Sunday, September 16, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 21


பதிவு 21

ஏதோ ஒரு விஷயத்தில் ஆவலோடும் ஆர்வத்துடனும் இருக்கும் சமயத்தில் அந்த ஆர்வத் தீயில் எண்ணெய் வார்ப்பது போல மேலும் மேலும் நம் கவனத்தைத் தாக்கும் செய்திகளையே கேட்கும் வாய்ப்பு எழுந்தால் அந்த விஷயத்தின் பால் உள்ள தீவிரம் நிச்சயமாகக் கூடும்.  மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் சென்று சேர்ந்து பாடம் கேட்பதுவே உ.வே.சாவின் தமிழ் தாகத்திற்கு சரியான தீர்வு என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பேச்சுக்கள் நிகழ்ந்தாலும் விருத்தாசல ரெட்டியாரின் ஆர்வமும் இதே போக்கில் செல்ல நேர்ந்த போது வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் சென்று பாடம் கேட்டே ஆக வேண்டும் என்னும் எண்ணம் உ.வே.சா மட்டுமன்றி அவரது தந்தைக்கும் தீவரமாகி உறுதியானது.

பாடம் சொல்லிக் கொண்டே விருத்தாசல ரெட்டியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்களைப் பற்றி குறிப்பிடுவதை உ.வே.சா இப்படிச் குறிப்பிடுகின்றார்.

"திருக்குறள் முதலிய நூற்பதிப்புகளில் உள்ள அவருடைய சிறப்புப்பாயிரங்களின் நயங்களை எடுத்துக் காட்டிப் பாராட்டுவார். “அந்த மகானை நான் பார்த்ததில்லை; ஆனால் அவர் பெருமையை நான் கேள்வியுற்றிருக்கிறேன். அவர் காவேரிப் பிரவாகம் போலக் கவி பாடுவாராம். எப்பொழுதும் மாணாக்கர்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து விளங்குவாராம். அவருக்குத் தெரியாத தமிழ்ப் புஸ்தகமே இல்லையாம். எனக்குச் சில நூல்களிலும் உரைகளிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை அவரிடம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தனியே குறித்து வைத்திருக்கிறேன். எப்பொழுது சந்தர்ப்பம் நேர்கிறதோ தெரியவில்லை” என்று சொல்லிவிட்டுத் தாம் சந்தேகங்களைக் குறித்து வைத்திருந்த ஓலைச்சுவடியை என்னிடம் காட்டினார்."

இதுவரைப் பார்த்திராத ஒரு கல்விமானின் மேல் விருத்தாசல ரெட்டியார் வைத்திருந்த மதிப்பும் பண்பும் மனதைத் தொடுகின்றன. என்றாவது ஒரு நாள் காண்போம். அப்போது தனது ஐயங்களைத் தெளிவு செய்து கொள்வோம் என்ற நம்பிக்கையில் ஏட்டுச் சுவடியில் தனது சந்தேகங்களுக்கான குறிப்பை விருத்தாசல ரெட்டியார் எழுதிக் கொண்டே வந்திருக்கின்றார் என்ற விஷயத்தையும் இந்தக் குறிப்பின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.

உ.வே.சா மட்டுமின்றி பல்வகை சிறந்த பண்புகளும் கல்வியின் மேல் தீராத ஆர்வமும் கொண்ட பல மனிதர்களையும் அறிமுகப்படுத்துவதாலேயேயும் கூட "என் சரித்திரம்" கல்வி கற்கும் நிலையிலுள்ள எல்லா மாணவர்களுக்கும் சிறந்ததொரு  வழிகாட்டியாக அமைகின்றது என்பது எனது திடமான எண்ணம்.

அவ்வப்போது பிள்ளையவர்களைப் பற்றி விருத்தாசல முதலியார் வழங்கும் பிரஸ்தாபங்கள் உ.வே.சா வின் ஏக்கத்தை அதிகரித்து எப்போது அந்த மகானைக் காண்போம் என்ற எண்ணத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருந்தது. பிள்ளையவர்களிடம் சென்று சேர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று தனது மனதில் இருந்த ஆசைகளையும், அதற்காக தான் கயிறு சார்த்திப் பார்த்த விஷயங்களையும் விருத்தாசல ரெட்டியாரிடம் பகிர்ந்து கொண்ட போது அவரது ஆசை நியாயமானது என்பதைக் குறிப்பிட்டு விருத்தாசல ரெட்டியார் கூறுவதை இப்படி குறிப்பிடுகின்றார் உ.வெ.சா.

"இரண்டு பேரும் பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சிலே நெடுநேரம் கழிப்போம். ரெட்டியாரும், “ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடம் கேட்கலாம்; உமக்குத் திருப்தி யுண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” என்று சொல்லிவரத் தொடங்கினார். "

செங்கணத்தில் அப்போது உ.வே.சா குடும்பத்தினர் விருத்தாசல ரெட்டியாரின் ஆதரவில் இருந்து வந்தனர். தம்மால் இயன்ற அளவிற்கு உ.வே.சா குடும்பத்தினரை ஆதரித்து வந்ததோடு உ.வே.சாவிற்குப் பாடமும் சொல்லிக் கொடுத்து அவரது வாழ்வில் ஒரு கால கட்டத்தில் ஒளியேற்றி வைத்தவர் விருத்தாசல ரெட்டியார். இப்படி ஒரு ஆதரவும் அன்பும் கொண்ட மனிதர்களை இப்பொழுது எங்கு தேடினும் கிடைப்பது மிக அரிது.மகேசன் சேவை மக்கள் கல்வியை வளர்த்தல் என்ற பண்பு கொண்ட இவ்வகை மனிதர்களை நினைத்துப் போன்ற வேண்டியதும் நம் கடன்.

"என் தந்தையார் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, “எங்கே போனாலும் எல்லோரும் இந்தத் தீர்மானத்துக்குத்தான் வருகிறார்கள். ஈசுவர ஆக்ஞை இதுதான் என்று தோன்றுகிறது. இனிமேல் நாம் பராமுகமமாக இருக்கக் கூடாது. எவ்வாறேனும் இவனைப் பிள்ளையவர்களிடத்திற் கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம்” என்று நிச்சயம் செய்தார். ரெட்டியாரிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்துச் செங்கணத்தை விட்டுப் புறப்படச் சித்தமாயினர்."

தொடரும்..

குறிப்பு: இப்பகுதியில் கையாளப்பட்டுள்ள குறிப்புக்கள் 25ம் அத்தியாயத்தில் உள்ளன.

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment