Sunday, November 4, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 29


இளம் பிராயத்திலேயே தந்தையாரை இழக்கும் நிலையை அடைந்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். ஒரு விரோதி ஆண்டில் சிதம்பரம் பிள்ளையவர்கள் சிவபதம் அடைந்தமையை நினைத்து அப்போது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்  மனம் வருந்தி சில செய்யுட்கள் இயற்றினாராம். அவற்றில் உ.வே.சா அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாடல் இது.

"முந்தை யறிஞர் மொழி நூல் பலநவிற்றும்
தந்தை யெனைப்பிரியத் தான்செய்த - நிந்தைமிகும்
ஆண்டே விரோதியெனு மப்பெயர்நிற் கேதகுமால்
ஈண்டேது செய்யா யினி "

தந்தையார் மறைவுக்குப் பின்னர் தொடர்ந்து அங்கேயே குடும்பத்தாருடன் இருந்து வந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் காவேரி ஆச்சியென்னும் ஒரு பெண்ணைத் திருமணமும் செய்து வைத்தனர் அவ்வூரார். திரிசிரபுரம் சென்றால் தனது கல்வித்தேடலுக்கு அது உறுதுணையாக இருக்கும் என நினைத்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மீண்டும் ஊரார் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு திரிசிரபுரம் வந்தடைந்தார்.

திரிசிரபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கல்வி கற்ற ஆசிரியர்கள் சிலர் இருந்தமையால் இவர் அவர்களைச் சென்றடைந்து பாடம் கேட்டு தனது தமிழ் புலமையின் ஆழத்தை விரிவாக்கிக் கொண்டிருந்தார். அவர்களில் குறிப்பாக

  • உறையூர் முத்துவீர வாத்தியார்
  • திரிசிரபுரம் சோமசுந்தரமுதலியார்
  • வீமநாயக்கன்பாளையம் இருளாண்டி வாத்தியார்
  • பாலக்கரை வீரராக செட்டியார்
  • கொட்டடி ஆறுமுகம் பிள்ளை
  • கற்குடி மருதமுத்துப் பிள்ளை
  • திருநயம் அப்பாவையர்
  • மருதநாயகம் பிள்ளை

ஆகியோர் அக்காலத்தில் திரிசிரபுத்த்திலும் அதன் அருகாமையிலும் இருந்த பிரபலமான வித்துவான்கள்.

ஒரு சமயம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் முறையாக பல நூல்களைக் கற்றுத் தேர்ந்த வேலாயுத முனிவரென்பவர் திரிசிரபுரம் வந்திருக்கின்றார். அச்சமத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அவர் பால் வந்து சில நூற்களைப் பெற்று ;சுயமாகப் படியெடுத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும் வந்து பாடங்கேட்டுச் செல்வாராம்.

தண்டியலங்காரம் படிக்க வேண்டும்  என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் விரும்பினார். ஆனால் அச்சமயத்தில் அவ்வூரில் இந்த நூலை அறிந்து பாடம் சொல்லத் தகுதியானவர்கள் வேறெவரும் இருக்கவில்லை.  ஒரே ஒருவர், அவ்வூரில் உள்ள ஒரு பரதேசி, ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச் சென்று  பிச்சைக் கேட்டு வருபவர். அவருக்குத் தமிழ் நூல்களில் பரிட்சயம் உண்டு என்றும் அதிலே தண்டியலங்காரத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்றும் அறிய வர, அவரை அனுகி  தனக்குப் பாடம் சொல்ல முடியுமா எனக் கேட்டிருக்கின்றார். அந்த பரதேசியானவர் வேறு யாருக்கும் பாடம் சொல்லித் தந்த அனுபவம் இல்லாதவர். தாம் இருந்த மடத்தில் மட்டும் சில நூற்களைச் சேமித்து வைத்திருந்திருக்கின்றார். அதில் தண்டியலங்கார நூலும் இருந்திருக்கின்றது.

இந்த நூலைப் பெற்று பாடங்கேட்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அந்தப் பரதேசியானவர் வரும் நேரமாகச் சென்று அவர் பிச்சையெடுக்க வரும் நேரம் தெருத்தெருவாக அவருடனேயே பேசிக் கொண்டே சென்றும், அவருக்குப் பிரியமான கஞ்சாவை வாங்கி வைத்திருந்து  அவருக்குத் தேவைப்படும் வேளைகளில் அதனைக் கொடுத்தும், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் புத்தகத்தைப் பெற்று படியெடுத்துக் கொண்டு பாடமும் விளக்கமும் கேட்டு வந்தாராம். இப்படி பணிவுடன் தன்னோடு தொடர்ந்து வரும் இந்த இளைஞரைப் பார்த்த அப்பரதேசிக்கும் திருப்தி ஏற்பட்டிருக்கின்றது. இதனால் தன்னிடம் இருந்த மேலும் சில நூல்களையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் அப்பரதேசி கொடுத்திருக்கின்றர.

இப்படி தமிழ்க்கல்வி கற்க எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சென்று பல்வேறு முயற்சிகள் செய்து தமிழ் இலக்கியங்களையும், பிரபந்தங்களையும் இலக்கணங்களையும் கற்று வந்திருக்கின்றார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.  மேலும் மேலும் கற்க வேண்டும் என விரும்புவோருக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார் இவர்.

தொடரும்..

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment