Sunday, August 7, 2016

அடிமை முறையும் தமிழகமும்

அடிமை முறையும் தமிழகமும் – நூல் பற்றிய என் சிந்தனைகள் 

ஆ.சிவசுப்பிரமணியன் 


ஆ.சிவசுப்பிரமணியணின் நூற்களை இந்த ஆண்டு தான் அறிமுகம் கிடைக்கப்பெற்று நான் வாசிக்க ஆரம்பித்தேன். பாளையங்கோட்டையில் நண்பர்முனைவர்.கட்டளை கைலாசம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, எனது மானுடவியல் தொடர்பான ஆர்வத்தைப் பார்த்து அவர் ஆ.சிவசுப்பிரமணியணின் நூற்களை வாசிக்க வேண்டும் என குறிப்பிட்டதும், பின்னர் முனைவர்.தொ.பரமசிவம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரும் வலியுறுத்திப் பேசி, சில புத்தகங்களின் பெயரைச் சொல்லி உடனே வாசிப்பது நல்லது எனச் சொன்னதும் எனக்கு இவரது நூற்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியமையால் இவரது ஆக்கங்கள் சிலவற்றை வாசிக்கத் தொடங்கினேன். தமிழ்க்கிருத்துவம், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி, ஆகியவற்றைக் கடந்த சில வாரங்களில் வாசித்து முடித்து, இன்று அடிமை முறையும் தமிழகமும் என்ற நூலை வாசித்தேன். அதிகாலை தொடங்கி மதியம் நூலை வாசித்து முடித்தாகிவிட்டது. நூலிற்குள் நான் செய்த பயணமோ சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை, என்றமைந்த நீண்ட பயணம்! 

நூலில் ஆசிரியர் அடிமை முறையின் தோற்றத்தை பற்றி விளக்குவதோடு தொடங்குகின்றார். உலகின் உயர்ந்த நாகரிகங்களாகப் போற்றப்படுகின்ற அனைத்து நாகரிகங்களிலும் பிரிக்கப்படமுடியாத வரலாற்று அங்கமாக அடிமை முறை இருந்தமையை இப்பகுதி விளக்குகின்றது. உலக அதிசங்களுள் இடம் பெறுகின்ற சீனப்பெருஞ் சுவரும் எகிப்தின் பிரமிடுகளும் அடிமைகளின் உழைப்பாலும் ரத்தத்தாலும் கட்டியவை தான் என வாசித்த போது உலக அதிசயங்களின் மேல் இருந்த பிரமிப்பு கரைந்து அவற்றைக் கட்டியவர்களின் வலியே மனதை நிறைத்தது. 

உலகப் பார்வையிலிருந்து சுருக்கி தமிழகத்திற்கு வருகின்றார். சங்க காலத்தில் அடிமை முறை இருந்தது. ஆம். இருந்தது எனச் சொல்லி, போரில் தோற்ற மன்னர்களின் மகளிர் „கொண்டி மகளிர்“ என இருந்தமையை பட்டினப்பாலை ஆசிரியர் குறிப்பிடுவதைச் சுட்டி விளக்குகின்றார். திருவள்ளுவரின் இரு குறள்களைச் சுட்டி, அடிமை முறை இருந்தது என்பதோடு, உள்ளூர் அடிமைகளென்பதோடு மேலை நாட்டு அடிமைகளை மன்னர்கள் வாங்கி வாயிற்காப்பாளராக வைத்திருந்தமையையும் குறிப்பிடுகின்றார். 

அடிமை முறை வளர்ச்சியுற்றதும் அதன் தன்மையில் அதிகார பலம் சார்ந்ததாகவும் வலுப்பெற்ற காலம் பிற்காலச் சோழர் காலமெனச் சொல்லி, போர்க் காலத்தில் அடிமைகள் உருவாக்கப்படுதலும் அவர்களின் உடல் உழைப்பு எவ்வகைப் பணிகளுக்கு பயன்பட்டன என்றும் விளக்குகின்றார். முக்கியமாக வீட்டடிமைகள் என்ற விளக்கம் புதுமையானது, தேவையானது. ஏனெனில், அடிமைகளாக தம்மை கோயில்களுக்குப் பெண்டிரும் சில ஆண்களும் தம்மை விரும்பி அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்ற சாயம் பூசப்பட்ட கூற்றுகளுக்கு மாற்றாக, பெற்றோர் பட்ட தீரா கடன் என்ற காரணத்தினாலும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்ட நிலையை விரிவாகக் காணமுடிகின்றது. அப்படி விற்கப்பட்டோர் அவர்களை வாங்கியவர்களுக்கு அடிமைகளாக ஆக்கப்பட்டனர். 

அந்தணர்களும், வேளாளர்களும், அரசர்களும், அரசு அதிகாரிகளும் கோயிலுக்கும், மடங்களுக்கும் அடிமைகளைத் தானமாகவோ விலைக்கோ கொடுத்த செய்திகளைக் குறிப்பிடுகின்றார். நினைத்துப் பார்க்கின்றேன். இந்தக் கொடுமையான நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் துன்பம் ஒரு பொருட்டாக யாருக்கும் படாத நிலையில் பண்டமாற்று போல இந்த மனிதர்கள் நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது. ஒரு சான்றாக கி.பி 1235ம் ஆண்டு கல்வெட்டு என அறியப்படும் திருக்கொறுக்கையில் உள்ள கோயிலில் உள்ள கல்வெட்டு 100க்கும் மேற்பட்ட ஆண் பெண் அடிமைகளின் பெயர்களைத் தாங்கி நிற்பது பற்றிய செய்தியை அறிய முடிகின்றது. 

தேவரடியார்கள் என்போர் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தார்கள், எனவே அவர்கள் தெய்வீக அடிமைகள், என பகட்டான சொல்லுக்குள் சொல்லிவிட முடியாது என பளிச்சென்று விளக்குகின்றார். தானே தம்மை கோயிலுக்கு அர்ப்பணித்துக் கொண்டோம் என்பதற்கும், பண்டமாற்று போல ஒரு கோயிலிருந்து மறு கோயிலுக்கு விற்பது என்பது ஒரு வகை வியாபார நிலை என்பதையும் கணக்கில் கொள்ளும் போது, கோயில் அடிமைகளின் நிலையில் வெவ்வேறு தன்மைகள் இருந்தன என்பதையும், அனைத்துத் தேவரடியார்களும் பக்தி உணர்வினால் கோயில் பணிக்கு வந்தோர் என்று கூறிவிடமுடியாது என்பதையும் தெளிவு படுத்துகின்றார். 

அடிமை முறையில் கிடைக்கும் தண்டனைகளின் துரம் தாங்காது ஓடிப்போனோரைக் கண்டு பிடித்து , தண்டித்து மீண்டும் வேலை வாங்கிய விசயம் 3ம் குலோத்துங்கன் கல்வெட்டாக திருவாலங்காட்டு கல்வெட்டில் உள்ளமையைச் சான்று தருகின்றார். 

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், அடிமையானோர் தாம் மட்டும் அடிமை என்றில்லாமல் தங்கள் பரம்பரையே அடிமை என எழுதிக் கொடுத்த சான்றுகள் சில ஓலைச் சுவடிகளில் இருப்பதைக் காண்கின்றோம். 
..சந்திராதித்தர் உள்ளவரை 
..பரம்பரை பரம்பரையாக 
..வழியடினை 
..யானும் எம் வம்சத்தானும் 
..இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் 
..எங்களுக்கு கிரமாகதமாய் வருகின்ற 

என்ற வாக்கியங்களின் படி வழிவழியாக தன் சந்ததியினரையும் அடிமைகளாக்கிய நிலைய ஓலை நூல்களிலிருந்து அறிகின்றோம். 

பின்னர் நாயக்கர் கால ஆட்சியில் அடிமை முறை பற்றி ஆய்வு செல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாயக்கர் காலத்தில் சமூக அநீதிகள் என்பன படிப்படியாக அங்கீகாரத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட கால கட்டம். 13ம் நூற்றாண்டில் இபான் பத்துடா என்ற ஆப்பிரிக்க முஸ்லீம் பயணி இரண்டு அடிமைப் பெண்களை தாம் வாங்கியது பற்றி தனது பயனக்குறிப்பில் எழுதியிருக்கின்றார். பல்வேறு வகையான அடிமை சாசனங்கள் இந்தக் காலகட்டத்தில் இருந்தமை ஓலைகளிலிருந்து காணமுடிகின்றது. உதாரணமாக ஒரு ஓலைப்பகுதி இப்படி செல்கின்றது. 
„ பறையன் பேரில் அமை சாதனம் பண்ணி குடுத்தபடி யென்னுதான பறையன் சந்தோசி மகன் ராயனை கொள்வார் கொள்ளுவார் யென்றுனான் முற்கூற கொள்வோம் கொள்வோம். 
.. 
பவுத்திர பாரம்பரையம் சந்திர சூரியாள் உள்ளமட்டும், கல்லும் காவேரியும், பில்லும் பூமியும் உள்ளமட்டும் ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு யெய்ப்பற்பட்ட தொழிலும்...“ 

உள்ளூரில் அடிமைகள் விற்றல் வாங்கல் என்பது மட்டுமன்றி அயல் நாடுகளுக்கு அடிமைகளாக்கப்பட்டோர் விற்கப்பட்டது பற்றியும் அறிகின்றோம். கிபி 1660ல் நடந்த ஒரு விவரம் பற்றி ஏசு சபை ஆவணம் தெரிவிக்கின்றது. அதாவது சொக்கநாத நாயக்கர் (1659-1682) காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் அதிகரிக்க மக்கள் உணவின்றி வாடிச் செத்தனர். ஒரு சிலரை டச்சுக்காரர்கள் உணவளித்து சற்று தேற்றிக் கப்பலேற்றி அடிமைகளாகக் கொண்டு சென்று விற்றிருக்கின்றனர். என்ன கொடுமை!! 

தொடர்ச்சியாக ஆங்கில ஆட்சிமுறை காலத்தில் கொத்தடிமைத்தனம் பற்றிய செய்திகள் வருகின்றன. பல ஆவணங்கள் அக்கால அடிமை முறை பற்றி விளக்குகின்றன. ஒரு சில மீட்புப்பணி போன்றவையும் நடந்தாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் இந்திய சூழலில் உள்ள கொத்தடிமை முறை அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறை என்றே அதிகார வர்க்கத்துக்குத் துணையாக இருந்து கொண்டு அடிமைத்தனத்தை ஒழிக்க முழு மனதுடன் ஒத்துழையாத நிலையையும் காண்கின்றோம். உதாரணமாக 1800ல் தஞ்சை மாவட்ட கலெக்டர் பள்ளர் பறையர் குல அடிமைகள் அம்மாவட்டத்திலிருந்து வெளியேறிய போது நில உடமையாளர்களிடம் பணிபுரிவதை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று போலீசுக்கு ஆலோசனை கூறிய சான்றினைக் காண்கின்றோம். இன்னொரு உதாரணத்தில் , 1828ல் பிராமண நிலவுடமையாளரிடம் பணிபுரிந்த சில பள்ளர், குல அடிமைகள் திருச்சி மாவட்டம் வந்து விட, அவர்களைக் கண்டித்து திருச்சி கலெக்டர் ஒரு கடிதம் எழுதித் திருப்பி அனுப்பியுள்ளார். இப்படி வரிசையாக சில உதாரணங்கள் அடிமைகளாக இருந்தோர் மீள நினைத்த போதிலும் அரசாங்கமே அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த நிலையக் காட்டுவதாக அமைகின்றன. 

„அவர்கள் இந்த மண்ணின் அடிமைகள். அவர்கள் சார்ந்திருக்கும் பண்ணையை விட்டுச் செல்லும் உரிமையற்றவர்கள்“ என கலெக்டர் ஒருவர் எழுதிய கடிதம் அக்காலக் கொடுமைகளை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளது. 

இந்தியாவில் அடிமை ஒழிப்பு சட்டம் 1843ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் படியாள் முறை, பண்ணையாள் முறை என்ற வடிவில் அடிமைத்தனம் தொடராமல் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாத அடிமைகளை சான்றிதழ்கள் மூலம் ஏமாற்றி பண்ணை கூலியாட்களாக வைத்துக் கொள்ளும் நிலையையும் சுட்டிக் காட்டுகின்றார். 

„தமிழகத்தில் அடிமைகள் இருந்தது, விலங்குகளைப் போல அவர்களுக்குச் சூட்டுக்குறி இடப்பட்டதும், பொருள்களைப் போல விற்கப்பட்டதும், வாங்கப்பட்டதும், தானமளிக்கப்பட்டதும், சீதனமாகக் கொடுக்கப்பட்டதும், ஆள்பவர்களின் துணையுடன் அடக்கி ஒடுக்கப்பட்டதும் வரலாற்று ரீதியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும்“ என ஆசிரியர் நூலின் இறுதிப்பகுதியில் குறிப்பிடுகின்றார். 

அடிமைத்தனத்தின் இன்னொரு வகையாக ஒப்பண்டஹ்க் கூலிகள் மூரையைச் சுட்டிக் காட்டுகின்றார். இலங்கைக்கு தேயிலைத்தோட்டத்தில் உழைக்க ஒப்பண்டஹ்க் கூலிகளாகச் சென்றோர், மலேயா, சிங்கை , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றோரும் அடிமை முறையில் ஒரு வகையை அனுபவித்தவர்கள் தாம். 

அடிமைகளாக மக்கள் ஆக்கப்படும் செயல்பாடுகள் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட போதிலும் இன்றும் வேறு வகையில் அடிமைத்தனத்தைப் பிரயோகிக்கு நடைமுறை இருக்கத்தான் செய்கின்றது. அடிமை முறை என்ற நடைமுறையைச், „சடங்கு, சம்பிரதாயம், வழி வழி ஆச்சாரம்“ என்ற அழகான சொற்களால் மூடிமறைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன. 

தான் அடிமை எனவே அடிபணிந்து போவேன், என ஒருவர் அடிமைத்தனத்திலிருந்து மீளாதிருக்கும் வகையில் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதும் நீண்ட கால சிந்தனையின் பிரதிபலிப்புத்தான். 

இந்த நிலையில், நல்ல கல்வி மட்டுமே இந்த அடிமைத்தளையிலிருந்து மனிதர்களை முற்றிலுமாக விடுவிக்கக் கூடிய பண்டோரா மாயப்பெட்டி! 

----------------------------------------
பதிப்பு - நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை

No comments:

Post a Comment