Saturday, May 18, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 50


வாசிக்கும் போதே அந்த சூழலில் நம்மையும் இருக்கின்றபடி செய்துவிடும் தன்மை கொண்டது இந்த என் சரித்திரம் நூல். பல நேரங்களில் கதை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு நண்பருடன் இணைந்து உலா வருவது போலத்தான் நான் இதனை வாசிக்கும் போது உணர்கின்றேன். இதனை வாசித்திருக்கும் ஏனையோருக்கும் கூட இப்படி ஒரு உணர்வு தோன்றியிருக்கலாம்.

சில நேரங்களில் சில பகுதிகளைப் படிக்கும் போது நான் சிரித்துக் கொள்வதுண்டு. அவ்வளவு ஹாஸ்யமான விஷயங்களைச் சீரியஸாக சொல்வது போல எழுதியிருக்கின்றார் உ.வே.சா. இது ஒரு ரசிக்கத்தக்க எழுத்து நடைதான்!

45ம் அத்தியாயத்தில் செய்யுள் தானம் என்ற ஒரு பகுதி உள்ளது. குருபூஜை நிகழ்வுகளின் பதிவுகளின் தொடர்ச்சி அது. இதில் ஒரு சுவாரசியமான நிகழ்வு. இதனைப் பற்றி இன்றைய பதிவு அமைகின்றது.

குருபூஜை நிகழ்வுகளெல்லாம் முடிந்து விழாவில் பங்கெடுத்துக் கொள்ள வந்திருந்த பல்வேறு கலைஞர்கள், வித்துவான்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், கனவான்கள் என அனைவரும் திருவாவடுதுறை மடத்திற்கு வந்து குருமகா சன்னிதானத்திடம் குடும்பத்துடன் வந்து விடைபெற்றுச் செல்லும் சடங்கு அது. வந்திருப்போர் எல்லோருக்கும் அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குச் சன்மானம் வழங்கி அவரகளை வழி அனுப்பி வைப்பதும் சன்னிதானத்தின் சடங்கு முறையில் அடங்கும். அந்த வகையில் ஒவ்வொருவராக அம்மாலை வேளையில் வந்து ஆதீன கர்த்தரைச் சந்தித்து அவருக்கு மரியாதைச் செலுத்தி விடைபெற்றுச் செல்லும் போது சன்மானமும் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். மாலை கடந்து இரவு வேளையும் வந்து விட்டது.

இப்படி சன்னிதானத்திடம் சன்மானம் பெற்றுச் செல்ல வருபவர்களைப் பற்றியும் மடத்தின் கொடையைப் பற்றியும் பிள்ளையவரகளும் ஏனையோரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தும் கேட்டும் உ.வே.சாவிற்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ஆசிரியர் பக்கத்திலேயே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார். அப்போது அங்கே ஒரு பெரியவர் வந்து பிள்ளையவர்களிடம் பேசி தனக்கு ஒரு பாடல் எழுதித்தருமாரும் அதனைச் சன்னிதானத்திடம் பாடிக்காட்டி சன்மானம் பெற விரும்புவதாகவும் கூற பிள்ளையவர்களும் ஒரு பாடலை எழுதிக் கொடுத்து விட்டு உறங்க ஆரம்பிக்கின்றார்.

சற்று நேரத்தில் இன்னொருவர் வந்து தனக்கு ஒரு செய்யுள் வேண்டும் என்று கேட்கின்றார். முன்னவர் சொன்ன அதே தேவைதான். பிள்ளையவர்களும் அவருக்கும் ஒரு பாடல் எழுதிக் கொடுத்து விட்டு உறங்கச் செல்கின்றார். ஆனால் மக்கள் அவரை விட்ட பாடில்லை. ஒவ்வொருவராக வந்து பாடல் எழுதித்தரச் சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்கையிலேயே உ.வே.சா உறக்கம் கொண்டு தூங்கி விடுகின்றார். மறு நாள் விடியற்காலையில் எழுந்த போது இந்த சேவை தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றார்.

இங்கே ஆசிரியரிடம் செய்யுள் பெற்றுச் சென்றவர்கள் அங்கே சன்னிதானத்திடம் சென்று வணங்கி  வாசித்துக் காட்டி சன்மானம் பெற்றுச் செல்லும் செயலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இடையில் சுப்ரமண்ய தேசிகரும் ஸ்னானம் முடித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்து சன்மானம் வழங்கும் சடங்கைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

பிள்ளையவர்கள் உ.வே.சா மற்றும் சிலருடன் அவ்விடத்திற்குச் செல்கின்றார். பிள்ளையவர்களைப் பார்த்த சுப்ரமணிய தேசிகரின் முகத்தில் புன்னகை. இந்த இடத்தில் நடக்கும் உரையாடல் வாசிப்போரையும் சிரித்து விட வைக்கின்றது.

“இராத்திரி பலபேர் தங்களுக்குச் சிரமம் கொடுத்து விட்டார்கள்போல இருக்கிறதே!” என்று தேசிகர் கேட்டார். ஆசிரியர் புன்னகை பூத்தார்.

ஒவ்வொருவர் கொண்டு வந்த  செய்யுளும் பிள்ளையவர்கள் இயற்றிய செய்யுள் தான் என்பது சுப்ரமண்ய தேசிகருக்கு நன்கு தெரிந்திருந்தது.

“ஒவ்வொருவரும் பாடல் சொல்லும்போது நமக்குப் பரமானந்தமாகி விட்டது. என்ன பாட்டு! என்ன வாக்கு! எங்கிருந்துதான் விளைகிறதோ!” என்றார் தேசிகர்.

“எல்லாம் மகாஸந்நிதானத்தின் திருவருட் பலந்தான்” என்று பணிவோடு கூறினார் ஆசிரியர்.

“நாச்சலிக்காமல் பாடும் உங்கள் பெருமையை நேற்று இரவு நன்றாகத் தெரிந்து கொண்டோம்”

“கை சலிக்காமல் கொடுக்கும் ஸந்நிதானத்தின் கொடையினால் தான் எல்லாம் பிரகாசப்படுகின்றன.”

புலவரும் புரவலரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு அளவுண்டோ?

என்று குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

பாடல்கள் எழுதியது பிள்ளையவர்கள் தான் என்பது தெரிந்திருந்தும் சன்மானம் எதிர்பார்த்து வந்து நிற்பவர்கள் மனம் கலங்காமல் சன்மானம் அளித்து உற்சாகப்படுத்திய சன்னிதானத்தின் பண்பை  நினைத்து வியக்கும் அதே வேளை தன் புலமைக்கு உரிமை கொண்டாடும் எண்ணம் சிறிதும் இல்லாமல் எல்லோரும் நன்மை பெறட்டும் என தன் உடலை வருத்தித்  தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு வந்து கேட்டவர்களுக்கெல்லாம் பாடல்கள் எழுதித் தந்த பிள்ளையவர்களின் செயலை நானும் வியக்கின்றேன்.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment