Monday, May 2, 2016

குறத்தியாற்றில் ஒரு பயணம்: குறத்தியாறு - நூல் விமர்சனம்

முனைவர்.க.சுபாஷிணி





கதைகள் இல்லையென்றால் உலகமே சுவாரசியமற்றுத்தான் இருக்குமோ?

எத்தனை எத்தனை கதை சொல்லிகள் இந்த உலகில் தோன்றி மறைந்து விட்டார்கள். கதை சொன்னவர்கள் மறைந்து விட்டாலும் சொன்னவர்கள் சொல்லிச் சென்ற கதைகள் மேலும் தன்னை வியாபித்துக் கொண்டு சலிக்காமல் வளர்ந்து வருவதைத்தான் உலகம் முழுவதும் காண்கின்றோம்.

உலகப் பெரும் நாகரிகங்களான மெசபட்டோமிய, அசிரிய, எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, கெல்ட் சமூகத்திய, இந்திய நாகரிகங்கள் அனைத்திலும் புராணக்கதைகள் என்ணற்றவை தோன்றின. புராணக்கதைகள் மனிதர்களை மையக் கதாமாந்தர்களாகக் கொண்டனவாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெறுவதாக அமைவது மாயா ஜாலங்கள் தாம். புராணங்கள் வழி புதுப்புது கடவுளர்கள் படைக்கப்பட்டார்கள். படைக்கப்பட்ட கடவுளர்களுக்கு உருவங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்குக் தனித்தனி தன்மைகள் வழங்கப்பட்டன. புராணங்களில் படைக்கப்பட்ட அக்கடவுளர்களிலேயே நல்லவர்களும் இருந்தார்கள், தீமை செய்யும் அசுரர்களும் இருந்தார்கள். புராண அவதாரங்கள் சில வேளைகளில் தவறுகள் செய்து அதனால் அவர்கள் தண்டனை பெறப்படும் நிகழ்வுகளையும் கதை சொல்லிகள் புராணங்களில் சேர்த்துக் கொண்டார்கள்.  தவறுகள் செய்வது, தண்டனை பெறுவது அல்லது சாபம் பெறுவது, பின்னர் பெற்ற சாபத்திலிருந்து மீள்வதற்காகப் பிராயச்சித்தம் செய்வது, பின்னர் அப்புராண கதாமந்தர்கள் தங்கள் செயல்களால் கடவுளர்களாக மக்கள் மனதில் நிலைபெறுவது என்பது வழி வழியாக உலகம் முழுவதும் எல்லா நாகரிகங்களிளும் நிகழ்ந்திருக்கின்றது.  நிலத்தின் தன்மையில் மாறுபட்டாலும், நாட்டின் எல்லைகள் வேறுபட்டாலும், பேசும் மொழிகள் வேறுபட்டாலும், வாழ்க்கை முறைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், மனிதர்கள் அடிப்படையில் ஒன்றுதானே. ஆக, புராணங்களைப் படைத்தல் என்பவை எல்லா மக்களிடத்திலேயும் ஆதிகாலம் தொட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு தடையற்ற நிகழ்வாகவே அமைகின்றது.

மனித குலத்தின் தேடுதல் என்பது அடிப்படை தேவைகளான  உணவு, உடை, பாதுகாப்பு, சந்ததி விருத்தி என்பது மட்டுமன்றி காணும் பொருள்களிலிருந்து காணாப்பொருளைத்தேடும் முயற்சிகளிலும் வியாபித்துக்கொண்டே செல்லும் தன்மை படைத்தது. இந்தத் தேடுதல்கள் தொடரும் போது மனிதர்கள்  தாம் கற்பனையில் உருவாக்கிய படைப்புக்களை ஏனையோருக்குச் சொல்லும் கதைசொல்லியாக அவதாரம் எடுக்கின்றனர்.

கதை சொல்லிதான் புராணங்களில் கடவுளர்களையும் தேவர்களையும் அசுரர்களையும்  படைக்கும் பிரம்மா. அவரே பலம் பொருந்தியவர். அவர் கற்பனையில் உதிக்கும் செயற்பாடுகளின் வடிவமாகவே புராணங்களில் உருவாக்கப்பட்ட கடவுளர்களும் கதாமாந்தர்களும் செயல்படுவர்.

மனிதரின் கற்பனைக்கு ஏது எல்லை? யாராலும் தடை செய்ய இயலாத, தகர்க்க முடியாத, நிறுத்த  முடியாத அசுர சக்தி ஒரு தனி மனிதரின் கற்பனைக்கு உண்டு. அதற்குச் சுதந்திரம் கொடுத்து கற்பனையை வளர விட்டால் அது  இயற்கையில் இல்லாதவையை இருப்பதாக்கிக் காட்டும் வல்லமையைக் காட்டி சக்தி கொண்டு பரிமளிக்கும். கதைசொல்லிகள் என்போர் காலம் காலமாகச் சொல்லிய  கதைகளால் தான் சமயங்கள் வளர்ந்தன; கருத்துருவாக்கங்கள் வளர்ந்தன. கதைகளை நம்புவோரும் இருந்தனர்; அதே வேளை கதைகள் தோற்றுவிக்கும் மாய ஜாலத்தை எதிர்த்துப் போராடும் கருத்து சித்தாந்தகளும் பிறந்தன.

தமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளை, புராணங்களைத் தன்னிடத்தே கொண்ட வளமான களமாகத் திகழ்கின்றது. தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளே ஒவ்வொரு ஊருக்கும் தன்னை அக்கிராமங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள அமையும் சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த  கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.

குறத்தியாறு, இப்படி ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு சிறிய காப்பியம். கௌதம சன்னாவின் எழுத்தில் கற்பனை குதிரையான மனோரஞ்சிதத்தின் முதுகில் ஏறிக்கொண்டு வாசகர்களைப் பறக்க வைக்கும் முயற்சி இந்த நாவல். உயிர்மை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நாவல் 2014ம் ஆண்டில் வெளிவந்தது.

முதலில் படிக்கும் போது நாவலின் மைய நிகழ்வு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத வகையில் நம்மை மலைக்க வைக்கின்றது கௌதம சன்னாவின் எழுத்து நடை. அடர்ந்த காட்சிப்படிமங்கள் வரிக்கு வரி அமைந்திருப்பதால் கதைக்களத்தை உருவகப்படுத்த முதலில் நம்மை நாம் மனத்தளவில் தயார்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.  நூலாசிரியரின் எழுத்து கவித்துவமாக இருப்பதால் வாசிக்கும் போது கருத்தை உள்வாங்கி , அதனை மணக்கண்ணில் காட்சிப்படுத்திக் காணும் போது படிப்படியாக நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வர முடிகின்றது. எளிதான வாசிப்பை எதிர்பார்க்கும் வாசகர்களைத் திணரடிக்கும் எழுத்து ஆசிரியருடையது. ஒவ்வொரு வரியையும் காட்சிப்படுத்தி அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள அதீதமான பொருமை, வாசகருக்கு இந்த நாவலைப் பொறுத்தவரை அத்தியாவசியமாகின்றது.

இந்த நாவலில் கதாநாயகன் என்றோ கதாநாயகி என்றோ தனி நபர் சுட்டப்படவில்லை. ஒரு ஆறு இங்கு நாவலின் பிரதான கதாபாத்திரமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.  இதுவும் கூட  ஏனைய சமகால நாவல் படைப்புக்களிலிருந்து இந்த நாவலை வித்தியாசப்படுத்துகின்றது என்று கருதுகின்றேன்.

வட சென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தின்  மொன்னேட்டுச் சேரி இந்த நாவல் நடக்கும் கதைக்களம். இரண்டு கதை சொல்லிகள் இந்த நாவலில் வருகின்றார்கள். செம்பேட்டுக் கிழவனும் பித்தன் கண்ணாயிரமும் தங்கள் பங்கை சுவாரசியமாகச் சொல்லி விட்டு, கதை கேட்போரை ஏங்க வைத்து எதிர்பார்ப்பினை உருவாக்கி விட்டு சென்று விடுகின்றனர்.

செம்பேட்டுக்கிழவனிடம் கதை கேட்க வந்து நிற்கும் சிறுசுகளும் பெரிசுகளும் காட்டும் ஆர்வம் கிழவரை அசைக்க வில்லை. தான் நினைக்கும் போதுதான் கதையைச் சொல்வேன் என்னும் கிழவரின் பிடிவாதம், கதை சொல்வதிலும் கூட கால நேரம் உண்டு என்பதையும் , கதைசொல்லி மனம் வைத்தால் தான் கதை சொல்லுதல் என்பது நிகழும் என்பதையும் காட்டுவதாக அமைகின்றது. ஒரு கதை சொல்லுதல் என்பது உளவியல் ரீதியான  இயக்கம். அந்த இயக்கம் கதையில் தோய்ந்து கதாமந்தர்கள் தங்கள் பணியைச் செய்ய  முயலும் தக்க சமயமானது கதை சொல்லியின் உள்ளத்தில் உருவாகும் போது தான் அந்த இயக்கத்தின் தொடக்கம் நடைபெறும்.  அது நிகழும் வரை கதாமாந்தர்கள் உறைந்து நிற்பது தான் உண்மை.  இயக்கம் தொடங்கியதும் கதையின் வேகம் கூடக்கூட கதாமந்தர்களின் நடவடிக்கைகள் நிகழ்வதும், அதில் கதை கேட்போர் லயித்துப் போய் தன் சுயத்தை மறந்து கதையில்  கலப்பது என்பதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்தவை.

