Sunday, February 14, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 88

சிலப்பதிகாரத்தை அச்சுப் பதிப்பாகக் கொண்டு வந்தவர்களில் உ.வெ.சாவும் ஒருவர்.  சிலப்பதிகாரத்தை சீரிய அச்சுப் பதிப்பாக்கி வெளியிட்டவர். இந்தப் பணிக்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பு குறிப்பிடத்தக்கது. 

கும்பகோணம் காலேஜில் அவர் பாடம் சொல்ல ஆரம்பித்து சில நாட்கள் கடந்திருந்தன. கோடைவிடுமுறைக்குப்பின் வருகின்ற செமஸ்டரில் 'கானல்வரி' பகுதியில் உள்ள நான்கு காதைகளுக்கு அவர் விளக்கப்பாடம் எடுக்க வேண்டிய பணி கொடுக்கப்பட்டிருந்தது. அன்றைய நிலையில் சிலப்பதிகாரத்தைப் பாடம் சொல்வது என்பது தமிழாசிரியர்களுக்கே மிகச் சவாலாக இருந்த ஒன்று என்பதை உ.வெ.சா வின் எழுத்துக்கள் வழியே அறிந்து கொள்ள முடிகின்றது.

அக்காலத்து கல்லூரி பாட முறை என்பது இன்றைய நிலையிலிருந்து மாறுபட்டதாக இருந்தமையை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இன்று கிடைப்பது போல ஆயிரக்கான நூல்களோ பழம் நூல்களின் அச்சுப் பதிப்புக்களோ இலக்கண நுல்களோ இலக்கியங்களோ பரவலாக அன்று கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல. அன்றைய காலகட்டத்தில் உயர்குலத்தைச் சார்ந்த தமிழ் மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பும் ஆசிரியர் தொழில் செய்யக் கூடிய வாய்ப்பும் ஏனைய சாதி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சமயம் அது. அக்கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிலர், அதிலும் கல்வி வாய்ப்பும் பொருளாதார மேண்மையும் கிட்டிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே நூல்கள், கல்வித்துறை என்ற வகையில் வாய்ப்புக்களைப் பெற்றிருந்தனர். ஆக, இந்த எண்ணிக்கைக்குள் ஒரு சிலரே தக்க ஓலைச்சுவடிகளைத்தேடி எடுத்து அவற்றை அச்சுப்பதிப்புக்களாகக் கொண்டு வரும் முயற்சிகளிலும் ஈட்படத்தொடங்கி இருந்த கால கட்டம் அது.

ஒரு நூல் பாட போதனைக்குப் பயன்படுத்தப்படுகின்றதென்றால் அந்த  முழுமையான நூலைப் பாடமாக வைப்பது என்பது கிடையாது. உ.வே.சா, தியாகராச செட்டியார் போன்றோர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்றபோது ஒரு நூலினை முழுமையாக வாசித்து அறிந்து பாடம் செய்து படித்து வந்தவர்கள். ஆனால் இங்கு கல்லூரியிலோ,  ஒரு நூலின் ஒரு சில பகுதிகள் மட்டுமே மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்படும் வகையில் இருந்தது.

எல்லோருக்கும் சிலப்பதிகாரமென்பது ஒரு பழம் நூல் என்பது தெரிந்திருந்தால் கல்லூரிகளின் தமிழ்க்கல்வி பாடத்திட்டத்தில் அப்போது சிலப்பதிகாரமும் இணைக்கப்பட்டிருந்தது.  தியாகராச செட்டியார் கும்பகோணம் காலேஜில் பணியில் இருந்த போது அவர் சிலப்பதிகாரத்திலுள்ள 'இந்திர விழவூரெடுத்த காதை' பாடமாகப்போதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்ட போது அவர் ஏட்டுச் சுவடியை வைத்துக் கொண்டு அதனைப் புரிந்து கொள்ள முயற்சிகள் செய்திருக்கின்றார். புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் கொண்டு வந்து இருவரும் சேர்ந்து ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். மிகக் கடினமா ஒரு பணியாக அது இருந்திருக்கின்றது. அப்போது உ.வெ.சா பிள்ளையவர்களிடத்தில் மாணவராக இருந்த காலகட்டம். அப்போது தியாகராச செட்டியாருக்கு இந்தக்கடினமான நூலை வைத்து பாடம் சொல்லும் படி ஆயிற்றே என நினைத்து வருந்தியிருக்கின்றார். அதனை உ.வெ.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"அன்றியும் மிகப் பழங் காலத்து மரபுகளெல்லாம் சொல்லப் பட்டுள்ள அந்நூலிலிருக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேறு துணைக் கருவிகள் இல்லை. அதனால் அந்தப் பகுதி தெளிவாக விளங்கவில்லை. செட்டியாருக்குப் புஸ்தகத்தின் மேல் கோபம் மூண்டது. “என்ன புஸ்தகம் இது? இந்திர விழவூரெடுத்த காதையா? இந்திர இழவூரெடுத்த காதையா!” என்று கூறி, “இந்தச் சனியனை நான் பாடம் சொல்லப் போவதில்லை; எனக்கு உடம்பு வேறு அசௌக்கியமாக இருக்கிறது. நான் ஆறு மாசம் ‘லீவு’ வாங்கிக் கொள்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டார். அப்படியே ஆறு மாதம் விடுமுறை பெற்றுப் பிறகே காலேஜு க்கு வந்தார். அக்காலத்தில் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் தமிழாசிரியராக இருந்து பாடத்தை நடத்தினார்; கற்பித் தாரென்று சொல்லுவதற்கில்லை."

இப்படி கடினமான செய்யுள் நடைகொண்ட சிலப்பதிகாரத்தை உ.வே.சாவும் பாடம் நடத்த  வேண்டிய சூழல் எழுந்தது. அப்போது ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப்பதிப்பாக சிலப்பதிகாரத்தின் முதற்பகுதியை ஸ்ரீநிவாசராகவாசாரியார் ஏற்கனவே பதிப்பித்திருந்தார். அவருக்கு அடுத்ததாக  சென்னையிலிருந்த சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் ஒரு பதிப்பை பதிப்பித்திருந்தார்.  ஸ்ரீநிவாசராகவாசாரியார் பதிப்பில் சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தின் முதற்பகுதியின் மூலம் மட்டும் வைத்து பதிப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அச்சுப்பதிப்பிற்குச்  "சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்" என்ற பெயரும் சூட்டப்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது.

ஆக இந்த நிலையில் சிலப்பதிகாரத்தைப் பாடம்  நடத்த என்ன செயலாம் என யோசிக்கையில் திருவாவடுதுறை மடம் சென்று ஆதீனகர்த்தர் தேசிகரிடத்தில் பேசினால் தீர்வு கிடைக்கும் என எண்ணி அங்கு சென்றார் உ.வெ.சா.  தேசிகர், அச்சுப்பதிப்பை விட மடத்தில் இருக்கும் ஏட்டுப் பிரதியை எடுத்து அதனை இருவருமே ஆராய்வோம் எனக் கூறியதோடு அங்கிருந்த சின்னப்பண்டாரமும் சேர்ந்து இம்முயற்சியைத் தொடரலாம் என திட்டத்தை ஆரம்பித்தனர். 

"பிள்ளையவர்களுக்கே சந்தேகமான புஸ்தகத்தில் நமசிவாய தேசிகர் தேர்ச்சியடைய நியாயம் இல்லை. ஆனாலும் சிறந்த அறிவாளியாகிய அவருடன் சேர்ந்து ஆராய்ந்து வரையறை செய்து கொள்வதில் பல லாபம் உண்டு. அதனால் நான் சிலப்பதிகார ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு நமசிவாய தேசிகரிடம் சென்று படித்தேன். இருவரும் கவனித்து ஆராய்ந்தோம். ஒரு விதமாகப் படித்து முடித்தோம்; பொருள் வரையறையும் செய்து கொண்டோம்."
என்கின்றார் உ.வெ.சா.

முழுமையாக, விரிவுரைகளுடன் இன்று நமக்குக் கிடைக்ககூடிய இந்தக் காப்பியங்கள் அன்று மாணாக்கர்களுக்கு கிடைக்கவில்லை. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சுப்ரமணிய தேசிகர், தியாகராச செட்டியார், ஸ்ரீநிவாசராகவாசாரியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், உ.வெ.சா. இன்னும் இவர்களைப் போன்ற பலரது கடுமையான உழைப்பின் பலனாக இன்று நமக்கு இந்தக் காப்பியங்களின் மூலத்தை வாசிக்கவும் செய்யுட்களின் விளக்கங்களைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு அமைந்திருக்கின்றது.

ஆனால் அவற்றை வாசிக்கின்றோமா? அவற்றை தொடர்ச்சியாக ஆராய்கின்றோமா?  என்பது தான் நம்முன்னே நிற்கும் கேள்வி!!

தொடரும்

சுபா

No comments:

Post a Comment