Sunday, August 9, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 83

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய நூல்கள் பல. இதன் பட்டியலை  நான் முன்னர் தமிழ் மரபு அறக்கட்டளை தலபுராண வெளியீட்டு செய்தியில் வழங்கியிருக்கின்றேன். அந்த வகையில் மகாவித்வான் படைத்த தியாகராசலீலை எனும் நூலை பிள்ளையவர்கள் சொல்லச் சொல்ல அதனை சுவடியில் எழுதியவர்  தியாகராச செட்டியார். இந்த ஓலை நூல் திருவாவடுதுறை மடத்தில் இருக்கின்றது. இந்த நூல் பிள்ளையவர்களால் ஆரம்பிக்கப்பட்டாலும் பூர்த்தி செய்யப்படவில்லை. அதனை தாமே தொடர்ந்து எழுதி பூர்த்தி செய்துவிடுவதாகக் குறிப்பிட்டு தியாகராச செட்டியார் மடத்திலிருக்கும் அந்த நூலை தமக்கு வழங்கும் படி கேட்டுக் கொள்ள அதனை எடுத்து வர தேசிகர் உ.வே.சாவை நூலகத்துக்கு அனுப்பிவிடுகின்றார்.  இந்த இடைப்பட்ட வேளையில் தியாகராச செட்டியார் தான் வந்த நோக்கத்தைத் தேசிகருக்கு மீண்டும் வலியுறுத்தி, உ.வே.சா கும்பகோணம் காலேஜிற்கு பணிக்குச் செல்வது மடத்திற்கு பெறும் சிறப்பை வழங்கும் என்று ஒரு வகையில் நம்பிக்கை ஊட்டி வெற்றியும் கண்டு விடுகின்றார்.

தியாகராச செட்டியார் கூறிய அனைத்து தகவல்களையும் உள்வாங்கி தூர நோக்குச் சிந்தனையுடன் தகுந்த முடிவு எடுப்பதே அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என உணர்ந்த தேசிகர்,  உ.வே.சா கும்பகோணம் காலேஜில் பணிக்குச் செல்ல சம்மதம் அளித்தார். தியாகராசச் செட்டியார் அவர்கள் மடத்தின் மேல் கொண்டிருக்கும் பற்றும் பாசமும் தேசிகர் அறியாததல்ல. மடத்தின் வளர்ச்சி அதன் நெடுநாளுக்கான புகழ் ஆகியன சிறக்க இவ்வகையான சிறந்த கல்விமான்களின் ஆலோசனைகளைக் கேட்டு இயங்குவதும் திருமடத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் தேசிகருக்கு நம்பிக்கை இருந்தது.

தியாகராச செட்டியாரின் ஆர்வம் மிகுந்த வேண்டுதலிக் கேட்டுக் கொண்டு, சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு "சரி என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார் தேசிகர். இந்த இனிய சந்தர்ப்பத்திற்க்காத்தானே தியாகராசச் செட்டியார் காத்திருந்தார். 

திருமடத்திலிருந்து கும்பகோணம் காலேஜ் முதல்வர் கோபால ராவ் அவர்களுக்கு உ.வே.சாவை பணியில் அமர்த்த  ஒரு கடிதமும்,   உ.வே.சா விற்கான ஒரு சிபாரிசு கடிதமும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முக்கிய காரியங்களை உடனுக்குடன் செய்வது தானே சரியான முறை. தேசிகரும் தயங்காது மடத்தின் ராயசக்கரராகிய (இது எவ்வகை பொறுப்பு எனத் தெரியவில்லை)  பொன்னுசாமி செட்டியாரை அழைத்து தாம் சொல்ல சொல்ல இக்கடிதங்களை எழுதச்செய்தார்.

இக்கடிதம் வருமாறு. 

"இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருஷகாலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு வருஷகாலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் தெளிவாய்ப் போதிக்கிற விஷயத்தில் சமர்த்தர். நல்ல நடையுள்ளவர்.

பிரமாதி வருஷம் கும்பரவி 
3Œ திருவாவடுதுறை யாதீனம்
சுப்ரமணிய பண்டாரச் சன்னதி. "

இந்தக் கடிதம் எழுதி தேசிகர் சம்மதம் தெரிவித்த போது அனைவருக்குமே மனதில் மகிழ்ச்சி நிலவியது. சரியான முடிவைத்தான் எடுத்திருக்கின்றோம் என்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்பட்டது.     உ.வே.சா அவர்களே தனது சொற்களாலேயே இப்பகுதியை விளக்குவது சுவை கூட்டும் என்று கருதுகின்றேன்.

"இரண்டையும் எழுதுவித்த பிறகு கோபாலராவுக்குரிய கடிதத்தில் கையெழுத்திட்டு யோக்கியதா பத்திரிகையில் கையெழுத்துப் போடும் சமயத்தில் சபாபதி பூஜையின் மணி கண கணவென்று அடித்தது. அப்பொழுது செட்டியார், ‘இவருக்கு வேலையாகிவிட்டது” என்று சந்தோஷத்துடன் எழுந்து கை கொட்டிக் கூத்தாடினார். என்னை அனுப்பும் விஷயத்தில் மன அமைதி பெறாமல் இருந்த தேசிகருக்கும் பூர்ண சம்மதம் உண்டாகிவிட்டது. “நாம் இவரை அனுப்புவதற்குச் சம்மதம் இல்லாமலிருந்தாலும், தெய்வம் கட்டளையிடுகிறது. தெய்வ சங்கற்பத்தைத் தடுக்க இயலுமா? சரி, நல்ல வேளை பார்த்து இவரை அனுப்புகிறோம். கவலைப்பட வேண்டாம்” என்று அவர்
சொன்னார். செட்டியார் மிக்க குதூகலத்தை அடைந்தார்."

இந்த இரண்டு நாள் நிகழ்வின் முக்கிய பாதிப்புக்கள் என்பன உ.வே.சா அவர்களைச் சார்ந்ததே  என்ற போதிலும் இதில் அவர் எந்த முடிவையும் எடுத்ததாகக் காணமுடியவில்லை. எல்லாம் ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல நடக்க வேண்டிய விசயங்கள், நடக்க வேண்டிய தருணங்களில், நடத்தப்பட வேண்டிய நபர்களால், செய்விக்கப்படும் என்ற விதிப்படி இந்த நிகழ்வு நடந்தேறியது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகின்றது. நமது வாழ்க்கையில் நடக்கின்ற சில திருப்பு முனைகளும் கூட இப்படித்தானே ஏனைய பலரால் செய்விக்கப்படுகின்றன. பல வேளைகளில், நமது வாழ்க்கை என்ற நாடக மேடையில் நிகழும் நிகழ்வுகளைக் காண்கின்ற பார்வையாளர்களாக மட்டுமே நமது நிலை இருப்பதை மறுக்க முடியாது, அல்லவா?

தொடரும்..

1 comment:

  1. மடத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் கையால் எதுவும் எழுதமாட்டார்கள். வைணவத்தில் இந்தப் பொறுப்பு ஸ்ரீகார்யம் என்பவரிடத்திலும், சைவ மடங்களில் 'மேனேஜர்' பொறுப்பிலும் இருக்கும். ராயசக்கர் என்பதும் அப்படிப்பட்ட பதவியாக இருக்கும். அவர்கள் எழுதி, மடத்தின் Seal வைப்பார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete