நீண்ட தூர பயணங்கள் அலுப்பைத் தரக்கூடியவை. எப்போதும் தூரம் பயணம் செல்லும் போது கையில் புத்தகத்தை எடுத்துச் செல்வது எனக்கு வழக்கமாகி விட்டது. இந்த முறை தென் கொரியா பயணத்தின் போதும் சில புத்தகங்கள் கைவசமிருந்தன. நாவல்கள் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் வாஸந்தியின் புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தேன். பொய்யில் பூத்த நிஜம் எனபது இந்த புத்தகத்தின் பெயர். கங்கை புத்தக நிலையத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கின்றது இந்த நாவல்.
ஈராண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை வாஸந்தியை நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது அவர் இந்தியா டுடே பத்திரிக்கையின் தமிழ்ப்பகுதியின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த நேரம். சென்னையிலிருக்கும் அவரது அலுவலகத்தில் அவரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்ததும், அருமையான ஒரு உணவகத்தில் அவரோடு சேர்ந்து மதிய உணவுக்குச் சென்றதும் மறக்க முடியாதவை. அப்போது அவரது கைவசமிருந்த 'யுக சந்தி' என்ற நாவலை கையெழுத்துப் போட்டு கொடுத்தார். ஜெர்மனி திரும்பி வரும் வழியில் அதனை படித்து முடித்து மகிழ்ந்தேன். இப்போது இந்த நாவல்!
நிச்சயமாக வித்தியாசமான ஒரு கதைதான். வாஸந்தியின் தமிழ் நடையைப் பற்றி விபரிப்பதற்கு நான் ஒரு எழுத்தாளரே அல்ல. அதனால் கதையின் கருவை மட்டுமே கொஞ்சம் தொட்டு எழுதலாம் என்று நினைக்கின்றேன். இப்போது மாறிக் கொண்டு வரும் வாழ்க்கை முறைகளைப் பற்றி கதை செல்கின்றது. அன்பினைப் பகிர்ந்து கொள்ள திருமணம் தேவையா என்பதே கதையின் கரு. ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 5 ஆண்டுகளில் இவரது கதையையும் இந்தக் கருத்தையும் புரிந்து கொள்வதில் எனக்கு எந்த வித சிரமமும் இல்லை. ஜெர்மனியின் ழ்க்கை முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் நண்பர்களாகவே இருவர் சேர்ந்து வாழ்வது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட ஒரு நிலை. இதனை தமிழக மற்றும் மலேசிய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்பது சிரமமான ஒன்று என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதே நேரத்தில் திருமண பந்தத்தில் இருக்கின்றோம் என்பதற்காக உலகத்திற்காக போலி வாழ்க்கை வாழ்ந்து வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் தம்பதிகளின் நிலையைப் பற்றியும் மிக அழகாக வெளிக்காட்டியிருக்கின்றார் வாஸந்தி. திருமணத்தின் பயனாக எஞ்சி நிற்பது விரக்தியும் வெறுப்பும் மட்டும்தான் என்ற நிலையை விட திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பது ஆறுதல் என்பதையும் இந்த நாவலைப் படிக்கும் போதே சிந்திக்க முடிகின்றது.
தனி மனித உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டங்களை புதைத்து விட்டு வெளியே நடத்தும் போலி வாழ்க்கையை சமுதாயம் ஏற்றுக் கொள்கின்றது; ஆனால் வெளிப்படையாக வாழ்க்கையைப் புரிந்து கொண்ட பின்னர் குடும்பம் எனும் கட்டமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு உருவாக்கிக்கொள்ளும் உறவுகளை சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இங்கு சமுதாயம் என்பது யார் என்பதும் கேள்வியாகின்றது. சிந்தனைக்கு வேலை கொடுக்கும் ஒரு கருவைத்தான் வாஸந்தி கதையாக்கியிருக்கின்றார்.
இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களில் முக்கியமானோர் சகுந்தலா, ராஜமோகன், சரவணன், காமாட்சி, விவேக், சுதிர், mrs.Malhothra, அதோடு குந்தலாவின் பாட்டி. சகுந்தலா வேலை செய்வதால் வாழ்கையில் தான் சந்திக்கும் பெரும் இடியை தாங்கிக் கொண்டு வாழ்க்கையை சமாளிக்க முடிகின்றது. சமுதாயத்தில் பெண்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கிடைக்க வேண்டுமானால் கல்வி, கல்வியைச் சார்ந்த உத்தியோகம், சுயமாக சம்பாதித்து சுயகாலில் வாழ்க்கை நடத்துவது போன்ற அம்சங்கள் அடிப்படைத் தேவை என்பதையும் இந்த நாவல் மறை முகமாக உணர்த்துகின்றது என்பதை படிக்கின்ற வாசகர்கள் உணரமுடியும்.
Mrs.மல்ஹோத்ராவின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கின்றது. கதைக்கு அவ்வளவு முக்கியமில்லாத கதாபாத்திரம் என்றாலும் கூட, இந்த பாத்திரத்தின் தன்மை உயர்ந்த மனம் படைத்த மக்களின் அன்பை வர்ணிப்பது சிறப்பாக அமைந்திருக்கின்றது. மேலும் சில குட்டி குட்டி கதாபத்திரங்கள் இடையிடையே வந்து செல்கின்றன. இந்தக் கதையின் திருப்பங்களையெல்லாம் பார்க்கும் போது, அதிலும் குறிப்பாக முடிவுப் பகுதியைப் படிக்கும் போது, இதனை ஒரு சினிமா படமாக எடுத்தால் (சரியான இயக்கத்துடன்;;:-) ) நன்றாகவே ஓடும் என்று தெரிகின்றது.
ஆக மொத்தத்தில் வெறும் நாவலாக மட்டுமில்லாமல், படித்த பிறகும் அந்த கதாபாத்திரங்களை மனதில் அசை போடவைப்பதில் வாஸந்தி வெற்றி பெற்றிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.
No comments:
Post a Comment