Friday, July 29, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 99

சீவக சிந்தாமணியை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சு நூலாகப் பதிப்பிப்பதற்கு பலர் முயன்றிருக்கின்றார்கள் என்ற செய்தியை என் சரித்திரம் நூலின் தொடர்ச்சியான பதிகளில் காண்கின்றோம். 

உ.வே.சா சென்னையில் தங்கியிருந்து பணிகளைத் தொடர்ந்த போது, அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்ற ஒருவரைச் சந்திக்க நேர்கின்றது. உ.வே.சா சிந்தாமணியை உரையுடன் பதிப்பிக்க தாம் வந்திருப்பதாகச் சொன்னவுடன் முதலில் அதிர்ச்சியடைந்து இப்பணியை விட்டு விடும்படி கூற, அது உ.வே.சாவிற்கு அதிர்ச்சியை அளிக்கின்றது. ஆசி வழங்காமல் ஏன் இந்தப் பெரியவர் தடை சொல்கின்றார் என்று குழப்பம் ஏற்படுகின்றது. ஆனால்ம உ.வே.சா மனம் கலங்கவில்லை. ஆனால் அப்பெரியவரோ, பணி ஆரம்பித்திருந்தாலும் கூட பரவாயில்லை. இதனை நிறுத்தி விடவும், என்று சொல்லி தானும் தம் ஆசிரியரும் அந்த முயற்சியில் இறங்கியதாகவும், அது பலனளிக்காது போனதாகவும் பின்னர் ட்ரூ என்ற பாதிரியார் (Rev. W.H. Drew) சிந்தாமணியைப் படித்து பின்னர் அதனைப் பதிப்பிப்பதற்காகவே ஒரு திட்டத்தை தீட்டினார் என்றும், ஆனால் அது பலனளிக்காமல் போனது என்றும் அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களும் இதே முயற்சியை மேற்கொண்டார் என்றும், அதுமட்டுமன்றி உ.வே.சாவின் குருவாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களும் சோடாவதானம் சுப்பராய செட்டியாரும் இணைந்து முயன்ற நிகழ்வையும் சொல்லிக் காட்டி, இது கடினமானதொரு காரியம். விட்டு விடுவதே நல்லது, என ஆலோசனை வழங்கினார். " யார் தொட்டாலும் நிறைவேறாத இந்த நூலை நீங்கள் பதிப்பிக்கத் துணிந்தீர்களேயென்று அஞ்சுகின்றேன்" எனச் சொல்லி தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.


உ.வே.சா இதனைக் கேட்டு தயங்காமல், இவ்வளவு சிரமமான ஒரு நூலை அவர்களெல்லாம் முயன்றிருக்கின்றார்கள் என்றால் அதனைத் தொடர்ந்து செய்து அதனை முடிப்பது தானே சரியான நடைமுறையாகும் என்று சொல்லி, ஒருவர் செய்து முடிக்கவில்லை என்பதற்காக மற்றவர் செய்யக்கூடாது என்றோ செய்தால் தோல்வியே கிட்டும் என்று நம்புவதோ உதவாது என்ற வகையிலும் மிகுந்த உற்சாகத்தோடு பதில் கூறிவிட்டார். இதனை அவரே தன் எழுத்துக்களால் விவரிப்பதைக் காண்போம். 

"ஆனால், அவருடைய வார்த்தைகளால் நான் சிறிதும் அதைரியம் அடையவில்லை. “முன்பு அவர்கள் நிறைவேற்றவில்லை என்ற காரணத்துக்காக நாம் நமது முயற்சியை நிறுத்திக்கொள்வதா? அவர்களெல்லாம் 
முயன்றார்களென்ற செய்தியினாலே இந்த நூல் எப்படியாவது அச்சு வடிவத்தில் வெளியாக வேண்டுமென்ற ஆவல் அவர்களுக்கு இருந்ததென்று தெரியவில்லையா? அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வது மற்றவர்களுடைய கடமைதானே? என் முயற்சி தடைப்படினும் குறைவொன்றுமில்லை. இறைவன் திருவருளால் இது பலித்தால் தமிழன்பர்களுக்குச் சந்தோஷமுண்டாகாதா? ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஆராய்ந்து பதிப்பித்து வருகிறேன், குறைபாடுகள் இருப்பது இயல்பே. அறிவுடையவர்கள் நாளடைவில் அவற்றைப் போக்கி விடுவார்கள்” என்று உத்ஸாகத்தோடு கூறினேன்." 

புதுமையான முயற்சிகளை யாரேனும் செய்யும் போது இத்தகைய வகையிலான தடங்கல்கள் பலவாறு வருவது இயல்பே. பலருக்கு எப்படிச் செய்து முடிக்கப்போகின்றார்கள், வயதில் இளையோராயிற்றே.. நிறையப் பொருள் செலவாகிவிடும்.. உற்சாகம் இழந்து விடும் .. கையைச் சுட்டுக் கொள்வார்கள், என நினைத்து ஆரம்பத்திலேயே புதிய முயற்சிகளைத் தடை செய்ய முயற்சிப்பார்கள். தாங்கள் பெற்ற பாடத்தையே பிறரும் அனுபவிக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் சிலர் சொல்வதாகவும் இருக்கும். ஒரு சிலருக்கோ, நாமே செய்து முடிக்க முடியாத காரியத்தை இவர்கள் எங்கே செய்யப் போகின்றார்கள் என்ற ஒரு வித சிந்தனையும் இருக்கும். 

எது எப்படியோ.. 
ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டால் அதனைச் செய்து முடிக்கத்தான் வேண்டும். அதற்காக எவ்வகையான உழைப்பு தேவைப்படுமாயினும் அந்த உழைப்பைச் செலுத்தி அக்காரியத்தை முடிக்க முயற்சிப்பவர்கள் தாம்சாதனையாளர்களாக தம்மை உயர்த்திக் கொள்கின்றனர். 

அத்தகைய சாதனையாளர்களாக உருவாக்கம் பெற நம் ஒவ்வொருவராலும் இயலும். அதற்கு உலகுக்கு நன்மை தரும் உயர்ந்த லட்சியமும், தெளிவான எண்ணமும், திட்டமிடுதலும், செயல்பாட்டில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்க வேண்டும். அத்தகையோராக நம்மை உருமாற்றிக் கொண்டால் சாதனையாளர் பட்டியலில் நாம் ஒவ்வொருவரும் இடம் பெறுவது உறுதியே!

-சுபா

No comments:

Post a Comment