Wednesday, June 22, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 96

உழைப்பை திருடுபவர்கள் அதிகரித்து விட்ட காலம் இது எனச் சொல்லி சொல்லி வருந்துகின்றோம். பிறரது உழைப்பை தம்முடையதாக ஆக்கிக் கொண்டு பொருளும் பெயரும் தேடிக்கொள்ள விழையும் மனம் கொண்டோர் எல்லா காலங்களிலுல் இருந்திருக்கின்றனர். காலமும் சூழ் நிலைகளும் தான் மாறுபடுகின்றனவேயன்றி மனித மனம் என்பது அப்படியேதான் பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகின்றன.  பிறரது உழைப்பை தன்னுடையதாக பறை சாற்றிக் கொள்ளும் முயற்சி என்பதில் வேறுபாடுகள் உண்டு. அதிகார பலத்தால் பிறரது உழைப்பை அபகரிப்பது ஒரு செயல். நயந்து பேசி, பாராட்டி, பிறரது உழைப்பை தன்னுடையதாகப் பெற்றுச் செல்லுதல் என்பது ஒரு வகை. பிறரது உழைப்பை தெரியாமலேயே திருடிக்கொண்டு போய் தன்னுடையதாக சொல்லி அறிவித்து அந்த உழைப்பின் பலனை அனுபவிப்பவர்கள் என்போர் ஒரு வகை. எதுவாகினும், பிறர் உழைப்பில் தோன்றும் பலனை தமதாகச் சொல்லிக் கொள்வோர் செயல் கீழானது என்பதில் ஐயமில்லை.

இத்தகைய ஒரு நிகழ்வு உ.வே.சா விற்கு தன் ஆய்வுப் பணியின் ஆரம்பகாலத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை அத்தியாயம் 94ல் இடையே வந்த கலக்கம் என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருக்கின்றார்.

சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்க வேண்டும் என்ற தீவிரம் அதிகமானதால் தன் கவனத்தை முழுமையாக சிந்தாமணியை வாசித்து அறிந்து கொள்வதிலும் பாட பேதங்களைப் புரிந்து சரிசெய்வதிலும் அவரது தினசரி பணி சென்று கொண்டிருந்தது. தன் அன்றாட நிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார். பாருங்கள்.

அடிக்கடி ஆராய்ந்து வந்தமையால், என் நினைவு முழுவதும் சிந்தாமணி மயமாக இருந்தது. அதில் என் மனம் ஆழ்ந்துவிட்டது. காலையில் நான் எழுந்தவுடன் சிந்தாமணி முகத்தில்தான் விழிப்பேன். பல் தேய்த்து அனுஷ்டானம் செய்தவுடன் ஆகாரம் பண்ணுவேனோ இல்லையோ சிந்தாமணியை ஆராய்வேன். ..
எங்கள் வீட்டுத் திண்ணையில் சிறிய கை மேஜையின்மேல் பிரதியை வைத்துக் கொண்டு எத்தனையோ இரவுகள்
சிந்தாமணி ஆராய்ச்சியில் மனமொன்றியிருப்பேன். எனக்குச் சிந்தாமணியும், சிந்தாமணிக்கு நானும் துணையாகப் பொழுது போவதே தெரியாமல் ஆராய்ச்சி நடைபெறும்.

இப்படி கண்ணும் கருத்துமாக ஒவ்வொரு நாளும் கடும் உழைப்பைச் செலுத்தி சிந்தாமணி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் மனதிற்குச் சங்கடம் தரும் ஒரு நிகழ்வு நடைபெற்றது.  முன்னர் தாம் சந்தித்து அறிமுகமாக்கிக் கொண்ட யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் கும்பகோணத்திற்கு மாற்றலாகி வந்து வக்கீலாக அங்கே தொழில் செய்து கொண்டும் தமிழ்ப்பணியில் ஈடுபட்டும் வந்தார். நல்ல தனவந்தருமான அவர் ஏற்கனவே சில தமிழ் நூற்களை அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டிருந்தார். தம்மை திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்கு அறிமுகப்படுத்தச் சொல்லியும், மேலும் கும்பகோணம் பகுதியில் இருக்கும் ஏனைய தமிழறிஞர்களுக்கு அறிமுகம் செய்விக்கும் படியும் கேட்டுக் கொண்டதால் பல தமிழறிஞர்களை உ.வே.சா அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். திருவாவடுதுறை மடத்தின் நூலகம் வந்தவருக்கு உ.வே.சா, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடபேதம் திருத்தி வைத்திருந்த கம்பராமாயணத்தைக் காட்ட, அதனை பெற்றுக் கொண்டு போய் தனது பாடபேதத்தை ஒப்பிட்டு திருத்தி அனைத்தையும் மாற்றிக் கொண்டார் என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார்.  தன் அச்சுப் பதிப்பில் வெளியீட்டில் இதனைக் குறிப்பிட்டாரா என்பது கேள்விக்குறிதான்.

இது போதாதென்று ஒரு புதிய  பிரச்சனை கிளம்பியது.

சிந்தாமணி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார், பதிப்பிக்கும் எண்ணத்தில் உ.வே.சா உழைத்து வருகின்றார் என்பதை அறிந்தும்  உ.வே.சா இதுவரை செய்து வைத்த பாட பேதக்குறிப்புக்களைத் தமக்குத் தரச்சொல்லி தாமே அதனை பதிப்பிக்க விரும்புவதாக கூறிய ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார் சி.வை. தாமோதரம் பிள்ளை.  உ.வே.சாவிற்கு சொல்லொணா மனக்கலக்கம் வந்து விட்டது. இந்த உரையாடலை முழுமையாக இந்த அத்தியாயத்தில் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

கொழும்பிலிருக்கும் பெரிய பிரபுவாகிய கனம் ராமநாதனவர்கள் அதன் பதிப்புக்கு வேண்டிய செலவு முழுவதையும் தாம் கொடுப்பதாக எனக்கு வாக்களித்திருக்கிறார். தங்கள் பிரதியைக் கொடுத்தால் என்னிடமுள்ள பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு பதிப்பிப்பேன்” என்றார்.

“மிகவும் சிரமப்பட்டுப் பல வருஷங்களாகச் சோதித்து வைத்திருக்கிறேன். நானே அதனை அச்சிட எண்ணியிருக்கிறேன். ஆதலால்
கொடுக்க மனம் வரவில்லை” என்று சொல்லி நான் மறுத்தேன்.

தாமோ:- இந்த விஷயத்தில் நான் மிக்க அனுபவமுள்ளவன். சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்க முதலில் அதிகப் பணம் வேண்டும்.
சென்னபட்டணத்தில் அச்சிடவேண்டும். நீங்கள் இங்கே இருந்து கொண்டு சென்னையில் அச்சிடுவதென்றால் எளிதில் முடியாது. 
..
நான்:- காலேஜ் வேலை எனக்கு ஒரு தடையாயிராது. ஒழிந்த நேரத்தில்தானே நான் இந்த வேலையைக் கவனிப்பேன்? அவசியமானால் லீவு வாங்கிக் கொள்ளுகிறேன். நான் எழுத்தெழுத்தாக ஆராய்ந்து வைத்திருக்கும் நூலை உங்களிடம் விடுவதானால் என் உழைப்பு வீணாக அன்றோ போய் விடும்?

தாமோ:- ஏன் வீணாகும்? அவ்வளவு நன்றாக உபயோகப்படுமே! நீங்கள் ஆராய்ந்து கண்ட விஷயங்களை என் பதிப்பில் சேர்த்துக்
கொள்ளுகிறேன். உங்கள் பெயரையும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் உழைப்பைப் பற்றி நீங்களே பாராட்டிக் கொள்ள முடியாது. நான் பதிப்பித்தால் உங்களைச் சிறப்பித்து நன்றாக எழுதுவேன்.

நான்:- எனக்குப் புகழ் வேண்டு மென்றும் பிறர் என்னைப் பாராட்ட வேண்டுமென்றும் நான் எதிர் பார்க்கவில்லை. நான் பதிப்பிப்பதாகச் செய்து கொண்ட சங்கற்பமும், அதன் பொருட்டு மேற்கொண்ட சிரமங்களும் வீணாகி விடுமேயென்று யோசிக்கிறேன்.

தாமோ:- இதுவரையில் நீங்கள் பட்ட சிரமம் பெரிதன்று. இதைப் பதிப்பிப்பதிலேதான் உண்மையான சிரமம் இருக்கிறது. அந்தச் சிரமம்
உங்களுக்கு ஏற்பட வேண்டாமேயென்றுதான் சொல்லுகிறேன். நான் அந்தத் துறையில் உழைக்க வேண்டுமென்று தீர்மானித்துச் சில நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஆகையால் என்னைத் தமிழுலகு நன்றாக அறியும். சிந்தாமணி என் பதிப்பாக வெளிவந்தால் அதற்கு ஏற்படும் கௌரவமே வேறு. அதனோடு உங்கள் பெயரும் வெளிப்படும்.

நான்:- நீங்களும் ஆரம்பத்தில் என்னைப் போலத்தானே இருந்திருப்பீர்கள்? நான் பதிப்பித்து வெளியிட்ட பிறகுதானே உலகம் அதை
மதிப்பதும் மதியாததும் தெரிய வரும்?

இப்படி மனதிற்குச் சங்கடம் தரும் வகையிலான கலந்துரையாடலாக அது ஆகிப் போனது. 

சி.வை. தாமோதரம் பிள்ளை எப்படியாகினும் உ.வே.சா ஆய்வு செய்து வைத்திருக்கும் சிந்தாமணியை தாம் பதிப்பித்து விட வேண்டும் என் முயற்சித்தார், விட்டுக்கொடுக்காமல் நயமாகப் பேசினார். இறுதியில் உ.வே.சா மறுப்பு சொல்ல முடியாத வகையில் பாடபேதகுறிப்புக்களை வாங்கிக் கொண்டும் சென்று விட்டார்.

அன்றைய இரவு மனக்கலக்கத்தில் உ.வே.சாவிற்கு உறக்கம் வரவில்லை. மனம் உடைந்து போய் தன் உழைப்பு வீணாகிபோய்விடுமோ என அவர் மனம் பதறிக்கொண்டேயிருந்தது!


தொடரும்...
சுபா

No comments:

Post a Comment