Sunday, September 11, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 102

மெட்ராசிலிருந்து கும்பகோணம் திரும்பிய பின்னர் கல்லூரி வேலைகளுக்கிடையிலேயே சிந்தாமணி பதிப்புப்பணியை உ.வே.சா தொடர்ந்து வந்தார். அச்சாகி வருகின்ற தாட்களை எழுத்துப் பிழைகள் பார்த்துச் சரி செய்து அதனை அனுப்புதல் என்பது ஒரு பணி. இது சற்றே அதிக காலத்தை எடுக்கும் ஒரு பணிதான். இதற்கும் மேலாக பொருளாதாரப் பிரச்சனை என்ற ஒன்றும் இருக்கின்றது. இந்தக் காலத்திலேயே ஒரு நூலைத் தகுந்த பதிப்பகத்தாரைத் தேடி அச்சிட்டு வெளியிட்டுக் கொணர்வது என்பது எளிதான ஒன்றாக இல்லை என்பதை அறிவோம். ஆக, இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுக்கு முன்னிருந்த நிலையை ஊகித்துப் பார்க்கையில், அது எவ்வளவு சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பணி என ஓரளவு நாம் ஊகிக்கலாம், அல்லவா?

சிந்தாமணிப்பதிப்பிற்காக அச்சகத்தார் அச்சுக்கூலி, காகிதங்களுக்கான விலை ஆகியனவற்றைத் தெரிவித்துக் கேட்கும் போது அப்பணத்தைத் தகுந்த நேரத்தில் அனுப்பி வைக்க முடியாமல் திண்டாடிப்போனார் உ.வே.சா. பொருளாதார உதவி செய்கின்றோம் என அவருக்குச் சம்மதித்து கையெழுத்து வைத்துக் கொடுத்த நண்பர்களில் சிலரே பணத்தை அனுப்பி வைத்தனர். ஏனையோர் மறந்து விட்டனர் அல்லது ஒதுக்கி விட்டனர். அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் கடிதம் எழுதுவது, பின்னர் வருகின்ற பணத்தைச் சேகரித்து அச்சகத்தாருக்கு அனுப்புவது என்பதே ஒரு சுமையான வேலையாகிப்போனது உ.வே.சாவிற்கு.

அத்தகைய ஒரு காலகட்டத்தில் பாரங்களை அச்சிடக் காகிதம் தேவைப்பட்டபோது அச்சுக்கூடத்து உரிமையாளர் பணம் அனுப்பினால் தான் அச்சுப்பணி தொடரும் எனக் கூறிவிட்டார். என்ன செய்வது எனத் தெரியாது திகைத்த உ.வே.சாவின் நிலையைக் கேள்விப்பட்ட சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குத் தெரிந்த ஒரு காகிதக் கடைக்காரரான சண்முகஞ்செட்டியாரை உ.வே.சா தொடர்பு கொண்டு காகிதங்களை முதலில் பெற்றுக் கொண்டு பின்னர் காசு கொடுக்கலாம் என்ற வகையில் பேசி ஒரு ஏற்பாட்டினை செய்து கொடுத்தார். இது தக்க நேரத்தில் கிடைத்த ஒரு உதவியாக அமைந்தது. தேவைப்பட்ட காகிதத்தின் விலை நூற்றைம்பதுரூபாய் மட்டுமே.
ஆகக் காகிதம் கிடைத்தது.
அச்சுப்பணி தொடர்ந்தது.
உ.வே.சா. கல்லூரியில் பணிபுரியும் ஏனைய ஆசிரிய நண்பர்களிடம் கடன் வாங்கி அந்த நூற்றைம்பது ரூபாயையும் கொடுத்து விட்டார்.

இத்தகைய இக்கட்டான, தர்ம சங்கடமான நிலைகள் ஏற்படும் போது அவர் மனம் புண்படாமல் இருந்திருக்குமா?

ஒரு நூலை வெளிக்கொணர அவர் அனுபவித்தச் சிரமங்களைப் போலத்தான் இன்றும் கூட தமிழ் மொழி வளர்ச்சி, வரலாற்றுப்பாதுகாப்பு என உழைக்கும் தன்னார்வலர்களாகிய நம்மில் பலர் சிரமங்களை அனுபவிக்கின்றோம். பணம் படைத்தோருக்கு மனம் இல்லை. தாய்மொழியாகிய தமிழின் மாண்புகளையும் நிலத்தின் வரலாற்றையும் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ள அரசுக்கோ இத்தகைய விசயங்களின் மீது நாட்டமுமில்லை, அக்கறையுமில்லை, ஆர்வமுமில்லை. ஆகத், தமிழ்ப்பணி என்பது என்றென்றுமே தனிமனிதர்கள் சிலரது முயற்சிகளினாலும் சிறு சிறு குழுக்கள் அல்லது அமைப்புக்களினாலும் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றது என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றே!

அன்றைய கால சூழலில் சமண இலக்கியங்கள் என்பன சுவடியாக சமணர்கள் இலக்கிய சூழலுக்குள்ளே மட்டுமே வழக்கில் இருந்தன. சமயம் என்ற ஒரு வகைப்படுத்தலுக்குள் மொழியை வைத்துப் பார்க்கும் மனப்பான்மை கொண்ட கற்றோர் உலகமாக அக்காலகல்விச்சூழலும் கற்றோர் சூழலும் இருந்தன. வைஷ்ணவ இலக்கியங்களை வைஷ்ணவர்கள் மட்டுமே வாசிப்பது போற்றுவது என்பதும், சைவ இலக்கியங்களையும் தத்துவங்களையும் சைவர்கள் மட்டுமே போற்றுவது என்பதும் பொதுவாக இருந்த சூழல். இதில் விதிவிலக்குகளாக சில உண்டு. மறுப்பதற்கில்லை. ஆயினும் பொது நிலை என்பது ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பேணுவோர் அதன் வரையறைக்குள்ளேயே நின்று அதற்குள் உள்ள மதம் தொடர்பான இலக்கியங்களை வாசித்தல் போற்றுதல் என்றே அச்சூழல் அமைந்திருந்தது.

அத்தகைய ஒருசூழலில், பிறப்பால் சைவ சமயத்தைச் சேர்ந்த உ.வே.சா, சமண இலக்கியமான சீவக சிந்தாமணியை ஆய்ந்து நேரம் செலவிட்டு, பணத்தையும் உழைப்பும் மட்டுமல்லாது தன் முழு கவனத்தையும் கூடச் செலவிட்டு இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்க ஒரு முயற்சியே. தமிழ் ஆய்வு என்பது சமய சார்பு அற்று, மொழிக்கு முக்கியத்துவம் தரப்படும் பண்புடன் அமைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே உ.வே.சாவின் சிந்தாமணிப் பதிப்பும் ஈடுபாடும் அமைந்தது.

அக்காலத் தமிழ்ச்சூழல் சைவ வைணவ மதங்கள் வெகுவாகப் பேணப்பட்ட காலம் என்பதால் வேற்று மத இலக்கியங்களை அறிந்தோர் இவருள் சிலரே. ஆகச் சிந்தாமணியை சரியான முறையில் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து உ.வே.சா மனதில் உருவாகியது. சிந்தாமணியின் நாயகனை விவரித்தும் இக்காப்பியத்தின் ஆசிரியரை விவரித்தும் இதே நூலில் முகவுரை எழுதவேண்டியது அவசியம் என்று உணர்ந்து உ.வே.சா அதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment