சரியாக உட்படுத்தவில்லையோ என்ற அஐயத்தை ஏற்படுத்​த​த் தவறவில்லை. திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் விரிவான ஆய்வுத் தரவுகள் கிடைக்கின்ற இக்காலகட்டத்தில் ஜெர்மானிய மொழியில் மீண்டும் திருக்குறள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு  ஜெர்மானிய டோய்ச் மொழியில் மீள்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியக்கடமையாகின்றது. இதனைச் செய்வதன் வழி திருக்குறளைச் சரியான பார்வையுடன் ஜெர்மானிய மொழி பேசுவோர் மத்தியில் மீண்டும் அறிமுகப்படுத்த இயலும். தமிழ் மொழி ஐரோப்பிய சூழலில், அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் அறியப்படாத மொழி அல்ல. குறிப்பிட்ட  ஒரு சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையின் வழி தமிழ் போதிக்கப்படுவது இங்கு நிகழ்கின்றது. இந்த ஐரோப்பிய மாணவர்களுக்கு மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு சமகால ஆய்வின் அடிப்படையில் திருக்குறள் மீண்டும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டியது மிக முக்கிய நடவடிக்கை என்பதில் ​ஐயத்திற்கு இடமில்லை.

6 comments:

  1. முற்றிலும் சரியே. லூத்தரன் பாதிரியார்கள் தரங்கம்பாடியில் இcருந்து ஏராளமான ஓலைச்சுவடிகள் பற்றிக் குறிப்பிட்டது தங்களுக்கு ஞாபகம்இருக்கும். அவர்கள் மொழி பெயர்ப்பு அவர்காலச் சூழல் பாதிப்புடன்தான் இருக்கும். அதுவும் சரியே. ஏ.கே .இராமானுசம் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெருமை அவருக்கே உரியது. ஆனாலும் அவருக்குப் புரிந்த அளவில் மிகச் சிறப்பாக மொழி பெயர்ப்பும் விளங்கியது. அதில் சமயக் குரவோர் நால்வர் என்பதை அவர் Four Gypsies என்று மொழி பெயர்த்தார். ஆனால் "Four Great Religious Saints" என்று மொழி பெயர்ப்பு செய்திருத்தல் வேண்டும். இராமனுசம் செய்த தவறு குரவோர் என்பதற்கு பதில் குறவோர் என்று கொண்டு குறவன் குறத்தி என்ற பொருளில் நாடோடிகள் என மொழி பெயர்த்தார். ஏன்? எழுதியவர் ஒருபுறம் இருக்க அதன் உரையாசிரியர்கள் தன சமகாலக் கண் கொண்டு பொருள் கூறல் புதிதன்று. சிலப்பதிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையாசிரியருள் ஒருவர். அவர் தன சமகாலக் கருத்தைத் திணித்து தவறிழைத்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

    ReplyDelete
  2. Very Nice, Good Presentation Keepitup.

    ReplyDelete
  3. இனிய பதிவு, வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  4. You can find the entire translation of Kural in German here, but this one is translated by Albrecht Frenz and K. Lalithambal

    http://kuraltranslations.blogspot.in/search/label/08%20German%3A%20Die%20indische%20%C2%ABTirukkural%C2%BB

    ReplyDelete
  5. அரிய செய்திகளை உள்ளடக்கிய பயனுள்ள கட்டுரை.

    ReplyDelete