குறத்தி நதிக்கான புதிய புராணம் அங்கேயே  அதே ஊரில் பிறந்து வளர்ந்து அந்த கிராமத்திலேயே வழி வழியாக சொல்லப்பட்ட  கதைகளை கேட்டு வளர்ந்த ஒரு கதாசிரியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இந்த நாவலில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உயிர்கொடுக்கும் அம்சமாக  அமைந்திருக்க்கின்றது. இது தனிச்சிறப்பு. கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும், இயற்கையின் அசைவுகளையும், வயல் வெளிகளையும், ஆற்று மணலின் தன்மையை விளக்குவதிலேயும் அங்கேயே பிறந்து வளர்ந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும் தன் மனதில் குறித்து வைத்து,  வழி வழிச் செய்திகளின் அடுக்கில்  தன் சிந்தனைகளை பதிந்திருக்கும் நிலை  ஆசிரியரின் எழுத்துக்களில் முழுமையாக பரிமளிக்கின்றது.


ஒரு வகையில் நோக்கும் போது கதையில் குறத்தி தொடர்பான செய்திகள் வரும் பகுதி குறைவாகவே இருப்பதாக வாசிக்கும் வாசகரை எண்ண வைக்கின்றது. குறத்தி மாய ஜாலம் நிறைந்தவளாகவும், வசீகரப்படுத்தும் தன்மை மிக்கவளாகவும், பின்னர் அவளது துயரச்சம்பவம்  சிறிதே விளக்கப்படுதலும் பின்னர் குறத்தி ஆற்றிற்குப் பெயர் கொடுத்து மறைவதாகவும்  மட்டும் காட்டப்படுவதாக உணரமுடிகின்றதே தவிர ஏனைய கதாமாந்தர்களைப் போன்ற இயல்புத்தன்மையை குறத்திக்கு நாவலாசியர் காட்டி மேலும் குறத்தி தொடர்பான செய்திகளை சொல்லத்தவரி விட்டாரோ என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இந்த நாவலில் இரண்டு பகுதிகள் மனதை உலுக்கும் சக்தி படைத்த காட்சி அமைப்பைக் கொண்டவையாக அமைந்திருக்கின்றன.  முதலில், காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் எல்லாளன் எய்த அம்பு தாக்கி சாகும் நிலையிலிருக்கும் சூல்கொண்ட பெண் யானையின் வலி. இந்த வலியை விவரித்திருக்கும் பாங்கு உணர்வுகளைத் தொட்டு மனதை வருந்திக் கரைய வைக்கும் வகையில் அமைக்கபப்ட்டிருப்பது இந்த நாவலில் இருக்கும்  மாபெரும் சிறப்பு. தாக்கப்பட்டது யானைதான் என்றாலும் உயிருள்ள ஒரு கர்ப்பிணிப்பெண் தாக்கப்படும் போது ஏற்படும் அதே உணர்வலைகளை நாவலாசிரியர் வாசகர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றார்.

அதே போல இந்தக் கதையில் மையைப் புள்ளியாக அமையும் பகுதி மனதில் அதிர்வினை உண்டாக்கும் தனமையுடையதாக அமைகின்றது. அணல் கொதிக்கும் மணலாற்றில் குறத்தி குழந்தையை முதுகுத்தூளியில் தூக்கிக் கொண்டு நடக்கின்றாள். வீட்டிற்கு விரைத்து சென்று தன்னையும் தன் குழந்தையையும் கொதிக்கும் அணலிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற துரித உணர்வு. ஆயினும் மனித உடலால் தாங்கக் கூடிய வேதனையின் அளவு ஓரளவு தானே.  அந்த சூழலில் நிகழும் சம்பவமும், குறத்தியின் செயல்பாடும் சராசரி கதைகளிலிருந்து இந்தக் கதையை வேறுபடுத்திப் பார்க்க வைப்பதாய் அமைந்திருக்கின்றது. தான் இறந்து விட்டதாக நினைத்த குழந்தை ஒருமுறை கண் இமை திறந்து பார்த்து புன்னகைத்து உயிர் விடும் அச்சமயம்.. குற்த்தியின் உயிர் மூச்சை அக்கணம்  நிற்க வைக்கும் வேதனை வலிகளை ஓரிரு வரிகளில் சொன்னாலும் கூட வாசிப்போர் உணரும் வகையில் இப்பகுதியை ஆசிரியர் வடித்திருப்பது அபாரம்.  இப்பகுதி வெகுவாக நாவல்களில் புனிதப்படுத்தப்பட்ட தாய்மை பண்பின் கோணத்திலிருந்து மாறுபட்டு நிற்கின்றது என்றாலும், இந்த நிகழ்வு நடக்கும் போது நொடிக்கு நொடி குறத்தியின் சூழலும் அவளது நடவடிக்கைகளும், சங்கதியை விளக்கும் பாங்கில், அரிதாரமற்ற வாழ்க்கை நிலை வெளிப்படுகின்றது.

இந்த நாவலில் பிரமிக்க வைக்கும் வகையில் ஏராளமான  பகுதிகளில் ஆசிரியரின் காட்சிப்படுத்தும் திறன் அமைந்திருக்கின்றது.  அதில் மிகச்சிறப்பாக  என்னை ஆச்சரியப்படுத்தியவை இடுகாட்டில் பிணம் எரிக்கும் சூழலும் அதனைச்சார்ந்த நிகழ்வுகளும் என்று சொல்லலாம். உதாரணமாக ஒன்பதாம் அத்தியாயத்தில் கூறப்படும் பகுதி ஒன்று.

".. வெந்து மீந்த கபாலமும், இதயம் வெந்து வெடித்து எரிந்து கரைந்து, எரியாமல் மிஞ்சிய நெஞ்சகக் கூடும், காலும் கையுமாய் மிஞ்சி, நாய் கவ்வ பயந்த கொடு இடுகாட்டிலுறங்கிடும் பித்தன் ..." என பித்தனைப் பற்றி விவரிக்கும் போது இடுகாட்டை விளக்கும் தன்மையைக்குறிப்பிடலாம்.

".. பிணமெரிக்கும் ராவில் திமிரியெழும் சுவாலைப் பொணம் அவன் தடியடி வாங்கி பணிந்து படுக்கிறது. வெந்த இதயம் வெடித்துக் கிளம்ப  பறக்கிறது தீய்ச்சாம்பல். அணலேறி, கொதியும் மிகவேறி மண்டைக் குளம் பீய்ச்சிவழிகிறது கர்ண நாசிவழி. "   பதின்மூன்றாம் அத்தியாயத்தில் வரும் இந்தக் காட்சி அமைப்பும் இடுகாட்டுக் காட்சியை நம் கண்முன்னே கொண்டு வரும் விதமாக அமைகின்றது.

கிராமப்புர நாட்டுபுர வழக்கில் இன்றும் இருக்கும்  காப்புக் கட்டுதல், விரதம் இருத்தல் என்பன போன்ற சடங்குகள் பற்றிய செய்திகளும் கதையின் ஊடே வருகின்றமை இந்த நாவலுக்கு நாட்டார் வழக்காற்றியல் தன்மை நிறைந்த படைப்புக்களில் இணையும் அங்கீகாரத்தையும் அளிக்கின்றது.

தான் தேடுவது எதுவென்றே அறியாமல் தேடும் பித்தன் கன்ணாயிரத்தின் நிலையில் தான் மனிதர்கள் நாம் எல்லோருமே இருக்கின்றோம். தேடு பொருள் மாறு பட்டாலும் கூட தேடுதல் தொடர வேண்டும். தேடுதல் இருக்கும் வரை உடலில் உயிர் இருக்கும் என்பதால்..

...புராணங்கள் இன்றும் பிறக்கின்றன. புராணக்கதாமாந்தர்கள் இன்றும் அவதாரம் எடுக்கின்றனர். மனித குலம் உள்ள மட்டும் புராணக்கதைகள் உருவாக்கம் என்பது தொடர் நிகழ்வாக நிச்சயம் இருக்கும்.

​இந்த நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு. இத்தகைய முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியது அவசியம்.





No comments:

Post a Comment