Thursday, May 5, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 94

உ.வே.சாவின் சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது. அவரது கல்லூரி ஆசிரியர் தொழிலுக்கிடையில் தினம் தினம் சிந்தாமணி வாசிப்பையும், அதனைப் புரிந்து கொள்ளும் முயற்சியையும் அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். 

தமிழ் எழுத்துக்கள் என்பவை காலம் தோறும் பல மாற்றங்களைப் படிப்படியாகக் கொண்டிருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் காணும் தமிழ் எழுத்துக்களுக்கான வரிவடிவமானது இதே போல இன்றைக்கு  150 ஆண்டுகளுக்கு முன்பு வரை தெளிவான வகையில் இல்லாத நிலை, வாசித்தலில் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு சவாலாக இருந்தது என்பது முக்கிய விசயம். பலரது கைவண்ணத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி பிரதிகள் என்பன, எழுத்துத் தோற்றத்தில் மாற்றங்களை எப்படி உள்ளடக்கியதாக இருக்கின்றதோ அதே போல, எழுத்துப் பிழைகளைக் கொண்டதாக இருக்கும் சூழலும் இருந்திருக்கும் என்பதை ஒதுக்கி விட முடியாது. அத்தகைய ஓலைச்சுவடிகளை வைத்துக் கொண்டு ஒன்றுக்குப் பலமுறை வாசித்து வாசித்து முதலில் அவ்வரிகள் ஒவ்வொன்றும் சொல்லும் பொருளைத் தன் காலத்துத் தமிழ் நடையில் எழுதுவது என்பது ஒரு சவால். அதற்கடுத்து, அவற்றை முழுமையாக பொருளுணர்ந்து அதற்கு உரை விளக்கம் எழுதுவது என்பது அதற்கடுத்த மிகப்பெரிய சவாலாக உ.வே.சாவிற்கு இருந்தது. இவை கடினமான ஒரு செயல் என்றாலும் மனம் தளராமல் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் உ.வே.சா.

நம்மில் பலருக்கு ஒரு சில விசயங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காகத் திடீரென்று ஆர்வம் தோன்றும். ஆகா ஓகோவென்று அதனைப் பற்றி பேசுவோம். இதைச் செய்வேன், அதைச் செய்வேன்,  என சபதம் எடுத்துக் கொள்வது போல பேசுவோம். ஆனால் நாளடைவில் அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய், அந்த விசயமே மனதில் முற்றும் முழுதுமாக மறைந்து போயிருக்கும்.  

ஏதாவது ஒரு காரியத்தில் நமக்கு ஆர்வம் தோன்றினால் அதனைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்தித்து அதனால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அலசிப் பார்த்து, அக்காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் மிகத்தெளிவான அவ்விசயம் தொடர்பான சிந்தனையை மனதில் கொண்டிருக்க வேண்டும். ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கினால் முற்றும் முழுதுமாக அதில் நம் கவனத்தைச் செலுத்த  வேண்டும். அதனைச் செய்ய மனதில் கட்டுப்பாடும் ஒழுங்கும்  மிக முக்கியம். இன்று தொடங்கினோம். நாளை ஆர்வம் போய்விட்டது என்று காரணம் சொல்பவர்களால் எந்தக் காரியமும் செயல்வடிவம் பெற்றதில்லை. பெறவும் முடியாது! 

ஆக, ஆழமான சிந்தனை, சிந்தனையை செயல்வடிவப்படுத்தும் ஏற்பாடுகள், அதனைச் செய்து முடிக்கும் கட்டுப்பாடு ஆகிய அனைத்துமே நமக்கு இருக்கும் போதுதான் ஒரு காரியத்தைச் சரியாக நம்மால் செய்து முடித்து சாதனையாளராகத் திகழ முடியும். அந்த வகையில் உ.வே.சா தான் எடுத்துக் கொண்ட மாபெரும் காரியமான சீவக சிந்தாமணி பதிப்புப் பணியில் நம் கண் முன்னே நல்லதொரு உதாரணமாகத் திகழ்கின்றார். 

இந்த ஆய்வுப் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் போது சென்னைக்கு மாற்றலாகிச் சென்றிருந்த இராமசாமி முதலியாரும் இடைக்கிடையே கடிதத்தொடர்பின் வழி உ.வே.சாவிற்கு ஊக்கமளித்தும் சில உபயோகமான தகவல்களைத் தொடர்ந்து வழங்கியும் வந்தார்.  கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சாவிற்குப் பணி அமைத்துக் கொடுத்த தியாகராச செட்டியாரும் இடைக்கிடையே ஆர்வமும் ஊக்கமும் தந்து சில கலந்துரையாடல்களிலும் உதவி வந்தார்.

இக்கால கட்டத்தில் தியாகராச செட்டியார் பூவாளுர்ப் புராணத்தை அச்சுப்பதிப்பாக வெளியிட்டார் என்ற செய்தியையும் அறிகின்றோம்.

அந்த வருடம் அதாவது 1885 மார்ச் மாதம் கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா நடைபெற்றிருக்கின்றது. அதன் போது திருவாவடுதுறை மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர் நேரில் வந்திருந்து கோயில் காரியங்களில் கலந்து கொண்டார் என்பதையும் மடம் சார்பில் சில நிகழ்வுகள் நடந்தேறின என்பது பறிய செய்திகளையும் அறிய முடிகின்றது.

சென்னைக்குச் சென்று இராமசாமி முதலியாருடன் தங்கியிருந்து  சீவக சிந்தாமணி வாசிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் உ.வே.சாவிற்கு இருந்தது. அப்படி கலந்துரையாடும் போது தெளிவு கிட்டாத பகுதிகளுக்குத் தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இதே சிந்தனையில் அவரிருந்தார்.

நாம் ஒரு விசயத்தை ஆழமாக விரும்பினால் அது கைகூடும் என்பது சாத்தியமே. நம் மனத்தின் வலிமை அது. 

கும்பகோண மகாமகத்தின் போது, திருவாவடுதுறை மடத்தின் கீழ் உள்ள திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி  ஆலய விசாரணைக் கருத்தா பதவியில் இருந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்  மகாசன்னிதானத்தை, இந்த திருவிடைமருதூர் தல புராணத்தை  வசன நடையில் திருமடத்தின் சாரிபில் எழுதி  அந்த நூலை அச்சில்கொண்டு வரவேண்டும் என்பதை அவரது வின்ணப்பமாக வைத்தார்.

இந்தப் பணியை உ.வே.சா செய்வதாக முடிவாகியது.  உ.வே.சா, திருவிடைமருதூருக்கு ஞானக்கூத்தன் என்பவர் எழுதிய ஒரு தமிழ்ப்புராணத்தையும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய புராண நூல் ஒன்றையும் வாசித்து வசன நடையில் ஒரு புராணத்தை உருவாக்கினார். இதனை மகாசன்னிதானத்திடம் வாசித்துக் காட்டியபோது இதனை விரைவில் அச்சில் கொண்டு வர சென்னைக்குச் சென்றால் தான் முடியும் என்று மகாசன்னிதானம் முடிவெடுக்கவே,  சென்னைக்கு ஒருவர் இதன் நிமித்தம் செல்ல வேண்டும் என்ற அவசியம் உருவானது. 

கும்பகோணம் கல்லூரியில் விடுமுறை காலம் வரவே எல்லாம் கூடி வருகின்றது என்ற எண்ணம் அனவருக்கும் மனதில் தோன்ற, உ.வே.சா சென்னைப்பட்டணம் சென்று, நேரில் இந்த திருவிடைமருதூர் புராண வசன நடை நூலை  அச்சுப்பதிப்புப் பணி செய்து, பணியை முழுமை செய்து விட்டு வரவேண்டும் என்று ஆதீனகர்த்தர் முடிவெடுத்தார்.இந்த நிகழ்வை உ.வே.சா இப்படி விவரிக்கின்றார்.

"உங்களுக்கு இப்போது லீவு காலமாக இருப்பதால், நீங்களே சிரமத்தைப் பாராமல் சென்னபட்டணம் சென்று நேரில் இருந்து காரியத்தை
முடித்துக் கொண்டு வரலாம். செலவு சிறிது அதிகமானாலும் காரியம் மிகவும் உயர்ந்தது” என்றார். அவர் வார்த்தை கரும்பு தின்னக் கூலி தருவதாகச் சொல்லுவது போல இருந்தது. அதுவரையில் சென்னையையே பார்த்திராத எனக்கு அந்த நகரத்துக்குப் போய் ஆங்குள்ள அறிவாளிகளோடு பழக வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அன்றியும் சேலம் இராமசுவாமி முதலியாரைக் கண்டு சில காலம் உடனிருந்து சிந்தாமணியைப் படித்துக் காட்ட வேண்டுமென்ற ஆவலும் உண்டு. இவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இந்தக் காரியம் ஏற்பட்டது நமது நல்லதிருஷ்டமே என்று நான் எண்ணி, அவ்வாறே சென்று புஸ்தகத்தை அச்சிட்டுக் கொண்டு வருவதாக
ஒப்புக்கொண்டேன். " 

சென்னையே இதுவரை சென்றிராத உ.வே.சாவிற்கு இந்த அரிய வாய்ப்பு கிட்டியது. தன்னிடம் படித்துக் கொண்டிருந்த சிதம்பரம் சாமிநாதையர், சிதம்பரம் சோமசுந்தர முதலியார் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார். செல்வது திருவிடைமருதூர் புராண அச்சுப்பதிப்புப் பணிக்குத்தான் என்றாலும் மனம் சீவக சிந்தாமணி வாசிப்பிலும் இராமசாமி முதலியாருடன் கழிக்கப்போகும் நாட்களிலுமே லயித்துக் கொண்டிருந்தது உ.வே.சாவிற்கு!

1 comment:

  1. பார்க்க வேண்டிய பதிவு தொடர்கிறேன் இனி ............................

    ReplyDelete