Sunday, July 23, 2023

Science Advocate

 Science Advocate என்பவர்கள் தமிழகத்திற்கு மிகவும் தேவையான நபர்கள். இவ்விழியம் கண்டால் அதைப் புரிந்து கொள்வீர்கள். நான் 70களில் உயிரியல் படித்தபோது கிடைத்த முக்கிய பாடம் கலப்பற்ற மனிதக்கூட்டம் என்பது ஏதுமில்லை என்பதே. உலகில் எவ்வளவுதான் தனித்து வாழ்ந்தாலும் மனித ரத்தம் சுத்தமானதல்ல. இதைத்தான் டாக்டர் க.சுபாஷிணியின் பேச்சு வலியுறுத்துகிறது.

மேலும், தமிழன் போலியான சில நம்பிக்கைகளின் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் அறிவியல் சார்ந்து தன் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர் அவா. ஜெயகாந்தன் "ஊருக்கு நூறுபேர்" என்ற நூலில் சொல்ல ஆசைப்படுவது போல் சுபாவும் தன்னைப் போல் ஊருக்கு நூறு பேராவது அறிவியல் வாழ்வியலைப் பேச வேண்டும் என ஆசைப்படுவதை விஞ்ஞானியான நான் ஆதரிக்கிறேன்.
நமது சாதீய வாழ்வியல் என்பது மனித பரிணாமத்தை நோக்கும் போது மிக சமீபத்தில் தோன்றியது, அது அறிவியல் ஆதரமற்றது என்பதே உண்மை.
இவ்வகை ஆய்வுகள் தேவையா? எனும் கடைசிக் கேள்விக்குப் பதில் தேவை என்பதே. ரிச்சர்ட் லீக்கியின் ஆற்றுப்படுத்தலில் ஜேன் குடால் சிம்பான்சி குரங்கில் நடத்திய ஆய்வு இன்று நாம் வனவிலங்கின் உலகை அறிந்து கொள்ளத் தூண்டுகோலாய் இருக்கிறது. அதுவே வன விலங்களுக்கும் நமக்குமுள்ள ஆழமான உயிரியல் தொடர்பை நிச்சியப் படுத்துவதாக உள்ளது. மனிதன் எங்கோ வானத்திலிருந்து தோன்றிய தேவதூதன் அல்ல. அவனும் ஓர் உயிரியல் விலங்கே எனும் புரிதலை இத்தகைய ஆய்வுகள்தான் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. ஆயின் கடந்த 50 ஆண்டுகளுக்குள் 60% வனவிலங்குகளை அழித்துவிட்டோம் (உயிரினங்களை). இது கெட்ட சேதி. உயிரியல் அழிப்பு என்பது தற்கொலைக்குச் சமம். அதை இத்தகைய ஆய்வுகள் மூலமே அறிந்து கொள்ள முடியும்.
நண்பர் ஒளிவண்ணன் மிக முக்கிய கேள்வி ஒன்றை வைத்தார். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றித்தான் உலகப்பரவலை செய்திருக்க வேண்டுமா? என்பது. அறிவியல் என்பது தரவுகளைக் கொண்டு முடிவுகளைக் காண்பது. அவ்வகையில் வந்ததுதான் அம்முடிவு. ஆயினும், மனிதத் தோற்றம் என்பது உலகின் வெவ்வேறு இடங்களில் உண்டாகியிருக்க வாய்ப்புண்டு எனும் கருதுகோளும் உண்டு. குறிப்பாக போர்னியோ காடுகளில்!
இதில் விட்டுப்போன இன்னொரு ஆய்வுச் செய்தி என்பது ஹோமோசெபியன்ஸ் தோற்றமுற்ற பிறகு (படைக்கப்பட்டபின் அல்ல 😉) natural selection (இயற்கைத் தேர்வு) என்பது இயற்கையிடமிருந்து மனிதனுக்கு வந்துவிட்டது. சுபா சொன்ன நாய்கள், பூனைகள், பல்வேறு வகையான ஒட்டு தாவரங்கள், ஜெனிடிக் என்ஜினியரிங் மூலம் உருவாக்கும் செயற்கை உயிரினங்கள், செயற்கை புரதம் போன்ற உணவு உருவாக்கம், இறுதியாக மனதை வைத்து இயங்கும் செயற்கை அறிவு இவையெல்லாம் புதிதாக உருவாகியிருக்கும் cultural evolution எனும் துறையில் அடங்கும். மனிதன் கடவுளின் வேலையை செய்யத் தொடங்கியுள்ளான். எனவே அதைப் புரிந்து கொள்ளவும், இத்தகைய ஆய்வுகள் தேவை.
தமிழகம் அறிவு சார்ந்து இயங்க வேண்டும் எனும் சுபாவின் கனவு நிறைவேற என் நல் வாழ்த்து.
-நா.கண்ணன்

No comments:

Post a Comment