Friday, April 19, 2002

ஜாபாலோப உபநிஷத் (பாகம் 1) - மனித, இயந்திர - மந்திராயணம் (முக்தி எனும் முடிவிலா முடிவு)



From: "suba k."
Date: Fri Apr 19, 2002 9:10 pm
Subject: Jaabaaloba Upanishad - Part 1
To: meykandar@egroups.com


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம்
உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி
நிற்கின்றது. 

[நன்றி:-108 உபநிஷத்சாரம், உரையாசிரியர்: அண்ணா]  

அறிமுகம்

- இந்த உபநிஷத் சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்தது.

- இதனைக் கூறியவர் ஜாபோல மகரிஷி ஆகையால் அவரது பெயரைக் கொண்டே வழங்கப்படுகிறது.

- இதில் மொத்தம் ஆறு காண்டங்கள் இருக்கின்றன.

- இந்த ஆறு காண்டங்களுமே உடம்பிலே அமையப்பெற்றிருக்கின்ற முக்தித்தலத்தையும், அம்முக்தித்தலத்தினை அறிந்த ஆன்மாக்கள் எவ்வாறு முக்தி நிலையைப் பெறுகின்றன என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

- முக்தியைப் பெற மந்திரங்கள் கருவிகளாக அமைத்திருப்பதால், அம்மந்திரங்களைக் கற்கும் முறையும் ஜபிக்கும் முறையும் கூறப்படுகின்றன.

குறிப்பு: ஜாபாலோப உபநிஷத்தின் முதல் இரண்டு காண்டங்களும் ஒன்றோடொன்று தொடர்புடயவையாக இருப்பதனால் இக்கட்டுரையில் இவையிரண்டும் சேர்த்தே விவாதிக்கப்படுகின்றன.

இந்த உபநிஷத்தின் கருத்துக்கள் பொதுவாக ஒரு மகரிஷியால் மற்றொருவருக்கு வழங்கப்பட்ட உபதேசங்களின் தொகுப்பாகவே அமைத்திருக்கின்றன. பிருகஸ்பதி யாக்ஞவல்கியருக்கு உபதேசிக்கின்றார். அந்த விளக்கங்களே முதல் காண்டத்தில் வருகின்றன. அடுத்த காண்டத்தில் அத்ரி எனும் ஒரு மகரிஷி யாக்ஞவல்கியரைக் கேட்கின்ற கேள்விகளுக்கு அவர் அளிக்கின்ற பதில்கள் வருகின்றன. (அத்ரி யாக்ஞவல்கியரின் மாணவராக இருக்கலாம்..??)

முதல் காண்டச் சுருக்கம்:
1. எல்லா உயிரினங்களுக்கும், தாவர வகையிலிருந்து, மனிதர்கள் தேவர்கள் வரை அனைவருக்கும் பிரம்மஸதனம் என்பது அவிமுக்தம் என்பதே.
2. பிராணனுக்கு முக்கிய ஸ்தானம் குருஷேத்திரம்.
3. ஒரு ஜீவன் உடலை விட்டுப் பிரிகின்ற வேளையில் ருத்ரப் பெருமான் அந்த ஜீவனுக்கு தாரகப் பிரம்மத்தை உபதேசிப்பார்.
4. அந்த நிலையிலேயே ஜீவன் சாகா நிலையை பெற்று முக்தி பெறும்.
5. அதனால் அவிமுத்தத்தை சேவிக்க வேண்டும்.

இரண்டாம் காண்டச் சுருக்கம்:
1. ஆத்மாவை அறிந்து கொள்ள அவிமுக்தத்தை உபாசிக்க வேண்டும்.
2. ஆத்மா அவிமுக்தத்தில் நிலை பெற்றுள்ளது.
3. அவிமுக்தமே வரணாசி எனப்படுவது. அது புருவ மத்தியில் உள்ளது.

தொடர் சிந்தனை:

தோன்றுகின்ற ஒவ்வொன்றும் அழிவதே நியதி. ஒரு அழிவு வேறொன்றின் தொடக்கமாகின்றது. ஒன்று முடிந்து வேறொன்று தொடங்கி இப்படியே எண்ணிலடங்கா வகையில் இச்சுழற்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்ச இயந்திரத்தை இயக்குகின்ற இறைவன் பேறறிவாளன். அவனே பூரணன்.

மனித உடலெடுத்த யாருமே இறைவனாக முடியாது எனும் எனது கருத்துக்களைக் கொண்டு கைவல்யோபநிஷத்தின் இறுதிப் பாகத்தை முடித்திருந்தேன். அந்த விளக்கங்களின் அடிப்படையில், இது (ஜீவன்) ஆதியிலேயே பூரண வடிவான ஒன்று என்பது மறுக்கப்படக் கூடிய ஒன்றாக ஆகின்றது. பூரணத்தை நோக்கி முக்தி வேட்கையின் நிமித்தம் ஆன்மா எண்ணிலா முயற்சிகளைச் செய்து பூரணத்தோடு கலக்கின்றது; இதுவே முக்தி!

முக்திக்குச் சாதனமாக சரியா கிரியா யோக ஞான பயிற்சிகள் அடிப்படையாகின்றன. அவற்றை மேற்கொள்ள உதவும் கருவியாக உடலமைகின்றது. உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு உருப்புக்களும் அதனதன் தொழிலை ஞான மார்க்கத்தை அடிப்படையாக்கிக் கொண்டு முறையுடன் இயங்கும் போது அவை முக்திப்பாதைக்கு இயல்பாகவே ஆன்மாவை வழி நடத்திச் செல்ல வைக்கின்றன. கருவிகள் இயங்குவது அதனதன் பொறுப்பில் அன்று. மாறாக அதனை இயக்க வேறொன்று தேவைப்படுகின்றது. கண்கள் பார்க்கின்ற கருவிகள். கண்கள் மட்டும் இருந்து விட்டால் பார்வை தெரிந்து விடுகின்றதா? காதுகள் கேட்க உதவும் கருவிகள்; காதுகள் உள்ள எல்லோராலும் கேட்க முடிகின்றதா? இதனைச் சிந்திக்கின்ற போது இக்கருவிகள் செயல்படவும், அதனால் ஆன்மா இயங்கவும் வைப்பது எது..? எனும் கேள்வி எழுகின்றது.

ஆன்மாதான் எல்லாவற்றையும் அறிந்து கொள்கின்றதா? அல்லது ஆன்மாவை வேறொன்று அறிந்து கொள்ள வைக்கின்றதா? ஒன்றைப் பார்க்கின்றோம். எதைப் பார்க்கின்றோம்; அதனை எப்படிப் பார்க்கின்றோம்; என்பதை நிர்ணயிப்பது எது?

பரப்பிரம்மம் உடலோடு இணைந்தே இருக்கின்றது. ஆன்மாவை அதன் இச்சை படி இயங்க சுதந்திரம் அளிக்கும் அதே வேளையில் பக்குவத்திற்கேற்ப ஆன்மாக்களை அழைத்துச் செல்கின்ற வழிகாட்டியுமாக பரப்பிரம்மம் தொழிலாற்றுகின்றது, கருணையின் நிமித்தமாக!

சூக்கும வடிவான ஆன்மா உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இல்லாமல், அதன் அப்போதைய தன்மைக்கேற்ப உடலின் எல்லா பகுதிகளுக்கும் மாறி மாறிச் செல்லும் தன்மை படைத்தது. அவ்வாறன்றி இறைசக்தியானது, எல்லா அணுக்களிலும் கலந்திருந்தாலும் குறிப்பிட்ட சில தலங்களில் நிலைப்பெற்றிறுக்கும் தன்மை கொண்டது (சூக்கும நிலையிலேயே). மூலாதாரத்தில், சுவாதிஷ்டானத்தில், மணிப்பூரகத்தில், அநாகத்தில், விசுத்தியில், பின்னர் ஆக்ஞயில், அதன் பின்னர் சகஸ்ரதலத்தில் என சூக்கும உடலில் நிலையாக இத்தலங்கள் அமைந்திருக்கும். இந்த ஒவ்வொரு தலங்களுக்கும் மூல அதிபதியாக ஒரு இறைவனும் இறைவியும் அமைந்திருப்பர். அந்த வகையில் ஜாபாலோபநிஷத் கூறுகின்ற அவிமுக்தம் அமைந்திருக்கின்ற இடத்தின் மூலதெய்வம் சாதசிவனும் மணோண்மனியுமாகும். இந்த தலத்தின் மூல யந்திரத்தின் வடிவம் வட்டம். இந்த யந்திரம் மூன்று இதழ்களுள்ள தாமரை வடிவானது.

நமது இரண்டு கண் புருவங்களுக்கு மத்தியில் இச்சக்கரம் அமைந்துள்ளது. இது மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண் இருக்கின்ற இடம் என்றும் கூறப்படுகின்றது. இப்பகுதியே அவிமுக்தம்.

யோக சாதனத்தின் போது சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி பார்வையைக் கூட்டி அவிமுக்தத்தில் இருத்த வேண்டும். பொறிகளைக் கொண்டு காண்பதை விடுத்து ஞானக்கண்ணைக் கொண்டு உள்ளிருக்கும் தெய்வத்தை காண முயற்சிப்பதும், கண்ட அச்சக்தியோடு கலந்திருப்பதுமே தியானத்தின் அதிமுக்கிய நோக்கம்.

யோகப் பயிற்சிகள் பலவகைப் படுவன. அது எவ்வகை பயிற்சியாக இருப்பினும், பிராணணைக் கட்டுப்படுத்தி சீராக்கி கருத்தினை ஒருமுகப்படுத்துவதே தியானத்திற்கு அடிப்படையாகின்றது. மிகவும் எளிய வகையில் தியானப் பயிற்சியை எவ்வாறு மேற்கொள்வது என்பதை அடுத்து பார்ப்போம்.

1. மனதை தியானம் செய்ய முதலில் தயார் படுத்த வேண்டும்.
2. ஓரிடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து உடலை நேராக வைத்துக் கொள்ளவும்
3. ஒரு விரலால் வலது நாசியை மூடி இடது நாசியினால் 8 எண்ணிக்கை வரும் வரையில் காற்றினை இழுத்து பின்னர் 8 எண்ணிக்கை வரையில் உள்ளே வைத்திருந்து பின்னர் 8 எண்ணிக்கைக்கு அதே நாசியில் மூச்சை வெளியாக்க வேண்டும். அதேபோல இடது நாசியிலும் இதனைச் செய்ய வேண்டும். இவ்வகையில் உடலுக்குள் உள்ள காற்று சீராகச் சென்று ஆன்மாவை கட்டுக்குள் கொண்டுவருகின்றது.

4. இப்பயிற்சிக்குப் பிறகு கைகளை நீட்டி சின்முத்திரையில் வைக்க வேண்டும். (இவை நாடிகளை இழுத்து பிராணனை சீர் செய்ய உதவும்)
5. அவிமுக்தத்தில் நமது இஷ்ட பெருமானை நினைத்து அப்பெருமானுக்குரிய மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும்.


(தியானம் செய்யும் முறை, பிராண வாயு பயிற்சிகள் ஆகிய முக்கிய விளக்கங்கள் அடங்கிய தமிழ் கட்டுரை ஒன்று எனது வலைப்பக்கத்தில் இருக்கின்றது. இதனை சித்தர் தருமலிங்க சுவாமிகள் அழகான எளிய தமிழில் வழங்கியிருக்கின்றார்.) Yoga Nyaanam எனும் பகுதியைப் பார்க்கவும்!

தியானம் செய்வதற்கும், ஜபத்தினை உபாசிப்பதற்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. மந்திரங்களை எல்லா நேரங்களிலும் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். சாதரணமாக நமது பெரியவர்கள் 'சிவ சிவ' என்று சொல்லிக் கொண்டே அமர்வது, இறைவனின் பெயரை மீண்டும் மீண்டும் வழக்கில் சொல்லிக் கொண்டிருப்பது போன்றவை இந்த வகையில் அமைந்தவை தான். மந்திரங்களைச் சொல்லச் சொல்ல அம்மந்திரத்தின் மூல தெய்வம் நமது ஆன்மாவை ஆக்கிரமித்து அதனை வழி நடத்திச் செல்லும் தன்மை வந்தடைந்துவிடும். மந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மைப் படைத்தவை. உதாரணமாக, சிவபெருமானுக்குரிய மூலமந்திரமாகிய 'ஓம் நமசிவாய' என்று சொல்லப்படுகின்ற மந்திரமானது 'சிவாயநம' என்ற மந்திரத்திலிருந்து வேறுபட்ட ஒன்று. மந்திரங்களின் பொருளறிந்து முறையாகக் கற்று குருவின் (ஆசானின்) துணையோடு செய்யும் போது ஜெபம் மேலும் வலுப்பெறுகின்றது.

அவிமுக்தத்தை ஜாபாலோபநிஷத் வரணாசி எனவும் குறிப்பிடுகின்றது என்பதை மேலே பார்த்தோம். ஑வரணாஒ (உள்நாக்கு) விற்கும் ஑நாசிஒக்கும் இடையில் என்பதே வரணாசி எனப்படுகின்றது. உடலில் இருக்கின்ற இந்திரியங்களெல்லாம் செய்கின்ற பாவங்களை போக்கக்கூடியது என்பதால் ஑வரணாஒ என்றும் அப்பாவங்களை நாசம் செய்வதால் ஑நாசிஒ என்றும் குறிப்பிடப்படுவதாக உரையாசிரியர் குறிப்பிடுகின்றார். விசுவநாதப் பெருமாள் குடிகொண்டிருக்கின்ற காசிசேத்ரம் வாராணாசி என்றழைக்கப்படுவதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். தொன்று தொட்டு பாவங்களைப் போக்க வாராணாசிக்கு தல யாத்திரைச் செல்வது என்பது நமது பாரம்பரியத்தில் வழக்கில் இருந்து வருகின்றது. அண்டத்தில் உள்ள வாரணாசியைப் போன்று இப்பிண்டமாகிய உடலில் அமைந்திருக்கின்ற வரணாசியும் பாவங்களைச் (ஆன்மாக்களின் கன்மங்களை) சுட்டெரித்து தூய்மைப்படுத்தும் தலமாக அமைகின்றது.

நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைந்தெழுப்பது எக்காலம்?


மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]


தொடரும்.....


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment