Sunday, November 17, 2002

ச்வேதாச்வதர உபநிஷத்து (பாகம் 3) - மனித, இயந்திர - மந்திராயனம் (வாழ்வா தண்டனையா?)


From: "ksuba100"
Date: Sun Nov 17, 2002 11:13 am
Subject: Upanishad: Svethasvathara Upanishad- Part 3

மூன்றாம் நான்காம் காண்டம் - சுருக்கம்

1.மாயாவியான ருத்ரனே உலகை ஆள்கிறான்; அவனே உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் காரணமாகிறான்.
2.இருளுக்கு அப்பாற்பட்டவனான கயிலையில் வாழும் அவனை நான் அறிவேன்; அவனை அறிந்த பின்னரே ஒருவன் சாவைக் கடக்க முடியும். இல்லையேல் மக்கள்துன்பமுற்றவர்களாகின்றனர்.
3.இவன் மனிதர்களின் இருதயத்தில் வாழ்கின்றான். ஒன்பது வாயில்களுள்ள இத் தேகத்தில் வசிக்கின்றான். பாலில் மறைந்துள்ள நெய்போல் அதிசூஷ்மமாய் உள்ளான்.
4.அவனே பஞ்சபூதம்; அவனே ஸ்த்ரீ,புருஷன். எல்லாம் அவனே.
5.வேத மந்திரங்கள் குறிக்கின்ற இறைவனை ஒருவன் அறியவில்லையானால், அவனுக்கு அவ்வேத மந்திரங்களால் பயனில்லை.
6.அவனது உண்மை ரூபம் கண்ணுக்கெட்டுவதில்லை. மஹா வியாபகன் அவன்.
7.பிறவிக்கடலுக்கு பயந்த ஜீவன் உன்னை சரணடைகின்றான். உனது தெற்கு முகம் (தஷிணாமூர்த்தி) எதுவோ அதனால் காத்தருள்வீர்.
8.எங்கள் சொத்துக்களையும் புத்திரர்களையும் அழிக்க வேண்டாம்; காத்தருள்வீர்..

தொடர் சிந்தனை:
இப்பூமியில் பிறந்த உடனேயே ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் அது நிறைவேற்றப்படும் நாள் தள்ளி வைக்கப்படலாம். இது தான் வாழ்க்கை! - நஜன் (குண்டலினி சக்தி)

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கின்ற நிகழ்வுகள் ஏதாவது ஒரு வகையில் சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் வாழ்க்கையின் மேல் மனிதர்களாகிய நமக்கு பயம் ஏற்படுகின்றது. எத்தனையோ வகையான பயம் மனதில் பிண்ணிப்பினைந்து கிடக்கின்றது. அந்த பயந்திலிருந்து மீண்டு வருவதற்கு இறைவனை வேண்டிக் கொள்கின்றோம். நினைத்தது நிறைவேற இறைவனை வேண்டுகின்றோம்; மாட்டிக் கொண்டிருக்கின்ற பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறோம்; தீங்குகள் வரக் கூடாது என்பதற்கு முன்னெச்செரிக்கையாக இருப்பதற்காகப் பூஜைகள் செய்கின்றோம்; வேண்டுதல்களை ஏற்கின்றோம்; விரதம் இருக்கின்றோம். கடவுள் என்ற ஒன்றின் மேல் பற்று இல்லாதோருக்கும் பயம் இருக்கத்தான் செய்கின்றது. அவர்கள் இறைவனுக்குப் பதிலாக மனிதர்களையோ மற்ற பொருட்களையோ (பணம், சொத்து, அதிகாரம்) பற்றிக் கொள்வதன் வழி தமது பயத்திலிருந்து தற்காலிகமாக விடுபட்டுக்கொள்கின்றனர்.

எனக்கு சிலந்திப் பூச்சியைக் கண்டால் பயம். எனது தோழி ஒருத்திக்கு பாம்பைக் கண்டால் பயம். (எனக்கு பாம்பை பார்த்தால் பயமே தோன்றாது. பாம்புகளைப் விளையாட்டுக்காகப் பிடித்து வைத்திருந்திருக்கின்றேன்.) எனது மற்றொரு தோழிக்கு திருமணத்தை நினைத்தாலே பயம். எனது நண்பன் ஒருவனுக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்வதை நினைத்தால் பயம் (அங்கே அதிகமாக பூச்சிகள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றான். பூச்சிகள் கடித்து இறந்து விடுவோம் என்ற அச்சம் அவனுக்கு!) இப்படி பலருக்கும் பல வகையில் பயம். இந்த பயத்தின் அளவைப் பொருத்தே ஒவ்வொருவரின் பற்றுக்கோட்டின் அளவும் அமைகின்றது.

உலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனாலும் நாம் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு வாழ்க்கையில் பலவற்றை சேர்க்கின்றோம். வாழ்க்கை நமக்கு பல வேளைகளில் நிலையற்றவற்றினைப் பற்றிய பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்தாலும் அலுக்காமல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் சில தேவைகளைத் தேடிச் சென்று கொண்டேயிருக்கின்றோம். எனது ஜெர்மானிய தோழன் ஒருவனுக்கு நான்கு முறை காதல் தோல்வி; இருந்தாலும் அலுக்காமல் சலிக்காமல் காதலியைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றான்; வாழ்க்கையில் மாறுதல் வேண்டும் என்பதற்காக ஸ்டுட்கார்டிலிருந்து பெர்லினுக்கு வேலை மாற்றம் வாங்கிக் கொண்டு புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றான். இலங்கையில் யுத்தத்தின் காரணமாக வாழ்க்கையைத் தேடி வந்த தமிழினம் ஐரோப்பாவில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; தமிழ் பண்பாட்டையும், மொழியையும், கலை கலாச்சாரத்தையும் ஐரோப்பிய மக்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்; கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஒரு இடத்தில் தடை ஏற்படும் போது மற்றொன்றில் மனதைச் செலுத்தி போராடிப் போராடி வாழ்க்கையைத் தேடிக் கொண்டே இருக்கும் ஆன்ம பலம் உள்ளவர்களுக்கு மாறுதல் வாழ்க்கையில் கிடைக்கத்தான் செய்கின்றது.

பயம் மனதை விட்டு அகல வேண்டுமானால் மகா சக்தியான அப்பேரருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இறை அருள் துணையிருக்கும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையைத் தைரியமாக கடக்க உதவும். உலகில் பிறந்த எந்த மனிதருக்குத்தான பிரச்சனை இல்லை? சோதனை இல்லை? எதாவது ஒரு வகையில் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் அதில் என்ன ஆச்சர்யம் என்றால் இன்று மிகப்பெரிய கவலையாக, அதிர்ச்சியாகத் தெரிவது நாளைக்கு அதே அளவிளான மன பாதிப்பை அளிப்பதில்லை. நமது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் எந்தெந்த விஷயங்களுக்கெல்லாம் நாம் பயந்திருக்கின்றோம் என்று காணமுடியும். ஆனால் அந்த விஷயங்களை வெற்றிகரமாக கடந்து வந்த பின்னர் அவை நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றினைச் சாதிக்கக் கிடைத்த வெற்றியின் முதற்படியாகத் தான் நமக்குத் தோன்றும்.

வாழ்க்கையை வாழத் தெரிந்தவன் போராட்டத்திற்கு அஞ்சி வீழ்ந்து விட மாட்டான். லொரு வாசல் அடைக்கப்படும் போது மற்ரொரு வாச்ல் திறக்கும் என்ற நம்பிக்கையில் முயற்சித்துச் செல்லும் போதுதான் பிரபஞ்ச அமைப்பைக் காணும் திறமைக் கிட்டும். இத்திறம் சாதாரணமான ஒன்றல்ல. உடலுக்குள் உறைந்திருக்கும் இறைசக்தி இயக்குவதை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவனாலேயே தோல்வியிலுருந்தும் கஷ்டங்களிலிருந்து மீண்டு, சாதிக்க முடிகின்றது. அச்சக்தியைக் காண முடியாதவனுக்குச், சவம் போல அன்றாட வாழ்க்கையில் அமுங்கி வாழ்க்கையைத் தண்டனையாகக் காண்கின்ற நிலைதான் ஏற்படுகின்றது!

ச்வேதாச்வதர உபநிஷத்தின் மூன்றாம் நான்காம் காண்டங்கள், இறைவனைப் மனிதர்கள் பற்றிக் கொள்வதன் வழி எவ்வாறு உலக இன்பங்களிலிருந்து விலகி வாழ முடியும் என்பதை காட்டுகின்றது. இந்த உபநிஷத்தில் ருத்ரனனே அனைத்தையும் ஆக்கி, காத்து, அழிக்கும் வல்லமை பொருந்திய தெய்வமாகக் காட்டப்படுகின்றார். சைவ சித்தாந்தத்தின்படி எத்தெய்வம் அழிக்கும் சக்தியைக் கொண்டதோ, அதுவே அனைத்தையும் உருவாக்கவும், காக்கவும், தொழிற்படுத்தவும் கூடிய வல்லமை படைத்த தெய்வம் என்பது உண்மை. இதனை சிவஞான போதத்தின் முதற் வெண்பாவாகிய:


  'அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமைவின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்'  விளக்குகின்றது.

ச்வேதாச்வதர உபநிஷத்தில் மஹா பரம்பொருளாகவே குறிக்கப் படும் ருத்திரன், சைவ சித்தாந்தத்தின்படி அழிக்கும் தொழிலுக்கு ஒரு பகுதியளவில் 'ஏகதேச சங்காரம்' மட்டுமே செய்வதாக காட்டப்படுகின்றது. பரம்பொருளான சிவமே அனைத்துக்கும் பெரியது எனவும், சிவத்தின் ஆணையினாலேயே பிரமன், மால், ருத்திரன் ஆகிய மூவரும் பிரபஞ்ச சிருஷ்டி, திதி, சம்காரம் ஆகிய முத்தொழிலைச் செய்வதாகவும் விளக்க உறை அமைகின்றது. ஆக உபநிடத காலத்தில் மஹா பரம்பொருளாக காட்டபப்ட்ட ருத்ரனின் தன்மை நாளடைவில் மாற்றம் கண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதைக் காணமுடிகின்றது.

ச்வேதாச்வதர உபநிஷத்தில் மேலும் ருத்ரன் மக்களின் உடைமைகளையும் சொத்துக்களையும் வம்சத்தையும் காக்க வேண்டும் என்ற வேண்டுதல்களைப் பற்றிய குறிப்புக்களும் வருகின்றன. ருத்ரன் கோபம் கொள்ளக் கூடாது; அப்படி கோபம் வரும்போது தங்கள் குதிரைகள் இருப்பிடங்கள் ஆகியவற்றை அழித்து விடுவார் போன்ற பயம் கலந்த கூற்றுகளும் வருகின்றன. எல்லா பயமும் கவலைகளும் போக வேண்டுமானால் மக்கள் ருத்ரனின் தெற்கு முகத்தால் அருள் பெற வேண்டும் என்று இந்த உபநிஷத்தின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ருத்ரனின் தெற்கு முகம் என்பது தஷிணாமூர்த்தி வடிவம் என்று '108 உபநிஷத்ஸாரம்' நூலின் ஆசிரியர் 'அண்ணா' அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். தஷிணாமூர்த்தி ஞானத்திற்கு அதிபதி. ஞான வேட்கை உள்ள ஆன்மாக்களுக்கு அருள் பாலித்து அவர்களுக்கு வீடுபேற்றினை வழங்கும் சிவ பரம்பொருளே தஷிணாமூர்த்தி வடிவம் தாங்கியுள்ள தெய்வம். ஆக, ஞானம் ஒன்றே வேண்டும் என்று இறைவனை இருக்கப் பிடித்துக் கொள்ளும் ஆன்மாக்களுக்கு உலக அச்சத்தை நீக்கி, ஞானத்தை நல்குபவரே தஷிணாமூர்த்தி எனக் கொல்ளலாம். அவரே பிறவிக்கடலை தீர்த்து பிரவி அச்சத்தைப் போக்கக் கூடியவர்.!

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிகோட்டை கைக் கொள்வது எக்காலம்?

அற்ப சுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கொர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்?

புல்லாய்; விலங்கா; புழுவாய்; நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

தொடரும்.....


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment