Sunday, September 18, 2011

லம்பாடி ஆதிக் குடிகள்:திருவண்ணாமலை - 2

இவர்களின் திருமண முறை மிக எளிமையானது. வித்தியாசமானதும் கூட. இவர்கள் தமிழ் நாட்டுப் பெண்கள் கழுத்தில் அணிவது போன்று தாலி அணிவதில்லை. மாறாக கைகளின் மேல் புறத்தில் தகட்டால் ஆன ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கின்றனர். கணவனை இழந்த பெண்கள் இதனை அகற்றி விடுகின்றனர்.


லம்பாடி இனப் பெண்கள் அணிந்திருக்கும் பாரம்பரிய ஆடை சிவப்பு வர்ணத்தில் அமைந்தது. மங்கள நிறமாக சிவப்பு நிறம் அமைந்திருப்பதால் இந்த வர்ணத்தில் இவர்களது சிறப்பான பாரம்பரிய ஆடை அமைவதை இப்பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆடை பாவாடை, ஜாக்கெட் அத்துடன் முக்காடாகப் பயன்படுத்தும் ஒரு தாவணி அத்துடன் வயிற்றுப் பகுதியை மறைக்கும் வகையில் அமைந்த ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு துணி என்று அமைந்துள்ளது.

இந்த ஆடையின் பெயர்களை விளக்குமாறு இந்த மூதாட்டிகளைக் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் உடைகளைப் பற்றி நமக்கு விளக்கமளித்தனர்.

குறிப்பாகச் சில பெயர்கள்:
குங்குட்டோ - முக்காடாக தலையில் சுற்றியிருக்கும் தாவணி. இந்தத் தாவணியில் சேர்க்கப்பட்டுள்ள மணிகளையும் ஜரிகைகளையும் இவர்கள் தாங்களே கைகளால் தைத்து தயாரிக்கின்றனர்.
சாட்டியா - இடுப்புப் பகுதியில் அணிந்துள்ள அலங்கரிக்கப்பட்ட துணியின் பெயர்.
காத்தொளி பேட்டியா - ஜாக்கெட்
லேப்போ - பாவாடை
பூரியா - மூக்குத்தி

நாங்கள் பேட்டி காணச் சென்ற கிராமத்தின் பெயர் பரிசல் பட்டு பி.எல்.தண்டா. இங்கு ஏறக்குறைய 450 குடும்பத்தினர் வாழ்கின்றனர். அனைவருமே லம்பாடி இன மக்கள் தான். இவர்கள் இங்கேயே குடியேறி திருமணம் செய்து குழந்தைகள் ஈன்று வாழ்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று சிலர் அரசாங்க வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் பொதுவாக வீட்டில் இவர்கள் தாய்மொழியில்தான் உரையாடுகின்றனர். ஆனாலும் குடும்பத்தை விட்டு வெளியே வரும் போது தமிழ்மொழி முக்கியமாகிப் போவதால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தாய் மொழியை இளம் குழந்தைகள் மறக்கும் நிலையும் உருவாகி உள்ளது. இங்கேயே பிறந்து வளர்ந்து இங்குள்ள பள்ளியிலேயே கல்வி கற்று நன்கு தேறி திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் பணியாற்றும் திருமதி. லதாமம்மா எங்களைக் காண வந்திருந்தார். லதாமம்மா இச்சமூக மக்களின் திருமணச் சடங்கை பற்றி விரிவாகக் கூறுவதையும் அதன் பின்னர் திரு.குபேரன் மீண்டும் திருமணச் சடங்கைப் பற்றி விவரிப்பதையும் ஒலிப்பதிவில் கேட்கலாம்.இங்கே!


திருமணம் தான் இவர்கள் வாழ்கையில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. திருமணச் சடங்கைப் பற்றி விசாரித்த போது மிக ஆர்வத்துடன் தங்கள் வழக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

பொதுவாகவே இவர்கள் திருமணம் 4 நாட்கள் நடக்கின்றது. மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாள், அதன் பின்னர் பெண் வீட்டில் இரண்டு நாள். மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாட்கள் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அதற்குப் பிறகு வீட்டிற்குள் அவர் திருமணம் நடைபெறாமல் வரக்கூட்டாது.

பெண் பார்க்கும் சடங்கு என்பது தமிழர் சமூகத்தில் உள்ளது போன்று நிச்சயதார்த்தம் இல்லாமல் வேறு விதமாக நிர்ணயிக்கப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டார் 5 கிலோ வெல்லம் கொண்டு செல்வர். அத்தோடு சாராயமும் வெற்றிலை பாக்கும் கொண்டு செல்வர். சாராயம், வெல்லம், வெற்றிலை பாக்கை பெண் வீட்டாரிடம் கொடுத்து விட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று முடிவாகின்றது. திருமணத்தில் மாப்பிளை பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கும் வழக்கமும் இவர்களுக்கு இல்லை. இந்த மூன்று பொருட்களையும் கொடுத்து 1 ரூபாய் (பரியா பணம்) கொடுத்து விட்டால் கல்யாணம் உறுதி செய்யப்பட்டு விட்டது என முடிவாகின்றது. பின்னர் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் ஒத்து வராமல் போய் பிரிய வேண்டும் என அவர்கள் நினைத்தால் அந்த ஒரு ரூபாய் பணத்தைத் திருப்பித் தந்து விடுவார்களாம். இப்படித் தந்தால் விவாகரத்து நடந்ததற்குச் சமம். அதற்காக திருமணத்திற்காகக் கொடுத்த அதே ஒரு ரூபாயை கணவன் மனைவி இருவரும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதாவது ஒரு 1 ரூபாயைக் கொடுத்தே மண வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதனைக் கணவன் மாத்திரம் தான் செய்வது வழக்கம். மனைவி செய்யும் வழக்கமில்லை. பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களின் முன் கணவன் மனைவி வந்து 1 ரூபாயைக் கணவன் கொடுத்து மனவிலக்கு வேண்டும் என்று கேட்டால் மனைவியிடமிருந்து விலகிச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.

இவர்களின் திருமணச் சடங்கு மிக வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. திருமண தினத்தின் முதல் நாள் இரவில் பெண் வீட்டில் உள்ள அனைவரும் அழ வேண்டுமாம். தங்கை எப்படி அழவேண்டும் அண்ணன் எப்படி அழ வேண்டும் என முறை வைத்திருக்கின்றனர். எப்படி ஒவ்வொருவரும் அழ வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் அனுபவசாலி பெரியவர்கள் கற்றுத் தருவார்களாம். அதனைக் கற்றுக் கொண்டு குடும்பத்தினர் ஒவ்வொருவராக அழ வேண்டும்.

திருமணத்திற்கு முதல் நாள் வீட்டின் மூலையில் ஒரு உலக்கையை வைத்து அதில் கங்கணம் கட்டு விடுவார்கள். பக்கத்தில் ஒரு பானையை வைத்து அதில் நீரை ஊற்றி நிறைத்து வைத்து விடுவார்கள். திருமண ஏற்பாட்டுச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை இந்தத் தண்ணீரில் குளிக்க வேண்டும். இது கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒரு சடங்கு. பிறகு மறு நாள் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் தனித் தனியாக தயார் செய்து அலங்கரித்துக் கொண்டு வந்து திருமணச் சடங்கில் தாலி போட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் பெண் வீட்டில் தான் நடக்குமாம். தமிழ் சமூகத் திருமணங்கள் போல கோயில்களில் இவர்கள் திருமணங்கள் நடப்பதில்லை. இக்கால லம்பாடி இனத் திருமணங்கள் தமிழர்கள் வழக்கம் போல கழுத்தில் தாலி கட்டி நடைபெறுகின்றது. கையில் அணியும் தாலி இப்போது வழக்கில் இல்லை. கணவன் உள்ள வயதான மூத்தாட்டிகள் மட்டுமே இந்த வகைத் தாலியை அணிந்திருக்கின்றனர்.

திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு மதிய வேளையில் ஆடு வெட்டி விருந்து தயாரித்து மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் திருப்திகராம விருந்தளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் விட்டாரை அழைத்துச் சென்று இதேபோல விருந்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதே போல 3 முறை மாற்றி மாற்றி இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுமாம்.

கணவர் இறந்த பெண்கள் தங்கள் கையில் அணிந்துள்ள தாலியை எடுத்து விட வேண்டும். இந்தத் தாலி திருமணம் நடந்த நாள் முதல் கணவர் இறக்கும் வரையிலும் கையில் அணிந்திருக்க வேண்டும்.

கடவுள்
இவர்களின் கடவுள் மூடுபுக்கியா என அழைக்கப்படுகின்றது. ஆண் பெண் என உருவமில்லாத ஒரு கல் வடிவில் அமைந்த ஒரு வடிவமே இவர்கள் கடவுள்.


தொடரும்..

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment