Sunday, August 20, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 129

ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணாக்கர்கள் மிக முக்கியமாக அறிந்திருக்க வேண்டியது ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி நெறிமுறையும் அவற்றைச் செயல்படுத்தும் வழி முறையும், ஆய்வுக்குப் பயன்படுத்தும் கருவிகளும் எனலாம். இன்றைய காலகட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வினை சரியாகப் புரிந்து கொண்டு தான் ஆய்வகங்கள் செயல்படுகின்றனவா என்பதே கேள்வியாக இருக்கின்றது. இன்று நம் சூழலில் ஆராய்ச்சிக்கான பொருளை தேர்ந்தெடுப்பதிலிருந்து மாணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு முறை, தேர்ச்சி என எல்லாமே மன திருப்தி தருவதாக இல்லை. முனைவர் பட்ட ஆராய்ச்சிகளைக் கூட மிக எளிதாக்கி பணம் கொடுத்தால் தேர்ச்சி பெறலாம் என இயங்கும் வழிகாட்டிகளும், கல்வி நிறுவனங்களும் இன்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி கருப்பொருளில் மனதை முழுமையாக ஈடுபடுத்தி ஆய்வினை பல கோணங்களில் சிந்தித்துச் சோதித்து செய்வதை மாணவர்களும் சரி பேராசிரியர்களும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி உறுதியாக்க வேண்டியது அவசியமல்லவா? 

புறநானூற்று அச்சு பதிப்புப் பணிக்கான ஆராய்ச்சியில் உ.வே.சா அவர்கள் இறங்கியபோது அச்சுப்பதிப்புத் துறையில் அவருக்கிருந்த அனுபவம் அதிகரித்திருந்தது என்றே சொல்லலாம். சிந்தாமணி பதிப்பில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் இல்லை என்றாலும் அவரது மனம் அடுத்தடுத்து தாம் பதிப்பிக்கும் நூல்களில் ஆராய்ச்சி முறைகளில் புதுமையை புகுத்த வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு வலுவாக இருந்தது. இது இயல்புதானே. முதலில் நாம் எந்த அனுபவமும் இல்லாமல் ஒரு பணியில் ஈடுபடுவதை விட வாழ்க்கையில் சில அனுபவங்களைப் பெற்று வளர்ந்த பின்னர் செய்யும் காரியங்களை இன்னும் மேன்மையாகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தானே நினைப்போம். அதே நிலை தான் உ.வே.சா அவர்களுக்கும். 

புற நானூறு சங்கப்பாடல்களின் தொகுதிகளுள் ஒன்று என்பதை அவர் அறிந்திருந்தார். பத்துப்பாட்டு ஏற்கனவே அவரால் வெளியிடப்பட்டிருந்தது. சங்க நூல்களில் உ.வே.சா அச்சுப்பதிப்பாக வெளியிட்ட முதல் நூல் பத்துப்பாட்டு. சிலம்பிற்குப் பின்னர் அடுத்து புறநானூற்றை வெளியிட எண்ணிய போது சங்கப்பாடல்கள் தொகுதி அனைத்தையும் முதலில் வாசித்து ஆராய்ந்து விடவேண்டும் என்றும், அந்த நூல்கள் தருகின்ற பொதுப்பண்புகளையும் செய்திகளையும் அறிந்து கொண்ட பின்னணியில் சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் ஆராயும் போது சரியான பொருளை கண்டறிவது சுலபமாகும் என்றும் அவர் எண்ணினார். 

தான் பணியாற்றிக் கொண்டிருந்த கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் கே.ஆர்.துரைசாமி ஐயரென்பவர் தன் கையில் பெரிய ஆங்கில நூல் ஒன்றை வைத்து வாசித்துக் கொண்டிருப்பதை உ.வே.சா கண்டார். தனக்கு ஆங்கில மொழி தெரியாததால் தான் பல ஆங்கிஅல் மொய்ழி நூல்களை வாசித்து அவற்றின் மூலம் பதிப்பிற்கான வழிமுறைகளைக் கண்டறியாமல் போன நிலைபற்றியும் இண்டஹ் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். ஆக, அது என்ன நூல் ? இவ்வளவு பெரிதாக இருக்கின்றதே எனக் கேட்க, இது பைபிள் என்கின்றார் அந்தப் பேராசிரியர். பைபிள் சிறியதாக அல்லவா இருக்கும். இது ஏன் பெரிதாக இருக்கின்றது. எப்படி சாத்தியம் என ஆவலுடன் தெரிந்து கொள்ள கேள்வி கேட்கலானார் உ.வே.சா. 

அந்தப் பேராசிரியரும், இந்த நூலில் பைபிள் வாசகங்கள் மட்டும் இல்லையென்றும், மாறாகப் பைபிளிலுள்ள சொற்களைத் தொகுத்து வகைப்படுத்தி அவற்றிற்கு ஒப்புவமை ஆய்வும் செய்து அவற்றையெல்லாம் இணைத்து நூலாக்கியிருக்கின்றார்கள். இப்படிச் செய்வதால் வார்த்தைகளுக்கான சரியான பொருளை ஏறக்குறையச் சரியாக அனுமானித்து விட இது உதவும் என விளக்கினார். இந்தக் கலந்துரையாடல் உ.வே.சாவிற்கு மனதில் ஆர்வத்தை உருவாக்கியது. தமது புறநானூற்று அச்சுப் பதிப்பில் இந்த ஆராய்ச்சி நெறிமுறையை பயன்படுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார். சங்க இலக்கிய ஆராய்ச்சி எவ்வகையி லிருக்க வேண்டும் என தன் மன ஓட்டத்தை இப்படிப் பதிகின்றார் உ.வே.சா. 

"சங்க காலத்து நூல்களில் வழங்கிய மரபை அறிவதற்கு அவை அனைத்தையுமே ஆராயவேண்டும். சங்க நூல்களவ்வளவும் சேர்ந்து ஓர் உடம்பு போன்றவை. அவ்வுடம்பு முழுவதும் ஒரு வகையான நாடி ஓடும், ஆகையால் அவற்றை முற்றப் பயின்றால்தான் அந்த மரபு தெளிவாக விளங்கும். இதை உத்தேசித்து என்னிடமுள்ள எல்லாச் சங்க நூல்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொண்டேன். 

புறநானூற்றை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பண் மடங்கு இன்பம் உண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று. பலபேருடைய உதவியை நாடவேண்டியது இன்றியமையாததாக இருந்தது." 

பொது வாழ்விலும் ஆய்வுகளிலும் ஈடுபடுவோரின் நிலை இத்தகையதுதான். ஒரு பணி முடிந்தால் அடுத்து இரண்டு பணிகள் காத்திருக்கும். அவை முடிந்தால் அடுத்து மேலும் சில பணிகள் நம செயல்படுத்த வேண்டிய சூழல் பிறக்கும். இவை மனதிற்கு இன்பத்தைக் கொடுக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்ற போதிலும் அசாத்திய உழைப்பையும் பல சிரமங்களையும் கடந்து செல்ல வேண்டியதும் இதில் இயல்பாக அமைந்து விடும்.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment