Monday, September 21, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 85

உ.வே.சாவிற்குத் திருவாவடுதுறை மடத்திலிருந்து புறப்பட்ட நாள் மனதில் மறக்க முடியாத கவலையை உண்டாக்கியதை மறுத்து விட முடியாது, என் சரிதத்தில் அவர் இந்த நிகழ்வை குறிப்பிடும் காட்சியை வாசிக்கும் போது வாசகர்களாகிய நமக்கே அவர் திருமடத்தை விட்டுப் போகாமல் இருந்து விடக் கூடிய வகையில் ஏதும் நிகழாதா என்று எண்ணும் அளவிற்கு மனம் செல்கின்றது. மடத்தின் ஒவ்வொரு இடமும்  மனதில் ஒரு புள்ளியைத் தொட்டு அவை ஒவ்வொன்றும் அவருக்கு அளித்த அனுபவங்களை நினைக்க வைத்து, அவரை சோகக் கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வே அங்கு நடந்து கொண்டிருந்தது. 

சக மாணவர்களுடன் படித்த இடங்கள், புத்தகக் கட்டுக்கள், மடத்தின் சில மூலைகள் என ஒவ்வொன்றும் அவருக்கு இனிய நினைவுகளை மட்டும் நிழல் படம் போல மணக் கண்ணில் கொண்டு வந்து காட்டி சித்திரவதை செய்யத் தொடங்கி விட்டன. அவரது மனம் வாடியதை இப்பகுதியை வாசிக்கும் போதே வாசகர் ஒவ்வொருவரும் உணர்வோம். ஓரிரு வரியில் அவர் தன்னிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

" “அவை ஜடப் பொருள்களல்லவா? அவற்றின் மேல் அவ்வளவு பற்றிருப்பது பைத்தியகாரத் தனமல்லவா?” என்று பிறருக்குத் தோற்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாவடுதுறை மடத்திலே இருந்தது. அங்குள்ள பொருள்களைப் பிரியும்போது உலகத்தையே பிரிவது போன்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது. "

பிரிய மனமில்லாமல் திருவாவடுதுறை மடத்தைப் பிரிந்து அவ்வூரில் இருக்கும் புகை வண்டி நிலையம் வந்து  அங்கிருந்து தனது உறவினர் கணபதி ஐயரென்பவருடன் புறப்பட்டு கும்பகோணம் போய்ச் சேர்ந்தார்.

கும்பகோணத்தில் தியாகராச செட்டியார் இல்லத்தை வந்தடைந்தார். இவ்வளவு சீக்கிரம் தேசிகர் அனுப்பி வைத்து விட்டாரே என்று தியாகராச செட்டியாருக்குப் பெரும் அதிசயம். அவரை வரவேற்று உபசரித்து தன் வீட்டிலேயே தங்க வைத்தார். மறு நாள் காலை தனது வீ​ட்டிலிருந்த ​ 100 புத்தகங்களை எடுத்துக் கொண்டு உ.வே.சாவையும் அழைத்துக் கொண்டு அவரது கல்லூரி பேராசியர்களுகு அறிமுகம் செய்து வைக்க அழைத்துச் சென்றார். கல்லூரி முதல்வருக்கு அடுத்த நிலையிலிருந்த ஸ்ரீநிவாசய்யர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்குத் தனது தேர்வு எத்தகையது என்று சொல்லி சரியான அறிமுகத்தை உ.வே.சாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற தீராத ஆவல் தியாகராச செட்டியாருக்கின் இருந்தது.

100 நூல்களுடன் சென்ற இவர்கள் இருவரையும் பார்த்த ஏனைய ஆசிரியர்களுக்கு முதலில் ஆச்சரியம்.  இந்த நிகழ்வை உ.வே.சா இப்படி விவரிக்கின்றார். 

" புறத்தே சென்றிருந்த சேஷையரும் வந்து விட்டார். வந்தவுடன் தமது மேஜையின்மேல் உள்ள மூட்டைகளைக் கவனித்து, “இவை என்ன?” என்று கேட்டார்.
“எல்லாம் தமிழ்ப் புஸ்தகங்கள்” என்றார் செட்டியார். பிறகு என்னையும் அறிமுகம் செய்வித்தார்.
வந்த ஆசிரியர்களுள் ஒருவர் “தமிழ்ப் புஸ்தகங்கள் இவ்வளவு உள்ளனவா?” என்று கேட்டார்.
செட்டியார், “இன்னும் எவ்வளவோ உண்டு. அச்சில் வாராத ஏட்டுப் புஸ்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன” என்று கூறி அவருடைய
வியப்பைப் பின்னும் அதிகமாக்கினார்.

