From: "ksuba100"
Date: Sat Nov 16, 2002 1:25 pm
Subject: Upanishad: Svethasvathara Upanishad- Part II
இரண்டாம் காண்டம் - சுருக்கம்
1.மனதைக் கட்டுப்படுத்தி சீராக்குவதன் வழி தத்துவஞானத்தைப் பெறலாம்.
2.மனதின் இயல்பு இன்பத்தை நாடுவது; அதை நெறிப்படுத்தி உயர்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
3.மனதை கட்டுப்படுத்தும் திறம் பெற்றவனே சிறந்த அறிவாளி.
4.பிறவிக்கானக் காரணத்தை அழித்துவிடும் போது (தவத்தினால்) இருவினை மறைகின்றது.
5.இந்திரியங்களை அடக்கி, பிராணயாமம் செய்து பேரொளியில் கலக்க வேண்டும்.
6.யோகத்தின் பலனாக உடல் பளுவின்மை, நோயின்மை, அவாவின்மை, நிறத்தெளிவு, நல்லகுரல், இனியமணம், மலஜல குறைவு ஆகயவை உண்டாகும்; இவை அடையாளங்கள்.
தொடர் சிந்தனை:
உலகிலேயே மிகவும் சிரமமான காரியம் என்ன?
சுகிப்பது சுலபம். பேசுவது அதை விட சுலபம். சிந்திப்பது கொஞ்சம் கடினம். இன்னும் ஆழமாகச் சிந்துப்பது இன்னும் கொஞ்சம் கடினம். சிந்தித்தை செயல்படுத்துவது அதனினும் பெரும் கடினம்!
நாளைக்குக் கடைக்குச் சென்று புது ஆடைகள் வாங்க வேண்டும் என்று மனம் நினைக்கின்றது. மனம் நினைத்தால் மாத்திரம் போதுமா? மறுநாள் காலையிலேயே எழுந்து வேலைகளையெல்லாம் முடித்து, பஸ் பிடித்து, கடை வீதிக்குச் சென்று தேவையான துணிகளைத் தேடி, அதற்குத் தேவையான பணத்தைச் செலவு செய்து அந்தத் துணிகளை வாங்கி வரவேண்டியிருக்கின்றது. இத்தனைக் காரியங்களையும் செய்தால் தான் வேண்டியது (மனம் நினைத்தது) செயல்படுத்தப்பட்ட வினையாகின்றது. இதைப் போலத்தான் நாம் அன்றாடம் செய்கின்ற எல்லா காரியங்களுமே.
மனம் நினைக்கின்றது; நினைத்ததைச் செயல்படுத்தும் திட்டத்தை படிப்படியாகத் தீட்டுகின்றது. பொறிகளும் உடலின் கருவிகளும் சேர்ந்து மணம் நினைத்த காரியத்தைச் செயல்படுத்துகின்றன.
இது ஒரு சிக்கலான விஷயம். மனம் நினைப்பது என்பது சிந்தனை. அந்த சிந்தனை செயல்வடிவம் பெற்றதா? இல்லை பெறாமலேயே கறைந்து விட்டதா ? என்பதே முடிவு. இச்செயலை கீழ்க்காணும் வகையில் பிரிக்கலாம்.
1. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; உடலும் மணமும் சேர்ந்து காரியத்தை முடிக்கின்றன.
2. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; உடல் ஒத்துழைத்தாலும், மணம் மாறி காரியம் நடைபெறாமல் போய்விடுகின்றன.
3. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; மணம் செய்ய நினைத்தாலும், உடல் ஒத்துழைக்காததால் காரியம் தடை பெறுகின்றது.
4. மனம் நினைக்கின்றது; திட்டமிடுகின்றது; மணமும் உடலும் காரியத்தைச் செயல்படுத்தாமல் தள்ளி வைத்து விடும் நிலை.
5. மனம் நினைக்கின்றது; திட்டம் எதுவுமில்லை. அதனால் காரியம் நடைபெறாமலே அந்த சிந்தனை வீணாகி விடுகின்ற நிலை.
6. மனம் எதையுமே சிந்திக்காத நிலை.
நமது வாழ்வில் கணம் கணம் நிகழும் அனைத்து காரியங்களையும் மேற்கூறிய ஏதாவது ஒன்றினில் வகைப்படுத்திவிடலாம். நினைத்ததைச் சாதித்தவர்களே மக்களால் காலம் காலமாக பேசப்படுபவர்களாகத் திகழ்கின்றனர். நினைத்தைச் சாதிக்கும் உந்து சக்தி எல்லோரிடமும் இருப்பினும் அதனை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துபவனாலேயே அதனால் பயனடைய முடிகின்ற தன்மையைப் பார்க்க முடிகின்றது. சூக்குமத் தன்மை கொண்ட மனதை ஆன்மா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதற்கு தூலப் பொருளான உடல் கருவியாகின்றது. இந்திரியங்களை அடக்கி யோகத்தில் சென்று மனதை பயிற்சி படுத்துவது ஆரம்ப நிலை. நமது சித்தர் இலக்கியங்கள் அஷ்டாங்க யோகமாகிய யமம், நியமம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை மனத்தை இயக்கி அடக்கும் உத்திகளாகக் காட்டுகின்றன.
1.யமம் - ஒதுக்க வேண்டியவை. தூய்மையற்ற, உண்மையற்ற, நியாயமற்ற பழக்கங்கள் ஒதுக்கப் பட வேண்டியவை.
2.நியமம் - ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை. தூய்மையான் செயல், உண்மையான செயல், அன்பான வாழ்க்கை, நெறியுடைய தன்மைகள் ஆகியவை.
3 ஆசனம் - இருக்கை. உடலை நேராக இருத்தி முதுகந்தண்டை நிமிர்த்தி இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சரியே பயனிக்க வைத்தல்.
4.பிராணாயாமம் - சுவாசப் பயிற்சி. மூக்கின் வழி உள்ளே இழுக்கப் படுகின்ற சுவாசம் சரி வர உடலுக்குள் செல்லுமாறு பயிற்சித்தல்.
5.பிரத்யாகாரம் - ஆற்றலை ஒன்றுபடுத்துவது. மனதில் தெளிவு பிறக்கும் போது ஆன்மா தனக்குள்ள ஆற்றல்களை உணரும் தன்மை பிறக்கின்றது. தனது ஆற்றலை உணர்ந்து அதனை சிந்தித்து சாதிக்க வேண்டியதை மனம் செயல்படுத்துவதே பிரத்யாகாரம்.
6.தாரணை - சக்திகளுக்கு வலிமையூட்டல். இறைசக்தி உடம்பிற்குள் உறைந்து கிடக்கின்றது. அதனை உபாசித்து இறைசக்தியே மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துச் செயல்படுத்த அனுமதித்தலே தாரணை.
7.தியானம் - மனம் தேடுகின்ற ஒன்றினை முற்றும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேகத்தோடும் துடிப்போடும் ஆன்மாவை பிடித்துக் கொள்வது.
8.சமாதி - பேரின்பத்தில் அடங்குதல். இறையோடு ஒன்று கலக்கும் பேரின்ப நிலை.
மனம் ஒரு குரங்கு; காட்சிக்கு இனிமையாக இருப்பவையெல்லாம், புலன்களுக்கு சுகம் தரக்குட்டிய பொருள்களெல்லாம் தனக்குச்சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் மனதிற்கு உண்டு. ஒன்றை அடைந்ததும் அதிலிருந்து தாவி அடுத்த ஒன்றினை அடைய வேண்டும் என்று தவிப்பதும் அதன் இயல்பு. உலக சுகங்களில் மாட்டிக் கொண்டு இங்கும் அங்கும் அலைகின்ற தன்மையும் அதற்கு உண்டு.
குரங்காகத் தாவக் கூடிய இந்த மனத்தை ஆன்மா, பயிற்சிகளின் வழி அடக்கி ஆளும் போது உள்ளே அடங்கி இருக்கின்ற மாபெறும் சக்தியை பெறுகின்றது; அதுவே குண்டலினி. இந்தக் குண்டலினி உடலுக்குள் வாழும் பாம்பு; இது ஊணக்கண்னுக்குத் தென்படா பாம்பு. அக்னி சொரூபமான இப்பாம்பு மகா சக்தியை அளிக்கக் கூடியது. மனமெனும் மகா சக்தி இறைத் தன்மையைப் பெறும் போது பேராற்றல் வருகின்றது. இந்த பேறாற்றலே சாதனையாளர்களைப் இப்பூமியில் படைக்கின்றது. ஒருமித்த சிந்தனை, தெளிந்த குறிக்கோள், நல்ல நெறிகள்; இவை நினைத்தைச் சாதிக்கும் சக்தியை ஒரு ஜீவனுக்கு வழங்குகின்றன.
ஒரு மனிதனின் தகுதி அவனது உடம்பால் கணக்கிடப்படுவதல்ல. மனித உடலால் என்ன பயன்? ஒரு முதலையின் தோலினால் எத்தனையோ விலையுயர்ந்த் பொருட்கள் உருவாகின்றன. பறவைகளின் சிறகால் பல விலை மதிக்கத்த பொருட்கள் உருவாக்கப் படுகின்றன. ஆனால் மனித தேகத்தை மட்டும் மதிப்பிடுவதானால் மனிதர் அதிக விலை போகமாட்டார். ஒருவரின் உடலில் கிடைப்பவை: கொஞ்சம் சுண்ணாம்பு, 3 டஜன் தீப்பெட்டிகளை உருவாக்குவதற்கான போஸ்பரஸ், 3 சிறிய ஆணிகளை செய்யத் தேவையான இரும்பு, சில லிட்டர் தண்ணீர் செய்யக்கூடிய அளவு ஹைட்றோஜன், ஆக்ஸிஜன் ஆகியவையே; இவை தவிர மேலும் சிறிய அளவிலான சில உலோகங்கள். இவை அத்தனையயும் கூட்டினாலும் 10 டாலர் கூட மதிப்புப் பெறாத பொருட்கள் தான் மனிதனின் உடம்பில் இருக்கின்றன. [ இப்போதெல்லாம் சிறு நீரகம், இருதயம், கண்கள் என்று பல ஆயிரக்கணக்கில் மனித உடலின் அங்கங்கள் திருட்டுத்தனமாக விலைப் போகின்றன. அவற்றை இங்கெ ஒதுக்கி விட்டேன்..:) ] அப்படியென்றால் ஒரு மனிதரின் மதிப்பு உடம்பினால் பெறப்படுவது என்பது பொய்யாகின்றது. அவரவர் ஆன்ம சக்தியே மனிதருக்கு மதிப்பையும், தகுதியையும், சிறப்புத் தன்மையயும் வழங்கும் அளவு கோலாக அமைகின்றது.
பிறவிக்கான காரணத்தை அழிக்க முற்படும் முயற்சியில் முதலாவதானது தன்னைப் பற்றிய (ஆன்மா) உண்மைகளை அறிந்து கொள்ள ஒருவர் எடுக்கின்ற முயற்சிகளே. மனதை அலைக்கழிக்கும் பல இன்னல்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுபட தன் தெய்வீக இயற்கையை தேடுவதே சிறந்த வழி. மனதை குரங்காகவே வைத்திருப்பது, இந்த முயற்சிக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. அதனை மகாசக்தியாக மாற்றுவதே வெற்றிக்கு முதற்படி.
வேடிக்கையும் சொகுசும் மெய்ப் பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கையெல்லாம் மறந்திருப்பது எக்காலம்?
பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன் பாதம் விரும்புவதும் எக்காலம்?
ஒலிபடரும் குண்டலியை உண்ணி உணர்வால் எழுப்பி
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம்?
அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம் போல் திரிவதினி எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]
தொடரும்.....
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment