
ஜே.கே - யின் குறிப்புக்களைப் படிக்கும் போது எனக்குள் எழுந்த தாக்கங்களை இங்கு தருகின்றேன்.
இந்த உலகம் பல அற்புதங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கே இயற்கை எனும் அழகு இருக்கின்றது. துள்ளித் திரியும் விலங்குகள், சிறகை விரித்துப் பறக்கும் புல்லினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் நம் கண்களுக்கு அதிசயமாய் தென்படும்
உயிரினங்கள் இப்படிப் பல; அதுமட்டுமல்ல. பிறவிகளிலேயே அற்புதப் பிறவியாக மனித இனம்; மனிதன் நாளுக்கு நாள் அடையும் வளர்ச்சி; இப்படி எங்கெங்கு பார்த்தாலும் அற்புதங்கள் தான் இந்த உலகில் நிறைந்திருக்கின்றன.
மனம்; அந்த மனத்தில் எழும் எண்ணங்கள்; சிந்தனைகள் செயல் வடிவம் பெற மனிதன் எடுக்கும் முயற்சிகள்; இவைகள் கூட அற்புதமானவைதான். இந்த அற்புதங்களை என்னுடைய ஆழ் மனத்தின் கற்பிதங்கள் பாதிக்காமல் நான் பார்க்க முயற்சிக்கின்றேனா???
இன்று மனம் சோகமாக இருக்கின்றது; காய்ந்து தரையில் பரந்து கிடக்கும் இலைகளைப் பார்க்கும் போது இயற்கையே என்னுடைய சோகத்தைப் பகிர்ந்து கொண்டு விட்டதோ என நினைக்கும் வகையில் உலகமே சூன்யமாகப் படுகின்றது. அடுத்த நிமிடமே சந்தோஷமான ஒரு தகவல் கிடைக்க, உடனே மனம் ஆனந்தத்தில் அலைமோதுகின்றது. தரையில் கிடக்கும் காய்ந்த சிவப்பு நிற இலைகள் என்னை வரவேற்பதற்காகப் போடப்பட்ட சிவப்புக் கம்பளமாக
மனதில் தோன்றுகின்றது. உலகமே இப்போது எனக்கு அழகாகத் தோன்றுகின்றது.
உலகம் நம் மனத்தைப் பொறுத்தே அமைகின்றது!
ஒன்றைப் பார்க்கும் பொழுது, அதனைப் புரிந்து கொள்ள முயலும் பொழுது அதனை அதன் தன்மை கெடாமல் நமது சுய எண்ணங்கள் பிரதிபலிக்காமல் அதனைப் பார்க்க முயலும் போதுதான் உண்மையான அதன் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய சிந்தனைகளின் மொத்த வடிவம் பற்பல சிறிய சிந்தனைகளின் கோர்வை. ஒவ்வொரு கணமும் மனதில் எண்ணற்ற சிந்தனைக் குவியல்கள் எழுகின்றன. மனம் அந்த எண்ணங்களை process செய்து அதற்கு ஒரு summary உருவாக்கி மனதில் சேர்த்து வைத்துக்கொள்கின்றது. இந்த தகவல் வங்கியைப் பயன்படுத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் பற்பல தகவல்கள் மனதில் உருவாகிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.
ஒரு பொருளை உள்ளதை உள்ளவாறு பார்க்கத் தெரிந்தவராக நான் இருக்கின்றேனா என்பதை மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு புதிய விஷயத்தை எந்த யோசனையும் இல்லாமல் எனக்குப் பிடித்த வகையில் வியாக்கியானம் செய்து விட்டுப் போகும் போது எனது சிந்தனை அங்கு கொஞ்சமும் வேலை செய்யாமல் போய்விடுகின்றது. அவசர உலகத்தில் வாழும் நமக்கு இது மிகப் பெரிய ஒரு சோதனைதான். அவசர அவசரமாக ஒன்றினைப் பார்க்கின்றோம். பார்க்கின்ற, கேட்கின்ற ஒன்றினை முழு கவனத்தோடு உணர்வதில்லை; ஆழமாக யோசிக்காமல் உடனே ஒரு அவசர முடிவுக்கு வந்து விடுகின்றோம். நமது மனதில் உருவாகியிருக்கும் எண்ணம் தான் சரியான ஒன்று என்பதை நிலை நாட்ட ஆயிரம் சாக்குப் போக்குகளை உருவாக்குகின்றோம். உண்மையான புரிந்துணர்விற்கு இது கொஞ்சமும் உதவ முடியாது. நாம் அனுபவிக்கும், பார்க்கும், பழகும் அத்தனை விஷயங்களையும் 'விழிப்புணர்வோடு' 'திறந்த மனத்தோடு' பார்ப்பதே அறிவுடமை. ஒரு மாயத் திரையை மனதில் வைத்துக் கொண்டும் பற்பல சாக்குப் போக்குகளைக் கற்பித்துக் கொண்டும், காரண காரியங்களை உருவாக்கிக் கொண்டும் பொய்யான ஒரு விஷயத்தையோ, சரியற்ற ஒன்றினையோ, முறையற்ற ஒரு செயலையோ நியாயப்படுத்துவதில் சிறிதளவும் பலனில்லையே.
நான், வானம் மஞ்சள் நிறம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வானம் மஞ்சள் நிறமாகப் போய்விடப்போவதில்லை. உண்மையைப் பார்க்க மனம் அஞ்சும் நிலையை நான் பெற்றிருந்தால் அந்த உணமையை உணர மனதிற்கு தைரியத்தை நான் வளர்த்துக் கொள்வது தானே சரியான செயல்!
No comments:
Post a Comment