Saturday, September 22, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 22


பதிவு 22

தனக்கு ஒரு சிறந்த ஆசிரியர் அமையப்போகின்றார் என்ற நம்பிக்கை மனதில் வந்தவுடன் உ.வே.சா அவர்களின் கற்பனைக் கோட்டை அந்த ஆசிரியரின் வடிவத்தை அவரது மனதிலேயே செதுக்கி வைத்துப் பார்க்க ஆரம்பித்து விட்டது. அவரோடு தாம் பழகப்போகும் நாட்கள், அத்தருணங்கள், ஆசிரியருடன் தான் கழிக்கும் பொழுதுகள், கற்பனை நிகழ்வுகளை எல்லாம் அவர் மனம் கனவு காண ஆரம்பித்து விட்டது.  இந்தப் பகுதியை மிக அழகாகக் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

"உத்தமதானபுரம் பள்ளிக்கூட உபாத்தியாயராகிய சாமிநாதையர் முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் வரையில் யாவரும் அவ்வப்போது சொன்ன விஷயங்களால் என் மனத்துக்குள்ளே பிள்ளையவர்களைப் போல ஓர் உருவத்தைச் சிருஷ்டி செய்து கொண்டேன். ஆசிரியர்களுக்குள் சிறந்தவர், கவிகளுக்குள் சிகாமணி, குணக் கடல் என்று அவரை யாரும் பாராட்டுவார்கள். அவர் எனக்குப் பாடம் சொல்லுவது போலவும், நான் பல நூல்களைப் பாடம் கேட்பது போலவும், என்னிடம் அவர் அன்பு பாராட்டுவது போலவும் பாவனை செய்து கொள்வேன்; கனாவும் காண்பதுண்டு."

இக்கனவு நனவாகிப் போகாமல் பலித்தது. இதற்கு உ.வே.சாவின்  மன உறுதியும், உள்ளார்ந்த ஆர்வமும் இறைவனின் கருணையும் தான் காரணம் என்றால் அது மிகையல்ல.

இந்த விஷயங்களெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் நாகபட்டினம் சென்று அங்கேயே தங்கியிருந்து  நாகபட்டின புராணம் இயற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதை இன்னூலில் உள்ள குறிப்பால் அறிகிறோம். இந்த புராணம் எழுதும் பணி சிறப்புற முடிந்து அவர் மாயூரம் திரும்புகின்றார் என்ற செய்தியை உ.வே.சா குடும்பத்தினர் கேள்வியுற்றனர். இதுவே அவரைச் சென்று காண தக்க தருணம் என்னும் எண்ணம் உதிக்க செங்கணத்தை விட்டு புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகினர்.

கல்விக்காகவும் பணிக்காகவும் ஓரிடத்திலிருந்து ஓரிடம் செல்வது என்பது இப்போது மட்டும் உள்ள வழக்கமல்ல இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரும் பலர் தங்கள் வாழ்க்கை தேவைகளுக்க்காக ஆங்காங்கே செல்ல நேரிடுவது வழக்கமாகத்தான் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.

இப்படி செங்கணத்திலிருந்து புறப்பட்ட உ.வே.சா குடும்பத்தினர் நேராக மாயூரம் செல்லவில்லை. உறவினர், முன்னாள் ஆசிரியர், ஆதரித்து வந்தோர் ஆகியோரையெல்லாம் சந்தித்து  வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்து இவ்வாறு உ.வே.சா மகாவித்துவானிடம் படிக்கப்போகின்றார் என்று சொல்லி ஆசி பெற்றுச் சென்ற விவரத்தையும் காண்கின்றோம். செங்கனத்திலிருந்து புறப்பட்டு குன்னம் சென்று பின்னர் அரியலூர் சென்று அங்கே தனது முதல் ஆசிரியர் சடகோபையங்காரிடமும் ஆசி பெற சென்றிருந்தார் உ.வே.சா. அங்கே நடந்த ஒரு நிகழ்வையும் குறிப்பிடுவது தகும் என்று கருதுகிறேன்.

ஆசிரியர் சடகோபையங்காரிடம் ஆசி பெற சென்றிருந்த நாளில் அவர் வீட்டில் ஒரு நூலை ஏதேச்சையாகக் காண்கின்றார். அதனை எடுத்து வைத்துப் பார்க்கும் போது அது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய நூல் என்பது தெரியவருகின்றது. அதனை இப்படி குறிப்பிடுகின்ரார்.

"அப்புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது பிள்ளையவர்கள் இயற்றிய திருநாகைக்காரோணப் புராணமாக இருந்தது. நான் பிள்ளையவர்களுடைய புலமையைப் பற்றிக் கேட்டிருப்பினும் அவர் இயற்றிய நூல் எதனையும் பார்த்ததில்லை. அப்புராணம் அச்சந்தர்ப்பத்தில் கிடைத்ததை ஒரு பெரிய நன்னிமித்தமாக எண்ணினேன். அதில் ஒவ்வோர் ஏடாகத் தள்ளிப் பார்த்தேன்; சில பாடல்களையும் படித்தேன். யாப்பிலக்கணத்தை நன்றாகப் படித்து முடித்த சமயமாதலால் அச்செய்யுட்களின் அமைப்பையும் எதுகை மோனை நயங்களையும் ஓசை இன்பத்தையும் தெரிந்து அனுபவித்து மகிழ்ந்தேன். பலவிடங்களில் திரிபுயமகங்களும் சித்திர கவிகளும் அதில் அமைந்திருந்தன. “இந்த நூலையும் இது போன்ற பல நூல்களையும் இயற்றிய மகா புருஷரிடம் படிக்கப் போகிறோம்” என்று எண்ணி எண்ணி நான் பெருமிதம் அடைந்தேன்."

அரியலூரிலிருந்து புறப்பட்டு கீழைபழுவூர் வந்து அங்கே செல்வந்தராகிய சபாபதிப்பிள்ளை அவர்களைச் சந்தித்து அங்கே ஒரு வாரம் தங்கியிருந்தனர். அவ்வேளையில் திரு.சபாபதிப்பிள்ளையவர்கள் தஞ்சை வாணன்கோவை மூலமுள்ள புஸ்தகத்தையும் வேறு சில புஸ்தகங்களையும் உ.வே.சா வுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த நூல்களை சில நாட்களிலேயே வாசித்து முடித்தார். பயணத்தின் போதும் கிடைக்கின்ற நூல்களை வாசிப்பதில் இவருக்கு அலுப்பு இருக்கவில்லை. எதையும் தள்ளிப் போடாமல் கிடைக்கும் நூல்களையெல்லாம் வாசித்து தனது புலமையை நாளுக்கு நால் அதிகரித்துக் கொண்டே வந்தமை தெளிவு. அங்கிருந்து புறப்பட்டு உத்தமதானபுரத்திற்கு வந்து சேர்கின்றனர். இந்த சமயத்தில் உ.வே.சா அவர்களின் தாயார் கருவுற்றிருந்தமையால் உத்தமதானபுரத்திலேயே அவரை விட்டு விட்டு தந்தையாரோடு மாயூரம் புறப்படுவது என ஏற்பாடாகியது.

தொடரும்....

குறிப்பு: இப்பகுதியில் கையாளப்பட்டுள்ள குறிப்புக்கள் 26ம் அத்தியாயத்தில் உள்ளன.

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment