Sunday, February 7, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 87

வார இறுதி நாள் முடிந்து திங்கட்கிழமை காலையில் ரயில்பிடித்து கும்பகோணம் சென்று சேர்ந்து விட்டார் உ.வெ.சா. இந்த வாரம் முழுமையாக கவனித்து அவருக்குப் பாடம் நடத்தும் தகுதி இருக்கின்றதா என திரு.கோபால் ராவ் நற்சான்றிதழ் வழங்கினால் தான் அந்தப் பதவி அவருக்கு நிலைக்கும் என்ற நிலை இருந்தது. உ.வெ.சாவிற்கு இந்தப் பணி நிரந்தரமாகி விடவேண்டுமென்று தியாகராச செட்டியாருக்கு இருந்த அதீத ஆர்வம் அவருக்குக் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது. ஏனைய ஆசிரியர்களும் நல்ல வார்த்தைகள் சொல்லி இப்பணி நிரந்தரமாக உ.வெ.சாவிற்கு அமைந்து விட வேண்டும் என்பதில் தியாகராச செட்டியாருக்குத்தான் அதிக ஆவல் இருந்தது.

அந்த வாரம் கோபால் ராவின் மனத்தைக் கவரும் வகையில் பாடம் நடைபெற்றிருக்கின்றது. மறுநாள் கல்லூரி திறக்கப்பட்டதும் காலையிலேயே ரைட்டரைச் சென்று சந்தித்து திரு.கோபால் ராவ் என்ன அபிப்ராயம் கொண்டு எத்தகைய பரிந்துரை கொடுத்திருக்கின்றார் எனக் கேட்டு அறிந்து கொண்டார் செட்டியார். எல்லாம் நல்ல செய்தியாகவே இருந்தது. தியாகராச செட்டியாருக்கு இது எல்லையில்லா மன நிறைவையும், திருப்தியையும், மகிழ்ச்சியையும் தந்தது.

உ.வெ.சாவின் கும்பகோணம் கல்லூரியிலான ஆசிரியர் பணி என்பது தியாகராசச் செட்டியார் அவர்களின் முயற்சியின்றி அமைந்திருக்க வாய்ப்பில்லை. இந்த வாய்ப்பே உ.வெ.சாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவருக்கு அடுத்தடுத்த படிநிலைகளையும் அமைத்துக் கொடுத்தது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

நம் வாழ்க்கையில் நடக்கின்ற பல விடயங்களை ஆழ்ந்து  நோக்கும் போது நடக்க வேண்டிய  காரியங்கள்  திட்டமிடப்பட்டது போல நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன என்பதையும், நம் வாழ்வில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களோ அல்லது சம்பந்தப்படாதவர்களோ ஏதோ ஒரு வகையில் அக்காரியங்களைச் செய்கின்ற கருவிகளாக இயங்குகின்றனர் என்பதையும் கூர்ந்து கவனித்தால் உணர முடிகின்றது. உலகில் உள்ள மனிதர்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் அண்டி வாழும் தன்மை கொண்டதாகவே இயற்கையில் அமைந்திருக்கின்றது. மனிதர்கள் மட்டுமன்று. தாவரங்கள், விலங்கினங்கள் என்று உற்று கவனிக்கும் போது, இயற்கையைச் சார்ந்த வண்ணமாக, ஒன்றினை மற்றொன்று அண்டி வாழும் நிலையில் தான் உலக நியதி இருக்கின்றது. இந்த எளிய அடிப்படையான உண்மையைக் கூட உணராது சாதி, இன, மத பேதங்கள் எனச் சொல்லி அவற்றிற்கெல்லாம் வேண்டாத இலக்கணங்கள் உருவாக்கிக் கொண்டு பிரிவினையை வளர்க்கும் சிந்தனை கொண்டோரை நோக்கும் போது, இந்த இயல்பான உலக நியதிக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளாகத்தான் இத்தகையோரது சிந்தனையைக் காண வேண்டியிருக்கின்றது.

முதல் வார இறுதியில் உ.வெ.சா. திருவாவடுதுறை மடம் சென்றிருந்த போது தேசிகர் அவரிடத்தில், தியாகராச செட்டியாருக்குக் கல்லூரி வழங்கிய ரூ.50 கொடுத்தால் மட்டும் அங்கிருக்கவும். இல்லையென்றால் மடத்திற்கே திரும்பி வந்து விடவும் என்று குறிப்பிட்டுச் சொல்லியனுப்பியிருந்தார். 

மறுவாரமே பணி பற்றிய உறுதியான செய்தி கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மாதச் சம்பளம் ரூ.50 என்ற அடிப்படையில் செட்டியாருக்குக் கொடுத்த அதே சம்பளத்தைத் தர கல்லூரியில் ஒப்புதல் கிடைத்திருந்தது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை உ.வே.சா இப்படிப் பதிகின்றார்.

”  “உங்களை இரண்டு வருஷத்துக்குச் செட்டியாரவர்களுக்குக் கொடுத்த ஐம்பது ரூபாயையே சம்பளமாகக் கொடுத்து ஸப்ரோட்டமாக  நியமித்திருப்பதாக டைரக்டர் துரையவர்கள் உத்தரவு அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். நான் என் சந்தோஷத்தை முகக் குறிப்பால் தெரிவித்தேன்.

இந்தச் செய்தி தெரிந்த ஆசிரியர்களெல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். தியாகராச செட்டியாரோ கரைகடந்த ஆனந்தத்தில் மூழ்கினார். என் மனநிலையைச் சொல்லுவதற்கு வார்த்தை ஏது?” 

தன்னை விட பிறர் எந்தவிதத்திலும் சிறப்பினைப் பெற்று விடக்கூடாது என மனப்போக்கு வளர்ந்து வரும் காலகட்டமிது. அன்பு, பெருந்தன்மை, பிறர் நலம் என்பதெல்லாம் வெறும் காகிதங்களில் எழுதி வாசிக்கும் சொற்களாகப் பல வேளைகளில் அமைந்து விடுகின்றன. அதிலும் தனக்குத் தெரிந்தோர் ஒரு நல்ல பணியில் அமர்ந்து விட்டாலோ அல்லது நல்ல சம்பளம் பெறும் நிலமை கிடைத்தாலோ மனதிற்குள் புழுங்கி சங்கடப்படும் மனம் படைத்தோர் பெருகி விட்ட  காலம் இது. ஆனால் தியாகராச செட்டியாரின் குண நலம் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக, தன் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் படித்த மாணவர் ஒருவர், அதிலும்  திறமை கொண்ட ஒரு மாணவர், தன் திறமைக்கேற்ற தக்க  தொழிலையும் சம்பளத்தையும் பெற வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் சிறப்பானது.  

படித்து முடித்து ஒரு பணியில் அமர்ந்து மாதச் சம்பளம் பெறுவது என்பது மிகவும் மகிழ்வான ஒரு விடயம். அதிலும் குடும்பஸ்தராக இருக்கும் உ.வெ.சாவிற்கு பெற்றோரையும் மனைவியையும் கவனித்து குடும்பம் நடத்த வேண்டிய பொறுப்பும் இருந்தது. வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை,  நாம் பெற்றுக் கொண்ட கல்வி நமக்கு உருவாக்கித் தருவது என்பது நம் திறமையின் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கையை உயர்த்தும்.  ஒவ்வொரு மனிதருக்கும், அவர் ஆணோ பெண்ணோ,  கல்வி கற்று தன் சுயகாலில் நிற்பது என்பதும் தன் குடும்பத்தைத் தனது வருவாயின் வழியாக சிறப்பாக நடத்திச் செல்வது என்பதும் பொருளாதார ரீதியாகவும் சரி, உளவியல் ரீதியாகவும் சரி மிக முக்கியமான அடிப்படை தேவை. 

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கையில்லை. இந்த நிகழ்வின் வழி மீண்டும் ஒரு மாபெரும் மாற்றம் உ.வெ.சாவின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. திருவாவடுதுறையிலிருந்து உ.வெ.சாவின் வாழ்க்கை  வெறொரு இடத்திற்குப் பெயர்ந்தது.  

நிலையான வருமானம் அமைந்ததால் உ.வெ.சா தன் பெற்றோருடன் கும்பகோணத்திற்கு இடம் மாற்றம் செய்து கொண்டார்.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment