Sunday, February 21, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 89

கும்பகோணம் வந்து அங்கே ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உ.வெ.சா ஓரிரு வாரங்களில் தமது குடும்பத்தாரையும் கும்பகோணத்திற்கே அழைத்துக் கொண்டார். இது அவரது பணிகளுக்கிடையே குடும்ப நலனையும் பேணிக்காக்க உதவியிருக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்தக் காலகட்டத்தில், அதாவது கும்பகோணம் குடிபெயர்ந்த சில மாதங்களில் உ.வெ.சாவிற்கு முதல் குழந்தை ஆண் மகவு பிறந்தது. தனது பூர்வீகமான உத்தமதானபுரத்து சிவபெருமானின் பெயராகிய கலியாணசுந்தரம் என்ற பெயரையே தன் குழந்தைக்கும்  சூட்டினார். அக்காலகட்டத்தில் வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் தம் தந்தையே பார்த்துக் கொண்டார் என்பதையும், தான் முழுமையாக கல்லூரியில் தமிழ் ஆசிரியர் பணியில் மட்டும்  இதனால் ஈடுபட முடிந்தது என்றும் குறிப்பிடுகின்றார். 

இதில் என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயம் என்னவெனில், தனது திருமணத்தின் போது தனது மனைவியைப் பற்றி குறிப்பிடும் உ.வெ.சா அதற்குப் பிறகு நூலில் வேறெங்கும் அவரைப் பற்றி எவ்விதக் குறிப்பினையும் தன் சரிதத்தில் பதியவில்லை. அவரது குண நலன்களைப் பற்றியோ, அவர்களது இல்வாழ்க்கைப் பற்றியோ, அல்லது அவருடன் இணைந்திருந்த காலத்தின் நிகழ்வுகளைப் பற்றியோ நூலில் குறிப்புக்களே இல்லை. தனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வாழ்ந்த தன் மனைவியைப்பற்றியும் சில தகவல்களை நினைத்து பதிந்திருக்கலாம். ஏன் அக்குறிப்புக்கள் இடம்பெறவில்லை என்பது என்னுள்ளே கேள்வியாகவே நிற்கின்றது. பெண்களைப் பற்றியும் அவரது சிந்தனைகள் எண்ண ஓட்டங்கள், கருத்துக்கள், அவர்களால் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகியனவற்றை பதிவதில் பொருளில்லை என்ற எண்ணமும் அக்காலத்தில் இருந்திருக்கலாம். அல்லது என் சரித்திரம் என்னும் தன் சரித்திரக் குறிப்பில் முழுமையான தனது நோக்கமே தமிழ்க்கல்வி, அது தொடர்பான செயல்கள் தமது தமிழ்ப்பணி என்பது மட்டுமே என்ற வகையில் கருதியிருக்கலாம் என்றும் ஒரு வகையில் கருதலாம். என் சரித்திரம் உண்மையில் ஒரு முற்றுப்பெறாத நூல். உ.வெ.சா அதனை முழுமையாக முடிக்கும் முன்பே மறைந்தார் என்பதையும் குறிப்பிடுவது அவசியம் என்றும் கருதுகின்றேன்.

இக்கால கட்டத்தில் ஆசிரியர் பணி, குடும்பம் என்ற வகையில் உ.வெ.சாவின் வாழ்க்கை அமைந்திருந்தது. இந்த நிலையில் அவர் வாழ்க்கையில் ஒரு மிக முக்கிய மாற்றம்  கும்பகோணத்துக்கு அரியலூரிலிருந்து முனிசிபலாக மாற்றலாகி வந்த  சேலம் இராமசுவாமி முதலியார் என்பவரால் ஏற்பட்டது. இதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"காலேஜ் வேலையைப் பார்த்துக் கொண்டும் வீட்டுக்கு வரும் மாணாக்கர்களுக்கு ஒழிந்த நேரங்களில் பாடம் சொல்லிக் கொண்டும் பொழுது போக்கி வந்தேன். அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது, தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும் தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்புடைய தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்றமிழியற்கையின்பத்தை மாந்தி நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது."

சேலம் இராமசாமி முதலியாருடனான உ.வெ.சாவின் முதல் சந்திப்பு முக்கியமான ஒரு நிகழ்வு. இருவருக்கும் அறிமுகம்  நிகழ்ந்தபோது உ.வெ.சாவின் பின்னனியைக் கேட்டு தெரிந்து கொண்டபின்னர் என்னென்ன நூல்களை வாசித்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். இவர் தான் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நூல்களான தலபுராணங்கள், அந்தாதி ஏனைய பிற நூல்களைச் சொல்ல அப்பட்டியலைக் கண்டு அவர் மலைத்து விடுவார் என எதிர்பார்த்தார். ஆனால் எந்தச் சலனமும் சேலம் இராமசாமி முதலியாருக்கு ஏற்படவில்லை. பின்னர் தான் படித்த நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞான சித்தியார், கம்பராமாயணம் எனப்பட்டியலைக் கூற அதுவும் அவரை அதிசயப்படுத்தவில்லை. 

அவ்வளவுதானா..? 
இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்? என்று கேட்க உ.வெ.சா மலைத்து விடுகின்றார். 

எவ்வளவோ நூல்களைச் சொல்கின்றோமே. இவர் அசையவில்லையே. இவையெல்லாம் பழமையான நூல்கள் தாமே என யோசித்து அதனைக் கூற, பழம் நூல்களையும் மூல நூல்களைப் படித்திருக்கின்றீர்களா? என அவர் உ.வெ.சாவைப் பார்த்து கேட்கின்றார்.

எந்த நூலைக் குறிப்பிடுகின்றார் என கேட்க சீவக சிந்தாமணி படித்திருக்கின்றீர்களா? எனக் கேட்கின்றார். மணிமேகலை படித்திருக்கின்றீர்களா? எனக் கேட்கின்றார் இராமசாமி முதலியார்.

இந்த நூல்களின் பெயரை உ.வெ.சா இதுவரைக் கேள்விப்பட்டதும் இல்லை. புத்தகம் கிடைக்கவில்லை. கிடைத்தால் படித்து விளக்கம் தருவேன் என கம்பீரத்தோடு சொல்கின்றார். அதற்கு இராமசாமி முதலியார் கூறிய பதிலும் அதனை உ.வெ.சா விளக்கும் பகுதியும் சுவையானவை. 

"அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும், ‘இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப் படிக்கவில்லை என்பதைப் பிரமாதமாகச் சொல்லவந்து விட்டாரே!’ என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்து கொண்டது. “புஸ்தகம் கிடைக்கவில்லை; கிடைத்தால் அவைகளையும் படிக்கும் தைரியமுண்டு” என்று கம்பீரமாகச் சொன்னேன்.

சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்த முதலியார், நிமிர்ந்து என்னை நன்றாகப் பார்த்தார். “நான் புஸ்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் சொல்வீர்களா?” என்று கேட்டார்.

“அதிற் சிறிதும் சந்தேகமே இல்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்” என்று தைரியமாகச் சொன்னேன். அறிவுப் பலத்தையும் கல்வி கேள்விப் பலத்தையும் கொண்டு எப்படியாவது படித்து அறிந்து கொள்ளலாம் என்ற துணிவு எனக்கு உண்டாகிவிட்டது.

“சரி, சிந்தாமணியை நான் எடுத்து வைக்கிறேன். நீங்கள் படித்துப் பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள்” என்று அவர் சொன்னார். நான் விடை பெற்றுக்கொண்டு வந்தேன். பார்க்கச் சென்றபோது அவர் இருந்த நிலையையும் நான் விடைபெறும் போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் சாமான்ய மனிதரல்லரென்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் உடையவரென்றும் உணர்ந்தேன். "

இந்த சந்திப்பிற்குப் பின்னர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதலியாரைப் பார்க்க உ.வெ.சா சென்றார். அவரை அன்புடன் வரவேற்று தம்மிடம் இருந்த சீவகச்சிந்தாமணி கடிதப்பிரதியை உ.வெ.சாவிற்குக் காட்டி பாடம் ஆரம்பிப்போமா என கேட்க அப்படியே செய்யலாம் என ஆர்வத்தோடு பாடம் கேட்கத் தயாரானார்  உ.வெ.சா. முதலில் தனக்கு எப்படி சீவக சிந்தாமணி கிடைத்தது என்ற கதையிலிருந்து ஆரம்பித்தார் இராமசாமி முதலியார். 

இது உ.வெ.சாவின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையை உருவாக்கிய சம்பவம். இன்று நாம் அறியும் தமிழ்த்தாத்தா வடிவெடுக்க நிகழ்ந்த முக்கிய நிகழ்வு!

No comments:

Post a Comment