Wednesday, June 22, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 97

சிந்தாமணியை வாசித்து சிந்தாமணி பதிப்பித்தல் பணியிலேயே மூழ்கியிருந்த உ.வே.சாவிடம் பேச்சுக் கொடுத்து அவர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களையும் பாட பேத வித்தியாசக் குறிப்புக்கள், விளக்கங்கள் என எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு சென்று விட்டார் சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள். பிரமை பிடித்தது போல தன் நிலை மறந்து போய் அமர்ந்திருந்தார் உ.வே.சா. அவர் மனம் தாமோதரம் பிள்ளையவர்களுடன் நடந்த உரையாடல்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தது. நீண்ட நேரம் பேசிய தாமோதரம் பிள்ளை பாட பேத குறிப்புக்கள் கிடைத்த உடனேயே கிளம்பி விட்டாரே, என நினைத்த போது உ.வே.சாவிற்கு மனதில் வேதனையும் அதிர்ச்சியும் சூழ்ந்து கொண்டது. எங்கே, தனது நெடுநாளைய உழைப்பு வீணாகிப் போய்விடுமோ என கலங்கிப் போய் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார். 

வெளியே சென்றிருந்த அவரது தந்தையார் இல்லம் திரும்பியபோது உ.வே.சாவின் முகக்குறிப்பிலிருந்து ஏதோ நடந்திருக்கின்றது என ஊகித்துக் கொண்டார். வினவிய போது எல்லா விசயங்களையும் உ.வே.சா விபரமாக தன் தந்தையிடம் கூறினார். அதற்கு உடனே தந்தையார், "அவசரப்பட்டு உடனே கொடுத்திருக்க வேண்டாமே. இரவும் பகலுமாக உழைத்திருக்கின்றாய். நீயே பதிப்பிப்பதாக ஊரில் பலரிடம் சொல்லியிருக்கின்றாய். ஆகவே நாளைக் காலை உடனே சென்று அந்தக் குறிப்புக்களை வாங்கி வந்து பதிப்பிக்கும் வேலையை நீயே செய்" என ஆலோசனைக் கூறினார். 

தந்தையாருடன் பேசியதும் அவரது ஆலோசனையும் உ.வே.சாவிற்கு சற்றே மனத்தெம்பை அளித்தது. ஆனாலும் கூட அன்றைய இரவு தூக்கம் வராது கவலை மனதைச் சூழ்ந்து கொண்டது. அதிலிருந்து விலக முடியாது காலை வேளை எப்போது வரும் என்று காத்துக் கொண்டேயிருந்தார் உ.வே.சா. 

காலையில் விரைவாகத் தயாராகி தன் சகோதரனையும் அழைத்துக் கொண்டு தாமோதரம் பிள்ளையவர்கள் இருக்கும் இல்லத்திற்குச் சென்று தாம் வந்திருப்பதைத் தெரிவித்தார். வெளியே வந்த தாமோதரம் பிள்ளையவர்கள் அதுவரை சில குறிப்புக்களை வாசித்திருப்பதாகவும், சில வரிகள் புரியவில்லை எனவும், தமக்கு விளக்குமாறும் கேட்டுக் கொள்ள, உ.வே.சா தயங்காது அவற்றிற்குப் பொருள் விளக்கம் கூறினார். அப்போது அங்கே தாமோதரம் பிள்ளையவர்களைச் சந்திக்க வந்திருந்த அம்பிகைபாகன் என்ற ஆசிரியர் ஒருவரும் உடன் இருந்தார். 

தொடர்ந்து தாமோதரம் பிள்ளையவர்கள் கேள்விகள் கேட்க, அதற்கு உ.வே.சா விளக்கம் சொல்ல, சற்று நேரத்தில் உ,வே.சா, இவையெல்லாம் எளிமையானவை. இவற்றிற்கே உங்களுக்குப் பொருள் புரியாத போது ஏனைய கடினமான பகுதிகளை நீங்கள் புரிந்து கொண்டு பதிப்பித்தல் என்பது முடியாத காரியம். நானே என் பணியைத் தொடர்ந்து இப்பதிப்பு வேலையைச் செய்யப்போகின்றேன் எனச் சொல்லி தான் கொடுத்த குறிப்பு நூற்களை வாங்கி அங்கிருந்த தன் சகோதரனிடம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச் செல் எனச் சொல்லி விட்டு அங்குச் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். தாமோதரம் பிள்ளையவர்களும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. பொருளாதார பலம் இல்லாமல் பதிப்பிப்பது இயலாது என்றும் தம்மால் மட்டுமே இது சாத்தியம் என்றும் வாதாடிப்பார்த்தார். அருகில் இருந்த அம்பிகைப்பாகன் ஆசிரியர் இடைமறித்து, உ.வே.சா செய்வது தான் பொருந்தும் என்றும், ஏனெனில் இந்த நூலைப் புரிந்து கொண்டவர் அவர் என்பது அதனைப்பதிப்பித்தலுக்கு அடிப்படை முக்கியம் என்றும், தாமோதரம் பிள்ளையவர்கள் நூலை ஒரு முறை கூட முழுமையாக வாசிக்கவில்லை என்பது புரிகின்றது என்றும் குறிப்பிட்டு, உ.வே.சாவே பதிப்பிப்பது தான் முறை என்று சொல்ல, வேறு வழியின்றி தாமோதரம் பிள்ளையவர்கள் அமைதியானார். 

ஒரு வகையாகத் தனது குறிப்புக்கள் கொண்ட நூலை வாங்கி வந்து விட்டோமே, என உ.வே.சாவின் மனதிற்குள் ஆழ்ந்த நிம்மதி வந்து குடியேறியது. அந்தச் சம்பவத்தையும் அன்று தனக்காகப் பேசிய அம்பிகைப்பாகன் என்ற ஆசிரியரையும் தனது முதுமையான காலத்திலும் நினைத்துப் பார்க்கின்றார் உ.வே.சா. 

இந்தப் பகுதியை வாசித்த போது உ.வே.சாவின் மனம் பட்ட வருத்தத்தை என்னால் உணர முடிந்தது. இப்படி நமது வாழ்க்கையிலும் ஏதாகினும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. 

நாம் பல மணி நேரங்கள் உழைத்து ஏதாகினும் ஒரு காரியத்தைச் செய்திருப்போம். ஆனால் பொருளாதாரமும் அதிகாரமும் இருக்கின்ற காரணத்தால் மட்டுமே ஒரு சிலர், நமது உழைப்பை மறைத்து, நமது செயல்பாட்டினால் உருவான பலனை தமதாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் சிலர் பரவலாக நமது சூழலில் இருக்கத்தானே செய்கின்றனர். இத்தகைய அபாயகரமான நபர்களை அடையாளம் கண்டு கொண்ட பிறகு அத்தகையோரிடமிருந்து விலகி தூரமாக இருப்பதே சீரிய பணியை ஆற்றுபவர்களுக்கு உதவும். ஆயினும் பல வேளைகளில் மோசமான அனுபவங்களுக்குப் பிறகுதான் ஏமாற்றுவோரையும் நமது உழைப்பின் பலனை திருடுவோர்களையும் நாம் அடையாளம் காணமுடிகின்றது. இது மிகுந்த வேதனையளிக்கும் ஒரு விசயம் தான். 

அதிகார பலமும் பொருளாதார பலமும் மட்டும் உள்ளவர்கள் சான்றோர் அல்ல. நேர்மையும் உண்மையும் உள்ள மனிதர்கள் தாம் சான்றோர்கள்! காலம் கடந்தாலும் அவர்களே உலக மக்களால் போற்றப்படுவர்! 


தொடரும்.. 

சுபா

No comments:

Post a Comment