Friday, November 8, 2024

100 Reflections on the Harappan Civilization - AHIMSA

 

சிந்துவெளி ஆய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை சர் ஜான் மார்ஷல் அவர்களால் 20.செப்டம்பர் 1924இல் வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியுள்ள இந்தக் காலகட்டத்தில் சமூக அமைப்புகளும் தனிநபர்களும் இந்த வரலாற்றுச் சிறப்புக்குறிய நூற்றாண்டு விழாவை பல்வேறு வகையில் கொண்டாடி வருவதைக் காண்கின்றேன்.  நூல் வெளியீடாகவும், மாநாடாகவும், பயிற்சி பட்டறைகளாகவும், சொற்பொழிவுகளாகவும், உரைகளாகவும், கலந்துரையாடல்களாகவும்  பல நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

சிந்துவெளி ஆய்வாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியேயும் பயணித்து செல்லுமிடமெல்லாம் சிந்துவெளி நாகரிகம், தமிழின் தொன்மை தொடர்ச்சி அதன் திராவிட அடித்தளம் என தொடர்ந்து உரையாற்றி மக்களிடையே பேரளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இந்த மாபெரும் எழுச்சி தமிழர் வரலாற்று ஆய்வுக் களத்திற்கு புத்துணர்வு அளிக்கிறது.

பள்ளி மாணவர்கள் கூட சிந்துவெளி ஆய்வுகள் பற்றியும் ஹரப்பா நாகரிகம் பற்றியும் பேசுகின்றார்கள். ஆய்வுத்தளத்தை கடந்த பொதுமக்களும் ஆர்வத்தோடு சிந்துவெளி பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது வியப்பையும் அதேவேளை இன்னும் தீவிரமாக சிந்துவெளி மற்றும் தமிழர் தொன்மைகள் ஆகியவை பற்றிய விரிவான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும், கண்டுபிடிப்புகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் எழுப்புகின்றது. 

சிந்துவெளி ஆய்வு தொடர்பாக அண்மையில் வந்திருக்கின்ற ஒரு நூல் 100 Reflections on the Harappan Civilization - AHIMSA. நூலாசிரியர் தேவ்தத் பட்டாநாயக். 

கடந்த மாதம் தமிழ்நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு நூலை அங்கேயே வாங்கிக் கொண்டு வந்தேன். ஜெர்மனிக்கு வந்த ஓரிரு நாட்களிலேயே நூலை வாசித்து விட்டாலும் தொடர்ச்சியான பல்வேறு பணிகளால் என்னால் நூல் பற்றிய என் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. 

இத்தனை நாள் இந்நூலைப் பற்றி நான் பேசாமல் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் என் அலுவலக அறையில் மேசையில் இருக்கும் இந்த நூலை பார்க்கும்போது ”என்னைப் பற்றி ஏன் இன்னும் ஏதும் எழுதாமல் இருக்கிறாய்” என்று கேட்டுக்கொண்டே இருப்பது போல தோன்றும். அதுவே சில நேரங்களில் குற்ற உணர்வாகவும் ஆகும். 

சரி நூலைப் பார்ப்போம்..

நூல் கையில் எடுத்த உடனே வாசிக்கத் தூண்டுகிறது. நூல் சிந்துவெளி தொடர்பான 100 தலைப்புகளில், வாசிப்போர் கவனம் சிதறாத வகையில், மிக எளிமையாக விஷயத்தை வழங்குகிறது. நூல் உருவாக்கத்திற்கு ஆசிரியர் கையாண்டிருக்கும் முறை மிகுந்த பாராட்டிற்குரியது. ஆய்வு உலகில் இல்லாத சாதாரண மக்களும் கூட இந்த நூலை வாசித்து புரிந்து கொள்ள முடியும். ஒரு பக்கம் ஓவியம் மறுபக்கம் அதனைப் பற்றிய விளக்கம் என்ற வகையில் நூல் முழுமையையும் ஆசிரியர் அமைத்திருக்கின்றார். நூல் வாசிப்பிற்கும் சொல்ல வந்த செய்தியை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்கும் தூண்டுதலாக இருப்பது ஒரு பக்கம் முழுவதும் நிறைந்திருக்கும் ஓவியங்கள். 

ஒன்பது அத்தியாயங்கள்; அறிமுகம், நூலுக்கு உதவிய நூல்கள், அதை எழுதிய ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், மற்றும் துணை நூல் குறிப்புகள் உட்பட இந்த நூலில் அமைந்திருக்கிறது. உள்ளடக்கம் மட்டுமே என காணும் போது ஆறு தலைப்புகள் அமைகின்றன. சிந்துவெளி ஆய்வுகளில் கிடைத்த தொல்லியல் சின்னங்களை ஆறு பிரிவுக்குள் பகுத்து அவற்றின் ஓவியங்களையும் அதற்கான நூலாசிரியரின் விளக்கங்களையும் இந்த நூலில் காண முடிகிறது. 

Mythology, Resources, Knowledge, Standardization, People, Conclusion . ஆகிய பிரிவுகளில் 100 தலைப்புகளில் இந்த நூல் சிந்துவெளி களத்தில் கிடைத்த சின்னங்களை ஆராய்கிறது.

இந்த நூல் பொதுமக்களுக்கானது என்பதோடு சிந்துவெளி தொடர்பான தகவல்களைக் கடினமாக விளக்குவதை தவிர்த்து மிக எளிதாக வழங்க வேண்டும், அதே சமயம் உண்மையான நேர்மையான, பார்வையையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டு இருப்பதை நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

ஒரு பண்பாட்டின் குறியீடு எப்போதுமே வன்முறை சார்ந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்ற பார்வையை இந்த நூல் தகர்க்கிறது. ஹரப்பா நாகரிகத்தின் மக்களின் வாழ்க்கை வன்முறை அற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்தோடு நூல் தொடங்குகிறது. 

ஹரப்பா நாகரிகம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ஒரு நாகரீகம் அல்ல. மாறாக,  சுமேரியா போன்ற ஏனைய நாகரிகங்களுடன் வணிகத் தொடர்பில் ஈடுபட்ட, மிக சுறுசுறுப்பாகவும் சீராகவும் இயங்கிய ஒரு நாகரீகம்.  மிக விரிவான அதேவேளை திட்டமிடப்பட்ட தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கிமு 3300 லிருந்து கிமு 1200 வரை வணிகத் தொடர்புகளின் செயல்பாட்டை ஹரப்பா நாகரிக தொல் சான்றுகள் வெளிப்படுத்துவதை நூலாசிரியர் நூல் முழுவதும் சுட்டிக்காட்டி செல்கிறார். 

ஹரப்பா நாகரிகம் வளர்ந்து செழித்திருந்த பகுதி சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு சீனா முதல் கான்ஸ்டன்டினிப்போல் (இன்றைய இஸ்தான்பூல்) அதாவது துருக்கி வரை வளர்ச்சி கண்டு பட்டுப் பாதையாகவும் வளர்ச்சியடைந்ததை நாம் காண தவறக் கூடாது. வரலாற்று நிகழ்வுகளின் தொடக்கத்தை எப்படி நாம் ஆராய்கிறோமோ அதே போல அந்நிகழ்வுகளின் தொடர்ச்சியையும் ஆராய்ந்து காண வேண்டியது அவசியம். 

இன்றைய தமிழ் சமுதாயத்தில் பெண்களின் நிலையை ஒப்பிடும் போது ஹரப்பா நாகரிக காலத்தில் பெண்களின் செயல்பாடுகளும் பெண்களின் சமூகப் பங்களிப்புகளும் பெருமளவில் முக்கியத்துவம் பெற்றிருந்ததைப் பல சான்றுகள் உறுதி செய்கின்றன. அத்தகைய சான்றுகளைப் பற்றி நூலாசிரியர் ஓவியங்களோடு விளக்கும்போது அவை வாசிப்போருக்கு ஆழமான புரிதலையும் வழங்குகின்றது. 

நூலாசிரியரின் நீண்ட கால உழைப்பு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகிறது. நூலைப் பற்றி பேச வேண்டும் என்றால் ஒவ்வொரு பக்கத்தைப் பற்றியும் தான் பேச வேண்டும், ஒவ்வொரு ஓவியங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பற்றிப் பேச வேண்டும்.  ஆனால் அது நூல் அறிமுக வரையறைக்குள் இயலாத காரியம். 

ஆங்கிலத்தில் படைக்கப்பட்டிருக்கும் இந்த நூல் வெகு விரைவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தால் கடைக்கோடி தமிழருக்கும் ஹரப்பா நாகரிகம் தொல்லியல் அகழாய்வில் கிடைத்த சின்னங்களின் அடிப்படையில் தன்னை எவ்வாறு வெளிக்காட்டிக் கொள்ள விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமையும்.  

ஒரு நல்ல நூலை வாங்கி வாசித்ததில் மன நிறைவு கொள்கிறேன். இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த திரு. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கூறத்தான் வேண்டும். 

தமிழ் வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கண்டிப்பாக வாங்கி வாசிக்க வேண்டிய ஒரு நூல்.

-சுபா

8.11.2024

குறிப்பு: நூலை அமேசோன் (இந்தியா) வழி பெறலாம். விலை 359 ரூ/-




No comments:

Post a Comment