Date: Thu, 9 May 2002 03:30:41 -0700 (PDT)
From: "suba k."
Subject:Upanishad - Jaabolaaba Upanishad (Part 2)
To: meykandar@egroups.com
மூன்றாம் காண்டம் - சுருக்கம்:(2)
குரு யாக்ஞவல்கியரை நோக்கி அவரது சிஷ்யர்கள் 'எதை' ஜபம் செய்வதன் மூலம் ஒருவர் சாகா நிலை என்னும் அம்ருதத்வம் அடைய முடியும் என வினவுகின்றனர். அக்கேள்விக்கு அவர் அளிக்கின்ற பதிலே இந்த மூன்றாம் காண்டமாக அமைகின்றது. ஸ்ரீ ருத்ரத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற சிவநாமங்களாகிய சதருத்ரீய மந்திரத்தை ஜபிப்பதனாலே ஒருவர் சாகா நிலையினைப் பெற முடியும் என அதற்கு யாக்ஞவல்கியர் பதில் கூறுகின்றார்.
குறிப்பு: ஸ்ரீருத்ரம் ருத்ரோபநிஷத் மற்றும் சத ருத்ரீயம் என்ற மற்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது. இதில் சிவ பஞ்சாட்சர மந்திரம் அடங்கியுள்ளது.
தொடர் சிந்தனை:
மனிதர்கள் தம்மை எப்போழுதுமே அழிகின்ற ஒரு பொருளாக நினைப்பதில்லை. தன்னைச் சுற்றி பல மாற்றங்களும் பேரிடர்களும் பெரு நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதிலும் தன்னை நித்திய சொரூபமாகவே, இயற்கையாகவே மனித உள்ளம் நினைக்கின்றது. வாழ்க்கை அனுபவங்கள் நமது சுற்றங்களின் பிரிவையும் மரணங்களையும் நமக்கு காட்டிக் கொண்டேயிருப்பினும் அணையற்ற நதிபோல அன்றாட அலுவல்களிலும் எதிர்கால திட்டங்களிலும் மூழ்கி வேகமாக நம்மை இழுத்துக் கொண்டு ஓடுவதே இயல்பாக இருக்கின்றது. ஏன் இவ்வாறு?
அடிப்படையில் மனிதன் அழிகின்ற பொருளன்று. ஒரு உடலைக் காட்டி அது மனிதன் எனும் போது அங்கே நாம் அழிகின்ற ஒரு ஸ்தூலப் பொருளைச் சுட்டுகின்றோம். ஆனால் உண்மையில் மனிதன் என நாம் குறிப்பிடுவது அந்த உடம்பிற்குள் மறைந்தும் மறையாமல் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்ற ஆன்மா என்ற ஒன்றினையே. ஆன்மா அழிவற்றது; பிறப்பு இறப்பு அற்றது; பிறப்பும் இறப்பும் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கு அன்று. 'தூங்குவது போலும் சாக்காடு, தூங்கி விழிப்பது போலும் பிறப்பு' எனும் கூற்று விளக்குவது போல எண்ணற்ற பிறப்பு இறப்புக்களை அனுபவிக்கும் தன்மை கொண்டதாகவே ஆன்மா அமைகின்றது. இதன் அடிப்படையிலேயே தான் ஆன்மாவிற்குத் தான் முடியப்போகின்றோம், அல்லது இல்லாமல் ஆகப்போகின்றோம் என்ற சிந்தனை இல்லாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக, புரிந்தோ புரியாமலோ ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு உடலைக் கருவியாகக் கொண்டு இயங்கிக் கொண்டேயிருக்கின்றது.
இந்த இயக்கம் முக்தி எனும் சாகாப் பெரு நிலையை அடையும் வரை இயங்கிக் கொண்டிருப்பது. இப்பெரு நிலையைப் பெருவது எப்படி என்பதே கேள்வி. அதற்கு ஜபம் செய்தல் ஒருவழியாக இப்பகுதியில் உறைக்கப்படுகின்றது.
ஜபம் செய்வதற்கு மந்திரங்கள் தேவை. மந்திரங்கள் பல வகை. ஒவ்வொரு தெய்வ வடிவத்திற்கும் ஒரு மந்திரம் உண்டு. தெய்வ வடிவம் என்பது மனிதரால் உருவாக்கப்படுகின்ற ஒன்று அல்ல; அது இறை சக்தி தன்னை பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு வெளிப்படுத்திக் காட்ட, அவர்கள் உருவகிக்கின்ற ஒன்று என்பதை எனது முந்தைய கட்டுரைகளில் ஒன்றினில் குறிப்பிட்டுள்ளேன்.
ஒவ்வொரு தெய்வ வடிவத்திற்கும், அவ்வடிவத்திற்கான மூல மந்திரமும் யந்திரமும் உண்டு. இந்த யந்திர மந்திரங்களினால் அவ்விறை சக்தியை வெளிப்படுத்தி அதனோடு நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் முக்தியினை விழைகின்ற ஆன்மாக்களுக்குத் தேவையான மந்திரமாக இங்கு மூல மந்திரமாகிய பஞ்சாட்ஷர மந்திரம் உறைக்கப்படுகின்றது.
பஞ்சாட்சரம் என்பது 'நமசிவய' எனப்படும் ஐந்தெழுத்து மந்திரம். இந்த ஐந்தெழுத்துக்கள் ஒவ்வொன்றும் தத்தமக்கென ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்துவன. இம்மந்திரத்தை உச்சரிக்கும் முறை 'சிவாயநம' என்பதாகும். இப்பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பதால் உண்டாகும் நிலையை இப்படி விளக்குகின்றார் திருமூலர்:
வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே யருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே
"நமசிவாய மந்திரத்தை ஜெபிப்பதால் இறை அருள் பெற்று திருக்கூத்தினைக் கண்டு மகிழலாம்; இதனால் ஆன்மா முற்றிலும் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறும்," என்பதே இதன் விளக்கம்.
இவ்வைந்தெழுத்துக்கள் தவிர ஆனந்தத்தின் இருப்பிடமாக உள்ள மற்ற பீஜ மந்திரங்கள் ஆ, ஈ, ஊ, ஏ,ஓ என்பன. (தமிழெழுத்துக்களின் உயிரெழுத்துக்களில் இவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது)
இந்த பீஜ மந்திரங்களைத் திருப்பித் திருப்பிப் போட்டு பஞ்சாட்ஷ்ர மந்திரத்தினோடு உச்சரித்து ஜபிக்கும் போது ஆனந்த லய அனுபம் கூடும் எனவும் திருமூலர் கூறுகின்றார்.
கூத்தே சிவாய நமசி வாயிடுங்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-சிவாயநம வாயிடுங்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம்-நமசிவாய வாயிடுங்
கூத்தே இ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோளொன்று மாறே.
இதைப் போன்ற பல பாடல்கள் திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சிவ மந்திரங்க்களை பிரித்துப் பிரித்து ஒவ்வொரு பீஜமந்திரங்களின் தன்மைகளையும் அதனை ஜபிக்கும் முறையினையும், அதனால் ஏற்படும் பலனையும் விளக்குவனவாக உள்ளன். சிவ மந்திரங்களோடு சக்தி மந்திரங்களும் பல வகையில் இங்கு விளக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மந்திரங்களை ஜெபிப்பது கிரியா வழிபாட்டின் ஒரு கூறு. எந்த மந்திரத்தை ஒரு ஜீவன் உச்சரித்து உரு செய்து அதற்குள்ளேயெ தன்னை ஆட்படுத்திக் கொள்கின்றதோ, அந்த மந்திர சக்தியின் அருள் நிறம்பப்பெற்ற ஜீவனாகவே அஜ்ஜீவன் மாறிவிடுகின்றது. உலகமே மந்திர வடிவம். அதன் ஒரு சிறு கூறே மனிதர்களாகிய நாம்.
சாகாப்பெரு நிலையை அடைவதற்கான வழிகள் பல வகையில் ஞானிகளாலும் குறிப்பாகச் சித்தர்களாலும் ஆராயப்பட்ட ஒன்று. ஐம்பூதங்களால் ஆன இவ்வுடலை எவ்வாறு தூல வடிவிலிருந்து
கழற்றி எடுத்து சூக்கும நிலையிலேயே தக்க வைத்துக் கொண்டு பேரானந்தத்தில் மூழ்கிக் கிடக்கச் செய்வது என்பதே இவர்களின் தேடல். அண்மைய காலத்தில் இதற்கு ஒரு உதாரணம் காட்டியவர் அருட்பிரகாச வள்ளலார். இவரின் மறைவைப் பற்றி பற்பல கதைகள் இருப்பினும், இவரது ஆத்ம பயிற்சிகள் தூல உடலை பஞ்சபூதங்களோடு கலக்கச் செய்து இவருக்குச் சாகாப் பெரு நிலையை வழங்கி இருப்பதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன என்பது சித்தர் ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தெரிந்த ஒன்று. இவ்வாறு மானிட உடல் நீங்கப்பெற்ற இவர்கள் இன்றளவும் வாழ்கின்றார்கள்
என்பதுவும் ஆச்சரியம் கலந்த ஒரு உண்மை. சாதாரணமாக இச்செய்திகளை படிக்கும் போது நம்ப முடியாத ஒன்றாக இருப்பினும், மேலும் மேலும் இத்துறையில் ஆய்வு செய்யும் போது மனித அறிவுக்கு எட்டாத பலப்பல உண்மைகள் தெரிய வருகின்றன என்பது உண்மை.
உடல் நீங்கப் பெற்ற, சாகாப் பெரு நிலை எனக்கு எதற்கு வேண்டும்? நன்றாகத் தானே நான் இருக்கின்றேன் என நாம் நம்மையே கேட்டுக் கொள்ளலாம். உலகத்தில் தானே எல்லா இன்பங்களும் கிடைக்கின்றன. அவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்ட பிறகு ஏன் இந்த நிலை வேண்டும்?
முக்தி எதற்காக? இப்படி பலரும் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றோம். உடல் இருக்கும் வரை அபிலாஷைகளுக்கு எல்லையில்லை. அபிலாஷைகள் ஒன்று நிறைவேறும் பொழுதே அடுத்த ஆசை ஒன்று பிறக்கின்றது; எதிர்பார்ப்புக்களும் பிறக்கின்றன. எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத பொழுது விரக்தி தோன்றுகின்றது. இந்த நிலையில் தானே மனிதனின் வாழ்க்கை பெரும் பாலும் இருக்கின்றது.
வெளியே சந்தோஷ சட்டை மாட்டி முகமெல்லாம் புன்சிரிப்போடு என்றும் இருக்கும் மனிதருக்குள்ளும் வேதனை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. உண்மை என்னவெனில் யாரும் தனது மன வேதனைகளை கஷ்டங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதே. பார்ப்பதற்கு நம்மை விட மற்றவர் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகத் தோன்றும். ஆனால் அந்த 'மற்றவர்' படும் பாடு அவருக்குத் தான் தெரியும். ஆக அந்த் ரீதியில், அரசனோ ஆண்டியோ எல்லோரும் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியவர்களே, வேதனைகளுள் உழல வேண்டியவர்களே.
பிறப்பு இருக்கும் வரை இந்த சுழற்சிக்கு ஒரு முடிவில்லை; பிறப்பு இருக்கும் வரை உண்மையான பேரானந்தத்தை அனுபவிக்க வழியில்லை. இதனைக் கருத்தில் கொண்டே ஆசைகளைக் கடக்க முயற்சிப்பவர்கள் சாகா பெரு நிலையை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.உண்மை என்னவெனில் நாம் எல்லோருமே ஒரு வகையில், அந்த முயற்சியில் தெரிந்தோ தெரியாமலோ இறங்கி விட்டவர்கள் தான்.
நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டுன்
பேரில் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்?
பிறப்பும் இறப்பும் அற்றுப், பேச்சும் அற்று, மூச்சும் அற்று,
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது எக்காலம்?
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]
தொடரும்.....
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment