Tuesday, March 8, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 91

சீவகசிந்தாமணி உ.வெ.சாவின் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. 

கல்லூரியில் தனது பாட நேரம் போக ஏனைய நேரத்தைச் சிந்தாமணியை வாசிப்பதிலும் ஜைனராகிய சந்திரநாத செட்டியார் இல்லம் சென்று சிந்தாமணியை அவர் விளக்குவதைக் கேட்பதிலும் செலவிடுவதில் அவரது நாட்டம் இருந்தது. அப்படி சந்திரநாத செடியார் இல்லம் செல்லும் வேளைகளில் அங்கு வந்திருக்கும் சமண நெறியை ஒழுகுவோரைக் காண நேரிடும் வேளைகளில் அவர்களிடம் உரையாடி கர்ணபரம்பரைக் கதைகளைக் கேட்பதிலும் மிகுந்த இன்பம் கண்டார் உ.வெ.சா. அதுமட்டுமன்றி இராமசாமி முதலியாரோடு சேர்ந்து வாசித்து பாடம் சொல்வதையும் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சிந்தாமணி ஆராய்ச்சியின் போது நச்சினார்க்கினியார் உரையைப் பயன்படுத்துகையில்  இரண்டு வகை ஏட்டுப் பிரதிகள் ஜைனர்களின் பயன்பாட்டில் இருப்பதையும் அவர் கண்டார்.  இரண்டு வேறுபட்ட சுவடிகளை வைத்து அவர்கள் கற்கும் காரணத்தையும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அதாவது,  நச்சினார்க்கினியார் சிந்தாமணிக்கு முதலில் ஒரு உரையை எழுதியிருக்கின்றார். அதனை ஜைன சமயத்தைப் பேணுபவர்களிடம் வாசித்துக் காட்டி கருத்து கேட்டிருக்கின்றார். அதனை வாசித்த ஜைனர்கள் வழக்கத்தில் இருக்கும் சம்பிரதாயத்திலிருந்து விளக்கம் மாறுபட்டிருக்கும் இடங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இதனை நிவர்த்திக்க நச்சினார்க்கினியார் ஜைனராக சில காலம்  பயிற்சி மேற்கொள்ள சிற்றாம்பூர் என்னும் ஒரு ஊரில் இருக்கும் ஜைன மடம் வந்து அங்கேயே சில காலம் தங்கியிருந்து  ஜைன அடிப்படை நூல்களைக் கற்றும், ஜைன ஒழுக்கங்களை தாமே பயிற்சி செய்து கற்றும்  விடயங்களை அறிந்து கொண்டு மீண்டும் ஒருமுறை  புதிய உரையை எழுதினார் என்பதை அறிய முடிகின்றது.  இந்த வேளையில் சிந்தாமணியை எழுதிய ஆசிரியர் திருத்தக்க தேவர் என்பதையும் உ.வெ.சா அறிந்து கொண்டார்.

சிந்தாமணியைக் கற்கத் தொடங்கி மேலும் பல ஜைன நூற்களின் அறிமுகம் உ.வெ.சாவிற்கு அடுத்தடுத்து ஆரம்பமாகியது. அருகாமையில் இருக்கும் ஏனைய சில ஜைன அன்பர்களின் வீடுகளுக்குச் செல்வது, அங்கு சமணத்தைப் பற்றி உரையாடுவது என்றும் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் உ.வெ.சா.  அந்த வகையில் குணபால செட்டியார் என்பவர் அறிமுகம் கிட்டியது. அவரது துணைவியார் தரணி செட்டியார் என்னும் சிறந்த சமண அறிஞரின் சகோதரி. அவரது அறிமுகமும் இவருக்கு அமைந்தது. அதோடு தரணி செட்டியாரின் மருமகன் சமுத்திர விஜயம் செட்டியாரின் அறிமுகமும் உண்டாகியது. சமுத்திர விஜயம் செட்டியாரின் உதவியால் சில ஜைன நூல்களை அவரிடமிருந்து இரவலாகப் பெற்றுக் கொண்டு வந்து வாசிக்கத்தொடங்கினார் உ.வெ.சா.

இவ்வாறான புதுமையான அனுபவங்கள் தமக்குக் கிடைத்த அனுபவத்தை உ.வெ.சா தன் சரித்திரத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"இவ்வாறு ஜைனர்களுடனும் ஜைன நூல்களுடனும் இடைவிடாது பழகியபோது சிந்தாமணியின் அருமை வர வர எனக்கு நன்கு
புலப்படலாயிற்று. செந்தமிழ்க் காவியங்களுக் கெல்லாம் அதுவே உரையாணி என்பதை அறிந்து கொண்டேன். அதனுடைய போக்கிலே உள்ள கம்பீரமும் சொல்லாட்சிச் சிறப்பும் என் மனத்தைக் கவர்ந்தன."

நச்சினார்க்கினியாரின் சிந்தாமணி உரையை வாசித்து தொடர்ந்து இன்புற்றிருந்த வேளைகளில் அடிக்கடி பொருள் புரியாது சுனக்கம் ஏற்படும் வேளைகளில் நச்சினார்க்கினியாரோடு மானசீகமாக சண்டையிடவும் அவர் தயங்கவில்லை. இப்படி தன் ஆதங்கத்தை எழுதுகிறார்.

"சிந்தாமணிப் பாட்டாக இருந்தால் சந்திரநாத செட்டியார் இருக்கிறார். வேறு நூலாக இருந்தால் என்ன செய்வது! அவர் மேற் கோளாகக் காட்டும் உதாரணங்களோ நான் படித்த நூல்களிலே இல்லாதன. அவர் உதாரணங்கள் காட்டு அந்த நூல்களின் தொகுதியே ஒரு தனி உலகமாக இருக்குமோ என்ற மலைப்பு எனக்குத் தோற்றியது. “நூற்பெயரையாவது இந்த மனிதர் சொல்லித் தொலைக்கக் கூடாதா?” என்று அடிக்கடி வருத்தம் உண்டாகும். ஆனாலும் அந்த மகோபகாரியின் அரிய உரைத் திறத்தின் பெருமையை நான் மறக்கவில்லை. சுருக்கமாக விஷயத்தை விளக்கி விட்டு எது நுணுக்கமான விஷயமோ அதற்கு அழகாகக் குறிப்பு எழுதுகிறார். அவர் எழுதும் பதசாரங்கள் மிக்க சுவையுடையன. அவர் அறிந்த நூல்களின் பரப்பு ஒரு பெருங்கடலென்றே சொல்ல வேண்டும்."

இப்படி ஆழமாகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டும் உரையாசிரியரோடு சண்டைப்போட்டுக் கொண்டும் என்றும் உ.வெ.சாவின் சிந்தாமணி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வேளையில்  இராமசாமி முதலியார் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்குச் செல்ல திட்டமிட்டார்.  அரசு அலுவல்களிலிருந்து தொல்லை வேண்டாம், கட்டுப்பாடற்ற வாழ்க்கையைத் தொடரவேண்டும் ஆக வக்கீல் தொழில் செய்து வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு தமிழ் ஆராய்ச்சி தேடலில் மூழ்கி விடவேண்டும் என்பது அவரது கணவாக இருந்தது. அந்த சிந்தனையில் குடும்பத்தோடு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு விட்டார் இராமசாமி முதலியார்.

புறப்பட்டுச் சென்றார். ஆனால் சும்மா செல்லவில்லை.

உ.வெ.சாவிடம் விடைபெறும் போது  "இப்போது சிந்தாமணியின் பெருமை உ.வெ.சாவிற்கு நன்கு புரிந்திருக்கின்றது என்றும், மேலும் பல தொடர்பு நூல்களையும் வாசித்து ஆராய்ச்சி செய்து சிந்தாமணியை உ.வெ.சா அச்சுப்பதிப்பாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து அப்படி ஒன்றைச் செய்தாலே போதும்.  தமக்கு  வேறு எந்த  உபகாரமும் செய்யத்தேவையில்லை",  எனக் கேட்டுக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.

ஊர் ஊராகத் தேடி தேடி தமிழ்ச்சுவடிகளை அச்சுப்பதிப்பாக்க உ.வெ.சா தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இந்த நிகழ்வு உந்துதலாக அமைந்தது.

உ.வெ.சாவின் கவனத்தையும் ஈடுபாட்டையும் சிந்தாமணி முழுமையாக ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. அப்போதைய தன் நிலையை உ.வெ.சா இப்படிக் குறிப்பிடுகின்றார். 

"காலேஜிலும் வீட்டிலும் பாடம் சொல்லும் நேரம் போகச் சிந்தாமணியைப் படிப்பதிலே ஆழ்ந்திருந்தேன். அனபாய சோழ மகாராஜா
சீவகசிந்தாமணியைப் படித்து அதன் நயத்திலே ஈடுபட்டிருந்தாரென்றும், அப்போது சேக்கிழார் ஜைனர்கள் கட்டிய கதை அந்நூல் என்று சொன்னாரென்றும், நான் வாசித்திருந்தேன். அந்தச் சோழ சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பிணிக்கும் காவியரஸம் அந்த அரிய நூலில் இருப்பது உண்மை யென்றே நான் உணர்ந்தேன். அது ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ யானால் நமக்கென்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே; அவை நிரம்பக் கிடைக்கும் காவியமாக இருக்கும்போது அதைப் படித்து இன்புறுவதில் என்ன தடை?"

சமய நிபந்தனைகளுக்குள் தன்னை முடக்கிக் கொள்ளாத ஒரு ஆராய்ச்சி மாணவராகவே உ.வெ.சா திகழ்ந்திருக்கின்றார். தான் சார்ந்திருக்கும் சமயம், தனது பின்னனி இதற்குள்ளேயே மனதையும் கவனத்தையும் வைத்து ஆராய்ச்சி செய்வது என்பது முழுமையான ஆய்வாக ஆகாது. அது சாமானியர் செய்யும் வேலை. அறிவும் தெளிவும், ஞானமும் எங்கெல்லாம் தெளிவாக்கப்பட்டிருக்கின்றதோ அந்த நூல்கலையெல்லாம் சமய பேதம் கடந்து படித்து இன்புறும் மனப்பக்குவமும் தைரியமும் எத்தனை பேருக்கு வரும்? அப்படி உள்ளவர்களில் ஒருவராக உ.வெ.சா திகழ்ந்திருக்கின்றார். இந்த குணமே அவரை தமிழ் மாணவர்களுக்கு இன்றைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக நம் முன்னே நிறுத்தியுள்ளது!

தொடரும்.

சுபா

No comments:

Post a Comment