இலான் மஸ்க் - இன்று மிக அதிகமாக உச்சரிக்கப்படுகின்ற பெயர்களில் ஒன்று.
அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாகவும் இவரது பெயர் மிக முக்கியமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பேசப்பட்டும் வருகிறது.
மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தும் அவரது அண்மைக்கால முயற்சிகள் இன்று உலக நாடுகளை அவரைப் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. அவரது தொடர்ச்சியான ஆய்வுகள் ”இப்படியும் சிந்திக்க முடியுமா” என்று நம்மை வியக்க வைக்கின்றன என்பது ஒரு புறம் இருக்க, எந்த வகையில் அவரது கண்டுபிடிப்புகள் விரைவில் மனித குலத்திற்குப் பயனளிக்கும் வகையில் நடைமுறைக்கு வர சாத்தியம் ஏற்படும் என்றும் கேள்விகளை எழுப்புகிறது.
இவரது அண்மையகால கவனக் குவிப்பு என்பது உலக நாடுகளின் வரைபடங்களை நோக்கியதாக இருக்கிறது. கார்ட்டோகிராபி அல்லது வரைபட உருவாக்கக்கலை என்ற அறிவியல் ஐரோப்பியர்களால் கடந்த 2000 ஆண்டுகள் காலவாக்கில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டவை. எளிமையாகச் சொல்வதென்றால் இன்றைய google மேப்ஸ் வரையிலான இதன் தற்கால வளர்ச்சியைக் குறிப்பிடலாம்.
இந்த வரைபடங்களை நோக்கும்போது மிகத் துல்லியமாக நிலங்களையும் கடல் எல்லைகளையும் கடந்த ஈராயிரம் ஆண்டுகள் கால வாக்கில் சிலர் உருவாக்கி இருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்குச் சான்றுகளாக இருந்தவை எவையாக இருக்கும் என்ற கேள்வியை அணுகும் வகையில் இலான் மஸ்க் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.
இந்தச் சிந்தனை நாம் மனிதகுல வரலாற்றின் முக்கியச் சான்றாவணங்கள் பலவற்றை பல்வேறு காரணங்களால் இழந்திருப்போமா என்ற கேள்வியையும் முன் வைக்கின்றது.
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே மிகத் துல்லியமாக படைக்கப்பட்ட பல ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டு பின்னர் அவை பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டிருக்கலாம், அல்லது தினமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம் என்ற கருத்தை அவர் முன்வைக்கின்றார்.
அது மட்டுமல்ல.
உலகம் நமக்கு பல்வேறு விஷயங்களை வழங்கிக் கொண்டே இருக்கின்றது. நம் ஊர் நம் நாடு நம் இனம் என்ற குறுகிய மனம் இல்லாமல் திறந்த மனத்தோடு அவற்றைப் பார்க்க வேண்டிய காலம் இது. தெரிந்து கொள்ள வேண்டும்.. உலகைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அழுத்தவும் ஆர்வமும் இதற்கு அடிப்படை அவசியம்.
குளிர்ந்த அண்டார்டிகா பகுதி.. ஆயிரக்கணக்கான மைல் ஆழத்தில் கடலுக்குள் புதையுண்டு கிடக்கும் நிலத்தின் மறைந்த பகுதிகள் மட்டுமின்றி இன்னமும் தோண்டப்படாத உலகின் பல பகுதிகள் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை ஆராயப்படும் போது பண்டைய நாகரிகங்கள் எங்கெல்லாம் வாழ்ந்து மறைந்தன.. அவை என்ன விட்டுச் சென்றிருக்கின்றன என்ற புதிய செய்திகளும் நமக்குக் கிட்டும்.
இதுவரை நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற உலகைப் பற்றிய பார்வையிலிருந்து நாம் வேறொரு பரிணாமத்தில் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்ற கருத்தை முன்வைக்கின்றார் மஸ்க்.
உலகின் பல மூலைகளில் வாழ்ந்த பண்டைய மனிதர்கள் மிக நுணுக்கமான வகையில் தங்கள் வாழ்க்கையை வழிநடத்திச் செல்லக்கூடிய ஆவணங்களையும் கருவிகளையும் உருவாக்கி இருக்கக்கூடும். கண்டுபிடிப்புகள் பற்றிய பயணம் என்பது முன்னோக்கியதாக மட்டும் இல்லாமல் காலத்தின் பின்னோக்கியதுமாகவும் இருக்க வேண்டும் ("Journey of discoveries is not just about moving forward it also about looking back" ) என்ற கருத்தை அவர் கூறுகின்றார்.
-சுபா
10.11.2024
No comments:
Post a Comment