வேறொருவர், “இவை என்ன என்ன புஸ்தகங்கள்? எதற்காக இவ்வளவு?” என்று கேட்டார். "

இந்த உரையாடல் அக்காலத்தில் படித்த ஆசிரியப் பெருமக்கள் மத்தியிலும் கூட விரிவான புத்தக வாசிப்பு, அறிமுகம் ஆகியன இல்லாத குறை இருந்தமையைக் காட்டும் உதாரணமாக அமைகின்றது. இக்காலத்தில் தான் பல ஆசிரியர்கள் பொது நூல்கள் வாசிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று புலம்புகின்றோம் என்னும் நிலை என்றில்லாமல் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட ஏறக்குறைய இதே நிலைதான் இருந்திருக்கின்றது என்பது கண்கூடு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே.சா, தியாகராச செட்டியார், சுப்பிரமணிய தேசிகர் ஆகியோரெல்லாம் நூல் வாசிப்பிலும், வாசித்ததைச் சிந்திப்பதிலும், புதிய இலக்கியம் படைத்தலையும், மாணாக்கர்களுக்குத் தமிழ்க்கல்வியை மிகுந்த  அக்கறையோடு   அறிமுகப்படுத்தியவர்கள் என்ற பெருமையைப் பெறுபவர்கள். அதனால்தான் இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் கூட நாம் இவர்களை மதிக்கின்றோம். இவர்கள் காலடிச் சுவற்றில் ஏனைய ஆசிரியர்களும் வரவேண்டும் என விரும்புகின்றோம்.

மறுநாள் கல்லூரி முதல்வர் கோபால்ராவ் அவர்களுக்கு உ.வே.சாவை அறிமுகம் செய்து வைத்தார் தியாகராச செட்டியார். சிறிய உரையாடலுக்குப் பிறகு தியாகராச செட்டியார் வகித்து வந்தப் பதவியை உ.வே.சாவிற்கு வழங்க சம்மதித்து அடுத்த திங்கட்கிழமை முதலே பணி தொடங்கலாம் என்ற உத்தரவையும் வழங்கினார் கல்லூரி முதல்வர். 

சிலர் சில வேளைகளில் நம்மை நோக்கிச் சொல்லும் வாசகங்கள் நம் மனதிலிருந்து மறையாது. அச்சொற்கள் நம் உணர்வுகளை ஏதாகினும் வகையில் பாதிக்கும் வகையில் அமைந்திருந்தால் இவ்வகை நிலை  ஏற்படுவது வழக்கம். ஆழ்ந்த மகிழ்ச்சி, ஆழ்ந்த கவலை, திகில், போன்ற உணர்வுகளோடு கலந்து வரும் சில சொற்கள் நம் மனதில் நீண்ட நாள் மறையாமல் இருக்கும் சக்தி கொண்டவை. உ.வே.சாவின் மனதில் தனது முதிய வயதிலும் சில சொற்கள் ஒலித்துக் கொண்டிருந்தனவாம். அதனை இப்படி விவரிக்கின்றார் உ.வே.சா.

"வருகிற திங்கட்கிழமை முதல் இவர் காலேஜில் வேலை பார்க்கட்டும்” என்று சொன்னார். நேரில் சொன்ன அந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் விண்ணப்பமெழுதிப் போடாமலே கிடைத்த உத்தரவு அது. எழுதாக் கிளவியாகிய அது பல வருஷங்கள் சென்றும் என் காதில் இன்னும் ஒலிக்கிறது."

கும்பகோணம் காலேஜில் பணியில் இணைய ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் தேசிகர் சம்மதம் தெரிவித்த வேளையிலிருந்து தனது திறமைக்கு ஒரு அங்கீகாரம் அமைகின்றது என்ற எண்ணம் உ.வே.சா அவர்கள் மனதில் எழுந்திருக்க வேண்டும். கல்லூரியின் ஏனைய ஆசிரியர்களின் தொடர்ந்த பாராட்டு, தியாகராச செட்டியாரின் ஆர்வம் ஆகியவை அவர் மன நிலையை அச்சம் கலந்த  நிலையிலிருந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த வேளையில்  கல்லூரி முதல்வர் கோபால் ராவ் அவர்களில் பணி உத்தரவு அம்மகிழ்ச்சியை நிலையான மகிழ்ச்சியாக உறுதி செய்தது. தனிப்பட்ட வகையில் தனது திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம் அது என உ.வே.சா மனதில் தோன்றிய அக்கணங்கள் நினைத்துப் பார்த்தாலே உயிர் பெற்று நிலவும் வகையில் அவரது இறுதி காலம் வரை மனதை விட்டு அகலவில்லை.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment