Friday, April 1, 2011

Oster Glocken - ஈஸ்டர் மணிகள்

ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல் வேண்டாமா.. இதோ ஒன்று... என் தோட்டத்திலிருந்து..! Oster Glocken (ஓஸ்டர் க்லோக்கன்) என்று டோய்ச் பேச்சு வழக்கு மொழியில் சொல்லப்படும் பூக்கள். ஈஸ்டர் மணிகள் என்று மொழி பெயர்க்கலாம். இதன் தாவரப் பெயர் Narzissen (Narcissus). விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Narcissus_(plant) மேலும் தகவல் பெறலாம். இவை முழுதும் மஞ்சளாக, முழுதும் வெள்ளையாக, வெள்ளையும் மஞ்சளும் கலந்து, வெள்ளையும் ஆரஞ்சு நிறமும் கலந்து, ஆரஞ்சும் மஞ்சளும் கலந்து என பல வகையில் இருக்கின்றன. குறிப்பாக கிற்ஸ்துவ மதத்தினர் ஈஸ்டர் கொண்டாடும் இம்மாதத்தில் இது பல இடங்களில் பூத்திருப்பதை பார்க்கலாம். பூக்கள் அனேகமாக 3லிருந்து 4 வாரங்கள் செடியில் பூத்திருக்கும். பின்னர் இலைகள் துவண்டு காய்ந்து சருகாகிவிடும். நிலத்தின் அடியில் இருக்கும் செடியின் கிழங்கு கெட்டுப் போகாது. மீண்டும் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் போது இவை மீண்டும் முளைக்கும். வசந்த கால பூக்களின் வகையைச் சார்ந்தது இது. அன்புடன் சுபா

Tuesday, March 29, 2011

Stiefmütterchen - சிறிய வளர்ப்பு தாயார்

சென்ற வார இறுதியில் வாங்கி வைத்த Pansy.





Stiefmütterchen என்று டோய்ச் மொழியில் அழைக்கப்படுகின்றது. Stiefmutter என்பதை அப்படியே மொழி மாற்றம் செய்தால் "வளர்ப்பு தாயார்" என்று அர்த்தம். அதில் கூடுதலாக இந்த chen சேரும் போது சிறிய என்பதும் இணைந்து கொள்வதால் இந்தப் பூவை "சிறிய வளர்ப்பு தாயார்" என மொழிபெயர்க்கலாம். ஏன் இந்தப் பெயர் என்று தெரியவில்லை.



மஞ்சள், சிவப்பு, ஊதா, நீலம், வெள்ளை இளம் சிவப்பு என பல வர்ணங்களில் இவை உள்ளண.

இந்த பூ வகை பற்றி மேலும் அறிந்து கொள்ள.,,
http://en.wikipedia.org/wiki/Pansy
http://www.herbalextractsplus.com/pansy.cfm

Monday, March 28, 2011

வசந்த கால அழையா விருந்தினர்கள்

வசந்த காலம் வந்தால் செடிகளும் பூக்களும் மட்டுமா வருகின்றன. அவற்றுடன் சேர்ந்து வண்டுகளும் நத்தைகளும் வந்துவிடுகின்றன. மாலை என் செடிகளைப் பார்த்த போது அங்கே வந்திருந்த புதிய விருந்தினர்களையும் கண்டு மலைத்து விட்டேன். அத்தனை குட்டி குட்டி நத்தைகள்.



அமைதியாக இலையின் மீது அமர்ந்து அவற்றை ருசிக்கும் நத்தை...


அவற்றுடன் அழகான ஒரு குட்டி வண்டு (lady bird)

-சுபா

Friday, March 25, 2011

வசந்த கால வரவுகள்

குளிர்காலம் முடிந்து வசந்த காலம் வந்து விட்டது. இன்றைக்கு ஸ்டுட்கார்ட்டில் சீதோஷ்ணம் 21 டிகிரி செல்சியஸ். நாளை மீண்டும் 13 வரை குறையும் என்று வானிலை அறிக்கை சொல்கின்றது. ஆனாலும் கடந்த 2 நாட்கள் வெயிலைப் பார்ப்பதில் குதூகலமாகத்தான் உள்ளது.

குளிர்காலத்தில் பதுங்கியிருந்த செடிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் பிளந்து கொண்டு வந்து விட்டன. எனது தோட்டத்திலும் சறுகுகளாக இருந்த செடிகளில் தளிர் இலைகள் தோன்றுகின்றன. கடந்த செப்டம்பர் நட்டுவைத்த டூலிப், க்ரோகோஸ் செடிகள் முளைத்து பூக்களைக் கொண்டு வந்திருக்கின்றன.

இதோ சில..


Thursday, March 24, 2011

திரு.நரசய்யாவுடன் சில நிமிடங்கள்

மதியம் 2:30 மணிக்கு வருகின்றேன் என்று தொலைபேசியில் அழைத்து தெரிவித்திருந்தேன். ஆனால் சென்னையில் சொன்ன நேரத்திற்குச் செல்வது சாத்தியமில்லை என்பதை பல முறை அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். தமிழகத்துக்குப் பயணம் செய்ய ஆரம்பித்த ஆரம்பகாலங்களில் நமது நா. கண்ணன் எனக்கு கூறிய உபதேசம். ”இங்கே நினைத்தபடி காரியங்கள் நினைத்த நேரத்தில் நடக்காது. திடீரென்றுதான் ஏதாவது நடக்கும். இல்லைழென்றால் சில சம்யங்கள் ஏதுமே நடக்காமலும் போகும்..” ஆக திட்டமிடுதலில் தமிழகம் என்று வரும் போது.. கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.. இந்த உபதேசம் நன்றாகவே மனதில் பதியும் வகையில் எனக்கு நல்ல அனுபவம் இந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஆக அன்றும் அப்படித்தான்.. மதியம் 2:00 மணிக்குத்தான் நாங்கள் மதிய உணவுக்குச் செல்லவே புறப்படும் வகையில் எங்கள் மற்ற சந்திப்புக்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு விட்டன.

அன்று காலை சீத்தாம்மாவுடன், மதுமிதாவும் சேர்ந்து கொள்ள நாங்கள் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதாகத் திட்டம். அவற்றை முடித்து 2:30க்கு திரு.நரசய்யா தம்பதிகளை அவர்கள் வீட்டில் சந்தித்து பேசுவது.. மற்றும் ஆலவாய் நூல் பற்றி கலந்துரையாடுவது என்பது திட்டம். ஆனால் நாங்கள் தான் 2:30 மணிக்கு அண்ணா நகர் சரவனபவனில் இருக்கின்றோமே!

திருமதி.நரசய்யா, திரு.நரசய்யா,சுபா, திருமதி.சீதாலட்சுமி

தாமதத்திற்கான காரணத்தை திரு.நரசய்யாவிற்குத் தொலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டு நாங்கள் சாப்பிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். சீத்தாம்மா ஏற்பாடு செய்திருந்த வாகனமோட்டி எங்கெங்கோ சென்று பின்னர் மீண்டும் கண்டுபிடித்து ஒரு வழியாக எங்களை 4 மணிக்கு திரு.நரசய்யா இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தார். பாவம்.. அவருக்கும் வழி மறந்து போய்விட்டது போலும்.
திருமதி.மதுமிதா திரு.நரசய்யாவுடன்



திரு.நரசய்யா.. கடலோடி என்று சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுபவர். தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர். அத்துடன் நமது அனைத்து திட்டங்களிலும் நம்முடன் துணையாக இருந்து ஆலோசனைக் கூறி வருபவர். இவரது பயணக் குறிப்புக்களும் ஆய்வு நூல்களும் எனது கவனத்தை ஈர்த்தவை. இவரது மதுரை பற்றிய ”ஆலவாய்” நூல் ஒரு தகவல் களஞ்சியம். மதுரையையே புதிய கோணத்தில் மலேசியரான எனக்கு அறிமுகப்படுத்திய நூல் இது. அது போலவே மதராச பட்டினம் என்ற நூலும். மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வு செய்து இந்த வரலாற்றுப் படைப்புக்களை உருவாக்கியவர் இவர்.

முகம் மலர எங்களை வரவேற்று உபசரித்தனர் திரு.நரசய்யாவும் அவர் துணைவியாரும். கிடைத்ததே எங்களுக்கு கொஞ்சம் நேரம் தான். அன்று மாலையே நான் தஞ்சைக்கு வேறு பயணிக்க வேண்டும். ஆக 5 மணிக்குள் அங்கிருந்து புறப்பட வேண்டிய சூழல் ஆகையால் அதிகம் பேச வாய்ப்பு கிடைக்க வில்லை. நிறைய பேச வேண்டும். தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் இருந்தாலும் அவசர நிலையில் எதனையும் திருப்திகரமாக செய்ய முடியாத நிலை.

திரு.நரசய்யாவின் புதிய வெளியீடான மாமல்லபுரம் நூலை பற்றியும் சிறிது பேசினோம். இது டாக்டர்.சுவாமிநாதன் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலின் தமிழாக்கம். தரமான பதிப்பாக வந்துள்ளது இந்த நூல். இடையில் இவர் ஈடுபட்டிருந்த திருச்சி ஆய்வு பற்றியும் கொஞ்சம் பேசினோம். விரைவில் இந்த திட்டம் நிறைவாக முடிவுற்று மேலும் ஒரு ஆய்வு நூல் நமக்கு கிடைக்கும் வேண்டும் என்பது எனது அவா.

புறப்படுவதற்கு முன்னர் திரு.நரசய்யாவின் அலுவலக அறைக்கு என்னை அழைத்துச் சென்று எனக்கு அவரது 2 பிரியமான நாற்காலிகளைக் காண்பித்தார். இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட மஹோகானி மரத்தினால் செய்யப்பட்ட நாற்காலிகள் இவை. இந்த நாற்காலியில் அமர்ந்து சிந்திப்பதும் ஓய்வெடுப்பதும் மகிழ்ச்சி தரும் ஒரு விஷயமாக திரு.நரசய்யாவிற்கு உள்ளது என்பதை அவரது புன்னகையிலேயே தெரிந்து கொண்டேன்.


அடுத்த ஆண்டு தமிழகம் செல்லும் போது மீண்டும் நிச்சயம் திரு.நரசய்யா தம்பதிகளைச் சந்திக்க வேண்டும். நிறை நேரில் பேச வேண்டும் என்ற ஆவல் இப்போதே உள்ளது.


ஆல்பம் முழுதும் பார்க்க இங்கே செல்க..!

Tuesday, November 2, 2010

மீராபெல்லா



என் வீட்டு தோட்டத்தின் மீண்டும் ஒரு தகவலுடன் இந்த இழையில் இன்று மீண்டும் வருகின்றேன். இடத்துக்கு இடம் சீதோஷ்ணத்திற்கு ஏற்ற வகையில் சில மரங்களும் செடிகளும் வளர்கின்றன. அந்த வகையில் குளிர்த்தேசத்து நாடுகளில் பிரபலமான ஒரு பழம் மீராபெல்லா. இது இரண்டு வக வர்ணங்களில் ஜெர்மனியில் பல இடங்களில் விளைகின்றது. மஞ்சள் நிறத்திலும் கருஞ்சிவப்பு நிறத்திலும் இப்பழங்கள் விளைகின்றன. செர்ரி பழம் போன்று வடிவம். ஆனால் சுவையில் செர்ரியை விட வித்தியாசமானது இப்பழம்.



நவம்பர் தொடங்கி மார்ச் மாதம் பாதி வரை மீராபெல்லா மரத்தில் இலைகளே இருக்காது. மொட்டையாக மரம் நிற்கும். பூவோ பழமோ தளிரோ இலையோ ஏதும் இருக்காது. மார்ச் மாதக் கடையியில் இளவேனிர்கால தொடக்கத்தில் வெள்ளையும் இளம் சிவப்பும் கலந்த வர்ணத்தில் பூக்களே நிறைந்திருக்கும். தேவ லோகத்து மரம் போன்ற ஒரு தோற்றமளிக்கும் இம்மரம். இப்படத்தை பாருங்கள்.



பின்னர் ஏப்ரல் தொடங்கி பூக்கள் கொட்டி இளம் தளிர்கள் தோன்றி இலைகள் வந்து ஜூன் மாத வாக்கில் பழங்கள் நிறைந்து இருக்கும் இந்த மரம்.



குருவிகள் விரும்பி தேடி வந்து இங்கு அமர்ந்து இப்பழங்களை சுவைக்கத் தவருவதில்லை.




இங்கு மீராபெல்லா பழங்களைக் கொண்டு ரொட்டிக்குத் தேவைப்படும் ஜேம் பிரபலமான ஒன்று. இனிப்பு பண்டங்களிலும் சேர்த்து பேக் செய்வதுமுண்டு. ஆனாலும் இதன் சுவையை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால் அப்படியே மரத்திலிருந்து பறித்து சாப்பிட வேண்டும்.:-)

மீராபெல்லா வைன், லிக்கர் ஆகியவையும் பிரபலமானவை. பல் கடைகளில் இவை கிடைக்கும்.


ஆங்கிலத்தில் இப்பழத்தை Mirabelle Plum என்றும் டோய்ச் மொழியில் Mirabelle என்றும் இது அழைக்கப்படுகின்றது. இது ப்ளம் பழ வகையைச் சார்ந்தது. இப்பழத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:
http://en.wikipedia.org/wiki/Mirabelle

அன்புடன்
சுபா

Wednesday, August 11, 2010

என் வீட்டுத் தோட்டத்தில்.. 2

எனது தோட்டத்திலிருந்து...

திராட்சை ஓரளவு பெரிதாகி பச்சை நிறத்திலேயே உள்ளது. அடுத்த மாதம் நிறம் மாறி கரு நீலமாக காட்சியளிக்கும். சற்று பொறுத்திருக்க வேண்டும்.

பூவோடு இருந்த தக்காளிச் செடியில் காய்கள் நிறைய வந்துள்ளன. ஏழெட்டு தக்காளிப் பழங்களை அறுவடை செய்தாகிவிட்டது. இரண்டு மிளகாய்களும் கூட.






எனது மாமனார் தோட்டத்தில் ஒரு சிறு பகுதியை எனது காய்கறி பயிர்களுக்காக வைத்திருக்கிறேன். அதில் நான் நட்டு வைத்த 3 பெரிய தக்காளிச் செடிகள், cocktail tomato செடிகள் இரண்டும் நிறைய காய்களைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றன. நீளமான வகை மிளகாய் செடி இரண்டும் ஒரு பறங்கிக்காய் செடி ஒன்றும் கூட இரண்டு காய்களுடன் அழகாக வளர்ந்திருக்கின்றன. சிறு கன்றுகளாக நட்டு வைத்து ஒரு இடைவெளிக்குப் பின்னர் சென்று பார்க்கும் போது காய்களும் பூக்களும் நிறைந்து இருப்பதை பார்க்கும் போது ஆச்சரியம் தோன்றாமல் இல்லை.

இது எப்போதும் எங்கும் சர்வ சாதரணமாக நடப்பதுதானே என நினைத்து விட முடியவில்லை. உலகில் நடக்கின்ற பல ஆச்சரியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றுதான்..:-)



எனது காய்கறிகளைப் பார்க்க விரும்புபவர்களுக்குச் சில படங்கள் இணைத்துள்ளேன். (மிளகாய், தக்காளி, பறங்கிக்காய்.)





அன்புடன்
சுபா