Saturday, August 2, 2025

2.8.1913 - தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் பிறந்தநாள்

 



தமிழ் உலகிற்குத் தமிழின் முதல் அச்சு நூலை தேடிக் கொடுத்தவர் என்பது மட்டுமல்ல உலகின் எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்ற தகவலை வெளிச்சப்படுத்தியவர் தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகள். தமிழ் உலகம் இவரைச் சரியாக கொண்டாடுகின்றதா என்பது நம் முன்னே இருக்கின்ற ஒரு கேள்வி.
எனது ஒரு இலங்கை பயணத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்தபோது தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த ஊரான நெடுந்தீவு பகுதிக்குச் சென்று வந்தேன். மனதிற்கு நெகிழ்வான அனுபவத்தை கொடுத்தது அந்தப் பயணம்.
யாழ் நூலகத்தின் அருகில் தனிநாயகம் அடிகள் முற்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .அங்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே இணைத்திருக்கிறேன்.
கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர் தனிநாயகம் அடிகள். தான் பிறந்த இலங்கை தீவு மட்டுமன்றி உலகின் பல தீவுகளுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழரின் பண்டைய புலம்பெயர்வுகளைப் பற்றிய தகவல்களையும் ஆரம்பகால தமிழ் நூல் அச்சு வடிவம் பெற்றமையை உலகுக்கு கூறும் செய்திகளையும் சேகரித்து பல உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவர். இவரது நூல்களும் கட்டுரைகளும் இன்றும் தமிழர் புலம் பெயர்வு பற்றிய ஆய்வுகளுக்கு மிக முக்கிய ஆதாரமாக அமைகின்றன.
-சுபா







Friday, August 1, 2025

வெள்ளிவிழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் -1



தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு எனும் வரலாறு மற்றும் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளுக்கான தன்னார்வல நிறுவனத்தை 2001 ஆம் ஆண்டு தொடங்கி 24 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றோம்.
வரலாற்றை சரியாக சான்றுப் பூர்வமாக ஆவணப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நா கண்ணன் அவர்களும் நானும் தொடங்கிய இந்த அமைப்பு தொய்வில்லாத தொடர்ச்சியாக செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவினரின் செயல்பாடுகளுடன் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழ்கின்ற வரலாற்று ஆர்வலர்களின் ஈடுபாட்டுடன் கடந்த 24 ஆண்டுகள் மேற்கொண்டு வந்த இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் 25 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கு இது வெள்ளி விழா ஆண்டின் தொடக்கம்.
கடந்த 24 ஆண்டுகளாக தமிழ்நாடு மட்டுமன்றி இலங்கை மலேசியா சிங்கப்பூர் ஐரோப்பாவின் இங்கிலாந்து ஜெர்மனி நார்வே நெதர்லாந்து சுவிசர்லாந்து பிரான்ஸ், டென்மார்க் இத்தாலி மற்றும் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கிழக்காசிய நாடுகளில் என பல நாடுகளில் தமிழர் வரலாறு மொழி பண்பாடு போன்ற தளங்களில் ஆவணப்படுத்தல் முயற்சிகளை தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தி வந்தது. இந்த ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
காணொளிகள்..
ஒளிப்பதிவு ஆவணங்கள்..
புகைப்பட ஆவணங்கள்
ஆய்வாளர்களின் பேட்டிகள்..
களப்பணி தொகுப்புகள்..
என பல்வேறு வடிவங்களில் தமிழ் மரபு அறக்கட்டளை ஆவணங்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி நமது வெள்ளி விழா கொண்டாட்டம் பற்றிய செய்திகளைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தளங்களில் நீங்கள் காணலாம்.
வெள்ளிவிழா தொடக்கத்தை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 24 ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டின் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் ஒரு நாள் கருத்தரங்க நிகழ்வு நடைபெற உள்ளது.
அமைச்சர் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் கலந்து கொள்ளவிருக்கின்ற இந்த நிகழ்வில் நீங்களும் பங்கெடுத்து கொள்ள தயாராகுங்கள். மேல் விபரங்கள் இனி தொடர்ந்து பகிரப்படும்.
தமிழால் இணைவோம்!
அன்புடன்
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

ஸ்டுட்கார்ட் நகரில் சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா

 


கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டுத திருவிழா நடைபெற்றது. ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தத் திருவிழாவிற்கு வந்திருந்தார்கள்.

இந்த ஸ்டுட்கார்ட் பகுதியில் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக இந்தக் கோயில் உருவாக்கப்பட்டு ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் செயல்பட்டு வருகிறது.
சித்தி விநாயகருக்குத் தேர் ஒன்றை உருவாக்கி அதனை சாலையின் ஒரு பகுதியில் சுற்றிவர அரசாங்க அனுமதி பெற்று இந்த நிகழ்ச்சியின் போது தேர் பவனி வந்தது.
தமிழ் மக்கள் மட்டுமின்றி ஜெர்மானிய மக்களும் சாலையில் வந்து நின்று பார்த்து ரசித்தனர்.
வந்திருந்த பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் சாம்பார் சாதம் கொடுத்து உபசரித்தார்கள்.
இந்த ஸ்டுட் காட் பகுதியில் தற்சமயம் நான்கு கோயில்கள் இருக்கின்றன. அதில் ஒன்று இந்த ஆலயம்.
-சுபா
1.8.2025














Friday, July 18, 2025

கிரேக்க இறுதி ஊர்வலம்

 


கடந்த வாரம் காலமான எனது அண்டை வீட்டுக்காரர் கிரேக்க நண்பரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. நானும் சென்று வந்தேன். அது புது அனுபவமாக இருந்தது. 


லியோன்பெர்க் நகருக்கு அருகிலேயே நகருக்கு சற்று வெளியே இருக்கிறது கல்லறை தோட்டம். ஐரோப்பாவில் கல்லறைத் தோட்டம் என்பது பொதுவாகவே விரிவாக மிக அழகாக நேர்த்தியாக ஒரு பூங்காவை போல பாதுகாக்கப்படும் ஓர் இடமாக இருக்கும். அதேபோலத்தான் இந்தக் கல்லறை தோட்டமும். 


கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ முறையில் தான் இந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது. பொதுவாக இங்கு இறுதிச்சடங்கிற்குச் செல்பவர்கள் முழுமையாக கருப்பு நிற உடை அணிந்து செல்வது வழக்கம். கையில் வெள்ளை நிற ரோஜாப்பூ அல்லது வெள்ளை நிறத்தில்  ஏதாவது மலர்களைக் கொண்டு செல்வதும் வழக்கம். நானும் வெள்ளை ரோஜாக்களை வாங்கிக் கொண்டு சென்றிருந்தேன். 

நிகழ்ச்சி தொடங்கியவுடன் முழுமையும் கருப்பு உடையில் மேல் சட்டை பாவாடை போன்ற ஓர் உடை அணிந்து பாதிரியார் வழிபாட்டு பாடல்களைப் பாடத் தொடங்கினார். சவப்பெட்டி அருகில் வைக்கப்பட்டிருந்தது. 


கல்லறைத் தோட்டத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பக்கம் முழுவதும் உறவினர்கள் மறுபுறம் நண்பர்கள் என்ற வகையில் பிரித்து வைத்திருந்தார்கள். 


வந்திருந்தவர்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் கிரேக்கர்கள். ஏனையோர் ஜெர்மானியர், மற்ற பிற இனத்தவர்கள். 


45 நிமிடம் வாழ்த்து துதி பாடல்களைப் பாடி முடித்த பின்னர் சவப்பெட்டியை ராஜ மரியாதை போல ஆறு பேர் கொண்ட குழு சிறிய தேர் போன்ற  கையால் இழுத்துச் செல்லும் வண்டி ஒன்றில் வைத்து கல்லறை தோட்டத்தில் இழுத்துச் சென்றது. அவர்களும் தொப்பியும் கருப்பு நிற கோட்டும் சூட்டும் என அணிந்திருந்தார்கள். கல்லறைத் தோட்டம் மிகப்பெரியது என்பது நடந்து சென்ற போதுதான் தெரிந்தது. 

ஏறக்குறைய 10 நிமிடம் நடந்த பிறகு அவருக்கென்று வாங்கப்பட்ட ஒரு பகுதி இருந்தது. அப்பகுதி ஏற்கனவே நீள் சதுர வடிவில் வெட்டப்பட்டு குழி தோண்டப்பட்டு கருப்பு நிறத்தாலான ஒருவகை துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 


பொதுவாக ஜெர்மனிய இறுதிச் சடங்குகளில் யாரும் அழுவதில்லை. கண்ணீர் வந்தாலும் மெதுவாக அதனை துடைத்துக் கொண்டு அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்மணிகள் மட்டும் மனைவியும் மகளும் மட்டும் கதறி அழுதார்கள்.


அந்தப் பகுதிக்கு வந்த பின்னரும் மீண்டும் பாதிரியார் கிரேக்க மொழியில் அமைந்த துதி பாடல்களைப் பாடத் தொடங்கினார்.


சவப்பெட்டியை குழிக்குள் செலுத்தி அதனை நேராக வைத்தார்கள்.

அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கையில் வைத்திருந்த மலரை குழிக்குள் போட்டுவிட்டு வாளியில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணை அதில் இருந்த ஒரு கரண்டியால் எடுத்து அந்த சவப்பெட்டி மேல் தூவினார்கள். வரிசையில் நானும் நின்று எனது மரியாதையையும் செலுத்தினேன். 


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்தோருக்கு சிறிய தேநீர் விருந்து ஒன்றும் அங்கு ஏற்பாடாகியிருந்தது.  முதல் முறையாக ஒரு கிரேக்க இறுதி ஊர்வலத்தை நேரில் பார்த்த ஓர் அனுபவம் இது. 


இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஏறக்குறைய 200 பேர் வந்திருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களது செல்போனை எடுத்து புகைப்படம் ஒன்றும் எடுக்கவில்லை. 

  

ஒரு மனிதரின் இறுதிச்சடங்கு என்பது இயற்கையோடு அவர் இணைந்து கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்பதை இந்த நிகழ்ச்சி நேரில் உணர்த்தியது. உறவினர்களும் நண்பர்களும் சோகத்தோடு விடை கொடுத்தார்கள். அதில் போலி பந்தாக்கள் பெருமைகள் என்பதற்கெல்லாம் இடமில்லாமல் இறந்து போனவருக்கு மரியாதை செலுத்தி அவரை முறையாக மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.


-சுபா

18.7.2025

அப்துல் கலாம் நம்பிக்கை விருது 2025

 


அப்துல் கலாம் நம்பிக்கை விருது 2025. இது மனதிற்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கின்ற ஒரு விருது. தற்சமயம் ஜெர்மனியில் இருப்பதால் நான் இந்த விருதளிப்பு நிகழ்ச்சிக்கு நேரில் செல்ல இயலவில்லை. ஆயினும் என் அன்பிற்குரிய இணையர் முனைவர் கௌதம சன்னா அவர்களும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதால் எனக்கு வழங்கப்பட்ட விருதை அவர் பெற்றுக் கொள்ள முடிந்தது.


மகிழ்ச்சியான தருணம்.
- சுபா

Thursday, July 17, 2025

Dr.Kalaam visionary women of the year 2025 விருது

 


அப்துல் கலாம் அவர்களை 2003 ஆம் ஆண்டு நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று பாதுகாப்பு ஆவணப்படுத்தல் முயற்சிகளை பாராட்டி பேசினார். அப்போது இந்திய அரசு தொடங்கியிருந்த மில்லியன் நூல்கள் மின்னாக்கத் திட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையுய் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததன் பேரில் நூறு பழம் நூல்களை முதல் கட்டப் பணியாக நானும் நா. கண்ணனும் திட்டமிட்டு செயல்படுத்தினோம் என்பது இன்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.


இன்று சென்னையில் எனக்கு அப்துல் கலாம் அவர்கள் நினைவாக அவரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெய்தேன் புரொடக்ஷன் ஏற்பாட்டில் நடைபெறும் விருதளிப்பு விழாவில் Dr.Kalaam visionary women of the year 2025 விருது எனக்கு வழங்கப்படுகிறது. நேரில் கலந்து கொள்ள என்னால் இயலவில்லை. ஆயினும் டாக்டர் கலாம் அவர்களது பெயரில் வழங்கப்படும் இந்த விருது மனதிற்குப் பெருமை அளிக்கிறது.
-சுபா
27.7.2025

Saturday, July 12, 2025

ஃப்ராங்பர்ட் இந்திய தூதரகத்தில்

 ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்பர்ட் இந்திய தூதரகத்தில் கோன்சுலேட் ஜெனரல் திரு முபாரக் அவர்களுடன் ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. நமது பதிப்பகத்தின் வெளியீடான "மக்கள் வரலாறு தொகுதி 1" நூலை அன்பளிப்பு செய்தோம்.