From: "ksuba100"
Date: Sat Jul 12, 2003 10:57 am
Subject: Subject:
சுருக்கம்
நாராதர் விஷ்னு பகவானிடம் கேட்கின்றார்:
பரமஸர்களாகிய யோகிகளின் நோக்கம் என்ன?
அவர்களுக்கு ஏற்படும் வாழ்க்கை எப்படிப்பட்டது?
பகவானின் பதில்:
பரமஹம்சர்கள் எனப்படுபவர்கள் மிகச் சிலரே. அவர்களுடைய மனது எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே லயித்திருக்கும்; நானும் அவர்களிடத்தில் லயித்திப்பேன்.அவர்கள் மனித உறவுகள், பொருட் பற்று ஆகிய அனைத்தையும் துறந்து வாழ்வர். உடலை பொருட்படுத்தாது பற்றின்றி வாழ்வர்.
ஆசைகளை முற்றும் துறந்து ஞான தண்டத்தை தரித்த ஏகதண்டியே பரமஹம்சர்.
குறிப்பு: மிகச் சிறிய ஒரு உபநிஷத்து என்றாலும், இதனை ஞான வாழ்க்கையைப் பற்றி அலசும் பழம் தத்துவ நூல்களில் ஒன்று எனக் கொள்வது அவசியமாகின்றது. இந்த நூல் "ஓம் பூர்ணமத ..சாந்தி ..சாந்தி" எனத் தொடங்குவதால் இது சுக்லயஜுர்வேதத்தைச் சார்ந்த உபநிஷத்தாகக் கொள்ளப்படுகின்றது.
தொடர் சிந்தனை:
எனது அலுவலக நண்பன் ஒருவன் விடுமுறையில் சென்று விட்டதால் அவனுடைய பொறுப்புக்கள் சிலவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலை. ஐரோப்பிய அளவிளான ஒரு வங்கி யின் கணினிகளில் இரண்டில் புதிய அறிக்கை தயாரிக்கும் மென்பொருள் ஒன்றினைப் பதி யும் வேலை வந்து சேர்ந்தது. Virtual Vault என்று சொல்லப்படும் unix-ன் புதிய பொதில்நுட்பத்தை அடிப்படை மென்பொருளாகக் கொண்ட கணினிகள் அவை. எல்லா கணினிகளைப் போலத்தானே செய்ல்பாடுகள் இருக்கும் என்று நினைத்து காரியத்தில் இறங்கிய எனக்கு அதிர்ச்சி. பல அடுக்கு நிலைகளில் தளங்களைக் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அமைப்பு. ஒரு தளத்தில் உருவாக்கிய கோப்புக்களை மற்ற தளத்தில் பார்க்க முடிவதில்லை. அடித்தளத்தில் மட்டுமே மேல் தளங்களில் உள்ள கோப்புக்களைப் பார்க்க முடியும் என்ற ஒரு வடிவமைப்பு. ஒரு தளத்தில் கிடக்கும் அனுமதி கள் மற்ற தளத்தில் கிடைப்பதில்லை. இப்படி ஏராளமான பிரிவுகளைக் கொண்ட 'மிகப் பாதுகாப்பான' ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம்; அதில் வேலையைச் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
இந்த சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிறிய சிந்தனை; இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் போலத்தானே மனிதர்களாகிய நாமும் இருக்கின்றோம். காற்று வாங்க வெளியே செல்கின்றோம்; எனக்கு கண்களில் படும் பொருட்களோ அல்லது மற்ற விசயங்களோ என்னோடு அருகில் வரும் மற்ற நபருக்கு தெரி வதில்லை; அதேபோலத்தான் எனக்கும் ; அவர்களுக்கு முக்கியமாகத் தெரிவது எனக்கு பெரிதாகப் படாமலேயே போய்விடுகின்றன. எனக்கு ஒரு பிரச்சனையைப் பார்க்கும் போது தெரிகின்ற பின் விளைவுகள் மற்ற நபருக்கு மனதில் படாமலேயே போய்விடுகின்றன. அதேபோல, என் நண்பருக்குத் தெரிகின்ற பல விசயங்கள் எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய்விடுகின்றன. ஏன் இப்படி..?
பக்குவ வேறுபாடுகள் மனிதனை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.வாழ்க்கையில் நமக்குப் போராட்டக் களமாக அமைவது நமது குடும்பம்தான். எதில் அதிக ஆசைகளும் பற்றுக்களும் வைத்திருக்கின்றோமோ அதுவே அனைத்து மன வேதனைகளுக்கும், பி ரச்சனைகளுக்கும் மூலமாக அமைந்து விடுவதுதான் நிதர்சனம். அந்த நிதர்சனத்தைப் பார்த்து அதிலிருந்து சற்று வெளியாகி, தன்னை தனது செயல்களை வெளியேயிருந்து நோக்கி படிப்படியாக இந்த உறவுச் சங்கிலிகளை வெட்டி வீச உதவும் மருந்தாகவே நமது வாழ்க்கை அமைந்திருப்பதை நாம் பல வேளைகளில் பார்க்க மறந்து விடுகின்றோம். இப்படிப் பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையில் மனிதர்கள் பிரச்சனைகளைச் சமாளிக்கும் விதம் தான் எத்தனை வகை?
நாம் கடந்து வந்த பாதையை சற்று பின்னோக்கிச் சிந்தித்துப் பார்ப்போம்; அதில் எத்தனை விஷயங்களுக்கு நாம் ஆசைப்பட்டிருக்கின்றோம்; எத்தனை ஆசைகள் நிறைவேறி யுள்ளன; அந்த நிறைவேறிய ஆசைகளால் நாம் அடைந்த இன்ப துன்பங்கள் யாவை என்பதை கணக்கிடுவோம். முடிவில் நமக்குத் தெரிவதென்ன..? ஒவ்வொரு மனி னுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள். ஆனால் பெரும்பாலும் ஆசைள் நிறைவேறிவி ட்டன என்று நாம் அப்படியே அமைதி அடைந்து விடுவதும் இல்லை; அதேபோல அடைந்த ஆசையினால் மன நிறைவு பெற்று அதே சந்தோஷத்தில் மூழ்கிக் கிடப்பதுவும் இல்லை; கால ஓட்டத்தில் புதிய புதிய ஆசைகள் தோன்றுகின்றன; புதிய புதிய பிரச்சனைகள் தலைதூக்குகின்றன; புதிய புதிய சவால்கள எதிர்நோக்கி விட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுதானிருக்கின்றோம். இதுதான் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை; ஆனால் அசாதாரன மனிதர் இதைனை மாற்றி அமைத்து வாழ்க்கையை வென்றவராகின்றார்.
பேச்சாளர் சுகி சிவம் அவர்களின் ஒரு சொற்பொழிவில் அழகான ஒரு கருத்தினைக் கேட்க நேர்ந்தது. "நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களாக இருக்க விரும்புகி ன்றீர்களா? அல்லது வாழ்க்கையையே வென்றவர்களாக இருக்கவிரும்புகின்றீர்களா?" என்ற ஒரு கேள்வியை எழுப்பினார். இது தான் ஒரு சாதாரன மனிதனுக்கும் அசாதாரன மனிதனுக்கு உள்ள வேற்றுமை.
நாம் சுலபமாக நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதில்லை; நமது ஆசைகளை, விருப்பங்களைச், சிந்தனைப் போகை, வாழ்க்கை முறையை யாரும் சுலபமாக மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை.ஏதாவது ஒரு கட்டாயத்தின் பேரில் தான் பெரும்பாலும் நாம் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறோம். வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில் மிக முக்கியமாக விளங்குவது மரணம். அதேபோல பிறரால் நமக்கு ஏற்படுகின்ற ஏமாற்றம், வெறுப்பு, தோல்வி, பொருள் இழப்பு போன்றவையும் நம்மை இப்போது சென்று கொண்டிருக்கின்ற நிலையிலிருந்து நிறுத்தி தற்போதைய போக்கை மாற்றி அமைத்து விடுவதைப் பார்க்கின்றோம். இது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கி ன்ற ஒன்று.
குடும்பம், பற்றுக்கள், ஆசைகள், திட்டங்கள் என மனதில் கோட்டை கட்டி வைத்துக் கொண்டிருக்கும் வரை இந்த சுழற்சியிலிருந்து தப்பிக்கவே முடியாது. அனைத்தும் விட்டு அமைதியை உண்மையாகப் பெற வேண்டுமானால் உறவுகளையும் ஆசைகளையும் துறக்க வேண்டும்.
சொந்தங்களையும் ஆசைகளையும் விட்டு விட்டு சவம் போல என்ன வாழ்க்கை என நாம் நினைக்கலாம். இங்கே இரண்டு விதமான வாழ்க்கையையைக் காணமுடிகின்றது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு சொந்த பந்தங்களில் மாட்டிக் கொண்டு பிரச்சனைகளில் மூழ்கித் தவித்து அவ்வப்போது வருகின்ற சிறிய சந்தோஷத்தை மட்டும் அனுபவித்து, பெரும்பாலும் துன்பத்தில் கிடக்கும் நிலை வேண்டுமா? அல்லது அனைத்தையும் ஒரே நிமிடத்தில் விட்டு விட்டு ஏகாந்தமான இறை அனுபவத்தையே சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலை வேண்டுமா? பற்றுக்களை பெரி தாக நினைக்கும் மனிதனுக்குப் பற்றுக்களை முற்றிலும் அறுத்த அசாதாரன மனிதனை புரி ந்து கொள்ள முடிவதில்லை; Virtual Vault சிஸ்டத்தைப் போல.
மனிதர்களில் அசாதரணமானவர்களே பரமஹம்சர்கள். மனிதர்களாக பிறவியெடுத்த நாம் அனைவருமே பரமஹம்சர்களாகிக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் சைவ சி த்தாந்தம். பரமஹம்சர்கள் வானிலிருந்து தோன்றுவதில்லை; நாம் தான் வாழ்க்கையில் கிடைக்கின்ற அனுபவங்களை சிந்திக்க சிந்திக்க விடுபட வேண்டியவற்றிலிருந்து ஒவ்வொன்றாக விட்டு விட்டு இறுதில் இறைவனை மட்டுமே நினைவில் கொண்டு வாழும் நிலைக்கு வரும் போது பரமஹம்சர்களாகின்றோம்.
பரமஹம்சர்களுக்கு உள்ளது ஏக சிந்தனை; தன்னை மறந்து தன்னுள் உறைந்துள்ள இறைச்சிந்தனையில் மட்டுமே லயித்திருக்க, வாழ்க்கை நிறைந்த சுகானுபவத்தை வழங்குகி ன்ற நிலை.
பிறந்தும் இறந்தும் பல் பேதைமை யாலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் உடரொளி யாமே
[ - திருமந்திரம், 1589.]
என்று திருமூலர் கூறுகின்றார்.
உள்ளொளியாகிய இச்சுடரொளியே தானாகி, நித்திய இன்பத்தில் இருப்பவர்களாக பரமஹம்சர்கள் விளங்குகின்றார்கள். இவர்களுக்கு உடல் பற்றுக்கள் இல்லை, உலக ஆசைகள் இல்லை, சாஸ்திரங்கள் இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை; இன்பமும் துன்பமும் இல்லை. சந்தேகம், பொய்யறிவு இவற்றிலிருந்து விலகி விட்டதால் அழியாத தன்மை படைத்த இறைவனுடன் இரண்டறக் கலந்து ஆனந்தமாய், அறிவே உருவாய் இவர்கள் இருப்பர் என பரமஹம்ஸ உபநிஷத் கூறுகின்றது. இந்நிலையில் ஞானம் எனும் ஒரே தண்டத்தை மட்டும் இவர் கொண்டிருப்பதால் இவரே எகதண்டீ.
"ஸர்வான் காமான் பரித்யஜ்ய அத்வைதே பரமேஸ்த்திதி
ஜ்ஞானதண்டோ த்ருதோ யேந ஏகதண்டீ ஸ உச்யதே!"
எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் நினைவாய்
கங்குல்பகல் இன்றி உனைக் கண்டிருப்பது எக்காலம்?
நின்றநிலை பேராமல், நினைவில் ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்?
என்னைவிட்டு நீங்காது என்னிடத்து நீ இருக்க
உன்னைவிட்டு நிங்காது ஒருப்படுவது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]
தொடரும்.....
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment