Thursday, May 30, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 51

ஒரு நூல் உருவாக்கம் பெற்று முழுமை அடைவது என்பது ஒரு ஆபூர்வமான விஷயம் தான். இது எப்படி அபூர்வமான ஒன்றாகலாம் என சிலர் நினைக்கலாம்.  பலருக்கும்    திடீரென்று ஒரு மாயஜாலத்தைச் செய்வதும் அதனால் கண்களுக்கு ஒரு வித்தியாசத்தைக் காட்டி மறைப்பதும் அபூர்வமான விஷயங்களாகப் படலாம். எனக்கு பொதுவாகவே இப்படிப்பட்ட விஷயங்கள் அபூர்வம் என்ற வரையறைக்குள் சென்று சேர்வதில்லை. ஒரு கருத்து உதிக்க, அது சிந்தனைக்குள்ளே ஒரு வடிவம் பெற்று பின்னர் இடையில் ஒலியாக உருவம் கொண்டு பின்னர் எழுத்தாக வடிவம் பெற்று முழுமை பெற்று சீரான கருத்துக்குவியலாக வந்து சேர்ந்து முழுமை பெறுவது ஒரு அபூர்வமான விஷயம் அல்லவா?

கடந்த வார இறுதியில்தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் திரு அம்பர் புராணத்தை வெளியிட்டிருந்தேன். திருவாவடுதுறை மடத்தில் நேரில் சென்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணியினால் பொது மக்கள் வாசித்துப் பயன்பெறும் வண்ணம் பிள்ளையவர்களின் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்து வைக்க அவர்களின் ஒத்துழைப்பை நாடிய போது மடத்தின் நிர்வாகத்தினர்  சம்மதம் கொடுத்தனர். அவர்களின் ஒத்துழைப்பினால் மடத்தின் நூலகத்தின் புராண நூல்களில் தேடி அவற்றை எடுத்து நூலின் ஒவ்வொரு பக்கங்களையும் மின்பதிப்பு செய்தோம்.

அதில் குறிப்பிடத்தக்க ஒரு நூல் இந்தத் திரு அம்பர்புராணம். நான் என்னிடம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பட்டியலில் திருஅம்பர்புராண நூலின் பெயரையும் குறித்து வைத்திருந்தேன். மண்டபத்தின் தலபுராண அல்லது புராண நூல்களின் பட்டியலில் இருக்கும் ஏறக்குறைய இரண்டாயிரம் நூல்களின் பெயர்களில் திருஅம்பர்புராணத்தின் பெயரை கண்டுபிடித்து அது இருக்கும் அலமாரி எண்ணைச் சென்று பார்த்து தேடினால் வரிசையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் கையில் வைத்துக் கொண்டிருந்த டார்ச் லைட்டைக் கொண்டே தேடுதல் பணியைச் செய்தோம். முதல் நாள் நூல் கிடைக்கவில்லை. மறுநாள் சென்ற போது மின்சாரமும் இருந்ததால் திருஅம்பர்ப்புராணத்தோடு மேலும் இரண்டு நூல்களும் கூட கிடைத்தன.

இந்தத் திரு அம்பர்ப்புராணத்தை நான் தேடியதற்குக் காரணம் ஏற்கனவே நான் என் சரித்திரம் நூலில் இந்த நூலைப் பற்றி வாசித்திருந்தமையால் தான்.ஒரு வரலாற்று விஷயம் சுவாரசியமாகப் பதிவாக்கப்பட்டிருக்கும் போது அதனை மேலும் அருகில் சென்று அறிந்து கொள்ள மனம் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றது. அந்த உந்துதலில் இந்த நூலை திருமடத்திலேயே பார்த்து விட வாய்ப்பமைந்தால் எவ்வளவு  சிறப்பாக இருக்கும் என நினைத்துச் சென்றது வீண் போகவில்லை. அத்தியாயம் 45லும் 46லும் திருஅம்பர்புராணத்தைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அதனை மீண்டும் வாசித்து இப்பதிவில் இணைப்பதும் இந்த நூலைப் பற்றிய மேலதிக விபரத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவலாம்.

திருஅம்பர்புராணம் உ.வே.சா அவர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவராக இருந்த போது எழுதி முற்றுப் படுத்தப்பட்ட ஒரு நூல். ஏற்கனவே தொடங்கி செய்யுள்களை எழுதியிருந்தார். ஆனாலும் நூல் முற்றுப் பெறவில்லை. திருவாவடுதுறையிலும் திருமடத்திலும் தான்  இந்த நூல் முழுமை அடைந்தது. இது முழுமை பெற்ற விதத்தை என் சரித்திரத்தின் குறிப்பிலிருந்தே  வாசிப்போமே.

" ஒரு நாள் ஆசிரியர் தம் புஸ்தகக் கட்டில் உள்ள ஒர் ஏட்டுச் சுவடியை எடுத்து வரச் சொன்னார். அவர் முன்னமே பாடத் தொடங்கி ஓரளவு எழுதப்பெற்று முற்றுப் பெறாதிருந்த அம்பர்ப் புராண ஏட்டுச் சுவடி அது; ‘திருவம்பர்’ என்னும் தேவாரம் பெற்ற சிவஸ்தல வரலாற்றைச் சொல்லுவது. அதை முதலிலிருந்து என்னைப் படித்து வரும்படி சொன்னார். நான் மெல்லப் படித்தேன். அவ்வப்போது சில திருத்தங்களை அவர் சொல்ல அவற்றை நான் சுவடியிற் பதிந்தேன். இரண்டு மூன்று தினங்களில் அதில் உள்ள பாடல்கள் முழுவதையும் படித்துத் திருத்தங்களும் செய்தேன். “இந்த நூலை ஆரம்பித்து ஒரு வருஷமாகிறது. அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. இதை முன்பு நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார். அவர் திருத்தமாக எழுதக் கூடியவரல்லர். நான் ஏதாவது சொன்னால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சில இடங்களில் வேறாக எழுதியிருக்கிறார். இப்படி இவர்
செய்திருப்பாரென்று சந்தேகப்பட்டுத்தான் மறுபடியும் படிக்கச் சொன்னேன். சொல்வதைச் சரியாக எழுதுவோர் கிடைப்பது அருமையாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, “இனி இந்தப் புராணத்தை விரைவில் முடித்துவிடவேண்டும். நீர் ஏட்டில் எழுதலாமல்லவா?” என்று என்னை ஆசிரியர் கேட்டார்."

இதனைச் செய்யக் காத்திருக்கின்றேன் என்றுகூறிய உ.வே.சாவிடம் விரைவில் திருவாவடுதுறை சென்று அங்கே காத்திருக்கும் தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லும் போது இந்த நூலை முடித்து விடலாம் என்று பிள்ளையவர்கள்  கூறிவிட்டார்கள். இதில் உ.வே.சாவுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி.

புறப்பட்டு  மாயூரம் எல்லையைத் தாண்டிமாட்டு வண்டியில் திருவாவடுதுறை சென்று கொண்டிருக்கும் போது பிள்ளையவர்களுக்கு ஏதோ சிந்தனை. அருகில் சவேரிநாதப் பிள்ளையும் உ.வே.சாவும் இருக்கின்றனர்.

" “அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனை எடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக் கொள்ளும்” என்று அவர் சொன்னார். நான், “முன்னமே முழுவதையும் வாசித்துக் காட்டித் திருத்தங்களைப் பதிந்தோமே” என்று எண்ணினேன்.

ஏட்டைப் பிரித்து அம்பர்ப் புராணத்தில் எழுதப் பெற்றிருந்த இறுதிச் செய்யுளை வாசிக்கச் சொன்னார். பிறகு சிறிது நேரம் ஏதோ யோசித்தார். அப்பால் புதிய பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். “பெரிய ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது இது? வண்டியிலே பிரயாணம் செய்கிறோம். இப்போது மனம் ஓடுமா? கற்பனை எழுமா? கவிகள் தோன்றுமா? அப்படித் தோன்றினாலும் நாலைந்து பாடல்களுக்கு மேற் சொல்ல முடியுமா?” என்று பலவாறு நான் எண்ணமிடலானேன். 

அவர் மனப் பாடம் பண்ணிய பாடல்களை ஒப்பிப்பது போலத் தடையின்றி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லி வந்தார். வண்டிமெல்லச் சென்றது. அவருடைய கவிதை வெள்ளமும் ஆறு போல வந்துகொண்டிருந்தது. என் கையும் எழுத்தாணியை ஓட்டிச் சென்றது. வண்டியின் ஆட்டத்தில் எழுத்துக்கள் மாறியும் வரிகள் கோணியும் அமைந்தன. அவர் சொன்ன
செய்யுட்களோ திருத்தமாகவும் பொருட் சிறப்புடையனவாகவும் இருந்தன."

இந்தத் தலபுராணம் ஒரு சிவஸ்தலத்தின் சிறப்பை மட்டும் விளக்குவதன்று. தான் பார்த்து வழிபட்ட பல சிவஸ்தலங்களின் அருமை பெருமைகளை உட்புகுத்தி இதனை ஒரு சிவஸ்தலக் கருவூலமாக தனது செய்யுள்களின் வழியாக பிள்ளையவர்க்ள் உருவாக்கித் தந்திருக்கின்றரகள். வட இந்தியாவிலிருந்து நந்தன் எனும் ஒரு அரசன் திருஅம்பர் சிவஸ்தலத்தில் வழிபட்டுச் செல்ல வந்து போகும் போது வழியில் தான் காணும் சிவஸ்தலங்களையெல்லாம் தரிசித்து அவற்றைப் பற்றி கூறுவது போல அமைந்தது இந்தப் புராணம்.தனது அனுபவத்தில் தனது தேடலில் தான் சேகரித்து வைத்திருக்கும் விஷயங்களை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தும் வகையில் சிவாலயங்களின் பெருமைகளை தலபுராணம் என்னும் வடிவில் உருவாக்கியிருக்கின்றார் பிள்ளையவர்கள்.

உ.வே.சா தனது வியப்பை மேலும் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"வண்டியிலே போவதை நாங்கள் மறந்தோம். தம் கற்பனா உலகத்தில் அவர் சஞ்சாரம் செய்தார். அங்கிருந்து ஒவ்வொரு செய்யுளாக உதிர்த்தார். அவற்றை நான் எழுதினேன். எனக்கு அவருடைய உருவமும் அவர் கூறிய செய்யுட்களுமே தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. ஒரு பாட்டை அவர் சொல்லி நிறுத்தியவுடன் சில சில சமயங்களில் அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் புறம்பாக நின்று நான் சில நேரம் பிரமிப்பை அடைவேன். ஆனால் அடுத்த கணமே மற்றொரு செய்யுள் அவர் வாயிலிருந்து புறப்பட்டு விடும். மீண்டும் நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து ஒன்றி விடுவேன். "

இப்படி பிரயாணத்தின் போதே திருஅம்பர்ப்புராணம் வளர திருவாவடுதுறை மடத்தின் வாயிலை வந்தடைந்து விடுகின்றனர்.

" “சரி, சுவடியைக் கட்டிவையும்; பின்பு பார்த்துக் கொள்ளலாம்” என்று ஆசிரியர் உத்தரவிட்டார். அவரை வாயாரப் பாராட்டிப் புகழும் நிலையும் அதற்கு வேண்டிய ஆற்றலும் இருக்குமாயின் அப்போது நான் ஒர் அத்தியாயம் சொல்லி என் ஆசிரியர் புகழை விரித்து என் உள்ளத்தே இருந்த உணர்ச்சி அவ்வளவையும் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த ஆற்றல் இல்லையே! " 

இப்படி ஒரு பயணத்தின் போது உருவாகிய  திருவாவடுதுறை மடத்தில் முற்றுப் பெற்ற இந்த நூலை திருவாவடுதுறை மடத்திலேயே நேராகப் பெற்று மின்னாக்கம் செய்த போது என் உள்ளம் அளவில்லா மகிழ்ச்சியில் நிறைந்தது. இந்த இரண்டு பெரியோர்களின் சிந்தனை என்னை முழுமையாக ஆக்கிரமித்திருக்க இந்த நூலை மின்னாக்கம் செய்து முடித்தேன், தமிழ் மரபு அறக்கட்டளையின்  மின்னூல்கள் வரிசையில் இடம் பெறும் இந்த நூலின் உள்ளடக்கம் மட்டுமன்றி இந்த நூல் உருவான வரலாறும் கூட வித்தியாசமானது தான். அதனை உணர்ந்து வாசிக்கும் போது ஒரு பரவசம் மனதில் ஏற்படத்தான் செய்கின்றது.

திருஅம்பர் புராணம் நூலை வாசிக்க இங்கே செல்க!


தொடரும்..

சுபா

No comments:

Post a Comment