Sunday, September 30, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 23


பதிவு 23

சென்ற பதிவில் வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் நாகப்பட்டின புராணம் இயற்றிய பின்னர் நாகையிலிருந்து புறப்பட்டு மாயூரம் வந்தடைந்த செய்தியறிந்து அவரை நேரில் சென்று காண உ.வே.சா அவர்களின் குடும்பத்தினர் புறப்பட செய்த ஆயத்தங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். உறவினர்களையும்  தமக்கு உதவி செய்த செல்வந்தர்களையும் தமிழாசிரியர்களையும் சந்தித்து இந்த விபரங்களைத் தெரிவித்து ஆசி பெற்றுக் கொண்டு இறுதியாக கருவுற்றிருந்த தாயாரை  உத்தமதானபுரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தந்தையும் மகனும் மட்டும் மாயூரம் வந்து சேர்ந்தனர். மாயூரம் வருவதற்குக் கையில் பணமில்லாது இருந்த போது தந்தையாரின் நண்பர் சாமு மூப்பனார் என்பவர் அளித்த தொகையைக் கொண்டு பிரயாணம் மேற்கொண்டு மாயூரம் வந்தடைந்தனர். மாயூரத்திலே தான் இவரது சிற்றப்பாவும் சின்னம்மாவும் இருந்தனர். ஆகையால் தங்கிக் கொள்ளவும் உணவிற்கும் வழி இல்லையே என்ற கவலை இல்லாமல் போயிற்று.

உ.வே.சாவின் மனதில் தனது நெடுநாள் ஆசைகள் நிறைவேறப்போகும் நாளை நினைத்து நினைத்து ஆனந்தம் சூழ்ந்திருந்தது. மாயூரம், வந்த நாள் முதல் மாயூரத்தின் வேறு எந்த விஷயங்களும் அவரது மனதை கவர்வதாக இல்லை. மனம் முழுதும் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைக் காணப்போகும் தருணத்தை எதிர்பார்த்து அந்த எண்ணங்களிலேயே லயித்திருந்தது. இவர்கள் மாயூரம் வந்த சமயத்தில் அந்த ஊரில் நந்தனார் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் தான் இருந்தார். ஆனால் அவரையும் கூட சென்று சந்திக்க வேண்டும் என்ன எண்ணம் தோன்றாமல் முழு மனதும் தனக்கு வரப்போகும் தமிழ் ஆசானைப் பற்றியதாகவே ஆக்ரமித்திருந்தது உ.வே.சாவுக்கு. இதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"பல நாட்களாக நினைந்து நினைந்து எதிர்பார்த்து ஏங்கியிருந்த நான் ஒரு பெரிய பாக்கியம் கிடைக்கப் போகிறதென்ற எண்ணத்தால் எல்லாவற்றையும் மறந்தேன். அக்காலத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் இருந்தார். அச்செய்தியை நான் அறிவேன். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் நான் மாயூரத்தில் அடி வைத்தேனோ இல்லையோ உடனே அவரைப் போய்ப் பார்த்திருப்பேன்; மாயூரத்திலுள்ள அழகிய சிவாலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பேன்; அந்நகரிலும் அதற்கருகிலும் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருப்பேன். அப்போதோ என் கண்ணும் கருத்தும் வேறு ஒரு பொருளிலும் செல்லவில்லை."

என் சரித்திரம் எழுதத்தொடங்கிய 80 வயதிலும் கூட இந்த நிகழ்வுகள் அனைத்தும் அவர் மனதிலே அழியாத ஓவியங்களாக நிலைத்திருந்தன என்பதனை அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் விளக்கும் இந்தத்தன்மையினால் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு மாணவருக்கு தனது ஆர்வம் எதை நோக்கியதாக அமைந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானதும் அவசியமான ஒன்றும் கூட. பிறர் கூறும் வழிகளை விட தனது அறிவும் சிந்தனையும் ஆர்வமும் எந்தத் துறையில் ஊன்றி ஆழமாகப் பதிந்திருக்கின்றதோ அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதனில் ஈடுபடுவது மனதிற்கும் முழுமையான தொழிற் வாழ்விற்கும் நிறைவளிக்கும் தன்மையினதாக அமையும்.

தற்காலத்தில் இந்தெந்த துறைகள் வருமானம் தரக் கூடியனவாக இருக்கும் என்ற எண்ணத்தில் அந்தத் துறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கல்வி கற்று உத்தியோகம் பெறுவது சிறப்பு என நினைக்கும் மனப்போக்கினைப் பரவலாகக் காண்கின்றோம். குழந்தைகள் விருப்பம் என்ன? எந்தத் துறையில் அவர்கள் ஆர்வம் நிறைந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முனைவதை விட தங்கள் விருப்பம் என்னவோ அதனை குழந்தைகளின் மனதில் விதைத்து அதனை அவர்களின் விருப்பமாக மாற்றிப் பார்க்க நினைக்கும் பெற்ரோர்களே அதிகம். பெற்ரோர்களின் எண்ணமும் அவர்களின் நிலைப்பாடும் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைய வேண்டும் என்பதை விடுத்து  குழந்தைகளின் வாழ்க்கையயே நிர்ணயிர்ப்பவர்களாக இருப்பதில் நோக்கம் கொண்டவர்களாக இருப்பதைக் காண்கின்றோம். இது குழந்தைகள் தங்கள் சுயம் என்பதையே இழந்து பெற்றோர் காட்டும் வழியில் மட்டுமே நடக்கின்றவர்களாக மாற்றி அமைத்து சுய கருத்துக்கள் அற்றவர்களாக அவர்களை ஆக்கி விடுகின்றது.   இதனால் பிற்காலத்தில் தனது சுய தேடுதல் ஆரம்பிக்கும் போது மனதில் ஆழமான வேதனையும், நிராசையையும் மனம் லயிக்காத தொழில் வாழ்க்கையும் அமைந்து விடுவதை தவிர்க்க இயலாது.

பிறருக்காகத் தேர்ந்தெடுத்து நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் இவ்வகைக் கல்வி மனதிற்கு முழுமையான திருப்தியை வழங்கி விடுவதில்லை. நாம் செய்யும் தொழிலானது மனதிற்கு மகிழ்ச்சியைத்  தருவதாக அமைந்திருப்பதும் மிக அவசியம். நம்மில் ஒவ்வொருவரும் ஒரு நாளின் எல்லா முக்கிய நேரங்களையும் நமது தொழிலுக்காகத் தான் செலவிடுகின்றோம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்ற நமது தொழில் வாழ்க்கை வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதை விட்டு மனதிற்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பதாகவும் சிந்தனை வளர்ச்சியைத் தருவதாகவும் அறிவு மேம்பாட்டைத் தூண்டிக் கொண்டே இருப்பதாகவும் அமையும் போது  வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக அமைகின்றது.

உ.வே.சாவின் மாணவர் பருவத்தில் அவரது சுற்றத்தார் பலரது விருப்பங்கள் இவர் இவ்வழியில் செல்லவேண்டும் அவ்வழியில் செல்ல வேண்டும் என்று அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டுதானிருந்தது. தமிழ்க் கல்வி ஒன்றே தனக்கு மனதிற்கு நிலையான இன்பமும் நிறைவும் தரக்கூடியது என அவர் உறுதியாக இருந்தார்.

உ.வே.சா எழுத்துக்களிலேயே அவரது மன நிலையை வாசிப்போமே..!

"ஒரு நல்ல காரியத்திற்கு எத்தனை தடைகள் உண்டாகின்றன! நான்  தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனாலும் அப்படியே நின்றுவிடவில்லை. பந்துக்களில் பலர் நான் ஸம்ஸ்கிருதம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இராமாயண பாரத பாகவத காலக்ஷேபம் செய்து ஸம்ஸ்கிருத வித்துவானாக விளங்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து. வேறு சில கனவான்களோ நான் இங்கிலீஷ் படித்து விருத்திக்கு வர வேண்டுமென்று எண்ணினார்கள். உதவி செய்வதாகவும் முன் வந்தனர். நான் உத்தியோகம் பார்த்துப் பொருளீட்ட வேண்டுமென்பது அவர்கள் நினைவு. என் தந்தையாரோ சங்கீதத்தில் நான் வல்லவனாக வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பம் முற்றும் நிறைவேறவில்லை; எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக்கூட அடைந்தேன். சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் ஜீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன் பால் எனக்கு அன்பு இருந்தது. ஆனால் அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக்கொண்டது; அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்துகொள்ளத் தமிழ் காத்திருந்தது."

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment