Saturday, September 24, 2011

லம்பாடி ஆதிக் குடிகள்:திருவண்ணாமலை - 3

லம்பாடி இன மக்கள் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய படையெடுப்பின் போது இவர்களின் இந்து மன்னன் போரில் தோற்றவுடன் இம்மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். பின்னர் இப்போதைய ஆந்திரா, கர்னாடகா, தமிழ்நாடு போன்ற மானிலங்களில் நாடோடிகளாக வந்து குடியேறினர். ஆரம்ப காலத்தில் உப்பு வியாபரத்தில் ஈடுபட்டு உழைத்தனர். கழுதைகள் மேல் உப்பை ஏற்றி ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்று அவற்றை விறபனை செய்து வருவதை தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்படியாக இவர்கள் தொழில், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட சிலர் சொந்தமாக நிலம் வாங்கி ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியேறி அங்கே தொழில் செய்தோ விவசாயம் செய்தோ வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சமூகத்தினருடன் சேர்ந்து குழுவாக ஓரிடத்தில் இருப்பதையே காண முடிந்தது.


காலவோட்டத்தில் மாறுதல் ஏற்படுவது என்பது எல்லா சமூகத்திலும் நடக்கின்ற ஒன்றுதான். ஆனால் அவை படிப்படியாக வழக்கில் இல்லாது போவது மட்டுமின்றி அச்சமூக மக்களே அறியாத நிலை ஏற்படுவதையும் காண்கின்றோம். லம்பாடி இனமக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது.

முன்னர் திருமணம் என்று வரும் போது மானின் கொம்பை வெட்டி எடுத்து அதை பதம் செய்து அதனை யானைத் தந்தம் போன்ற வடிவில் ஒரு வளையல் செய்து அதனை பெண்ணுக்கு அணிவித்துத் தான் திருமண நிகழ்வு நடக்குமாம். இது இப்போது வழக்கில் இல்லை. அதேபோல பெண்கள் திருமணத்திற்கு அணியும் முழு ஆடையையும் அப்பெண்ணே முழுதாகத் தயாரிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒரு ஆடையை முழுமையாக்க ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் எடுக்குமாம். திருமணத்தில் தாலியை அணிந்து திருமணச் சடங்கு முடிந்த பின்னர் மணப்பெண்ணை காளைமாட்டின் மேல் அமர வைத்து ஊர்வலமாக வீட்டிற்கு கொண்டு வருவார்களாம்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் இவர்களுடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது குழந்தைகள் பிறக்கும் போது எந்த நாளில் ஒரு குழந்தை பிறக்கின்றதோ அந்த நாளை பிரதிநிதிக்கும் பெயரைத்தான் குழந்தைகளுக்குச் சூட்டுவார்களாம். திங்கள் கிழமை பிறந்த குழந்தைக்கு சோமார் என்றும், செவ்வாய் என்பது மங்களவார் என அழைக்கப்படுவதால் இந்த நாளில் பிறக்கும் பெண் குழந்தைக்கு மங்கினி என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் மணி என்றும் அந்தக் கிழமையின் ஆரம்பச் சொல்லை எதிரொலிக்கும் வகையில் பெயர்கள் அமையுமாம். புதன்கிழமை பிறந்த ஆண் குழந்தை பத்தியா என்றும் பெண்குழந்தை பத்தி என்றும் பெயரிடுவதும், வழக்கமாக இருக்கின்றது. முக்கியமாக அந்தக் கிழமையின் முதல் எழுத்து குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் இவர்கள் கடைபிடித்து வந்த வழக்கங்களில் ஒன்று.

ஆண் குழந்தைகள் இச்சமூகத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றனர். ஒரு தாயாருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தால் அப்பெண்மணி தன் கழுத்தில் ஒரு சங்கிலியில் இரண்டு பொட்டு இருக்கும் வகையில் ஒரு அட்டிகை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. 5 ஆண் குழந்தைகள் என்றால் ஐந்து பொட்டு, 6 ஆண் குழந்தைகள் என்றால் ஆறு பொட்டு என தனக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ள இவ்வகை அட்டிகையை கழுத்தில் அணியும் வழக்கமும் இவர்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் இளம் பெண்கள் இதனை அணிவதை தவிர்த்து விட்டனர் என்பதை நேரிலேயே காண முடிந்தது.

இச்சமூகத்தினர் தமிழ் நாட்டில் ஏறக்குறைய 40,000 மக்கள் இருக்கின்றனர். அரசாங்க சலுகைகள் இவர்களுக்கு மற்ற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முகக் குறைவாக கிடைக்கின்ற காரணத்தால் அதிலும் கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் சலுகைகள் குறைவாக அமைவதால் இச்சமூகத்தின் இளைஞர் சமுதாயம் கல்வியில் நாட்டம் செலுத்துவதை விட கூலி வேலை சாக்கடை கழுவும் வேலை என தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணம் ஈட்டுவதற்காகக் கல்வியைப் புறக்கணித்து விட்டுச் சென்று விடுவதாக எங்களுடன் பேசிய மக்கள் தங்கள் மனக்குறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனை முழுமையாக ஒலிப்பதிவில் கேட்கலாம். இப்பகுதியும் இதற்குத் தொடர்பான படங்களும், 7 நிமிட மிகச் சுவாரசியமான ஒலிப்பதிவும் இன்று திருவண்ணாமலைப் பதிவுகள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கவும் கேட்கவும் இங்கே செல்க!


அன்புடன்
சுபா

1 comment:

  1. தொன்மை மரபுகளை பதிவு செய்தமைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete