Monday, May 28, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 3


பகுதி 3

மாதாமகர் என்ற ஒரு சொல் ப்ரயோகத்தை இந்த நூலில் தான் தெரிந்துகொண்டேன். தாயாரின் அப்பா, அதாவது தாத்தாவை இச்சொல் குறிக்கின்றது. தனது மாதாமகரைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் உ.வே.சா என் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

உ.வே.சா அவர்களது மாதாமகரின் பெயர் கிருஷ்ணசாஸ்திரிகள் என்பது. வாழ்நாள் முழுதும் சிவ பூஜையும், ஜபமும், கர்மானுஷ்டானங்களுமே புரிந்து வருவது சாதாரண காரியமல்லவே! ஆனால் தனது தாத்தா சிவ பூஜையே கதியென்று இருந்தார் என்று சொல்லி வியக்கின்றார் உ.வே.சா.

"வண்டின் ரீங்காரத்தைப் போல உள்ள அந்தச் சிவ நாமத்திலே நான் இளமையில் ஈடுபட்டேன். என்னை அறியாமல் நானும் சிவநாம ஜபம் என் ஆறாம் பிராய முதலே செய்யத் தொடங்கினேன். இன்றளவும் ' நின்றும் இருந்தும் கிடந்தும்' அந்த ஜபத்தை செய்து கொண்டு வருகின்றேன்" என்று தனது 85ஆவது வயதில் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

"இளமையில் கிருஷ்ண சாஸ்திரிகளுடைய திருவாக்கிலிருந்து எழுந்த அந்த நாமத்தின் இனிமை என் கருத்தில் மிகவும் நன்றாகப் பதிந்து விட்டது. பிறகு நான் முறையாகப் பல மந்திர ஜபங்களை உபதேசம் செய்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் முன் எனக்கு முதல் உபதேசமாக என் நெஞ்சில் தானே ஊன்றியது சிவநாமந்தான். அதை ஊன்ற வைத்த முதற் குரு என் மாதாமகராகிய கிருஷ்ண சாஸ்திரிகளேயாவார்" என்கின்றார்.

கிருஷ்ண சாஸ்திரிகள் புதுக்கோட்டைக்கு அருகே ஆரணப்பட்டி என்னும் ஊரில் இருந்தவர். கைம்பெண்ணாக குழந்தைகளுடன் பிறந்த வீடு திரும்பிய தனது தமக்கையாரிடம் வீடு நிலம் ஆகியவற்றை ஒப்படைத்து விட்டு தன் மனைவியாருடன் சோழ நாட்டின் காவிரிக்கரை பக்கத்திலுள்ள ஊர்களில் சிவபக்தி செய்து வர எண்ணி புறப்பட்டு விட்டார்.

இறைவழிபாடு செய்து கொண்டு உடையார்பாளையம் வந்து சேர்ந்தார். உடையார்பாளையத்தில் அப்போது சமஸ்தானதிபதியாக இருந்த கச்சிக் கல்யாண ரங்கப்ப உடையார்ரிடம் தானாதிகாரியாக இருந்த ஸ்ரீசுப்பராய சாஸ்திரிகள் கிருஷ்ண சாஸ்திரிகளை வரவேற்று தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தார். சமஸ்தானத்தைச் சேர்ந்த இடத்தில் கிருஷ்ண சாஸ்திரிகளை நலமாக வைத்திருக்க ஏதாகிலும் உதவலாம் என்றெண்ணி அருகிலிருந்த கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் அவரை அத்தியாபகராக நியமித்தார். கிருஷ்ண சாஸ்திரிகளுக்கும் இது மகிழ்ச்சியும் மன நிறைவும் அளிப்பதாகவே நிச்சயம் இருந்திருக்கும்.

இந்த கங்கை கொண்ட சோழபுரத்து சிவாலயம் முதலாம் இராஜேந்திரன் கட்டிய கற்றளி கோயில். இக்கோயிலின் பெயர் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்பதாகும். சிற்பக்கலையின் அற்புதங்கள் நிறைந்தது இக்கோயில். மிகப்பெரிய வடிவத்தில் இறைவன் லிங்க வடிவத்தில் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளார். இந்த ஆலயத்திலேயே சிங்கக் கிணறு என்று குறிப்பிடப்படும் ஒரு தீர்ர்த்தமும் உண்டு. கங்கை வரை போர் செய்து சென்று அங்கே வென்று வந்த முதலாம் இராஜேந்திரன், தன்னிடம் தோல்வி கண்ட அந்த வட நாட்டு மன்னர்களின் தலையில் கங்கை நீரை ஏற்றிக் கொண்டு வந்ததாகக் கூறுவர். இந்த சிங்கக் கிணற்றில் அந்த கங்கை நீரை விடும்படி இராஜேந்திரன் பணித்ததால் இந்தச் சிங்கக் கிணறுக்கு கங்கை என்றும் ஒரு பெயர் உண்டு.

இந்த கங்கை கொண்ட சோழீச்சுரத்தில் சேவகம் செய்து கொண்டிருந்த போது அவருக்கும் அவர் மனைவிக்கும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு முறையே லக்‌ஷ்மி, பாகீரதி. சரஸ்வதி எனப் பெயரிட்டனர். இதில் சரஸ்வதி என்பவரே உ.வே.சா அவர்களது தாயார்.

சில காலங்களுக்குப் பின்னர் அவர் தனது சுற்றத்தாருடன் மீண்டும் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால் கங்கை கொண்ட சோழபுரத்தை விட்டு புறப்பட்டு மீண்டும் சூரிய மூலைக்குத் தன் குடும்பத்துடன் திரும்பினார். சூரியமூலையில் (சூரியமலையென்று தற்சமயம் வழங்குவதாக உ.வே.சா குறிப்பிடுகின்றார்) சிவ வழி பாடு செய்து கொண்டு நிலங்களை குத்தகைக்கு விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு ஜீவித்துக் கொண்டு சிவ பூஜையே கதியென்று மீண்டும் தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். சூரியமூலைக்கு வந்த பின்னரும் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சுப்பலக்‌ஷ்மி, சிவராமையர், மீனாஷி ஆகியோர்.

இந்த காலகட்டத்தில் வேங்கடசுப்பையர், அதாவது உ.வே.சா அவர்களின் தகப்பனாருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடும் பெண் தேடலும் நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ண சாஸ்திரிகளைப் பற்றி கேளிவிப்பட்டிருந்தபடியால் அவரது மூன்றாவது மகளான சரஸ்வதியை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். உடையார் பாளையம் ஜமீந்தார் பொருளதவி செய்ய, பெற்றோர் இந்தத் திருமணத்தை இனிதே நடத்தி வைத்தனர்.

குறிப்பு:இப்பதிவு தொடர்பான குறிப்புக்கள் 7 அத்தியாயத்தில் உள்ளன.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment