Monday, May 16, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 95

​திருவிடைமருதூருக்கான தலபுராணமான ஸ்ரீ மத்தியார்ச்சுன மான்மியம் என்ற நூலை அச்சு நூலாக கொண்டுவரும் பிரதான நோக்கத்தில் உ.வே.சா சென்னை கிளம்பினார் என்றாலும் கூட அவருக்குச் சென்னையைச் சுற்றி பார்த்து அந்த நகரையும் மக்களையும் அறிந்து கொள்வதில் மிகுந்த பேராவல் இருந்தது. இதனை வெளிப்படையாகவே அவர் தன் சுயசரிதையில் குறிப்பிடுகின்றார்.  சென்னையில் அவர் இருந்த காலம்  2 வாரங்களுக்கு சற்று மேல். அந்த நாட்களில் பலரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்  இராமசாமி முதலியார். 

தமிழ் எழுத்துலகில் 19ம் நூற்றாண்டு பிரபலங்களான பலரும் இந்த அறிமுகம் பெற்ற பட்டியலில் அடங்குகின்றனர். ஜட்ஜ் முத்துசாமி ஐயர், ஸர். வி. பாஷ்யமையங்கார், ஸ்ரீநிவாச ராகவையங்கார், பம்மல் விஜயரங்க முதலியார், ரகுநாதராயர் முதலிய பல கனவான்களுடைய நட்பு அவருக்கு ஏற்பட்டது. பிரஸிடென்ஸி காலேஜிற்குச் சென்று பூண்டி அரங்கநாத முதலியாரையும், தொழுவூர் வேலாயுத முதலியாரையும் சந்தித்தார்.  அவர்கள் மூலம் சேஷகிரி சாஸ்திரியாரையும் தமிழ்ப் பண்டிதர் கிருஷ்ணமாசாரியாரது அறிமுகம் கிட்டியது. புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற்கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமிநாயுடு, கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை முதலிய வித்துவான்களைப் பார்த்துப் பேசி மகிழ்ந்தார். சென்னையில் இருந்த ஒவ்வொரு நாளும் தனது கோச்சு வண்டியில் இராமசாமி முதலியார் காஸ்மோபோலிடன் க்ளப், பிரசிடென்சி காலேஜ் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று இவர்களுடன் இருந்து பேசி மகிழ்ந்து வருவது மகிழ்ச்சிகரமாக நிகழ்த்து கொண்டிருந்தது. 

இந்தத் தமிழ்ப்பெரியோர்களது பெயர்களையெல்லாம் பார்க்கும் போது மிகத் தெளிவாக பிள்ளை, ஐயர், ஐயங்கார், முதலியார், செட்டியார், நாயக்கர், நாயுடு போன்ற சமூகத்தைச் சேர்ந்தோரே  19ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அறியப்பட்ட தமிழறிஞர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை இவர்களது பெயர்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது இச்சமூகத்தைச் சார்ந்தோரே கல்வி ஞானத்தை அனுபவிக்கும் வாய்ப்பை பெருவாரியாக அந்தக் காலகட்டத்தில் பெற்றிருந்தனர் என்பது கேள்விக்கு இடமின்றி அமைகின்றது. அக்காலத்தில் கல்விக்கூடங்களாக அமைந்தவை வேத பள்ளிக்கூடங்களும், சைவ வைஷ்ணவ மடங்களும், சில தமிழ்க்கலாசாலைகளும் மட்டுமே. ஆங்கிலேய கல்வி முறையில் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் சிறிது சிறிதாக பெருக ஆரம்பித்த பின்னர் இந்த நிலையில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டது என்பதோடு சமூகத்தின் எல்லா தளத்தைச் சார்ந்தோரும் கல்வி கற்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.  இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தான் சார்ந்திருக்கும் சாதி சமூகத்தின் பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொள்வது ஒரு வழக்கமாக இருந்திருக்கின்றது. இது இவர்களைச் சமூக ரீதியாக பிரித்து அடையாளம் காணும் தன்மையாக இருந்திருக்கின்றது. இத்தகைய நிலை 20ம் நூற்றாண்டு வாக்கில் தான் படிப்படியாக மாற்றம் காண ஆரம்பித்தது என்பதும் அதற்கு பல்வேறு சீர்திருத்த முயற்சிகள் நடந்தன என்பதும், பல போராட்டங்கள் நிகழ்ந்தன என்பதும் வேதனைக்குறிய, ஆனால் மறைக்காமல் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையே. 

கல்வி என்பது அனைவருக்கும் சமமானது. அடிப்படை கல்வியைப்  பெறும் உரிமை ஒரு நாட்டின் எல்லா பிரஜைக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அடிப்படைக் கல்வி இலவசமாக ஒரு நாட்டில் வழங்கப்படும் போதே அந்த நாடு தன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் நாடு என்ற பெருமையை ஏற்க முடியும். கல்வியை வியாபாரப்படுத்தி கல்விக்கூடங்கள் வியாபாரக்கூடங்களாக மாறும் நிலை வரும் போது அது நாட்டு மக்களுக்கு சரியான முறையான  கல்வி எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்காமல் ஆவதற்கு வழி ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மை.

சரி. சென்னையில் இருந்த காலகட்டத்தில் உ.வே.சா சில இடங்களுக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார். அருங்காட்சியகங்கள், பொருட்காட்சி சாலை, புத்தகசாலை, கல்லூரிகள், கோயில்கள், கடற்கரை என தாம் பார்த்தவற்றையெல்லாம் மகிழ்ச்சியுடன் பட்டியலிடுகின்றார் உ.வே.சா.அத்தோடு தான் சந்தித்துப் பேசிய மனிதர்களின் குண நலன்களையும் வியந்து போற்றுவதையும் என் சரித்திரத்தில் வாசித்து மகிழ முடிகின்றது.

"வித்துவான்களையும் அறிஞர்களையும் பார்த்துப் பழகியது கிடைத்தற்கரிய பெரிய லாபமாகத் தோன்றியது. சிறந்த உத்தியோக பதவியை வகித்த பெரியவர்களெல்லாம் அடக்கமாகவும், அன்பாகவும் இருப்பதைக் கண்டு நான் வியந்தேன். கும்பகோணத்தில் பதினைந்து அல்லது இருபது ரூபாய் சம்பளம் பெறும் குமாஸ்தா செய்யும் அட்டகாஸத்தையும் ஆடம்பரத்தையும் கண்ட எனக்கு அப்பெரியவர்களுடைய நிலை மிக்க ஆச்சரியத்தை உண்டாக்கியது."

இது இன்றும் பலரிடையே நாம் காணும் குண நலன்கள் தான். ஒரு சிலர் தமது பதவியை மட்டும் வைத்து செய்து கொள்ளும் பெருமையை என்னும் போது அவர்களது அறியாமையை நினைத்து சிரிப்புத்தான் வருகின்றது.  தன்னை மிக உயரிய மனிதராகவும் ஏனையோரை மதிக்காமலும் நடக்கும் நிலையையும் பார்க்கின்றோம். தன்னை விட பதவியில் குறைந்தவர் என்றாலோ அல்லது எளிய பணி புரிகின்றார்கள் என்றாலோ அடிப்படை மரியாதைச் சொற்களைப் பயன்படுத்தி கூப்பிடுவதைக் கூட பலர் வழக்கத்தில் கொண்டிருப்பதில்லை. இந்த ஆணவம் நிறைந்த குணங்கள் மனிதப்பண்புகளுக்கு விரோதமானவை அல்லவா?

ஸ்ரீ மத்தியார்ச்சுன மான்மியம் நூலுக்கான அச்சு வேலை முடிந்ததும் தான் வந்த பயணம் வெற்றிப் பயணமாக முடிந்த மகிழ்ச்சியில் உ.வே.சா கும்பகோணம் திரும்பினார்.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment