இலான் மஸ்க் - இன்று மிக அதிகமாக உச்சரிக்கப்படுகின்ற பெயர்களில் ஒன்று.
Sunday, November 10, 2024
அறிவியல் பேசுவோம் - இலான் மஸ்க்
Friday, November 8, 2024
100 Reflections on the Harappan Civilization - AHIMSA
சிந்துவெளி ஆய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை சர் ஜான் மார்ஷல் அவர்களால் 20.செப்டம்பர் 1924இல் வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியுள்ள இந்தக் காலகட்டத்தில் சமூக அமைப்புகளும் தனிநபர்களும் இந்த வரலாற்றுச் சிறப்புக்குறிய நூற்றாண்டு விழாவை பல்வேறு வகையில் கொண்டாடி வருவதைக் காண்கின்றேன். நூல் வெளியீடாகவும், மாநாடாகவும், பயிற்சி பட்டறைகளாகவும், சொற்பொழிவுகளாகவும், உரைகளாகவும், கலந்துரையாடல்களாகவும் பல நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
சிந்துவெளி ஆய்வாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியேயும் பயணித்து செல்லுமிடமெல்லாம் சிந்துவெளி நாகரிகம், தமிழின் தொன்மை தொடர்ச்சி அதன் திராவிட அடித்தளம் என தொடர்ந்து உரையாற்றி மக்களிடையே பேரளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இந்த மாபெரும் எழுச்சி தமிழர் வரலாற்று ஆய்வுக் களத்திற்கு புத்துணர்வு அளிக்கிறது.
பள்ளி மாணவர்கள் கூட சிந்துவெளி ஆய்வுகள் பற்றியும் ஹரப்பா நாகரிகம் பற்றியும் பேசுகின்றார்கள். ஆய்வுத்தளத்தை கடந்த பொதுமக்களும் ஆர்வத்தோடு சிந்துவெளி பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது வியப்பையும் அதேவேளை இன்னும் தீவிரமாக சிந்துவெளி மற்றும் தமிழர் தொன்மைகள் ஆகியவை பற்றிய விரிவான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும், கண்டுபிடிப்புகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் எழுப்புகின்றது.
சிந்துவெளி ஆய்வு தொடர்பாக அண்மையில் வந்திருக்கின்ற ஒரு நூல் 100 Reflections on the Harappan Civilization - AHIMSA. நூலாசிரியர் தேவ்தத் பட்டாநாயக்.
கடந்த மாதம் தமிழ்நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு நூலை அங்கேயே வாங்கிக் கொண்டு வந்தேன். ஜெர்மனிக்கு வந்த ஓரிரு நாட்களிலேயே நூலை வாசித்து விட்டாலும் தொடர்ச்சியான பல்வேறு பணிகளால் என்னால் நூல் பற்றிய என் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள இயலவில்லை.
இத்தனை நாள் இந்நூலைப் பற்றி நான் பேசாமல் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் என் அலுவலக அறையில் மேசையில் இருக்கும் இந்த நூலை பார்க்கும்போது ”என்னைப் பற்றி ஏன் இன்னும் ஏதும் எழுதாமல் இருக்கிறாய்” என்று கேட்டுக்கொண்டே இருப்பது போல தோன்றும். அதுவே சில நேரங்களில் குற்ற உணர்வாகவும் ஆகும்.
சரி நூலைப் பார்ப்போம்..
நூல் கையில் எடுத்த உடனே வாசிக்கத் தூண்டுகிறது. நூல் சிந்துவெளி தொடர்பான 100 தலைப்புகளில், வாசிப்போர் கவனம் சிதறாத வகையில், மிக எளிமையாக விஷயத்தை வழங்குகிறது. நூல் உருவாக்கத்திற்கு ஆசிரியர் கையாண்டிருக்கும் முறை மிகுந்த பாராட்டிற்குரியது. ஆய்வு உலகில் இல்லாத சாதாரண மக்களும் கூட இந்த நூலை வாசித்து புரிந்து கொள்ள முடியும். ஒரு பக்கம் ஓவியம் மறுபக்கம் அதனைப் பற்றிய விளக்கம் என்ற வகையில் நூல் முழுமையையும் ஆசிரியர் அமைத்திருக்கின்றார். நூல் வாசிப்பிற்கும் சொல்ல வந்த செய்தியை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்கும் தூண்டுதலாக இருப்பது ஒரு பக்கம் முழுவதும் நிறைந்திருக்கும் ஓவியங்கள்.
ஒன்பது அத்தியாயங்கள்; அறிமுகம், நூலுக்கு உதவிய நூல்கள், அதை எழுதிய ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், மற்றும் துணை நூல் குறிப்புகள் உட்பட இந்த நூலில் அமைந்திருக்கிறது. உள்ளடக்கம் மட்டுமே என காணும் போது ஆறு தலைப்புகள் அமைகின்றன. சிந்துவெளி ஆய்வுகளில் கிடைத்த தொல்லியல் சின்னங்களை ஆறு பிரிவுக்குள் பகுத்து அவற்றின் ஓவியங்களையும் அதற்கான நூலாசிரியரின் விளக்கங்களையும் இந்த நூலில் காண முடிகிறது.
Mythology, Resources, Knowledge, Standardization, People, Conclusion . ஆகிய பிரிவுகளில் 100 தலைப்புகளில் இந்த நூல் சிந்துவெளி களத்தில் கிடைத்த சின்னங்களை ஆராய்கிறது.
இந்த நூல் பொதுமக்களுக்கானது என்பதோடு சிந்துவெளி தொடர்பான தகவல்களைக் கடினமாக விளக்குவதை தவிர்த்து மிக எளிதாக வழங்க வேண்டும், அதே சமயம் உண்மையான நேர்மையான, பார்வையையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டு இருப்பதை நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஒரு பண்பாட்டின் குறியீடு எப்போதுமே வன்முறை சார்ந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்ற பார்வையை இந்த நூல் தகர்க்கிறது. ஹரப்பா நாகரிகத்தின் மக்களின் வாழ்க்கை வன்முறை அற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்தோடு நூல் தொடங்குகிறது.
ஹரப்பா நாகரிகம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ஒரு நாகரீகம் அல்ல. மாறாக, சுமேரியா போன்ற ஏனைய நாகரிகங்களுடன் வணிகத் தொடர்பில் ஈடுபட்ட, மிக சுறுசுறுப்பாகவும் சீராகவும் இயங்கிய ஒரு நாகரீகம். மிக விரிவான அதேவேளை திட்டமிடப்பட்ட தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கிமு 3300 லிருந்து கிமு 1200 வரை வணிகத் தொடர்புகளின் செயல்பாட்டை ஹரப்பா நாகரிக தொல் சான்றுகள் வெளிப்படுத்துவதை நூலாசிரியர் நூல் முழுவதும் சுட்டிக்காட்டி செல்கிறார்.
ஹரப்பா நாகரிகம் வளர்ந்து செழித்திருந்த பகுதி சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு சீனா முதல் கான்ஸ்டன்டினிப்போல் (இன்றைய இஸ்தான்பூல்) அதாவது துருக்கி வரை வளர்ச்சி கண்டு பட்டுப் பாதையாகவும் வளர்ச்சியடைந்ததை நாம் காண தவறக் கூடாது. வரலாற்று நிகழ்வுகளின் தொடக்கத்தை எப்படி நாம் ஆராய்கிறோமோ அதே போல அந்நிகழ்வுகளின் தொடர்ச்சியையும் ஆராய்ந்து காண வேண்டியது அவசியம்.
இன்றைய தமிழ் சமுதாயத்தில் பெண்களின் நிலையை ஒப்பிடும் போது ஹரப்பா நாகரிக காலத்தில் பெண்களின் செயல்பாடுகளும் பெண்களின் சமூகப் பங்களிப்புகளும் பெருமளவில் முக்கியத்துவம் பெற்றிருந்ததைப் பல சான்றுகள் உறுதி செய்கின்றன. அத்தகைய சான்றுகளைப் பற்றி நூலாசிரியர் ஓவியங்களோடு விளக்கும்போது அவை வாசிப்போருக்கு ஆழமான புரிதலையும் வழங்குகின்றது.
நூலாசிரியரின் நீண்ட கால உழைப்பு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகிறது. நூலைப் பற்றி பேச வேண்டும் என்றால் ஒவ்வொரு பக்கத்தைப் பற்றியும் தான் பேச வேண்டும், ஒவ்வொரு ஓவியங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பற்றிப் பேச வேண்டும். ஆனால் அது நூல் அறிமுக வரையறைக்குள் இயலாத காரியம்.
ஆங்கிலத்தில் படைக்கப்பட்டிருக்கும் இந்த நூல் வெகு விரைவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தால் கடைக்கோடி தமிழருக்கும் ஹரப்பா நாகரிகம் தொல்லியல் அகழாய்வில் கிடைத்த சின்னங்களின் அடிப்படையில் தன்னை எவ்வாறு வெளிக்காட்டிக் கொள்ள விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
ஒரு நல்ல நூலை வாங்கி வாசித்ததில் மன நிறைவு கொள்கிறேன். இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த திரு. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கூறத்தான் வேண்டும்.
தமிழ் வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கண்டிப்பாக வாங்கி வாசிக்க வேண்டிய ஒரு நூல்.
-சுபா
8.11.2024
குறிப்பு: நூலை அமேசோன் (இந்தியா) வழி பெறலாம். விலை 359 ரூ/-
Thursday, September 26, 2024
தஞ்சாவூரில் சமணம் - நூல் அறிமுகம்
வட இந்தியாவில் தோன்றியது என்ற வரலாற்று தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும் இந்தியா முழுமைக்கும் பரவிய சமயமாக சமண சமயம் திகழ்கிறது. தென்னிந்திய பகுதிக்கு வந்து தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த மிக முக்கியமான ஒரு சமயமாக ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளாக சமண சமயம் இதமிழ்நிலத்தில் நிலை பெற்றிருக்கின்றது. செஞ்சி, மதுரை ஆகிய பகுதிகளில் செழித்து வளர்ந்த சமயம் என்று கருதப்படுகின்ற சமணம் தஞ்சையிலும் விரிவடைந்து வளர்ச்சி கண்டு வழக்கில் மக்களால் பேணப்படுகின்ற ஒரு சமயமாக மிக நீண்ட காலம் இருந்தது என்பதற்கு சான்றுகளைத் தருகின்ற நூல்கள் மிக மிகக் குறைவு. அக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது தஞ்சையில் சமணம் என்ற நூல். இந்த நூலை முனைவர் பா ஜம்புலிங்கம், கோ தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன் ஆகிய மூவரும் இணைந்து எழுதி தமிழ் ஆய்வுலகத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள்.
முதலில் சமண சமயத்தைப் பற்றிய பொது அறிமுகம் என்று தொடங்கும் இந்த நூல் அடுத்து தஞ்சாவூர் பகுதிகளிலும் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சமண சமயம் எப்படி வளர்ந்தது. நிலை பெற்றருந்தது என்பதை விளக்குகின்றது. அதனை அடுத்து சமணச் சுவடிகள் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் சேகரத்தில் ஆரம்பத்தில் இருந்த சமணச்சுவடிகள், அதன் பின்னர் படிப்படியாக சேகரிக்கப்பட்ட புதிய சமணச்சுவடிகள் ஆகியவை பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன.
அடுத்ததாக வருகின்ற பகுதி சமண சமயத்தில் கணிதவியல் பற்றிய தகவல்களை வழங்குகின்றது. யோஜனம், வில் போன்ற அளவை பற்றிய தெளிவான அதே சமயம் சுருக்கமாக இங்கே விளக்கம் அளிக்கப்படுகின்றது.
அதற்கு அடுத்து வருகின்ற பகுதி மிக முக்கியமானது. ”களப்பணியில் ஊர்கள்” என்ற தலைப்பில் இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது. அதனோடு தொடர்ந்து வருகின்ற ”தஞ்சையில் சமணச் சின்னங்கள்” என்ற பகுதி மிக விரிவாக தஞ்சையைச் சுற்றி உள்ள பகுதிகளில் நூலாசிரியர்களால் அடையாளம் காணப்பட்ட சமண சிற்பங்களைப் பற்றிய விபரங்களை நன்கு விளக்குகின்றன.
இதனை வாசித்த போது 2022 ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது அங்கு புஷ்பவனத்துக்கு அருகே பஞ்சதிக்குளம் பகுதியில் குளக்கறை அருகே ஒரு சமண சிற்பம் கிடக்கின்றது என்று இந்த நூலின் ஆசிரியர்கள் ஒருவரான முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அங்கு நேரில் சென்று, அங்கு ஒரு வீட்டின் வாசலில் துணி துவைப்பதற்காகப் போடப்பட்டிருந்த மண்ணிற்குள் புதையுண்ட கருங்கல் சிற்பம் ஒன்றைத் தோண்டி எடுத்து வெளிக் கொண்டு வந்தோம். அதனைத் தோண்டி எடுத்து வெளிப்படுத்தி சுத்தம் செய்து பார்த்தபோது அதன் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டு நீக்கப்பட்ட உடம்பு பகுதி மட்டுமே கொண்ட தீர்த்தங்கரர் சிற்பம் என்பது தெரியவந்தது.
அப்போது உடனே நாகப்பட்டினம் அருங்காட்சியத்திற்கும், அப்பகுதியின் தாசில்தார் அலுவலகத்திற்கும் தொடர்பு கொண்டு இதனைப் பற்றி தெரிவித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உதவி கூறினோம். அச்சிற்பத்தைத் தூய்மைப்படுத்தி அப்பகுதிக்கு அருகே உள்ள குளக்கரையில் கிடந்த உடைபட்ட தலைப்பகுதியையும் தேடி எடுத்து அவற்றை இணைத்து அப்பகுதி தாசில்தாருக்குத் தெரிவித்தோம். இச்சிலையை நாகப்பட்டினம் அருங்காட்சியத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு கடிதத்தையும் வழங்கினோம். ஆயினும் அச்சிற்பம் இன்றுவரை தாசில்தார் அலுவலகத்தில் தான் இருக்கின்றது என்ற தகவல் அண்மையில் கிட்டியது.
குடவாயில் நகருக்கு அருகே அகர ஓகை என்ற இடத்தில் இருக்கின்ற கைலாசநாதர் கோயில் கட்டுமானப்பணியின் போது பிரகாரத்தைத் தோண்டியபோது அங்கே சுமார் மூன்றரை அடி உயரமுள்ள அருகதேவர் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்ற குறிப்பு இந்த நூலில் கிடைக்கின்றது. ஆக, வேறொரு சமய கோயில் நிர்மாணிப்பு நடக்கின்ற போது அப்பகுதியில் ஏற்கனவே இருந்த கோயில் தகர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது சிதவுக்குள்ளாகியிருக்கலாம். பின்னர், அப்பகுதியில் கிடைத்த சிற்பங்களை மண்ணிற்குள் புதைத்து விட்டு புதிய கோயிலை எழுப்புகின்ற பணி நிகழ்ந்திருக்கலாம் என்ற ஒரு எண்ணத்தையும் இது ஏற்படுத்துகிறது.
தஞ்சாவூரிலேயே நகரின் மேல் வீதி, வடக்கு வீதி இரண்டும் இணைகின்ற மேற்கு மூலையில் மராட்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் எழுப்பப்பட்ட அனுமார் கோயில் இருக்கின்ற பகுதியில் பின்புறத்தில் 87 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சமணர் சிற்பம் ஒன்று 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆனால் பின்னாளில் 2011 ஆம் ஆண்டு வாக்கில் அங்கு சென்று பார்த்தபோது அந்தச் சமண சிற்பம் காணப்படவில்லை என்றும் நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆக, பொதுவெளியில் வைக்கப்படுகின்ற இத்தகைய சிற்பங்கள் கால ஓட்டத்தில் கவனிப்பாரற்று காணாமல் போகின்ற அவல நிலையும் ஏற்படுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆக, தஞ்சாவூரில் ஆங்காங்கே கோயிலின்று தனித்து நிற்கும் இதே போன்ற சிற்பங்கள் பற்றிய செய்திகள் நூலின் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.
இந்த நிலை சமண சிற்பங்கள் போலவே பௌத்த சிற்பங்களுக்கும் நிகழ்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். சமண, பௌத்த சமயங்கள் தாக்குதலுக்கு உட்பட்டு வீழ்ச்சி அடைந்தபோது உடைக்கப்பட்ட சமண பௌத்த கோயில்களின் எச்சங்கள், அவற்றிலிருந்த சிற்பங்கள் ஆகியவை சிதைக்கப்பட்டதோடு மட்டுமின்றி மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அவல நிலையும் ஏற்பட்டது. ஆனால் தற்சமயம் பல ஆர்வலர்களின் முயற்சியினால் இத்தகைய சிற்பங்கள் மண்ணுக்குள் இருந்து வெளிவந்து மீண்டு வெளிச்சம் காண்கின்றன.
இப்படி கிடைக்கின்ற சிற்பங்களை அம்மதங்களைச் சார்ந்தவர்கள் அருகிலேயே ஒரு சிறு கோயிலை அமைத்து அதில் மக்கள் வழிபாடு செய்ய முயற்சியைத் தொடங்க வேண்டும் அல்லது அச்சிற்பங்களை அருகாமையில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் தெரிவித்து அச்சிற்பங்களை உடனே அருகாமையில் உள்ள அருங்காட்சியத்தில் சேர்ப்பித்து அது பற்றிய செய்திகளையும் பொது ஊடகங்களில் பதிந்து விட வேண்டியதும் அவசியமாகும்.
நூல் மேலும் பள்ளிச்சந்தம், வழிபாட்டு முறைகள், விழாக்களும் சடங்குகளும், 24 தீர்த்தங்கரைகளின் விபரம், சமணர்கள் படைத்த நூல்கள் போன்ற செய்திகளைச் சுருக்கமாக வழங்குகின்றது. நூலில் மேலும் சிறப்பு சேர்க்கும் பகுதியாக கல்வெட்டுக்கள் என்ற ஒரு பகுதியும் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற சமண சமயம் சார்ந்த கல்வெட்டுகள் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
135 பக்கங்கள் கொண்ட ஒரு நூல். சமண சமயம் பற்றியும், குறிப்பாகத் தஞ்சையில் சமணம் எப்படி தோன்றி வளர்ந்து நிலை பெற்று பின் அதன் புகழ் குன்றினாலும் மீண்டும் மக்கள் செயல்பாடுகளினால் அதன் எழுச்சி ஏற்பட்டு இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நூல் அமைகின்றது.
நூலை மறு பதிப்பு செய்யும் போது மேலும் தரமான தாள் மற்றும் அட்டை ஆகியவற்றுடன் இந்நூலைக் கொண்டு வர வேண்டும் என்பதை நூலாசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய காலம் மறைந்து போன, அல்லது மறைக்கப்பட்ட, அல்லது தவிர்க்கப்பட்ட வரலாறுகள் மீட்கப்படும்கின்ற காலமாகும். ஆகவே, அத்தகைய சூழலுக்கு ஏற்ற வகையில் ஆய்வுத் தரவுகளோடு இந்த நூல் வெளிவந்திருப்பது சிறப்பு. நூலாசிரியர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்.
-முனைவர் க.சுபாஷிணி
28.9.2024
பதிப்பு : ஏடகம்
விலை : ரூ130/-
Wednesday, September 25, 2024
இலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் குறைந்த விலை வீடுகள்
எல்லோருக்கும் வீடு என்ற கருத்தாக்கம் பல வேளைகளில் பலரால் பேசப்படுகின்ற ஒரு கருத்துதான்.
Sunday, September 22, 2024
The Golden Road - William Dalrymple
நீண்ட காலமாக பட்டுப்பாதை, "The Silk Road" என்ற கருத்தாக்கம் வரலாற்று ஆய்வுலகில் மட்டுமின்றி உலகளாவிய வணிக வரலாற்று ஆய்வுகளிலும் முக்கியத்துவம் பெறுகின்ற ஒன்றாக இருக்கின்றது. இந்தியாவிலிருந்து அனைத்து திசைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட வணிக செயல்பாடுகளை மையப்படுத்தி The Golden Road எந்த கருத்தாக்கத்தை முன்வைத்து வெளிவந்திருக்கிறது இப்புதிய நூல். Arul Mervin இந்நூல் பற்றியும் அது தொடர்பான செய்திகள் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கும் விமர்சனங்களை வாசித்து இந்த நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது. இன்று நூல் வீட்டுக்கு வந்து விட்டது.
Friday, September 20, 2024
S S மதுரை மீனாட்சி
சிந்துவெளி அகழாய்வு அறிக்கை 20.9.1924
20.9.1924 ... சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி அகழாய்வு அறிக்கையை உலகிற்கு வெளியிட்ட நாள். நூறு வருடங்கள் கடந்து விட்டன.
Wednesday, September 18, 2024
காப்பியின் வளர்ச்சியும் பரவலாக்கமும்
இன்று பெரும்பகுதி மக்களை ஆக்கிரமித்திருக்கும் காபியின் வரலாறு சுவாரசியமானது. ஏதோ கடைக்குச் சென்றோமா, வாங்கினோமா, குடித்தோமா என்று சிலர் போய் விடுகின்றார்கள்.. ஒரு சிலருக்குக் குறிப்பிட்ட ப்ராண்ட் காபி தான். தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டாலும் கூட இத்தகைய சிலர் தாங்கள் விரும்பிக் குடிக்கும் காப்பியின் பிராண்டை தப்பித் தவறிக் கூட மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இப்படியும் சிலர்!
என்னைப் போன்ற சிலருக்கு ஜெர்மனியில் இருந்தால் பிளாக் காபி. கசப்பு தன்மையுடன் அதன் வாசத்தை நுகர்ந்து ரசித்தபடி குடிப்பது ஒரு நாளை அதிகாரப்பூர்வமாக எனக்குத் தொடங்கி வைத்து விடுகிறது. தமிழ்நாடு வந்து விட்டால் இங்கு உள்ள வகை காப்பி தான். கொஞ்சம் நாட்டு சக்கரை, கொதிக்க வைத்த நல்ல பால், அதில் காப்பித் தூளை கலக்கிக் குடிப்பது என்பது வழக்கம் ஆகவிட்டது. ஓரளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலும் காபியைக் குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பது உற்சாகத்தை அளிப்பதாகவே இருக்கிறது.
இப்படி அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் எடுத்துக் கொண்டிருக்கும் காப்பி எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? எப்படி இன்றைக்கு நம்மை இந்தக் காப்பி ஆக்கிரமித்திருக்கின்றது என்று தெரிந்து கொள்வது நமக்குக் காபியைப் பற்றிய ஓரளவு அடிப்படை தகவல்களை வழங்கும் அல்லவா?
இன்றைக்குக் காப்பி என்றாலே மிக முக்கியமாக நமக்கு நினைவுக்கு வருவது ஆப்பிரிக்க நாடுகள் தான். ஆயினும் கொஞ்சம் கூகிளைக் கேட்டுப் பார்த்தால் நமக்கு வரும் பட்டியல் இப்படி அமைகிறது. மிக அதிகமாக உலகுக்குக் காப்பியை வழங்கும் நாடு பிரேசில். அதற்கு அடுத்து வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா, ஹோண்டூரா, எத்தியோப்பியா, பெரு, இந்தியா, குவாட்டமாலா உகாண்டா ஆகியவை அடுத்தடுத்து என முதல் 10 இடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தக் காபி அடிப்படையில் தொடக்கத்தில் இரண்டு வகை மிகப் பழமையானவை. C.canephora, C.eugenioides என்பது இவற்றின் அறிவியல் பெயர்கள். இவை ஆப்பிரிக்காவின் சப் சஹாரா பகுதிகளில் விளைந்தவை. இங்கிருந்து தான் தென் அமெரிக்கா நாடுகளுக்கு இவை விரிவாகியிருக்கின்றன.
ஏறக்குறைய இன்றைக்கு 600,000 ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டு வகை காபிகளும் இனக்ககலப்பு செய்து ஒரு புதிய காப்பி வகை உலகத்தில் பரவக் காரணமாகியது. மனித குலத்துக்கு மட்டும் தான் மரபணு மாற்றங்கள் நிகழும் என்பதில்லை. இப்படி காபிக்கும் கூட நிகழ்ந்திருக்கிறது. ஆக ஒரு இனக் கலப்பு புதிய வகை காப்பியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. இந்தப் புதிய வகையை C.arabica என பெயர் சூட்டியிருக்கின்றார்கள். இந்தப் புதிய வகை காப்பி ஐரோப்பிய நாடுகளில் இன்று மிகப் பிரபலம்.
இந்தக் காபி பற்றிய வரலாற்றை, அது தொடக்கம் முதல் இன்று வரை எப்படி பரவி இன்று மனித குலத்தின் உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றது என்பதை ஆராய்ந்து அதன் மரபணுவியல் மாற்றங்கள், அதன் பரவலாக்கம் ஆகியவற்றை வெளியிட்டு இருக்கின்றார் சிங்கப்பூரில் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் ஜார்கோ சலொஜார்வி (Jarkko Salojarvi).
சலொஜார்வியும் அவரது ஆய்வுக் குழுவினரும் இந்த மூன்று வகை காப்பி செடிகளையும் ஆய்வு செய்து அவற்றின் மரபணுவியல் கூறுகளை வகைப்படுத்தி இருக்கின்றார்கள். அவர்களது ஆய்வு ஏறக்குறைய 30,000 ஆண்டுகள் கால வாக்கில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எத்தியோப்பிய நாட்டுப்பகுதியை உள்ளடக்கிய Great Rift Valley பகுதியில் காபி பரவியதை வெளிப்படுத்தியது. ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அதிகமாகப் பரவத் தொடங்கிய இந்தக் காப்பி மரங்கள் இப்பகுதியில் வாழ்ந்த மனித குழுக்களால் பரவலாக்கம் செய்யப்பட்டன. ஏமன் நாட்டின் மொக்கா பகுதியிலும் விளைவிக்கப்பட்டது.
இன்று நவீன காப்பி கடைகளில் மொக்கா காப்பி வகைகளை நாம் பார்க்கின்றோம். பலர் விரும்பி அருந்துகின்ற ஒரு நவீன வகை காப்பியாகவும் இது தற்சமயம் அறியப்படுகின்றது. அத்தகைய இந்தக் காப்பி மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான, இன்று மிக ஏழ்மையான ஒரு நாடாகவும் கடல் கொள்ளையர்கள் நிறைந்த ஒரு நாடாகவும் கருதப்படுகின்ற ஏமன் நாட்டின் ஒரு மேற்குக் கரை நகரம் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்றுதான்.
காப்பியாக இதனைத் தயாரித்து பானமாக அருந்துவது பழக்கத்திற்கு வருவதற்கு முதல் காப்பி மரத்தில் விளைகின்ற சிவப்பு நிற காய்களை மக்கள் சாப்பிடுவது பற்றிய பல கதைகள் கிபி 600, 700 கால வாக்கில் உருவாகி வளர்ந்தன, பரவின. வாய்மொழி வழக்குகளாக மக்களிடையே பேசப்படுகின்ற ஒரு கதையாகவும் அவற்றுள் காபியும் பேசப்படுகின்ற ஒரு பொருளாகவும் வழக்கில் இருந்துள்ளது என்பதை அவரது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
15, 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் காப்பி ஏமன் நட்டில் விரிவான விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இங்கு வழங்கப்படுகின்ற வாய்மொழிக் கதைகளில் ஒன்று இந்தியாவில் இருந்து வந்த பாபா பூடான் என்ற பெயர் கொண்ட ஒரு துறவி தனக்கு காப்பியின் மேல் ஏற்பட்ட தீராத ஆர்வத்தினால் C.arabica வகையின் ஏழு விதைகளை இந்தியாவிற்குக் கொண்டு சென்றதாகவம் அங்கிருந்து பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது என்றும் வழக்கில் உள்ளது. இந்த வாய்மொழிக் கதை உண்மைதானா என ஆராய வேண்டும். இதுவும் ஒரு சுவாரசியமான ஆய்வுக் களம் தான்!
இலங்கையில் தேயிலை அறிமுகமாவதற்கு முன்னரே காப்பி அறிமுகப்படுத்தப்பட்டது, பெருந்தோட்டங்கள் உருவாக்கம் கண்டன என்பதும், பின்னர் தொற்று நோய் பரவலால் காப்பி தோட்டங்கள் நிறுத்தப்பட்டன என்பதும் ஒரு கொசுறுத் தகவல்.
அடுத்தடுத்த நூற்றாண்டில் டச்சுக் காலனி காலகட்டத்தில் இந்த விதைகள் இந்தோனேசியாவின் ஜாவா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மேலும் பல வகையான காப்பி வகைகள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக Typica என்ற வகை இதில் குறிப்பிடத்தக்கது.
பின்னர் இந்திய பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவுகளில் இதே C.arabica செடிகளின் வகைகள் பிரெஞ்சு காலணியால் 1820 வாக்கில் தீவு முழுமைக்கும் விளைவிக்கப்பட்டது. ஆக , Typica, Bourbon ஆகிய இரு வகைகள் இங்குப் பரவலாக்கும் செய்யப்பட்டன.
இன்றைய அளவில் C.arabica வகையே உலகின் ஏறக்குறைய 70% காபி உற்பத்தியில் இடம்பிடித்துள்ளது. இன்றைக்கு ஏறக்குறைய 600,000 ஆண்டுகள் பழமையான இந்த காபியை இன்று மனிதர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாள் உணவுத் தேவையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம்.
மனிதர்களைச் சில உணவுகள் ஆக்கிரமித்து விட்டன. காபியைப் போலவே அரிசி, கோதுமை போன்றவற்றையும் கூறலாம். மனித குலம் இன்று அத்தகைய சில உணவுகளைத் தவிர்க்க முடியாத நிலைக்கு வந்து விட்டது. இவ்வகை தாவரங்கள் மனித குலத்தை அடிமைப்படுத்தி விட்டன. அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல!
-சுபா18.9.2024
குறிப்பு: https://archaeology.org/issues/september-october-2024/collection/coffees-epic-journey/ancient-dna-revolution/
Friday, May 24, 2024
ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித, கால்நடை மற்றும் தேர் அடங்கிய 'வியக்க வைக்கும்' கற்கால புதைகுழி
ஜெர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தின் தலைநகரான மாக்டெபர்க் அருகே உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மனித மற்றும் விலங்குகளின் எச்சங்கள் மற்றும் ஒரு பழங்கால சடங்கின் ஒரு பகுதியாக இருந்த தேரின் எச்சங்கள் அடங்கிய கற்கால புதைகுழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
சாக்சனி-அன்ஹால்ட்டின் மரபுரிமைப் பாதுகாப்பு மற்றும் தொல்லியல் துறையின் மாநில அலுவலகத்தின் அறிக்கையின்படி, பல புதைகுழிகளைக் கொண்ட இந்த ஆய்வுத்தளத்தில் 6,000 ஆண்டுகள் பழமையான "புதைகுழி மேடுகள்" உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு புதைகுழி உள்ள மேடு குறிப்பிடத்தக்க வகையில் ஆய்வாளர்களை வியக்க வைத்தது. இது இறப்புச் சடங்கு செய்யப்பட்டு இறந்த ஒரு மனிதர் புதைக்கப்பட்ட ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 35 முதல் 40 வயதுடைய இறந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடுகள் இவை. அவர் இறந்த பின் இரண்டு கால்நடைகள், மற்றும் ஒரு தேர் ஆகியவை சேர்த்து வைக்கப்பட வகையில் இது அகழாய்வில் கிடைத்துள்ளது.
இது முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது காலநடை. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கால்நடையை இந்த இறந்தவருக்காக இம்மக்கள் பலிகொடுத்திருக்கின்றனர். தெய்வத்துக்கு வழங்கப்படுவது போன்ற தன்மையை இது வெளிப்படுத்துகின்றது. ஏனெனில் இறந்து போனவர் மிக முக்கியமானவராகவோ, ஒரு இனக்குழு தலைவராகவும் கூட இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்ரனர்.
இங்கிருக்கும் மேலும் ஒரு புதைகுழி மேடு பொ.ஆ 4100 மற்றும் 3600 கால வாக்கில் ஜெர்மனியில் இருந்த புதிய கற்கால கலாச்சாரமான பால்பெர்க் குழுவினரின் புதைகுழிகளில் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அந்த மேட்டில் 66 அடி (20 மீட்டர்) நீளமும் 98 அடி (30 மீ) நீளமும் கொண்ட இரண்டு பெரிய, ட்ரெப்சாய்டல் மரத்தினால் உருவாக்கப்பட்ட wood burial chambers அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் ஏறக்குறைய 660 அடி (200 மீ) இடைவெளியில் உள்ளது.
இந்த இரண்டு புதைகுழிகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த போது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, இறந்தோர் சடங்கில் "கால்நடைகள் பலியிடப்பட்டு, மக்கள் ஊர்வலம் செல்லும் பாதையாக" இப்பகுதி இருந்திருக்கலாம் என்று இவ்வாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
https://www.livescience.com/archaeology/astonishing-neolithic-burial-containing-a-human-cattle-and-chariot-discovered-in-germany
-சுபா
24.5.2024
Wednesday, March 6, 2024
டீன் ஏஜ் காலத்து படம்
மலேசியாவில் பினாங்கில் ஒரு கருத்தரங்க நிகழ்வு. நண்பர் சுப்பாராவ் இன்று அனுப்பியிருந்தார். முன் வரிசையில் 2ஆவது .. கண்ணாடி போட்டுக்கொண்டு நான்.
கால ஓட்டத்தில் பல நிகழ்வுகள் நினைவுகளாய் மட்டும் தேங்கி விடுகின்றன.One Page Indian Stories
Translator: A. Basheer Ahmad Jamali
Monday, March 4, 2024
தமிழர் புலப்பெயர்வு: உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு
தமிழர் புலப்பெயர்வு:உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு
Saturday, March 2, 2024
முருங்கைக்கீரைகள்
சென்னையில் சாலிகிராமம் அருகே அருணாச்சலம் சாலையில் பெரியவர் ஒருவர் தினமும் கீரைகள் விற்கின்றார். அவரிடம் முருங்கைக்கீரைகள் வாங்குவது தற்சமயம் எனக்கு வாடிக்கையாக இருக்கின்றது. சென்னையில் இருக்கும் வரை முருங்கைக்கீரைகள் சாப்பிட்டு மகிழ்வோமே என்ற ஓர் ஆசை.
