Tuesday, December 19, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 141

உ.வே.சா அவர்கள் சிவவழிபாட்டினைக் குடும்பப்பின்னனியாகக் கொண்டவர். அவரது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடமும் பின்னர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடமும் அவர் அடிப்படைத் தமிழ்ப் பாடங்களைக் கற்றபோது பெரும்பாலானவை தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களுடன் சமயம் என வரும் போது சிவ வழிபாட்டினையும் சில வைஷ்ணவ சமய சம்பந்தமான தத்துவ நூல்களையே பாடமாகக் கற்றிருந்தார்.

முதலில் சீவக சிந்தாமணிக் காப்பியத்தை அச்சுப்பதிப்பாக வெளியிட அவர் முயற்சியைத் தொடக்கியபோது சமண மதச்சார்பு கொண்ட அதனைப் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமத்தை அவர் எதிர்நோக்கினார் என்பதனையும் பின்னர் பற்பல சமண அறிஞர்களின் நட்பு ஏற்பட அதன் வழி தனது ஐயங்களைப் போக்கிக் கொண்டு சமண சமய அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்து கொண்டு அவர் சீவக சிந்தாமணி அச்சுப்பதிப்பை வெளியிட்டார் என்பதையும் முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அதே போன்ற பிரச்சனையே மணிமேகலை நூல் அச்சுப்பதிப்பு வெளியீட்டிலும் உ.வே.சா அவர்களுக்கு ஏற்பட்டது. தனக்குக் குடும்பப் பின்னனியோ அல்லது கல்விப் பின்னணியோ இல்லாத ஒரு சமயமாக புத்த சமயம் இருந்தது. மணிமேகலை ஒரு பௌத்த காவியம். ஆக அதனைச் சுவடியில் இருப்பது போல வரிக்கு வரி அப்படியே பதிப்பிக்காமல், மணிமேகலை உள்ளடக்கியுள்ள பௌத்த தத்துவங்களைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சொற்களின் பொருளையும் செய்யுட்களின் பொருளையும் விவரித்து எழுதி நூலை அவர் தயாரித்திருந்தார். அதில் இலங்கையிலிருந்து அவருக்குப் பௌத்த அறிஞர்கள் சிலரது உதவியும் தமிழகத்திலும் மளூர் ரங்காச்சாரியார் போன்ற அறிஞர்களின் உதவியாலும் பௌத்த சமயப் பின்னணியை அவர் புரிந்து கொள்ள நல்வாய்ப்பு கிட்டியது.

மணிமேகலை செய்யுட்களுக்கு விளக்கம் அளிப்பது போலமே அதன் வரலாற்றைக் கதையாக எழுதி இணைக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்திருந்தார். நூலில் இணைத்து வெளியிடுவதற்காகக் கதைச் சுருக்கம் ஒன்றைத் தயாரித்தார். பொதுவாக அக்காலத்துத் தமிழறிஞர்கள் மத்தியில் பௌத்த மரபுகள் வழக்கில் அருகிக் குன்றிப்போயிருந்தமையால் அவற்றை இந்த நூலின் வழி வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையும் அவருக்கு எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு மணிமேகலை அச்சுப்பதிப்பின் குறிப்புரையில் பௌத்த தத்துவங்களை ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் இணைத்திருந்தார். ஆனாலும் தான் அறிந்து கொண்ட பௌத்த தத்துவங்களைத் தனியாக எழுதி வெளியிடவேண்டுமென்றும் அவருக்கு ஆர்வம் மேலிட்டது.

தனது கலந்துரையாடல், வாசிப்பு ஆகியவற்றிலிருந்து தொகுத்த எல்லாத் தகவல்களையும் இணைத்து உ.வே.சா ஒரு தொகுப்பாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

பௌத்தர்கள் மரபின் அடிப்படையில் புத்தர், பௌத்த தருமம், பௌத்த சங்கம் ஆகிய மூன்றும் மும்மணிகள் எனப் போற்றப்படுவன. தான் இதுவரை தனது மணிமேகலை ஆய்விற்காகச் சேர்த்துத் தொகுத்து வைத்திருந்த தகவல்கள் அனைத்தையும் தொகுத்து பௌத்த மும்மணிகள் பற்றி எழுதத் தொடங்கினார் உ.வே.சா. தான் எழுதி வரும் பகுதிகளை அவ்வப்போது மளூர் ரங்காச்சாரியாரிடம் காண்பித்து அதில் உள்ள கருத்துப் பிழைகளைக் கேட்டறிந்து செப்பம் செய்து வந்தார். இந்தப் பதிவில் வசன நடையுடன் செய்யுட்களையும் இணைத்திருந்தார் உ.வே.சா.

1896ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அச்சுக்கூடத்தில் தனது முதல் தயாரிப்பினைக் கொடுத்திருந்தார் உ.வே.சா. அதனை அடுத்து இரு ஆண்டுகள் நூலின் பிற பகுதிகளைச் செப்பனிடுவதில் அவர் கவனம் இருந்தது. நூலின் செய்யுட்களோடு மணிமேகலை நூலுக்கான முகவுரை, புத்தரின் வாழ்க்கைச் சரித்திரம், பௌத்த தர்மம், பௌத்த தத்துவங்கள், சங்கம் ஆகியவற்றோடு மணிமேகலையின் வாழ்க்கைக் கதைச் சுருக்கத்தையும் எழுதித் தயாரித்து முடித்திருந்தார். இவையனைத்தையும் முடிப்பதற்கு 2 ஆண்டுகள் ஆகின.

1898ம் ஆண்டு ஜூலை மாதம் மணிமேகலை முழுமையான அச்சுப்பதிப்பாக வெளிவந்தது.

'புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்' என்ற நூலும் இந்தக் கடும் உழைப்பால் அதே ஆண்டு வெளிவந்தது

சீத்தலை சாத்தனார் என்ற பௌத்த அறிஞர் எழுதிப் பல காலங்களாகப் பனை ஓலைச்சுவடியிலேயே பிரதி எடுத்துப் பாதுகாத்து வரப்பட்ட தமிழ்க் காவியமான மணிமேகலை தெளிவான விளக்கங்களுடன் அச்சுப்பதிப்பாக தமிழ் உலகில் மலர்ந்தது.

தொடரும்..

சுபா

Monday, December 18, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 140

இதுவரை பதிப்பித்த ஏனைய நூல்களின் பணியை விடவும் மணிமேகலை அச்சுப் பதிப்புப் பணி உ.வே.சாவிற்கு மிகக் கடினமானதாகவே இருந்தது. ஆயினும் அறிஞர்கள் பலரது ஊக்கச் சொற்கள் அவரை இந்தப் பெரும் பணியைத் தான் செய்தே முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னர் குறிப்பிட்டது போல மணிமேகலையை 1891ம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை என்பவர் ஏட்டுச் சுவடியிலிருந்து பெயர்த்து அச்சு நூலாக்கி வெளியிட்டிருந்தார். அது எந்த விளக்கமும் குறிப்புக்களும் இன்றி அப்படியே சுவடியிலிருந்தமை அச்சு வடிவத்தில் என்ற வகையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அச்சுப்பதிப்பு வெளிவந்து 7 ஆண்டுகள் முடிந்திருந்தன. உ.வே.சாவின் நட்புச் சூழலில் அந்த நூல், வாசிப்போருக்குப் பயனளிக்காது என்ற கருத்து நிலவி வந்தது. அரும்பத உரைகளும், நூல் உரையும் சேர்த்து விரிவாக நூல் அமைந்தால் தான் வாசிப்போருக்கு மணிமேகலையை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு உ.வே.சா தன் ஆய்வினுள் மூழ்கிக் கிடந்தார்.

மணிமேகலையில் சமயக் கணக்கர் தந்திரம் கேட்ட காதை என்று ஒரு பகுதி உள்ளது. இது பிற சமய தத்துவங்களை விளக்கும் ஒரு பகுதி. அதே போல தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதை என்ற ஒரு பகுதியும் உள்ளது. இந்தப் பகுதியில் பௌத்த மதத்தின் அளவை இலக்கணம் விளக்கப்படுகின்றது. இந்த இரண்டு பகுதிகளுக்கும் குறிப்புரை எழுதுவது என்பது மிகச் சிரமமான பணியாகிப் போனது உ.வே.சாவிற்கு.

பௌத்த ஞானத்தைப் பின்புலமாக கொண்டவர்களின் உதவியோடு வடமொழி தர்க்க சாத்திரங்களை அறிந்தோரிடமும் கலந்து பேசி இவற்றிற்கான விளக்கங்களைப் பெற்று புரிந்து கொள்ளும் முயற்சியில் உ.வே.சா ஈடுபட்டார். இப்படி வாசித்தும் தத்துவங்களின் பின்னணியைத் தேடிப் புரிந்து கொண்டும், கலந்துரையாடியும் மணிமேகலை காப்பியத்தினை ஆராய்ந்து தனது குறிப்புக்களை எழுதி வந்தார்.

1896ம் ஆண்டின் மத்தியில் மணிமேகலை அச்சுப் பதிப்புக்குத் தயாராகியிருந்தது. ஏறக்குறைய எல்லா எழுத்துப் பணிகளும் முடிந்திருந்தன. சென்னையிலிருந்த வெ.நா.ஜூபிலி அச்சுக் கூடத்தில் இந்த நூலை அச்சிட்டு வெளியிட முடிவாகியது. நூலை எடுத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார் உ.வே.சா.

மணிமேகலையின் அடிக்குறிப்பு பத உரைகளோடு நூல் அச்சாக்கம் பெற்றது. மணிமேகலையைத் தான் பதிப்பித்து முடிப்போமா என ஏங்கிக் கொண்டிருந்த உ.வே.சாவிற்கு இது மாபெரும் சாதனையைத் தாம் நிகழ்த்தியிருப்பதை உணர்த்தியது. சாதாரண மனிதர்களாகிய நாம் அசாதாரணமான காரியங்களைச் செயல்படுத்தி முடிக்கும் போது நமது பலம் நமக்கே புரியத் தொடங்கும். அந்த நிலையில் தான் உ.வே.சாவின் மனமும் அந்தச் சூழலில் இருந்திருக்கும்.

அச்சுப் பதிப்பின் முதல் படிவத்தைப் பார்த்த போது அவர் உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தது. மணிமேகலை அச்சுப்பதிப்பாக்கம் தமிழ் உலகிற்கு உ.வே.சா அவர்கள் ஆற்றிய பணியில் ஒரு மகுடம். சமய பேதங்களைக் கடந்து தமிழின் சிறந்த இலக்கியங்களில் ஒன்றினை பதிப்பித்த பெருமை அது. இதற்காகத் தமிழ் உலகம் உ.வே.சாவிற்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளது என்றால் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?

தொடரும்..
சுபா

Sunday, December 17, 2017

சாதீயம்

'வருமானம் இல்லாமல் குடும்பமே திண்டாடுகிறது: தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை - உடுமலை கவுசல்யாவின் சகோதரர் விரக்தி' என்ற தலைப்பிட்டு பரிதாப அலையை உருவாக்கும் நோக்கத்தில் இந்து நாளேடு ஒரு பதிவினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் ஒரு வரி கூட மிகக் கொடூரமாக கௌசல்யா அருவாளால் வெட்டப்பட்டதையும் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதையும் பற்றி வார்த்தைகள் இல்லை.
வெட்டி கொல்லப்பட்ட சங்கரின் தந்தையும் குடும்பமும் படும் பொருளாதார பிரச்சனைகளை இந்தக் கட்டுரையை எழுதிய நிருபர் எழுதவில்லை. மாறாக சாதிய வன்முறையைத் தூண்டி கொடூர காரியங்களைச் செய்தவர்களின் குடும்ப பின்னனியைச் சொல்லி பரிதாப உணர்ச்சியைத் தேட செய்திருக்கும் இம்முயற்சி கண்டிக்கத்தக்கது.
சாதீய கொடுமைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கொடுமைகள் பல. இன்று ஒரு கொடுமைக்கு சட்டப்பூர்வமாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு சாதி வெறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மனித நேயத்தை மட்டும் வளர்க்க ஊடகங்கள் செயலாற்ற வேண்டும். அதுவே ஊடக தர்மம். அதைவிட்டு எல்லா செய்திகளையும் போடுவோம் என நீதிக்குப் புறம்பாக
அநீதிக்கு பச்சாதாப அலையை உருவாக்கும் இவ்வகைச் செய்திகளை வெளியிடுவது தவறு . இந்து நாளிதழுக்கு எனது கண்டனத்தைப் பதிகிறேன்.
-சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 139

ஜி.யூ போப் எழுதிய கடிதம் உ.வே.சாவிற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அறிஞர்களுக்கு ஊக்க மருந்தாக அமைபவை பாராட்டு மொழிகளும் ஆலோசனைகளும் தானே. ஆக, தனது அடுத்த கடிதத்தோடு உ.வே.சா தனது அச்சுப்பதிப்பாகிய புறப்பொருள் வெண்பாமாலை நூல் பிரதி ஒன்றினை அனுப்பி வைத்தார். அதற்கு 21.10.1895 தேதியிட்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பேலியல் காலேஜிலிருந்து போப்பின் கடிதமொன்று பதிலாக வந்தது. 

அக்கடிதத்தில் அந்த நூல் ஆக்ஸ்பர்ட் நூலகத்தில் இடம்பெறுவதாகவும், தான் உடல் ஆரோக்கியம் குன்றி இருப்பதாகவும், உ.வே.சாவின் பதிப்பு முயற்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டு எழுதியிருந்தார் ஜி.யூ போப். அத்தோடு ”பழந்தமிழ் நூல்களெல்லாம் புதுத் தமிழர்களுக்கு விளங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள்,,,,,,” என்றும் குறிப்பிட்டிருந்தார். 

பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு 3.1.1896 அன்று தேதியிட்ட ஒரு கடிதம் ஜி.யூ போப் அவர்களிடமிருந்து உ.வே.சாவிற்கு வந்தது. அதில் தான் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரு நூல்களையும் படித்து எளிதில் புரிந்து கொண்டு மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தற்சமயம் தான் பாரி, அவன் மகள்கள், கபிலர், கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார், பொத்தியார் முதலானவர்களைப் பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு பல்கலைக்கழகத்தில் சொல்லி ஜி.யூ போப் தான் பதிப்பித்த நாலடியார் நூல் ஒன்றினை ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் சொல்லி அனுப்பியதாகவும் அது உ.வே.சாவிற்கு வந்து சேர்ந்ததா என்றும் வினவியிருந்தார். அந்த நூல் உ.வே.சாவிற்கு வந்து சேர்ந்தது. 

ஐரோப்பிய தமிழ் அறிஞர்கள் மிகத் தீவிரமாகத் தமிழ் கற்றதோடு தமிழ் அச்சுப்பதிப்பாக்க முயற்சியில் செயல்பட்டிருந்தமையை இத்தகைய சான்றுக் குறிப்புக்களின் வழி நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. 

ஜி.யூ போப் எழுதிய  கடிதத்தை வாசித்த உ.வே.சா வின் சிந்தனையை அவரது வரிகளிலேயே வாசிப்பது சுவையானது. இப்படிச் சொல்கின்றார். 

”அவர் அனுப்பச் செய்த நாலடியார் எனக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு ஊக்கத்தோடும் ஆவலோடும் தமிழ் நூல்களை ஆழ்ந்து  படிப்பவரென்பதை இக்கடிதத்திலிருந்து உணர்ந்து கொண்டேன். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், தெரிந்ததைப்  பிறருக்கு விளங்கும்படி வெளியிட வேண்டுமென்ற அவர் கொள்கை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது. பாரிஸ் நகரத்தில் இருந்த ஜூலியன் வின்ஸோனது தமிழன்பையும் ஆக்ஸ்போர்டிலிருந்த போப்பினுடைய தமிழன்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறப்புடையதாக இருந்தது. இருவரிடத்தும் விடா முயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன. நம் நாட்டினரிடத்தில் இக்குணங்கள் இல்லாமையால் சோம்பலுக்காளாகி வாழ்நாளை வீணே கழிக்கின்றனரென்றெண்ணி வருந்தினேன்.” 

அன்று உ.வே.சா மனம் வருந்தியது போன்றே தான் இன்றும் நாம் மனம் வருந்திக் கொண்டிருக்கின்றோம். ஐரோப்பிய தமிழறிஞர்கள் சிலர் நம் தமிழ் மொழியின் பால் ஆர்வத்துடன் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டது போலக்கூட இன்று தரமான ஆய்வுகள் வருவது அருகிவிட்டது. அன்று அந்த அறிஞர்கள் மேற்கொண்ட உழைப்பு இன்று தமிழ் மொழி ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்திலும் ஜெர்மனியிலும் டென்மார்க்கிலும் பாரீசிலும் அறியப்பட்ட உலக மொழியாக இடம்பெறுவதற்கு அடித்தலம் அமைத்த செயல்பாடுகளாக அமைந்தான் என்பதை நம்மில் எத்துணை பேர் அறிந்திருக்கின்றோம்? 

தொடர்ந்து ஜி.யூ போப் அவர்களுக்கு உ.வே.சாவிற்கு கடிதப்போக்கு வரத்து நிகழ்ந்து வந்தது. தாம் புறநானூற்றிலிருந்தும் புறப்பொருள் வெண்பாமாலை நூலிலிருந்தும் பல செய்யுட்கலைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளதாகவும் ஜி.யூ போப் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் இத்தகைய மொழி பெயர்ப்புக்களை வைத்து தனக்கு அவர் புத்தாண்டு செய்தி அனுப்பியதை உ.வே.சா பதிகின்றார். அக்கடிதங்கள் அவருக்கு ஊக்கம் தரும் மருந்தாகவும் அமைந்தன. 

”இத்தகைய உண்மை உழைப்பாளிகளுடைய நட்பினால் தமிழ்ப் பணியில் என் மனம் ஊற்றமடையலாயிற்று. மணிமேகலை ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.”

தொடரும்.

சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 138

ஜி.யூ போப் அவர்கள் தமிழகத்தில் நீண்டகாலம் பணியாற்றி பின்னர் இங்கிலாந்து திரும்பி அங்கு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர். ஜி.யூ போப் என்றே அறியப்பட்ட இவரது முழுப் பெயர் George Uglow Pope என்பதாகும். ஆங்க்லிக்கன் கிருத்துவ மதபோதகராகத் தமிழகத்துக்குப் பணியாற்ற வந்த இவர் 40 ஆண்டுகள் தமிழகத்திலேயே தங்கிவிட்டார். கல்வி மறுக்கப்பட்டோருக்குக் கல்விக்கு வழிகாட்டிய கல்வித்தந்தை என்ற சிறப்புக்கு உரியவர் இவர். இன்று பணம் வாங்கிக் கொண்டு கராராகக் கல்லூரி நடத்துவோரைக் கூட கல்வித்தந்தை எனப் புகழும் காலம் வந்து விட்டது. காலத்தின் கோலம். அது ஒருபுறமிருக்கட்டும்!

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குக் குறிப்பிடத்தக்க தமிழ் நூற்களை மொழி பெயர்ப்பு செய்துள்ளார் ஜி.யூ போப். அதில் திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழி பெயர்ப்பு செய்த பெருமை இவருக்குண்டு. 

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதிக்கு நான் கடந்த ஆண்டு சென்றிருந்த போது ஜி.யூ போப் அவர்களின் பெயரில் இயங்கும் உயர்கல்விக்கூடங்களை பார்வையிட வாய்ப்பு கிட்டியது. இவரைப் பற்றி ஓரளவு நேரிலும் அறிந்து கொள்ள எனக்கு அது வாய்ப்பாகவும் அமைந்தது. 

இந்த சாயர்புரத்தில் தான் 1839ம் ஆண்டு இறைப்பணி ஆற்ற இவர் தமிழகம் வந்து சேர்ந்தார். தமிழகம் வருவதற்கு முன்னரே ஜெர்மானிய பாதிரிமார்கள் உருவாக்கித் தந்த நூல்களின் வாயிலாகத் தமிழ் மொழியை இவர் எழுதவும் வாசிக்கவும் கற்றிருந்தார். தமிழகத்திற்கு வந்த பின்னர் இவரது தமிழ் மொழிப்புலமை மேலும் அதிகரித்தது. நாலடியார் நூலை இவரே அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்தார். அத்தோடு அதனைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வெளியிட்டார். தமிழ் இலக்கண நூலும் தமிழ்ப்பாட நூல்களையும் உருவாக்கினார். 

ஜி.யூ.போப் அவர்களுக்கும் உ.வெ.சாவிற்கும் கடிதப் போக்குவரத்துத் தொடர்பு இருந்தது என்பதை என் சரித்திரம் நூல் வழி அறிகின்றோம். அவரைப்பற்றிக் குறிப்பிடும் போது உ.வே.சா சிறுவர்களுக்குப் பயன்படும் சிற்றிலக்கணம் எழுதியவர் என்று குறிப்பிட்டு 'போப்பையர் இலக்கணம்' என அது தமிழ் நாட்டில் வழங்கியது என்கின்றார். 

தமிழ் கற்ற ஐரோப்பியர்களை 'ஐயர்' என அடைமொழி கொடுத்து அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. பெஸ்கி, நோபிலி, போப் போன்றவர்கள் வாழ்க்கைச் சரிதத்தின் வழி இதனை அறிய முடிகின்றது. 

கல்வி கற்றவர் அல்லது ஆசிரியர் நிலையில் இருப்பவர் என்றால் ஐயர் என்ற அடைமொழி தேவை என்ற எண்ணம் அன்று நிலவியிருக்கின்றது. பல தொடர்ச்சியான சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளினால் தான் இந்த நடைமுறை இன்று ஓரளவு கைவிடப்பட்டுள்ளது. தேவாலயங்களில் சமய நடவடிக்கைகளில் உள்ளோரை ஐயர் என விளிக்கும் முறை சில இடங்களில் இருப்பதாக அறிகிறேன். இன்று ஐரோப்பிய தமிழறிஞர்களுக்கு ஐயர் என்ற அடைமொழியைச் சேர்த்து எழுதும் பாணியை மக்கள் பயன் படுத்துவதில்லை. அது தேவையற்றது பொருளற்றது என்பதை உணர்ந்தவர்களாக நாம் தெளிந்து மாறிவிட்டோம்!

ஜி.யூ போப் அவர்களுக்குப் புறநானூறு வெளிவந்தபின் ஒரு பிரதியை உ.வே.சா அவர்கள் அனுப்பி வைக்க அதற்கு போப்பின் 26.4.1895 என்ற தேதியிட்ட கடிதத்தில் பதில் எழுதுகின்றார். அதில் முன்னரே உ.வே.சா பதிப்பித்த சிந்தாமணி எளிமையாக இருந்ததாகவும், ஆனால் புறநானூறு கடினமாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். இன்னும் எளிமையாகச் சிந்தாமணி போல எழுத முடியாதா என வினவுகின்றார். ஜி.யூ போப் அவர்களது கையெழுத்தில் அவர் குறிப்பிடுவதைக் காண்க. 

“புறநானூற்றை இன்னும் தெளிவு படுத்த முடியாதா? எனக்குத் தமிழ் தெரியுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தாலும் எனக்கு அதில் பல பகுதிகள் விளங்கவில்லை. ஆதலால் இன்னும் தெளிவும் சுலபமுமான நடையில் உரை வேண்டும். பண்டிதரல்லாத என் போலியரிடம் கருணை கொள்ளுங்கள். சிந்தாமணி பெரும்பாலும் சுலபமாகவே இருக்கிறது. அருமையும் பெருமையுமுள்ள தமிழின் பொருட்டுத் தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சித் திறனமைந்த பதிப்பு ஒன்று வேண்டும்,.,,,,,புராணக் கதைகளை விலக்கிவிட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களைக் கொண்டு எழுத வேண்டும்,,,,புறநானூற்றை எவ்வாறு படித்துப் பயன் படுத்தலாமென்பதையேனும் தெரிவியுங்கள்.” 

ஜி.யூ போப் அவர்களிடமிருந்த் தமக்கு வந்த இந்த முதல் கடிதம் பொருத்தமான கருத்துக்களை முன் வைப்பதாக உ.வே.சா அவர்கள் குறிப்பிடுகின்றார். 

இதில் ஒரு முக்கிய விசயத்தை ஜி.யூ.போப் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டியுள்ளது. புராணக் கதைகளை விலக்கி விட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களோடு பதிப்பிக்கும் முயற்சி வேண்டும் என வலியுறுத்துகின்றார். 

தமிழ் நூல்களில் புராணக் கதைகளின் அதீதப் போக்கு வாசிப்போரின் சிந்தனையை முடக்கிப் பெறும் கோட்டினை வளர்த்தது என்பதை உறுதியாகக் கூறத்தான் வேண்டும். ஏரணவியல் சிந்தனையும் எதனையும் சீர்துக்கி அறிவுக்குப் பொருந்தும் கருத்துக்கள் உள்ளனவா என ஆராய்ந்து தெளிவது புராணக்கதைகள் மிகுந்திருந்த காலத்தில் வாய்ப்பில்லாமல் போனது கண்கூடு. இந்த நிலை இன்று மாறி வருகின்றது. அறிவுக்குப் பொருந்தும் சிந்தனையை வளர்க்கும் நூல்களை வாசிப்பதும், எழுதுவதும் அவை பற்றி சிந்திப்பதும் அவற்றை இளம் தலைமுறையினரிடையே அறிமுகப்படுத்த வேண்டியதும் நம் கடமையாகின்றது!

தொடரும்...

சுபா

Saturday, December 16, 2017

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - நூல் விமர்சனம்

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - நூல் விமர்சனம்
முனைவர்.க.சுபாஷிணி
*******************************************************************************
தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது.
நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல்.
ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர்.
ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் ஏதேச்சையாக நடந்ததுதான் என்றாலும் தனது திறமையினாலும் அறிவுக் கூர்மையினாலும் தனது இருப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார் என்றே கூறவேண்டும். தனது சமகாலத்து ஏனைய பெண் அரசியல்வாதிகளான, இந்திராகாந்தி அம்மையார், பெனாசீர் பூட்டோ போன்று இவருக்கு அரசியல் குடும்பப் பின்னணி என்பது அமையவில்லை. ஆனால் அதற்கும் மாறாகப் பல குழப்பங்கள் நிறைந்த குடும்பப் பின்னணியே இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழலில் தனது இருப்பை நிலை நாட்டிக் கொள்ள அவர் எடுத்த முடிவுகளும் செயல்படுத்திய நடவடிக்கைகளும் அவரது வெகுவான நூல் வாசிப்பு தந்த பரந்த விரிவான வாசிப்பின் மூலமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அம்மையார் ஜெயலலிதா வாழ்வில் அவர் தானே வலிந்து தனக்கு ஏற்படுத்திக் கொண்ட களங்கம் என்றால் அது அவர் தனது வளர்ப்பு மகனாக சில காலம் தத்தெடுத்த சுதாகரனின் திருமணத்திற்காக அவர் செய்த படோடோபமான கோலாகலத் திருமண நிகழ்வு என்பது மறுக்க முடியாதது. தன்னை ஒரு மகாராணியாக நினைத்துக் கொண்டு அவரும் சசிகலாவின் குடும்பத்தாருமாக அன்று செய்தவையே அவரது தாழ்விற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது. இன்றளவும் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கரும்புள்ளியாக இருப்பது இந்த நிகழ்வே. இதனை தன் வாழ்வில் அவர் யோசித்துத் தடுத்திருந்தால் தமிழகம் போற்றும் தாயாகத் தமிழ் மக்கள் பலரால் அவர் போற்றப்பட்டிருப்பார். அது நடைபெறாமல் போனதற்கு அவரே முழுக்காரணம் என்று தான் சொல்லவேண்டும்.
தமிழகத்தில் வேறெந்த முதலமைச்சருக்கும் இல்லாத வகையில் 6 முறை முதலமைச்சர் பதவியை வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இவர் ஏற்படுத்திச் செயல்படுத்திய நலத் திட்டங்களால் ஏழை எளியப் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்கள் கிடைத்ததை மறுக்கவியலாது. 5 ரூபாயில் முழுச்சாப்பாடு என்று அம்மா உணவகம் செயல்பட்டபோது முதலில் கேலி பேசியவர்கள் கூட பின்னர் அதனைப் பாராட்டித் தான் பேசினார்கள். கல்லூரி மாணவர்களுக்குக் மடிக்கணினி, பெண்களுக்கு சைக்கிள், திருமணத்திற்குக் காசு, குழந்தைப் பேறு நலன், இலவச மருந்தகங்கள் எனப் பல நலன் திட்டங்கள் இவரால் அமல் படுத்தப்பட்டன. இதனால் தான் இவரது இழப்பை நினைத்து இன்றளவும் ஏழைப் பெண்கள் தங்கள் வீட்டுப் பெண்ணே இறந்து போனது போல நினைத்து வருந்தினர்.
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் சலிக்காமல் அலுக்காமல் முன்னேற்றப்பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு வெற்றியை நோக்கியே தமது பயணத்தை அமைத்துக் கொண்டவர் அம்மையார் ஜெயலலிதா. தன் வாழ்வில் அவர் எல்லா நேரங்களிலும் புத்தகம் வாசித்தவராகவும், நேரத்தை முறையாகப் பயன்படுத்தியவராகவும் தனது நெருக்கமான வட்டத்தினரால் அறியப்படுகின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியேற்ற பின்னர் இவர் வழங்கிய முதல் உரையே பலரது கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நூலில் அம்மையார் ஜெயலலிதாவைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் நூலாசிரியர் செய்திகளை வழங்கியிருக்கின்றார். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
-நூலில் முழுமையாக இடம்பெறும் 2 பேட்டிகள்
-நாடாளுமன்ற உரை
-இவரது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு
-அப்போலோவில் இறுதி நாட்கள் - புள்ளி விவரத்துடன் தேதி வாரியாக
-சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விபரங்கள் - நீதிபதி குன்ஹா அறிக்கை, மேல்முறையீட்டுத் தகவல்கள்
-சொத்து குவிப்பு வழக்கு கால அட்டவணை
-முழுமையான சொத்து விவரங்கள், சொத்து மதிப்பு
-அவர் பெற்ற விருதுகள்
நூல் ஆசிரியர் சந்திரிகா அவர்கள் ஜெயலலிதா அம்மையாரை நேரில் சந்தித்து அவருடன் சில பணிகளில் இணைந்து செயலாற்றியவர் . சட்டத்துறை வல்லுநர் என்பதால் இந்த நூலை மிகக் கவனமாக ஆதாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே திரட்டி நூலாக வழங்கியிருக்கின்றார்.
கடந்த நூற்றாண்டின் ஆணாதிக்க அரசியல் சூழலில் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம் என்பது முள் வேலிக்குள் எடுத்து வைத்த அடிகளாகத்தான் அமைந்திருந்தன. எளிமையான பெண்ணாக இருந்து கனவுக்கன்னியாக வளர்ந்து அரசியல் சாணக்கியம் கற்று, தன் தவற்றால் வீழ்ந்து மீண்டு வளர்ந்து தன் இறுதி நாள் வரை அரசியலில் இரும்பும் பெண்மணியாக வலம் வந்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். இவர் விட்டுச் சென்ற அ.தி.மு.க எனும் அரசியல் கட்சி இன்றைய நடப்புச் சூழலைக் காணும் போது மிகவும் பின் தங்கிச் செல்லும் அபாயத்தை வெளிக்காட்டுகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரண்டு சகாப்தங்கள் மட்டுமே அ.தி.மு.க என்ற இந்த அரசியல் கட்சிக்கு இருந்த பலங்கள். அடுத்து வரும் இக்கட்சியின் தொண்டர்கள் தங்கள் முன்னாள் தலைமையின் செயல் திறமையைக் கருத்தில் கொண்டு திட்டங்களையும் வியூகங்களையும் மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகளையும் முன்னெடுத்தால் மட்டுமே அ.தி.மு.க அரசியல் தளத்தில் தொடர்ந்து நடைபோடலாம்.
--------------------------------------------------------------------------------
நூலாசிரியர்- முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண்

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண்
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.

தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது. 

நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல். 

ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர். 

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் ஏதேச்சையாக நடந்ததுதான் என்றாலும் தனது திறமையினாலும் அறிவுக் கூர்மையினாலும் தனது இருப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார் என்றே கூறவேண்டும். தனது சமகாலத்து ஏனைய பெண் அரசியல்வாதிகளான, இந்திராகாந்தி அம்மையார், பெனாசீர் பூட்டோ போன்று இவருக்கு அரசியல் குடும்பப் பின்னணி என்பது அமையவில்லை. ஆனால் அதற்கும் மாறாகப் பல குழப்பங்கள் நிறைந்த குடும்பப் பின்னணியே இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழலில் தனது இருப்பை நிலை நாட்டிக் கொள்ள அவர் எடுத்த முடிவுகளும் செயல்படுத்திய நடவடிக்கைகளும் அவரது வெகுவான நூல் வாசிப்பு தந்த பரந்த விரிவான வாசிப்பின் மூலமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அம்மையார் ஜெயலலிதா வாழ்வில் அவர் தானே வலிந்து தனக்கு ஏற்படுத்திக் கொண்ட களங்கம் என்றால் அது அவர் தனது வளர்ப்பு மகனாக சில காலம் தத்தெடுத்த சுதாகரனின் திருமணத்திற்காக அவர் செய்த படோடோபமான கோலாகலத் திருமண நிகழ்வு என்பது மறுக்க முடியாதது. தன்னை ஒரு மகாராணியாக நினைத்துக் கொண்டு அவரும் சசிகலாவின் குடும்பத்தாருமாக அன்று செய்தவையே அவரது தாழ்விற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது. இன்றளவும் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கரும்புள்ளியாக இருப்பது இந்த நிகழ்வே. இதனை தன் வாழ்வில் அவர் யோசித்துத் தடுத்திருந்தால் தமிழகம் போற்றும் தாயாகத் தமிழ் மக்கள் பலரால் அவர் போற்றப்பட்டிருப்பார். அது நடைபெறாமல் போனதற்கு அவரே முழுக்காரணம் என்று தான் சொல்லவேண்டும். 

தமிழகத்தில் வேறெந்த முதலமைச்சருக்கும் இல்லாத வகையில் 6 முறை முதலமைச்சர் பதவியை வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இவர் ஏற்படுத்திச் செயல்படுத்திய நலத் திட்டங்களால் ஏழை எளியப் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்கள் கிடைத்ததை மறுக்கவியலாது. 5 ரூபாயில் முழுச்சாப்பாடு என்று அம்மா உணவகம் செயல்பட்டபோது முதலில் கேலி பேசியவர்கள் கூட பின்னர் அதனைப் பாராட்டித் தான் பேசினார்கள். கல்லூரி மாணவர்களுக்குக் மடிக்கணினி, பெண்களுக்கு சைக்கிள், திருமணத்திற்குக் காசு, குழந்தைப் பேறு நலன், இலவச மருந்தகங்கள் எனப் பல நலன் திட்டங்கள் இவரால் அமல் படுத்தப்பட்டன. இதனால் தான் இவரது இழப்பை நினைத்து இன்றளவும் ஏழைப் பெண்கள் தங்கள் வீட்டுப் பெண்ணே இறந்து போனது போல நினைத்து வருந்தினர். 

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் சலிக்காமல் அலுக்காமல் முன்னேற்றப்பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு வெற்றியை நோக்கியே தமது பயணத்தை அமைத்துக் கொண்டவர் அம்மையார் ஜெயலலிதா. தன் வாழ்வில் அவர் எல்லா நேரங்களிலும் புத்தகம் வாசித்தவராகவும், நேரத்தை முறையாகப் பயன்படுத்தியவராகவும் தனது நெருக்கமான வட்டத்தினரால் அறியப்படுகின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியேற்ற பின்னர் இவர் வழங்கிய முதல் உரையே பலரது கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நூலில் அம்மையார் ஜெயலலிதாவைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் நூலாசிரியர் செய்திகளை வழங்கியிருக்கின்றார். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 
  • நூலில் முழுமையாக இடம்பெறும் 2 பேட்டிகள் 
  • நாடாளுமன்ற உரை
  • இவரது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு 
  • அப்போலோவில் இறுதி நாட்கள் - புள்ளி விவரத்துடன் தேதி வாரியாக 
  • சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விபரங்கள் - நீதிபதி குன்ஹா அறிக்கை, மேல்முறையீட்டுத் தகவல்கள் 
  • சொத்து குவிப்பு வழக்கு கால அட்டவணை 
  • முழுமையான சொத்து விவரங்கள், சொத்து மதிப்பு 
  • அவர் பெற்ற விருதுகள்