Tuesday, August 23, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 100
என் சரித்திரம் நூலோடு எனது உலா இன்றுடன் 100வது பதிவை எட்டுகின்றது. இத்தொடரில் என்னுடைய,  அதாவது 2012ம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த முதல் பதிவில்,   நான் குறிப்பிட்டிருப்பது போல என் சரித்திரம் நூலை நான் எனது இளம் பிராயத்தில் முதலில் வாசித்திருக்கின்றேன். பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012ம் ஆண்டு லா பால்மா தீவிற்குச் சென்றிருந்தபோது, அந்த ஒரு வார விடுமுறை காலத்தில் மீண்டும் வாசித்தேன். 

முன்னர்  எனது பதின்ம வயதில் படித்ததற்கும் இப்போது மீண்டும் வாசிப்பதற்கும் புரிதலில் எத்தனையோ வேறுபாடுகளை நான் உணர்ந்தேன்.  உ.வே.சாவின் இந்த நூலை வாசிப்பது என்பது வேறு. அதில் அவரது ஒவ்வொரு சொல்லுக்கும் வாக்கியங்களுக்கும் பின் உள்ள பொருளுடன் இணைந்து பயணிப்பது என்பது வேறு. முதல் வாசிப்பில் எனது அனுபவம் என்பது சொல்லுக்குச் சொல், வாக்கியத்துக்குப் பின் வாக்கியத்தின் பொருள் என்ற அளவில் அமைந்தது. எனது அடுத்த வாசிப்பிலோ அனுபவம் மாறுபட்டது. இந்த மாறுபட்ட அனுபவத்திற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகளில் எனது ஈடுபாடும் அதில் எனது செயல்பாடுகளும். 

எனது கடந்த 17 ஆண்டுகால தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணி அனுபவத்தில், தமிழ் மொழி தொடர்பான பல முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. மின்னாக்கப்பட்டறைகள், ஆவணத் தேடல்கள், ஆவணப்  பாதுகாப்புப்பணிகள், வாசிப்புக்கள், ஆய்வுகள், சொற்பொழிவுகள்.. இப்படித் தமிழ் மொழி தொடர்பான நடவடிக்கைகள்  என் தேடலையும் அதன் வழி நிறைவேறுகின்ற ஆக்கச்செயல்களையும்  சாத்தியப்படுத்தியிருக்கின்றன. அந்த ஒவ்வொரு காரியத்தின் பின்னனியிலும்  அமைந்த உழைப்பு என்பது எளிமையான பாதைகளை மட்டுமே கொண்டதல்ல. பல நேரங்களில் ஏமாற்றங்கள். பல நேரங்களில் தோல்விகள். பல வேளைகளில் சோர்வும் அயர்வும், என முயற்சிகளின் தொடர்ச்சியை பாதிக்ககூடிய, தடைகளை உருவாக்கக் கூடிய அனுபவங்கள் பலவற்றை இந்தக்  களப்பணி அனுபவம் எனக்குக் கொடுத்திருக்கின்றது. இந்தக்  கடின முயற்சி படிப்படியான  வெற்றியையும் அளிக்கத் தவறவில்லை.  இளம் தலைமுறையினரிடையே வரலாற்றுப் பாதுகாப்பு, புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு என்ற சிந்தனைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் என் மனதில் நிரைந்திருப்பதால் இப்பணிகள் தொய்வில்லாது தொடர்கின்றன.  இத்தகைய பணிகளில் இருக்கும் போது, வாழ்க்கையில் தனது தமிழ்க்கல்வித்தேடலுக்கு மிக முக்கிய இடத்தை அளித்த உ.வெ.சா எழுதிய அவரது சரித்திரம், ஒரு வகையில்  அதே போன்றதொரு ஆர்வத்தில் ஈடுபட்டிருக்கும் எனக்கும்  உந்துதலாக அமைந்து விட்டது என்பதை நான் மறுப்பதற்கில்லை.

என் சரித்திரம் நூலில் என்னை மிகக் கவர்ந்த பல செய்திகள்  இருக்கின்றன. அவை எல்லாவற்றிலும் மிக முக்கியமாக நான் காண்பது, ஒரு ஆசிரியர் தன் மாணவருக்குக் காட்டும் அன்பும், ஒரு  மாணவர் தன் ஆசிரியருக்குக் காட்டும் அன்பும். இது போலியான மரியாதை அல்ல. ஆத்மார்த்தமான நேசத்தின் விளைவால் தோன்றும் உணர்ச்சிகளின் அனுபவங்கள்.

மகாவித்வான்  மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் மாணாக்கர்களிடத்தில் கல்வி போதித்தலோடு தன்  அன்பினை பகிர்ந்து கொண்ட தன்மை என்பது, ஆசிரியர்  தொழிலின்  மதிப்பை மிக உயர்த்திக் காட்டும் நல் உதாரணம். மாணவர் என்போர், கல்வியே உயிராகக் கருதி, அக்கல்வியத் தரும் ஆசானே அனைத்தும் என்று எண்ணும் எண்ணத்திற்கு உதாரணமாக உ.வே.சா திகழ்கின்றார்

கல்வியில் நாட்டம் உள்ள அனைவருக்குமே இவர்கள் இருவரும் மிகச் சிறந்த  உதாரணங்கள் எனக் கருதுகின்றேன். 

இந்த நூலில் வாசிப்போர் கண்களில் நீரை வரவழைக்கும் உணர்ச்சிகரமான பகுதிகள் சில உள்ளன. குறிப்பாக மகாவித்வானின் மறைவு. விடுமுறையில் இருக்கின்றோம், நூலை வாசிக்கின்றோம் என்பதையும்  மறந்து, இப்பகுதியை வாசித்துக் கொண்டிருக்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்ததை என்னால்  இன்றும் மறக்க இயலவில்லை. அவரது துக்கத்திற்குள் வாசிப்போரையும் அழைத்துச் சென்று  அவர் துயரை பகிர்ந்து கொண்டுள்ளார் உ.வே,சா என்றே கூறுவேன்.

என் சரித்திரம் உ.வே.சாவின் இறுதிக்காலங்களில் அவர் கைப்பட எழுதியவை. அதுமுடிவுறும் முன்னரே அவர் மறைந்தார். ஆயினும் கூட எழுதிய பக்கங்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 60% க்கும் குறையாமல் தனது ஆசிரியர் தொடர்பில் அமைந்த செய்திகளிளேயே உ.வே.சா வலம் வருகின்றார். அதன் பின்னர்  பெரும்பாலும் தனது ஆசிரியர் தொழில், தனது பதிப்புப் பணிகள் என செல்கின்றது. சீவக சிந்தாமணிப் பதிப்பு அவர் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் என்பதை அவர் இந்த  நூலில் அதற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவததைக் கொண்டு உணர முடிகின்றது.

உ.வே.சா வலம் வரும் வழியே நாமும் உலா செல்வோம்.

உலா தொடரும்..!
சுபா

No comments:

Post a Comment