Sunday, May 13, 2001

கைவல்யோபநிஷத்து (பாகம் 4) - துறவு

To: meykandar@yahoogroups.com
From: "suba k."
Date: Sun, 13 May 2001 06:44:59 -0700 (PDT)
Reply-to: meykandar@yahoogroups.com
Subject: [meykandar] Upanishad: -துறவு

அன்புள்ள இணையத்தோருக்கு எனது வணக்கம்.
எனது கைவல்யோபநிஷத்துக்கான கடிதங்களுக்கு உடனே பதில் எழுத முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அலுவல் காரணமாக ஒரு வாரம் 'பெல்ஜியம்' செல்லும் படியாகிவிட்டது. இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடர்வதற்கு ஊக்கம் தரும் வகையில் கடிதம் எழுதியிருந்த சைவப் பெரியவர்கள் திரு கணேசலிங்கம்,திரு.கார்த்திகேயன், முனைவர் லோகா ஆகியோருக்கு எனது நன்றிகள்.

கைவல்யோபநிஷத்தின் முதல் காண்டத்திற்கு நான் எழுதிய மூன்றாவது கட்டுரையில் இந்து சமயத் துறவிகளைப் பற்றியும் கொஞ்சம் எழுதியிருந்தேன். துறவிகளின் மேல் எனக்குள்ள முழுமையான அபிமானத்தை அந்தக் கட்டுரை வெளிப்படுத்தவில்லை என்பதே முற்றிலும் உண்மை. உபநிஷத்துக்கான செய்யுளை எனது சிந்தனையில் வெளிப்படும் கருத்துக்களோடு ஒப்பிட்டு எழுதும் போது ஒரு சில கருத்துக்களை மட்டுமே வைக்க முடிந்தது. அதனால் துறவு சிந்தனை, துறவு வாழ்க்கை போன்றவற்றைப் பற்றிய கருத்துக்களை தனியாக ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.

துறவு என்னும் சொல் 'துற' என்னும் வேர்ச் சொல்லிலிருந்து வருவது. இச்சொல் பதவி பாசம் முதலியவற்றை 'நீக்குதல்', 'கைவிடுதல்' எனும் அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றது. இதை ஆங்கிலத்தில் to renounce worldly possessions and attachements எனச் சொல்லலாம். துறவறம் எனும் சொல் உலகப் பற்றை விடுத்த தவ வாழ்வு , சன்னியாசம் என்பவற்றை விளக்குவதாக விளங்குகின்றது. ஆக துறவி என்பவர் பற்று பாசம் முதலியவற்றை விடுத்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர் எனப்படுகின்றார்.(க்ரியாவின் தமிழ் அகராதி கூறும் விளக்கம்)

துறவைப் பற்றி திருவள்ளுவரிலிருந்து, திருமூலர், ஒளவையார் என நமது திராவிட தத்துவ நூலாசிரியர்கள் முதற்கொண்டு முனைவர் லோகநாதன் வரை பலரும் பல விளக்கங்களை தங்கள் நூல்களில் எழுதி வைத்திருக்கின்றனர். 'துறவு' என்பது ஏன் அவ்வளவு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது? ஒரு தேவை இருக்கும் போதே அந்தத் தேவையைச் சுற்றி நமது எண்ணங்கள் தோன்றும். ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் ஒரு கால கட்டத்தில் துறவு வாழ்க்கையை அனுஷ்டிக்க நேரிடுகின்றது. துறவில், அறிந்தோ அறியாமலோ மாட்டிக் கொள்கின்ற நிலை தான் மனிதருடையது. இந்த நிலை இருப்பதால் தான் நாம் ஒவ்வொருவரும் துறவு வாழ்க்கையை விளக்க/ விளக்கம் பெற பல வகையில் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றோம்.

திராவிட பன்பாடு மிக உயர்ந்த ஒன்றாக தோன்றுவதற்கு துறவு சிந்தனையின் மேல் இப்பண்பாடு கொடுத்திருக்கின்ற மிக்கியத்துவமும் ஒரு காரணமாகின்றது. வாழ்க்கையை ஒரு ஆராய்ச்சிக்கூடமாக பாவித்து அதனுள் எழுகின்ற ஐயங்களுக்கு வழிகாணும் வழிகாட்டியாக தத்துவங்களை அமையப் பெற்று இந்தப் பண்பாடு அமைந்திருக்கின்றது என்பதை தமிழறிந்த சிந்தனைவாதிகள் எவராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிப் போன துறவை பிரதிபலித்துக் கொண்டிருப்பவர்கள் துறவிகள். இந்து சமய (திராவிட சமய) தத்துவங்களை பிரதிபலிப்பவர்களாக, இச்சமயத்தை பாதுகாப்பவர்களாக தேவைப்படுகின்ற மக்களுக்கு சமயக்கருத்துக்களை விளக்குபவர்களாக திகழ்கின்றவர்கள் இவர்கள் தான். ஆக இவர்களுடைய பொறுப்பக்களும் செயல்பாடுகளும் பயனளிக்கக்கூடிய வகையில் கேள்விக்குள்ளாக்கப் படவேண்டும்.

துறவிகள் தான் எல்லாபந்த பாசங்களையும் துறந்தவர்களாகி விட்டனரே. பிறகு அவர்களுக்கு எப்படி கடமைகள் வந்து சேர முடியும் என சிலர் நினைக்கலாம். பட்டினத்தாரை குருவாக ஏற்று துறவு பூண்ட பத்திரகிரியார், ஒரு முறை மனம் இறங்கி பசியால் வாடிய ஒரு நாய்க்கு உணவு போட அந்த நாய் அவருடனேயே தங்கி விட்டதாம். ஒரு நாள் பசியோடு வந்த ஒருவர் பட்டினத்தாரிடம் உணவு கேட்க, அதற்கு அவர், 'என்னிடம் ஏது உணவு. என்னுடைய சீடன் சம்சாரியாக வாழ்கின்றான். அவனிடமே உணவு கேளுங்கள்' என்று கூறியதாக சித்தர் கதை கூறுகின்றது.

அதைப் போல இன்றைய வாழ்க்கையில் ஒருவர் துறவியாகி குடும்ப பந்த பாசங்களை விடுத்து வாழ நினைக்கின்ற போது அவருக்கு சீடர்களும் பக்தர்களும் படிப்படியாக வளர்ந்து அவரையும் ஒரு வகையில் 'குடும்பஸ்தராகவே' ஆக்கிவிடுகின்ற நிலை தான் இருக்கின்றது. துறவிகள் மடங்களில் இருக்கின்றனர்; மடாதிபதிகளாக இருக்கின்றனர், ஆதீன ஊழியர்களாக, சேவகர்களாக, தலைவர்களாக என பல வகையில் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றனர். ஊர் ஊராகச் சென்று சமய விளக்கங்கள் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். அனாதை ஆசிரமங்கள் அமைத்து ஆதரவற்று இருக்கின்ற உயிர்களுக்கு உதவுபவர்களாக இருக்கின்றனர். மருத்துவமனைகளும் கல்விக் கூடங்களும் அமைத்து கல்வி புகட்டும் நிருவன அதிகாரிகளாகவும் செயல்படுகின்றனர். மேலும் சில துறவிகள் வேறு யாருடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் தனது வயிற்றுப் பசிக்கு மாத்திரம் வீடு வீடாக, கோயில் கோயிலாக ஏறி இறங்கி தனது வாழ்க்கையை தனிமைப் படுத்திக் கொண்டு விட்டு யாருக்கும் தெரியாமல் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் துறவியரும் உண்டு.

இப்படி பல தரப்பட்ட துறவிகள் நம்மில் உலவினாலும், பொது மக்களின் எதிர்பார்ப்பு என்பது, துறவிகள் தங்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற கஷ்டத்தை நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே! தத்துவங்களை உணர்ந்தவர்கள் இறைவனுக்கும் தனது ஆன்மாவிற்கும் தூது போக ஒரு இடைப்பட்ட ஒருவரை தேட மாட்டர்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் சமய தத்துவங்களை உணராமல் இருப்பதாலேயே தனக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு உறவு பாலம் அமைக்க ஒருவரைத் தேடுகின்றனர். சமய வாதிகளும் ஞானிகளும், முனிவர்களும் உலக, ஆன்ம தத்துவத்தை விளக்கி இறைவனை உணரவும் அனுபவிக்கவும் வழிகாட்டுபவர்கள் என்பதை மறந்து, மக்கள் சுயலாபம் தேட இவர்களை அனுகலாம் எனும் சிந்தனைப் போக்கை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையிலேயே, கோயில் அர்ச்சகர்கள், குருமார்கள் துறவிகள் என கோயிலுக்கும், இறைவனுக்கும் தொடர்பு உள்ளவர்களாகத் திகழ்பவர்களை தங்களது துன்பங்களைப் போக்க உதவுபவர்கள் என நினைத்து தங்களுக்குள் எதிர்ப்பார்ப்புக்களை வளர்த்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்கும் இந்த எதிர்பார்ப்பு ஒன்றாகச் சேரும் போது அது சமுதாயத்தின் எதிர்பார்ப்புக்களாக விரிவடைகின்றது. இந்த விளவே அவர்களையும் பொறுப்புதாரியாக்கி விடுகின்றது. எந்த மடங்களுக்குள்ளும் அல்லது கட்டமைப்புக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தனது சுய தேடலை மட்டும் பார்த்து கொள்கின்ற துறவிகளைப் பற்றி பேசுவதற்கு தனிப்பட்ட மனிதர்களான நமக்கு உரிமை கிடையாது. இறை தேடல் என்பது பிற மனித தொடர்பற்று தனிமைப்பட்டு போகும் போது அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு போகின்றது. ஆனால், துறவிகள் தங்களை ஒரு மடத்தோடு/இயக்கத்தோடு சேவை செய்கின்ற இயக்கத்தினோடு ஐக்கியப்படுத்திக் கொண்டு தனது சுய தேடலை தொடங்கும் போதே, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பெரும் பொறுப்பினை ஏற்கின்ற நிலையை அடைகின்றனர்.

அந்த வகையில் பல தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களினூடே உலக மெங்கிலும் இந்து சமய நெறிகளை பரப்புகின்ற சமய பீடங்களாக பல இயங்கிவருகின்ரன. உதாரணமாக ஹவாய் சைவ சித்தாந்த பீடம், சாய்பாபா நிறுவனம், பிரம்ம குமாரிகள் சங்கம், தெய்வீக வாழ்க்கை சங்கம், காஞ்சி காமகோடி பீடம், சைவ சித்தாந்தப் பெறு மடங்கள், பங்காரு செவ்வாடை சக்தி இயக்கம், வைணவ மடங்கள், இராமகிருஷ்ண மடங்கள், விஷ்வ ஹிந்து பரிஷத், என்பவை தனது சேவையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவை. இந்த மாதிரியான பீடங்களும், இயக்கங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட, பல்லாயிரம் மக்களுக்கு சேவை செய்ய தம்மை தயார் நிலையில் வைத்திருக்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டியது கட்டாயமாகின்றது. அதோடு இந்த பீடங்கள் தனது சேவையை ஆற்றுவதற்கு பல தகுதியானவர்களை (துறவு சிந்தனையே உயர் தகுதியாக கருதப்படுகின்றது) பொறுப்புக்களில் அமர்த்தி காரியங்கள் முறையாக செயல்பட திட்டங்களை அமைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதனால் அந்த பீடத்தை பிரதிநிதிப்பவர்களாக பீடாதிபதிகள் மட்டுமின்றி அதில் உள்ள அனைத்து செயலவையினரும், சேவகரும் ஆகிவிடுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தங்கள் பொறுப்புக்களை காலமும் தேவையும் அறிந்து செய்ல்படுபவர்களாக இருக்கும் போதே அவர்களது கடமையில் வெற்றி பெற்றவர்களாக ஆகின்றனர்.

பொதுவாக ஒரு இந்து சமய பீடம் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை?

1.தத்துவ வகுப்புக்களை நடத்தி மக்களுக்கு சமய ஞானம் வழங்குவது.
2.தியான பயிற்சி வகுப்புக்கள் நடத்தி மக்களுக்கு மனதை ஒரு நிலைப்படுத்த பயிற்சி வழங்குவது.
3.குழந்தைகளுக்கு சமய நெறிகளை போதிக்கும் மையங்களாக விளங்குவது
4.மனக்குழப்பம் / மனக்கிலேசம் கொண்டு தவிக்கின்றவர்களுக்கு உளவியல் ஆலோசகர்களாக விளங்குவது
5.ஆலயங்களை முறையாக நிர்வகிப்பதற்கான பாடங்களை போதிப்பது
6.சிதலப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்ற ஆலயங்களை புதுப்பித்து பாதுகாப்பது
7.கல்வி மையங்களை உருவாக்குவது, ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வியினை அமைத்துக் கொடுப்பது
8.இலவச மருத்துவ வசதிகளை தேவைப் படுவோருக்கு ஏற்படுத்திக் கொடுப்பது
சேவை திட்டங்களை வகுத்து முறையாக செய்ய முனையும் போது 2 வகையில் மடாதிபதிகள்/துறவிகள் தனது கடமையில் வெற்றி பெறுகின்றனர்.

1.மக்களுக்கு சேவை செய்த ஆத்ம திருப்தியை அடைவது
2.தேவையற்ற மூட நம்பிக்கைகளை போக்கி அறிவார்ந்த உயர்ந்த பன்பினை மக்களிடையே வளர்ப்பது.
இந்த வகையில் வெற்றிகரமாக செயலாற்றுகின்ற ஒரு மடத்தினில் தங்கி இருந்து அனுபவம் பெறும் வாய்ப்பு இறைவன் திருவருளால் எனக்கு சென்ற டிசம்பர் மாதம் கிட்டியது. ஒரு வார காலம் கோயம்பத்தூரிலுள்ள பேரூர் சாந்தலிங்கர் மடத்திற்கு சென்றிருந்தேன். மடத்தினுள் நுழையும் போதே முதலில் தென்படுவது, அதன் கல்லூரி வளாகம். மார்கழி காலை வேளையாதலால் காலை 4 மணியிலிருந்து திருப்பள்ளியெழுச்சியை மடத்தில் தங்கியிருக்கும் சிறார்களும் இளைஞர்களும் பாட ஆரம்பித்து விடுகின்றனர். காலை 8:00 மணிக்கெல்லாம் வளாகத்தைச் சுற்றிலும் இளம் மாணவர்கள். சுமார் 2000 மாணவர்கள் படிக்கின்ற கல்லூரி. அதனை 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் சாந்தலிங்க இராமசாமி அடிகள். இப்போது இளைய சுவாமிகள் மருதாசல அடிகள் அவர்கள் இக்கல்லூரியை நிர்வகித்து வருகின்றார்.

இந்த மடத்தையும் கல்லூரியையும் பாதுகாத்து வருகின்ற சாந்தலிங்க சுவாமிகள் துறவிகள் சங்கத் தலைவராகவும் இருந்து பல வகையில் தமிழ்/சைவ மடங்களுக்குள் ஒருங்கினைப்பினை ஏற்படுத்த பல முயற்சிகளும்செய்து வருகின்றார். இதுவரை ஏறக்குறைய 1000 பழம் கோயில்களை தேடிப்பிடித்து அவற்றை புணரமைப்பு செய்வதிலும் வெற்றி கண்டவர் இவர். மடத்திற்கு வருகின்ற அறிஞர்கள் பலரையும் அவரகளது திறமைக்கேற்ற பயன்படுத்திக் கொள்வதிலும் சிறந்தவர். நான் அங்கிருந்த சமயத்தில் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு கனினி சம்பந்தப்பட்ட சொற்பழிவுகளை செய்யுமாறு பணித்து என்னையும் அம்மாணவர்களுக்கு சேவையாற்ற வைத்தவர். குழந்தைகளோடு அன்போடு பழகுகின்றார். கல்லூரியின் முதல்வராக ஒரு பெண்மணி இருக்கின்றார். ஆண் பெண் எனும் பாகுபாடற்ற வகையில் அருகில் இருக்கின்ற ஆலயத்தில் இளைஞர்களே ஆலய வழிபாட்டினைக் கவனிக்கின்றனர். மடத்தின் சார்பாக ஒரு தேவார பயிற்சி நிலையமும் இருக்கின்றது.

இம்மடத்தின் இளைய சுவாமிகளாக இருக்கின்ற மருதாசல அடிகளார் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞர். மேலும் மேலும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் மிகுந்து காணப்படுகின்றார். கனினித் தொழிற் நுட்பத்தை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து கல்லூரி பாடத்திட்டத்திலும் இணைத்து மாணவர்கள் கனினித் துறையில் பட்டம் பெற ஏற்பாடு செய்திருக்கின்றார். சுறுசுறுப்பும் செயல்திறமும் மிக்க மனிதராக, ஆன்மீகத் தொண்டராக விளங்குகின்றார்.

இது போல எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போக முடியும். ஒரு இனிய குடும்பத்தில் தங்கியிருந்த அனுபவத்தைப் பெற்ற மகிழ்ச்சியோடும் உள திருப்தியோடும் எனக்கு அங்கிருந்த நாட்கள் கழிந்தன. லண்டனிலுள்ள நண்பர் சிவப்பிள்ளையும் இப்படிப் பட்ட நல்ல அனுபவத்தை அந்த மடத்தில் அனுபவித்ததாக என்னிடம் கூறுவார். ஏதோ ஒரு மடத்திற்கு சாமியாரைப் பார்க்கச் செல்கின்றோம் என்ற உணர்வை விட சொந்த வீட்டிற்கு செல்கின்ற மகிழ்ச்சியும் மன சாந்தியும் இங்கு சென்று வருபவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

காவி உடைக்கு உதாரணமாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் இயங்குகின்ற இந்த மடத்தின் செயல் பாடுகள் செல்பவர்களுக்கு மன சாந்தியை அளிக்கின்றது. இதே போல நல்ல வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற பல மடங்கள் இருக்கின்றன. மறைந்த குன்றக் குடி அடிகளாரும் அவரது மடம் இருக்கின்ற சுற்று வட்டாரத்தில் ஒரு பெரும்

சமயப் புரட்சியை ஏற்படுத்தி, அடிநிலையில் இருக்கின்ற மக்களுக்கு சேவை செய்தவர் என்பதையும் அவரது சேவையையின் பலனை அனுபவித்தவர்கள் மறுக்க முடியாது. இராமேஸ்வரத்தில் இயங்குகின்ற ஒரு மடம். அதனை நிர்வகிக்கின்ற அடிகள் அவரது அனுபவங்களையும் சேவைகளையும் விளக்கிய போது எவ்வளவு இடர்பாடுகளுக்கிடையில் எதிர்ப்புக்களுக்கு இடையில் இவர்கள் தன்னலம் கருதாது உழைக்கின்றனர் என்பது பிரமிக்க வைத்தது.

திராவிட சமயத்தின் முக்கிய பிரதி நிதிகளாக விளங்குபவர்கள் துறவிகள். அவர்களை பல வகையில் தூற்றுவதோஇழிவு படுத்துவதோ, நாமே நமது முகத்தில் கரியை பூசிக் கொள்வதற்கு சமமாகும். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு வர்ணம் படும் போது எப்படி நிறம் மாறி விடுகின்றதோ அது போல பல சமய நெறியாளர்கள் இருக்கின்ற இந்த அகன்ற பாரதத்தில் சில முறையற்ற போலி சாமியார்கள் உலவுவதால் பல கேடுகள் விளைகின்றன. அதனால், காவி உடைக்கு இருக்கும் புனிதம் கெடுகின்றது. இந்த புனிதம் கெடாமல் பாதுகாக்க வேண்டியது இந்த சமயத்தைச் சேர்ந்த நம் ஒவ்வொருவரது கடமையும் ஆகின்றது.

என்னுடைய அனுபவத்தில் இப்பொழுது இருக்கின்ற மடாதிபதிகளில் சிலர் திறந்த மனப்பான்மையோடு தங்கள் சேவையை புரிகின்றனர். அறிஞர்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் வரும் போது அதனை ஏற்று செயல்படுத்தும் உளப் போக்கும் உடையவர்களாகவே இருக்கின்றன்ர். அதனால் திராவிட சமய பற்றாளர்களாக நம்மைக் கூறிக் கொள்கின்ற நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து செயல்படுதல் முக்கியமாகின்றது. அன்பே சிவம் என்பது திராவிடக் கொள்கையின் அடிப்படை. அன்பினால், ஒற்றுமையால் அறிவுத் திறமையால் சாதிக்க முடியாதது எதுவும் உலகில் இல்லை. ஒட்டு மொத்தமாக காவி அணிந்தவர்கள் ஏமாற்று வாதிகள் என குற்றம் சுமத்துவது உண்மையை உள்ளவாறு காணத்தெரியாது நமது மணம் நினைப்பதை திணித்து திரித்துக் கூறுவதாகவே ஆகிவிடும். எது சரி, எது தேவை, எப்படி உயர்வடையலாம் என காரண காரியத்தோடு சொல்லும் வகையில் சொல்கின்ற போது மாற்றம் படிப்படியாக ஏற்பட வழி பிறக்கின்றது.

நமது சமயக் கொள்கைகள் அறிவை வளர்க்கின்ற தன்மை படைத்தவை; காலத்தின் தேவைக்கேற்ப மனித குல வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகளைக் கொண்டவை. அக்கொள்கைகள் மனித குலத்திற்கு பயன் பெறுவதற்கு, நல்ல வகையில் இயங்குகின்ற சமய மடங்களை இணம்கண்டு ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு சேர்ந்து வளர்வது நிச்சயம் நன்மை பயக்கும்.


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment