Saturday, September 1, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 18


ஏதாவது ஒரு சங்கடம் வரும் போதோ சஞ்சலம் தோன்றும் போதோ சாஸ்திரம் பார்க்க வேண்டும், ஜோதிடரை சென்று பார்த்து பலன் அறிந்து வரவேண்டும் என்று ஒரு வழக்கம் நமது சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருகின்றது. ஜோதிடம் பார்க்காவிட்டாலும் கூட பல்லி, பூனை, மாடு என பிராணிகளைச் சகுனங்களுக்குக் காரணமாக வைத்து மனிதர்கள் நாம் நல்ல சகுனமா கெட்ட சகுனமா என்று வகுத்துப் பார்க்கும் பண்புடையவர்களாக இருக்கின்றோம். இறைவனின் திருவருள் எண்ணம் எப்படி இருக்கின்றது, நல்லவை நடக்குமா..? பிரச்சனைகள் விலகுமா? சோதனை காலம் முடியுமா? நினைத்த காரியம் கைகூடுமா ? என்பதே ஒவ்வொருவர் மனதிலும் எதிர்கால நற்பலன்களை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வைத்து விடுகின்றது. அதில் ஜோதிடர் நல்ல பலனைச் சொல்லி விட்டாலோ சகுனம் நல்லபடியாக அமைந்து விட்டாலோ நமது மனம் முழு திருப்தி அடைந்து விடுகின்றது. சஞ்சலம் குறைந்து நம்பிக்கையும் தோன்றுகின்றது. இந்த நம்பிக்கை தானே வாழ்க்கை பயணத்தின் ஆதாரம்.

குறி பார்ப்பது என்னும் கலை நமது தமிழ் சமுதாயத்தில் எல்லா நிலை மக்களிடமும் சமூகத்திலும் இருப்பதைக் காண்கின்றோம். கயிறு சார்த்திப் பார்த்தல், பூவை இறைவனின் பாதத்தில் வைத்து எந்தப் பூ வருகின்றதோ அதற்கு ஒரு பலனை கற்பனை செய்து கிடைக்கின்ற பூவிற்குக் கொடுத்த பலனே தனக்கு வருவதாக எடுத்துக் கொள்ளும் செயல், கோடாங்கி வந்து சொல்லும் காலை நேரத்து நல்ல-கெட்ட செய்திகள், கிளி ஜோசியக்காரர் கூறும் விளக்கம் -  இவையெல்லாமே சகுனத்தை அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் இன்றளவும் வைத்திருக்கும் சில நடைமுறைகளாகவே உள்ளன.

உ.வே.சாவின் வாழ்க்கையிலும் சஞ்சலம் வந்து குடி புகுந்த தருணங்கள் உண்டு. அதற்கு ஒரு உதாரணம் பற்றியே இப்பதிவு அமைகின்றது.

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து அவரிடம் பாடம் கேட்கச் செல்லும் நாளை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றார் உ.வே.சா. முதலில் தன்னை மாணவராக அவர் ஏற்றுக் கொள்வாரா? ஏற்றுக் கொண்டாலும் கல்வி கற்க ஏற்படும் செலவுகளை எப்படி சமாளிப்பது? வீட்டிலிருந்து வித்துவான் இருக்கும் இடம் சென்று அங்கு கல்வி கற்கச் செல்வது சாத்தியமா? குடும்பத்தாரை விட்டு பிரிந்திருக்க வேண்டுமே. உணவிற்கும் தங்கும் இடத்திற்கும் என்ன செய்வது என பல கவலைகள் உ.வே.சா அவர்களையும் அவர் குடும்பத்தாரையும் வறுத்திக் கொண்டிருந்தது. எப்படியாகினும் கல்வியை வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் கற்றாக வேண்டும் என்ற எண்ணமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரலாயிற்று. இந்த நிலையில் உ.வே.சா அவர்கள் தனக்கு பலன் எப்படி அமையப் போகின்றது என்று சோதித்துப் பார்க்கின்றார்.

"ஒரு நாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து அயர்ந்து போன என் உள்ளத்தில் ஓர்
எண்ணம் தோற்றியது. “இந்தப் புஸ்தகத்தில் கயிறு சார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம் திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக் கொண்டு கயிறு சார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக் கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம். 

நான் ஒரு சிறுவனைக் கொண்டு கயிறு சார்த்தச் செய்து புஸ்தகத்தைப் பிரித்தேன். சென்ற துர்மதி டு பங்குனி மாதம் பதிப்பிக்கப் பெற்ற அப்பழம்
புஸ்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து
வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தக்ஷிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து
வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன்.

“என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற பயத்தோடு நான் மெல்லப் புஸ்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என்
மனம் திக்குத் திக்கென்று அடித்துக் கொண்டது நல்ல பாடலாக வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.

“சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப 
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”

என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது மிகவும் நல்ல நிமித்தம் உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தக்ஷிணாமூர்த்தியாகிய குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால்,
என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும் கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சி சுந்தரக் கடவுள்
முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான் திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.
என் தந்தையார் பூஜையிலுள்ள மூர்த்தியும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரக் கடவுளே என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன். இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்."

இப்பகுதியை வாசித்து முடித்த போது வரிக்கு வரி உ.வே.சா அவர்களின் எழுத்திலிருந்து அவரது மனப்போக்கை நான் மனமார உணர்ந்தேன்.  நல்லாசிரியருக்காக தவம் செய்த இம்மாணவருக்கு இறையருள் கருணை கிட்டாமலா போகும்? நல்லன நினைத்து அதே சிந்தனையில் தவம் புரிபவர்களுக்கு அருள் கிட்டத்தானே செய்யும்!

பிற்காலத்தில் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தலை மாணவராகத் திகழ்ந்து அவர் இறக்கும் தருவாயிலும் அவருடன் இருக்கும் பாக்கியம் பெற்றவராக இருந்தார் உ.வே.சா என்பதைக் காண்கின்றோம். நல்ல எண்ணங்கள் செயலாக்கம் பெரும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

சுபா

No comments:

Post a Comment