Saturday, May 30, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 81

திருவாவடுதுறை திருமடத்தில் இருந்த காலங்களில் உ.வே.சாவின் வாழ்க்கை தமிழ்ப்பாடம் கற்றல், ஏனைய மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் பயிற்றுவித்தல், செய்யுள் இயற்றுதல் என்ற வகையிலேயே அமைந்திருந்தது. ராகத்தோடு பாடலும் பாடக்கூடிய திறமையைக் கொண்டிருந்த உ.வே.சா, வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யும் திறனையும் பெற்றிருந்தார் என்பதையும் என் சரித்திரம் நூல் வழி அறிகின்றோம்.

யாரேனும் வடமொழி வித்துவான்கள் மடத்திற்கு வந்தால் அவர்கள் தாம் அறிந்த பழைய சுலோகங்கள் ஏதாகினும் சொல்வர் என்றும் அதனை தாமே தேசிகருக்கு மொழி பெயர்ப்பு செய்து தமிழில் சொல்வார் என்றும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். அவைக்கு வரும் வடமொழி அறிஞர்களும் தனது இருமொழிப் புலமையை அறிந்து 'மடத்தின் பெருமை இது'  என நினைத்து பாராட்டிச் செல்வர் என்றும் கூறி மகிழ்கின்றார். சுப்பிரமணிய தேசிகரும் வடமொழியும் தமிழும் அறிந்த இருமொழிப் புலமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

பிள்ளையவர்களிடம் மாணாக்கராக இருந்த காலத்தில் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க தமக்கு மிகுந்த ஆவல் இருந்த போதிலும் அதற்கு காலம் இடம் கொடுக்கவில்லை என்ற வருத்தம் உ.வே.சாவின் மனதில் இருந்தது. மடத்திற்கு அறிஞர்களும் கணவான்களும் வரும் சமயத்தில் தேசிகர் உ.வே.சா அவர்களை அழைத்து சில சமயங்களில் சைவ சித்தாந்த சாஸ்திரக் கருத்துக்களை வாசித்துக் காட்டச் சொல்வதுண்டு. பாஷ்யத்தைத் தேசிகர் தாமே சொல்வதைக் கேட்டு, எப்போது நாமும் முறையாக சைவ சித்தாந்த சஸ்திரம் கற்கப் போகின்றோம் என்று ஏக்கத்துடன் இருந்த உ.வே.சாவிற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தேசிகரே இவரது மனக்குறிப்பை அறிந்து கொண்டார். 'நானே சைவ சித்தாந்த உரைகளை உமக்கு கற்றுத்தருகின்றேன். ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு கற்றுத்தருவதே ஒரு ஆசிரியருக்கு இன்பம்' எனக் கூறி பாடம் நடத்தியவர் தேசிகர் என்பதையும் இக்குறிப்புக்களால் அறிகின்றோம்.

கல்வியில் தீராத தாகம் மாணாக்கர்களுக்கு இருக்க வேண்டும். தேடுதல் என்பதும் புதிய கற்றல் என்பதும் பறந்த விரிவான விஷயங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த வேட்கையும் ஈடுபாடும் மாணக்கர்களுக்கு இருக்க வேண்டும். கல்வி கற்றல் என்பது வெறும் வேலைக்கு ஒரு அடிப்படை தகுதியைப் பெறும் நடவடிக்கை என்ற சிந்தனையில்லாது தன்னைச் செம்மைப்படுத்தவும் அறிவின் விசாலத்தை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டு தனக்கும் தாம் வாழ்கின்ற சமூகத்திற்கும் நல்லதொரு கடமையைச் செய்யக்கூடியவகையில் தம்மை தகுதியானவராக ஆக்கிக்கொள்வதற்கும் கல்வி அமைந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு எவ்வகையில் கல்வியில் தீவிர நாட்டம் இருக்கின்றதோ அதே போல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு வகையான தகவல்களைத் தரக்கூடிய வகையில் அவர்களுக்குச் சிந்தனை சுதந்திரத்தைத் தரக்கூடிய வகையில் கல்வியை வழங்கும் வகையில்  போதனையையும் அமைப்பதும் அவசியம்.

கல்வி என்பது மனனம் செய்து ஒப்புவித்து அதனை அப்படியே சோதனையில் வெளிக்காட்டி விட்டு மட்டும் செல்வதல்ல என்பதும் தம்மை சுயமாகச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கின்ற வகையில் கல்வி அடித்தளத்தை அமைக்கும் கருவியாகச் செயல்படவும் வேண்டும் என்பதுவும் முக்கியம். அப்படியல்லாத போதனை ஒரு இயந்திரத்தனமான ஒன்று மட்டுமே என்பதில் அய்யமில்லை.

வேதநாயகம் பிள்ளையவர்கள் ஒருமுறை தாம் இயற்றிய செய்யுட்களைத் தேசிகர்க்கு வாசித்துக்காட்டும் படி குறிப்பிட்டு உ.வே.சாவிற்கு கடிதம் அனுப்ப, அதனை வாசித்துக் காட்டிவிட்டு பதில் கடிதமாக ஒரு செய்யுளை எழுதி அனுப்பியிருக்கின்றார். அதனையும் தேசிகருக்கு வாசித்துக் காட்டுகையில் இச்செய்யுட்களைக் கேட்கும் போது வித்வான் மீனாட்சி சுந்தரம் நினைவுகள் தாம் வருகின்றன எனக் குறிப்பிட்டமையை நினைவு கூறுகின்றார்.

சுப்பிரமணிய தேசிகர், “பிள்ளையவர்களுடைய போக்கை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறீர். உம்முடைய செய்யுட்கள் அவர்களுடைய ஞாபகத்தை உண்டாக்குகின்றன” என்று அடிக்கடி சொல்வார். பிள்ளையவர்கள் இட்ட பிச்சையே எனது  தமிழறிவு என்ற நினைவிலேயே வாழ்ந்து வந்த எனது உள்ளத்தை அவ்வார்த்தைகள் மிகவும் குளிர்விக்கும்.

இப்படி நாளும் பொழுதும் தமிழ்க்கல்வி என்ற நிலையில் தன் வாழ்க்கையை மன நிறைவுடன் செலுத்திக் கொண்டிருந்த உ.வே.சாவின் வாழ்க்கைப்பாதை வேறு திசையில் பயணிக்கத் தொடங்கும் தருணமும் உண்டாயிற்று. 

வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மாற்றங்கள் வரத்தான் செய்யும். மாற்றங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொளளத் தெரிந்தோரே தம் வாழ்க்கை லட்சியத்தில்  வெற்றி பெற்றவர்களாக உயர்ந்து நிற்கின்றனர். உ.வே.சா வைப் போல!


தொடரும்..

சுபா 

No comments:

Post a Comment