Friday, August 4, 2017

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், மலாயா பல்கலைக்கழகம் - திருக்குறள் கட்டுரை


மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் எனது திருக்குறள் தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் எண் 1.

முழு ஆய்விதழையும் இங்கே க்ளிக் செய்து தரவிறக்கி வாசிக்கலாம்.

ஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் – கார்ல் க்ரவுல் மொழிபெயர்ப்பு
Thirukkural translation in Deutsch (German) – Karl Grauls Translation work
முனைவர்..சுபாஷிணி
Dr.K.Subashini

Abstract
The trade activities initiated by the Portuguese traders and the religious activities that took place in the 16th to 18th Cent AD in the South Indian costal area has created substantial interest among the English to venture in trade activities in this geographical location. The enduring success of the English East India Company has created deep interest to the Danish Kingdom to focus on establishing Trade in East particularly in Tamil Nadu coastal area. The Danish East India company was formed and it ventured in trade in the East. Not limited to trade the King had the interest to extend the Lutheranian religion in this geography. As a result of this, Lutheran priests arrived in Tharangampadi to spread the gospel among the local people in Tamil Nadu. The priests learn to read and write Tamil language. They mastered many Tamil literatures and among them is Thirukkural. This paper deals with the efforts taken in Translating Thirukkural in German Deutsch language, particularly looking at the efforts of Dr.Karl Graul.

Key words: Thirukkural, Tamil Language, German Deutsch Language, Trade, Karl Graul, translation work, Ziegenbalg, Danish East India Company.  


முன்னுரை
உலகப்பொதுமறை என அழைக்கப்படும் சிறப்புடன் திகழ்வது திருக்குறள். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்த தமிழ்ப் படைப்புக்களில் தலையாயதாக நூலாகத் திகழ்கின்றது திருக்குறள். உலகில் புழக்கத்தில் உள்ள பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் இது திகழ்கின்றது. ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான ஜெர்மானிய மொழியில் (டோய்ச்) திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு  ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் மத்தியில் இந்த நூல், தமிழ் இலக்கியத்துக்கு ஓர் அறிமுகமாகிய வரலாற்றுச் செய்தியை விவரிப்பதாகவும் அதில் குறிப்பாக டாக்டர்.கார்ல் க்ரவுல் எழுதி பதிப்பித்த திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றிய செய்திகளைத் தருவதாகவும் இக்கட்டுரை அமைகின்றது.

ஆய்வுப் பின்புலம்
தமிழக வரலாற்றையும் தமிழர் பண்பாட்டு விசயங்களையும் பற்றிய ஆய்வுகளில் பொதுவாக பாண்டிய, சேர, சோழ, நாயக்க, சாளுக்கிய மன்னர்களின் வரலாறுகளை விவரித்து இவற்றோடு நிறுத்திக் கொள்ளும் ஆய்வுப் போக்கு நிலவுகின்றது. தமிழக நிலப்பரப்பில் ஐரோப்பியர்களின் வருகையும், அது ஏற்படுத்திய சமூக, சமய, வாழ்வியல் சார்ந்த மாற்றங்களும் பெருவாரியாக ஆய்வு நோக்கிலிருந்து ஒதுக்கப்படுவதை அல்லது கண்டு கொள்ளாமல் புறந்தள்ளப்படுவதைக் காண்கின்றோம்.
 கடந்த அறுநூறு ஆண்டுகளில் தமிழர் வாழ் நிலத்தில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கும் போது சில செய்திகளை மெலெழுந்தவாறியாக சொல்லிவிட்டு அவற்றின் அடித்தளமாக அமைந்திருக்கும் விசயங்களை ஆய்வு பொருளாகக்  காணாமல் செல்கின்ற போக்கினால் வரலாற்றின் ஒரு பகுதி கண்டுகொள்ளப்படாமல் செல்கின்ற நிலையைக் காண்கின்றோம். அதில் முக்கியமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விசாயங்களாக உள்ளவை இன்றைக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நிகழ்ந்த ஐரோப்பியர்களின் வணிகம், சமயம் தொடர்பான நிகழ்வுகளும் அதன் பொழுது தமிழ் மொழி தொடர்பான சில நிகழ்வுகளுமாகும்
ஓலைச்சுவடிகளில் தமிழ் இலக்கண இலக்கிய, அறிவியல், சமூக செய்திகளைக் குறித்து வைக்கும் போக்கிலிருந்து அச்சு இயந்திரத்தின் அறிமுகத்தோடு அச்சுப்பதிப்பாக நூல்களை வெளியிடும் மாற்றம் ஐரோப்பியரின் தமிழக வருகையினால் நிகழ்ந்த ஒரு சம்பவம். இது தவிர்க்கப்பட முடியாத படிப்படியான சமூகப்புரட்சியை தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்தியது (மோ.நோவிஸ் விக்டோரியா, பக். 34).

தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்பாக்கம் என்பது போல, தமிழ் இலக்கிய இலக்கணங்களின்  ஐரோப்பிய மொழிபெயர்ப்பு தொடர்பான  நடவடிக்கைகளும் பேசப்படுவது என்பது ஆய்வுலகில் குறைவாகவே உள்ளது. குறிப்பிடத்தக்க மொழி பெயர்ப்புப்பணிகள், அதாவது தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு கி.பி.17ம் நூற்றாண்டு தொடங்கி நடந்தன என்பதும், அதில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மிக முக்கியமாக பலரது கவனத்தை ஈர்த்த ஒரு நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது (C.S.Mohanavelu, pg.38)  . ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் வெளிவந்துள்ளது எனப் பெருமைப்படுதலோடு நிறுத்திக் கொள்வதிலேயே பெரும்பாலோர் இருந்து விடும் நிலை தெரிகிறது. ஆயின், எவ்வகையில் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எவ்வகையான தாக்கத்தை இந்த மொழிப்பெயர்ப்பு நூல்கள் வெளிவந்த போது ஐரோப்பிய நாடுகளில் அவை ஏற்படுத்தின என்பது போன்றவற்றை ஆய்வு செய்வது முன்னெடுக்கப்படாமலேயே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு திருக்குறளுக்கான ஜெர்மானிய டோய்ச் மொழி பெயர்ப்பு பற்றிய பின்புல தகவல்களை ஆராயும் ஒரு ஆய்வாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

ஆய்வுமுறை
மேற்குறிப்பிட்டுள்ள நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில்  ஜெர்மானிய டோய்ச் மொழியில் அமைந்த ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் அவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலும் (August Friedrich Cammerer , Des Thiruvalluver - Gedicht und Denksruche, Aus der Tamulischen Sprache uebersetz von August Friedrich Cammerer, 1803 )  டாக்டர்.கார்ல் கிரவுல் அவர்களின் ஜெர்மானிய டோய்ச் மொழியில் அமைந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலும் (Karl Graul, Der Kural des Tiruvalluver, Ein Gnomisches Gedicht über die Drei strebeziele des Menschen, 1856)  முழுமையாக இந்த ஆய்விற்கான அடிப்படைத் தரவுகளாக எடுத்து ஆராயப்பட்டன. இதனுடன் தமிழகத்தின் சுவடிப்பதிப்பியல் தொடர்பான ஆய்வு நூல்கள் அடிப்படை வாசிப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டனஇந்த ஆய்விற்கு உதவும் வகையில் அமைந்த, கி.பி.17ம் நூற்றாண்டில் டென்மார்க் மற்றும் ஜெர்மானிய வணிக முயற்சிகள் மற்றும் அதோடு தொடர்புடைய செய்திகளை வழங்கும் சில நூல்களும் இந்த ஆய்விற்கு துணை நூல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.


ஜெர்மானிய லூதரன் பாதிரிமார்களின் தமிழக வருகை
இந்திய நிலப்பரப்பில் லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு லூதரேனிய கிருத்துவ பாதிரிமார்களின் தமிழகத்துக்கான வருகையே இதற்கு தொடக்க நிலையை உருவாக்கிய வரலாற்று நிகழ்வாக அமைகின்றது.

லூதரன் கிருஸ்துவ மத பாதிரிமார்கள் மதம் பரப்பும் நோக்கத்துடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு வருவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்க பாதிரிமார்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வருகை தந்து தென்தமிழகத்தில்,  குறிப்பாகத் தூத்துக்குடி பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்ப நிலை பணிகளை மேற்கொண்டனர் (மோ. நோவிஸ் விக்டோரியா, பக்.8) இது படிப்படியாக வளர்ந்து தென் தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி போன்ற பகுதிகளில் போர்த்துக்கல், இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து கத்தோலிக்க பாதிரிமார்கள் தமிழகம் வந்து தமிழ் கற்று உள்ளூர் மக்களிடையே கிருத்துவத்தை பரப்புதல், பள்ளிக்கூடங்களை உருவாக்கி தமிழகத்தின் பல்வேறு தரப்பட்ட மக்கள் கல்வி வாய்ப்புக்களை பெறும் வகையிலான சமூக மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருந்தன.. இத்தகைய முயற்சிகளில் முக்கியமானவர்களாக ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளார், கோண்டண்டின் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) நோபிலி பாதிரியார் போன்றோரைக் குறிப்பிடலாம் (மோ. நோவிஸ் விக்டோரியா, பக்.5).   

இத்தகைய முயற்சிகளில் டென்மார்க் அரசும் முனைப்புக் காட்டத்தொடங்கியது. 1612ம் ஆண்டில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தஞ்சாவூரின் தரங்கம்பாடி பகுதியில் ஒரு சிறு பகுதியைப் பெறும் உரிமையை ஆண்டுக் கட்டணமாக இந்திய ரூ.3111 செலுத்தி பெற்றனர்அச்சமயம் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த ரகுநாத நாயக்க மன்னரின் (இவருக்கு அச்சுதப்ப நாயக்கர் என்ற பெயரும் உண்டு) அனுமதியோடு இந்த உரிமை பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச ஆணையின் படி 19.11.1620ம் நாள் தரங்கம்பாடியில் டென்மார்க்கின் டேனிஷ் கொடி ஏற்றப்பட்டு தரங்கம்பாடியில் டேனிஷ் தொடர்பு உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டேனீஷ் வர்த்தகர்கள் தரங்கம்பாடி வந்திறங்கினர். இவர்களுக்கு வர்த்தக முன்னோடிகளாக அச்சமயம் இங்கிலாந்தின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி அமைந்திருந்தது (C.Mohanavelu, pg 22)

தென் இந்தியாவின் கிழக்குக் கரை நகர்களில் வர்த்தகம் செய்வது என்பது மட்டும் டேனிஷ் அரசின் நோக்கமாக அமைந்திருக்கவில்லை. வர்த்தகத்தோடு மதம் பரப்பும் சேவையையும் செய்ய வேண்டும் என்பதை டேனிஷ் மன்னர் விரும்பியதால் 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு டேனிஷ்  அரச ஆணையுடன் முதல் அதிகாரப்பூர்வ மதம் பரப்பும் சமயக் குழு ஒன்று வந்திறங்கியது. இதில் இடம் பெற்றவர்கள் ஜெர்மானிய பாதிரிமார்கள் சீகன்பால்கும் ப்ளெட்சோவும் (C.Mohanavelu, pg 26)

மதம் பரப்பும் பணிக்கு இவர்களுக்கு அடிப்படை தேவையாக இருந்தது தமிழ் மொழித்திறன். தமிழ் மொழியைக் கற்க ஆரம்பித்த சீகன்பால்க், லூத்தரன் பாதிரிமார்கள் தமிழ்கற்க உதவும் வகையில் இலக்கண நூற்களை எழுதினார். பல தமிழ் இலக்கிய நூல்களைத் தாம் கற்றுஜெர்மானிய மக்கள் தமிழ் கற்க உதவும் வகையில் சொற்பொருள் அகராதிகளை உருவாக்கினார். அவர் வாசித்த இலக்கிய நூல்களில் திருக்குறளும் அடங்கும் என்ற செய்தியை சீகன்பால்கின் கையெழுத்துக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. ( Jeyaraj, Daniel and Young, Richard Fox 2013, p. 240 - 241.)  அப்போதைய நிலையில் திருக்குறளின் ஒரு லத்தின் மொழி பெயர்ப்பு மட்டுமே வீரமாமுனிவர் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. ஆயினும் கூட அது முழுமை பெற்ற எல்லா குறட்பாக்களையும் உள்ளடக்கிய ஒரு மொழிபெயர்ப்பு அல்ல (Graul, 1856 P.XVII).   

ஆரம்பகால திருக்குறள் மொழிபெயர்ப்புகள்
திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் 1812ம் ஆண்டில் திருக்குறள் மூலபாடம் என்னும் நூலை அச்சு வடிவில் பதிப்பித்தார் என்று அறிகின்றோம் (மாதவன், 2000, .70), . தமிழ் மொழியில் தீவிர பற்றும் ஆர்வமும் கொண்டு நல்ல புலமை பெற்ற ஆங்கிலேயரான அறிஞர் எல்லிஸ் (F.W.Ellis) அவர்கள் அதே 1812ம் ஆண்டில் ஆங்கிலத்திலும் அதன் பின்னர், ப்ரென்சு, ரசிய மொழி, ஸ்வீடிஷ் மொழி, ஜெர்மன் மொழி ஆகிய பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும், பணியை மேற்கொண்டிருந்தார் என அறிகின்றோம். இதற்கு முன்னரே போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர்  (Beschi ) அவர்கள் 1730 வாக்கில் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தார் (Graul, 1856 P.XVII). வீரமாமுனிவரின் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் ஐரோப்பிய சூழலுக்கு லத்தீன் மொழி வாயிலாக திருக்குறள் ஏற்கனவே அறிமுகம் பெற்றிருந்தது என்பதை நாம் அறிகின்றோம்.ஜெர்மானிய மொழியில் திருக்குறள்
ஆயினும் முதன் முதலில் முழுமையாக ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக நமக்குக் கிடைப்பது  ஆகஸ்ட் ஃப்ரெடிக் காம்மெரர் என்ற ஜெர்மானிய லூத்தரன் மதபோதகர் (August Friedrich Cämmerer)  அவர்கள் மொழிபெயர்த்து முன்னுரையும் தந்து எழுதிய நூலாகும் (Graul, 1856 P.XVII). எல்லிஸ் அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே ஜெர்மானிய டோய்ச் மொழியில் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றதுஇந்த நூல் 1803ம் ஆண்டு ஜெர்மனியில் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது.(பின்னினைப்பு 1. – புகைப்படம் நூலின் அட்டைப்படத்தைக் காட்டுகின்றது)

இந்த நூலின் பெயர் Das Thiruvalluvar Gedichte und Denksprueche என்பதாகும். இந்த நூலைப் பற்றிய விரிவான அறிமுகம் ஒன்று 1807ம் ஆண்டு ஜெர்மனியின் நூரன்பெர்க் (Nurnberg)  நகரில் வெளிவந்த  பொது இலக்கிய நாளேடு ஒன்றில் (Allgemeine Literatur Zeitung, 29.June 1807) பதிவாகியுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது .(பின்னினைப்பு 2. – புகைப்படம் நாளிதழின் செய்தியைக்  காட்டுகின்றது)இந்த நாளேட்டில் ஜெர்மனியிலிருந்து மதம் பரப்பும் பணிக்காக டேனீஷ் அரசின் ஆதரவில் தமிழகத்தின் தரங்கம்பாடிக்குச் சென்ற லூத்தரன் பாதிரிமார்களின் இலக்கியத் தேடல்களை மையப்படுத்தி விவரிக்கும் செய்தியாக இச்செய்தி அமைந்துள்ளது. அதில் சிறு அறிமுகத்துக்குப் பின்னர் இந்த நூலைப்பற்றிய விளக்கம் வருகின்றது. குறள்களின் மொழி பெயர்ப்பு, திருவள்ளுவர் பற்றிய செய்திகள் என்ற வகையில் திரு.காமரர் அவர்கள் படைத்திருக்கும் இப்படைப்பை விவரிக்கின்றது இந்த நாளேட்டுச் செய்தி.

Das Thiruvalluvar Gedichte und Denksprueche  என்ற இந்த  நூல் முழுமையாக ஜெர்மானிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. நூலில் காமெரர் அவர்கள் முதலில்  தனது அறிமுக உரையை பதிகின்றார். தமிழகத்தின் தெய்வ வழிபாடுகள், சமூக நிலைகள், இலக்கியம் என சில தகவல்களை இப்பகுதியில் குறிப்பிடுகின்றார். அடுத்து திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சில தகவல்களைக் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த திருவள்ளுவரைப் பற்றிய கதைகளைக் குறிப்பிட்டு திருவள்ளுவரை இந்த நூலில் அறிமுகம் செய்கின்றார்அதன் பின் 1330 குறள்களுக்குமான மொழி பெயர்ப்பு இந்த நூலில் பத்து பத்தாக  வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.


கார்ல் க்ரவுல் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு
காமெரர் அவர்களுக்குப் பின் தரங்கம்பாடி வந்த ஜெர்மானிய அறிஞர் கார்ல் க்ரவுல் அவர்கள் Der Kural des Tiruvalluver (Graul, Karl) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது கிழக்கு ஜெர்மனியின் லைப்ஸிக் (Leipzig:) நகரில் 1856ம் ஆண்டில் நூல் வடிவம் கண்டது. இந்த நூலின் பெயரின் தமிழாக்கம் திருவள்ளுவரின் குறள் என்பதாகும். 216 பக்கங்கள் கொண்ட இந்த  நூலில் க்ரவுல் அவர்கள் தனது முன்னுரைபரிமேலழகரின் உரை, அதற்கான தனது முன்னுரை எனத் தொடங்குகின்றார். திருக்குறளின் நேரடி மொழி பெயர்ப்பு என்றில்லாமல் நல்லெண்ணங்கள், நற்கருத்துகள், அரசரின் மாண்பு, பண்பற்ற இச்சையின் பண்பு என்பது பற்றி திருக்குறள் கூறும் கருத்தை முன் வைத்து இந்த நூலைப் படைத்திருக்கின்றார். காதலில் களவு, பெற்றோர் சம்மதத்துடனான திருமணம் என்ற தகவல்களையும் குறிப்பிட்டு திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என இறுதிப்பகுதியையும் சேர்த்து இந்த நூலை உருவாக்கியிருக்கின்றார். க்ரவுல் அவர்கள் தமிழ் இலக்கணத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திருக்குறள்ளுக்கான உரை எழுதியோராக பன்னிரெண்டு உரயாசிரியர்களின் பெயர்களை திரு.க்ரவுல் அறிந்திருந்தார். அவர்களுள் தருமர், மணக்குடைவர், தாமத்தர், பரிதி, திருமலையார், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோரின் பெயர்களை அவர் தம் நூலில் சுட்டிக் காட்டி விவரிக்கின்றார். எல்லிஸின் (F.W.Ellis) ஆங்கில மொழிபெயர்ப்பை க்ரவுல் வாசித்திருந்தார். திருக்குறள் நூலின் முதல் பாலில்  பதின்மூன்று அத்தியாயங்களை எல்லிஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததாகக் குறிப்பிடுகின்றார் க்ரவுல். இந்த  ஆங்கில மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில்  விளக்க உரையையும் இணைத்து வழங்கியிருப்பதையும், அதில் இலக்கண ஆய்வுகளையும் இணைத்து வழங்கியிருப்பதாகவும் அறிகின்றோம் (Graul, 1856 P.XVII)


இந்த நூலின் அமைப்பைப் பற்றி ஆராய்வதும் இந்த மொழிபெயர்ப்பினைப் பற்றிய விரிவான விளக்கம் பெறுவதற்கு உதவும். இந்த நூலின் முழுமையான பெயர் Der Kural des Tiruvalluver, Ein Gnomisches Gedicht über die Drei strebeziele des Menschen என்பதாகும். இதனை திருவள்ளுவரின்  திருக்குறள்மனித வாழ்வின் (மூன்று) இலக்குகளை நோக்கிய போராட்டங்களைப் பற்றிய செய்யுட்கள்‘, எனத் தமிழில் மொழிபெயர்க்கலாம். நூலின் முதல்பக்கத்தில் உள்ள இந்தத் தலைப்பின் கீழ் இதன் மொழிபெயர்ப்பும் விளக்கமும் வழங்கியவர் கார்ல் க்ரவுல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை இவர் எழுதி வெளியிட்ட சமயத்தில் இவர் வகித்த பதவிகளைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது. அதாவது ஜெர்மனியின் லைப்ஸிக் நகரின் லூத்தரன் மிஷனரி அமைப்பின் இயக்குனராகவும், கீழ்த்திசை நாடுகளின் வரலாற்று இறையியல் அமைப்பின் உறுப்பினராகவும் தாம் இருந்ததை நூலின் முகப்பில்  Director der Evangel, Luther. Mission zu Lepzig, Mitglid der Deutschen Morgenlandischen und der Historisch-Theologischen Gesselschafft  என்றும் குறிப்பிட்டு இந்த நூலைப் பதிப்பித்திருக்கின்றார். இந்த நூல் ஒரே காலகட்டத்தில், அதாவது 1856ம் ஆண்டு  ஜெர்மனியின் லைப்ஸிக் நகரில் Dörffling & Franke பதிப்பகத்தாராலும் லண்டனில்  Williams & Norgate   பதிப்பகத்தாராலும் பதிப்பிக்கப்பட்டது .(பின்னினைப்பு 3. – புகைப்படம் நூலின் முகப்புப்பக்கத்தைக் காட்டுகின்றது)

நூலின் தொடக்கமாக பதிப்பாசிரியர் உரையை வழங்கியிருக்கின்றார். இது இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய விளக்க உரை. இதில் ஜெர்மானியர்களுக்குத் தான் வழங்கும் செய்தியாக தமிழகத்தில் தான் கற்ற தமிழ்மொழியில் உள்ள ஒரு நல்லொழுக்க நூலை ஜெர்மானிய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நூலைத் தாம் எழுதியிருப்பதைக் குறிப்பிடுகின்றார். தமிழகத்தைக் குறிப்பிடும் போது  தமிழர்களின் நாடு, அதாவது Tamulenlande  எனக் குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.

இதற்கடுத்தார்போல நூலுக்கான ஒரு அறிமுக உரை வருகின்றது. இப்பகுதியில் முக்கியமாக தமது சமகாலத்து ஏனைய மொழிபெயர்ப்புக்களைப் பற்றி டாக்டர்.க்ரவுல் குறிப்பிடுகின்றார். இந்த முகவுரை பத்து பக்கங்களுக்கு அமைக்கபப்ட்டுள்ளது

ஜெர்மானிய மொழியில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு இதே காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றது. மிகத் தரமான ஆனால் முழுமையடையாத ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆங்கிலேய பாதிரியாராக இந்தியாவின் மெட்ராசில் பணியில் இருந்த ரெவரண்ட் ட்ரூ (Rev. W.H.Drew) அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூலின் பெயர் The Cural of  Tiruvalluver, First Part, with the Commentary of Parimelaragar. இந்த நூலில் 24 குறள்களுக்கான விளக்கமும் பொருளும் மொழிபெயர்ப்பாக வழங்கப்பட்டுள்ளன. இந்த நூல் 1852ல் வெளிவந்தது. (Graul, 1856 P.XVIII). ஆங்கிலேயர்களைப் போல பிரெஞ்சுக்காரர்களும் திருக்குறள் மொழி பெயர்ப்பில் ஆர்வம் காட்டினர் என்பதையும் மறுக்க முடியாது. திரு.ஏரியல் ( Mr.Ariel) Journal Asiatique என்ற இதழில் தொடராக திருக்குறள் மொழி பெயர்ப்புக்களை எழுதி அவை 1847, 1848 மற்றும் 1852ம் ஆண்டுகளில் வெளிவந்தது. இந்த கட்டுரைகளில் பிரஞ்சுமொழியில் திருக்குறளின் முதற் பாலும் இரண்டாம் பாலும் மொழி பெயர்க்கப்பட்டு விளக்கத்துடன் வழங்கப்பட்டிருக்கின்றது (Graul, 1856 P.XVIII). காமத்துப்பால் பகுதியை திரு.ஏரியல் தமது மொழி பெயர்ப்பில் இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் டாக்டர்.க்ரவுல் தனது மொழிபெயர்ப்பில் முப்பால் குறட்பாக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மொழிபெயர்ப்பாக இதனை வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பு.

இதனைத் தொடர்ந்து வரும் பகுதி பரிமேலழகர் உரைப்பற்றிய ஒரு விளக்கம். ஏனைய உரையாசிரியர்களைப் பற்றி அறிந்திருந்தாலும் திருக்குறள் வாசிப்பில் பரிமேலழகரின் உரையைத் துணையாகக் கொண்டு அதன் செய்யுட்களை புரிந்து கொள்ள முயன்றிருக்கின்றார் டாக்டர்.க்ரவுல். நல்லொழுக்கம், நற்பண்புகள், காமம் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழி ஆகியவையே திருக்குறளின் முக்கியச் செய்திகள் என்ற வகையில் குறிப்பிட்டு, தனது புரிதலின் அடிப்படையிலான ஒரு விளக்கத்தை டாக்டர்.க்ரவுல் இரண்டு பக்கங்களில் அமைத்திருக்கின்றார்.

இதன் தொடர்ச்சியாக முப்பாலுக்குமான ஜெர்மானிய டோய்ச் மொழியில் அமைந்த மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொரு செய்யுளின் நேரடி மொழி பெயர்ப்பாகவும் சில கடினமான பொருள் கொண்ட சொற்களுக்கு மேலதிக விளக்கங்களை வழங்கிய தன்மையுடனும் அமைக்கப்பட்டுள்ளன.

இறுதிப்பகுதியாக இடம் பெறுவது திருவள்ளுவர் வரலாறு. திருவள்ளுவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட கதைகளில் இரண்டு கதைகளை எடுத்துக் கொண்டு அவை இரண்டையும் திருவள்ளுவர் வரலாறு என்று இப்பகுதியில் மொழிபெயர்ப்பு செய்திருக்கின்றார் டாக்ட.க்ரவுல்.

முதலில் வரும் திருவள்ளுவர் வரலாறு வேட்டைக்காரமுதலியார் (Graul, 1856 P.185)  என்பவர் எழுதிய நூலைத்தழுவிய கதை. இரண்டாவதாக வருகின்ற திருவள்ளுவர் வரலாறு சரவணப்பெருமாள் ஐயர் (Graul, 1856 P.189)  என்பவர் எழுதிய திருவள்ளுவர் வரலாறு என்ற கதை. இவை இரண்டுமே திருவள்ளுவரின் வரலாற்றைப் புனைக்கதையாக்கி அதீத மலைப்புக்களை வழங்கும் வகையில் திருவள்ளுவரை உயர்த்தி கற்பனை சிந்தனைகளை அதிகம் உட்புகுத்தி உருவாக்கப்பட்ட கதைகளே. எனினும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை தனக்குக் கிடைத்த நூலாதாரங்களின் துணையுடன் டாக்டர்.க்ரவுல் அவர்கள் இந்த நூலில் வழங்க முற்பட்டிருக்கின்றார் என்ற அளவிலேயே நூலில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியைக் காணவேண்டியுள்ளது
.
மதிப்பீடு
ஜெர்மனி மட்டுமன்றி ஜெர்மன் மொழியான டோய்ச் மொழி பயண்பாட்டில் உள்ள ஏனைய நாடுகளான டென்மார்க், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும்  திருக்குறளுக்கான மொழி பெயர்ப்புக்களாக இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரு ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களும் பொது மக்கள் வாசிப்பிற்கும், ஆசிய நாடுகளின் இலக்கியங்களை ஆராய விரும்புவோர் மத்தியிலும் அறிமுகமாக வழி ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் இந்த மொழி பெயர்ப்பும் இவற்றில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் முழுமையான பார்வையைத் தரும் வகையில் அமைந்துள்ளனவா என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

 உதாரணமாக, தமிழகத்திற்கு 16ம் நூற்றாண்டு இறுதி தொடங்கி லூத்தரன் மதம் பரப்பும் பணிக்காக ஜெர்மனியிலிருந்து கடல்வழிப்பயணம் மேற்கொண்டு வந்து சேர்ந்த பாதிரிமார்கள் தமிழ் கற்ற சூழலை கவனிக்காது ஒதுக்கிவிட முடியாது. அவர்களது அக்கால   சூழலில் தமிழ் சமூக கட்டமைப்பில் உயர்சாதி என அழைக்கப்படும் சமூகத்து மக்களிடம் மட்டுமே தமிழும் தமிழ் இலக்கியமும் கற்கக்கூடிய சூழல் இருந்தமையால் திருவள்ளுவரைப் பற்றிய நிலைப்பாட்டை அதுகாறும் கட்டமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பார்வையில் வைத்து மட்டுமே இந்த மொழிப்பெயர்ப்பில் சில பகுதிகளில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. இது திருவள்ளுவரின் பின்புலத்தையும் கருத்தின் ஆழத்தையும் மொழி பெயர்ப்பில் சரியாக உட்படுத்தவில்லை என்ற  சிந்தனையை எழுப்புகின்றதுதிருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் விரிவான ஆய்வுத் தரவுகள் கிடைக்கின்ற இக்காலகட்டத்தில் ஏனைய மொழிகளில் இதற்கான மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள தேவை போலவே  ஜெர்மானிய மொழியிலும் மீண்டும் திருக்குறள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு  ஜெர்மானிய டோய்ச் மொழியில் மீள்பதிப்பு செய்யப்பட வேண்டியது அவசியக்கடமையாகின்றது. இதனைச் செய்வதன் வழி திருக்குறளைச் செம்மைப்படுத்தி  ஜெர்மானிய மொழி பேசுவோர் மத்தியில் மீண்டும் அறிமுகப்படுத்த இயலும்.

முடிவுரை
தமிழ் மொழி ஐரோப்பிய சூழலில், அதிலும் குறிப்பாக ஜெர்மானிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற நாடுகளில் அறியப்படாத மொழி அல்ல. கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட அதிகமான மக்கள் புலம்பெயர்வும் இலங்கைப் போரினால் ஐரோப்பாவெங்கும் புலம்பெய்ர்ந்த இலங்கைத் தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சூழலிலும் தமிழ்மொழி ஐரோப்பிய நிலத்தில் அன்னியப்பட்ட, அறியாத மொழி என்ற நிலையைப் பெறவில்லை என்பது நிதர்சனம்குறிப்பிடத்தக்க  ஒரு சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையின் வழி தமிழ் போதிக்கப்படுவது ஐரோப்பாவில் நிகழ்கின்றது. ஐரோப்பிய மாணவர்களுக்கு திருக்குறள் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு சமகால ஆய்வின் அடிப்படையில் திருக்குறள் மீண்டும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டியது நம் முன்னே இருக்கின்ற மிக முக்கிய நடவடிக்கை என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.


References
·        
  •  Allgemeine Literatur Zeitung, 29.June 1807
  • Mathavan V.Ira. (2000). Cuvadippathippiyal, Pavai Publications, Thanjavur, Tamil Nadu.
  • விக்டோரியா மோ.நேவிஸ் (2011). தம்பிரான் வணக்கம், தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம். Pavai Publications, Rayappetai, Chennai, Tamil Nadu.
  • Graul Karl (1856). Der Kural des Tiruvalluver, Ein Gnomisches Gedicht über die Drei strebeziele des Menschen,  Doeffling & Franke, Leipzig, Germany).
  • The Cural of  Tiruvalluver, First Part, with the Commentary of Parimelaragar. (Pls provide –details of this book including Place of publication and Publisher).
  • Mr.Ariel. 1947 Journal Asiatique,  A Paris, Chez Doney-Dupre Pere et Fils, Imp. –Libraires,au Marais, France
  • Jeyaraj, Daniel and Young, Richard Fox (transl. Eds.) (2013). Hindu-Christian Epistolary Self-Disclosures: ‘Malabarian Correspondence’ between German Pietist Missionaries and South      Indian Hindus (1712–1714), Wiesbaden: Harrassowitz Verlag,
  • An Historical Essay by James F.B. Tinling, B.A. (1871), Early Roman-Catholic Missions to India,       with sketches of Jesuitism, Hindu Philosophy and The Christianity of the Ancient Indo-Syrian Church of Malabar.
  • Joseph G.Muthuraj, (2011), We began at Tranquebar ISPCK, Kashmere Gate, Delhi.


பின்னினைப்புகள்
பின்னினைப்பு 1:

ஆகஸ்ட் ஃப்ரெடெரிக் காம்மெரர் 1803ம் ஆண்டில் பதிப்பித்த திருக்குறள் மொழிபெயர்ப்பு

பின்னினைப்பு 2:

ஜெர்மானிய பத்திரிக்கையில் 1807ம் ஆண்டில் திருக்குறள் பற்றிய நூல் விமர்சனம்

பின்னினைப்பு 3:


கார்ல் க்ரவுல் அவர்கள் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலின் அட்டைப்படம்.

No comments:

Post a Comment