Saturday, August 23, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 70

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவராக இருந்தவர் அச்சமயத்தில் மாயூரத்தில் முன்சீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளை அவர்கள். இவர் தமிழில் நிறைந்த புலமை மிக்கவராகத் திகழ்ந்தவர் என்றும் நிறைய செய்யுட்களையும் பாடல்களையும் இயற்றியவர் என்றும் பலரும் அறிந்திருப்போம். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரது தமிழின் மேலான ஆர்வமும் சைவ சமய நூற்களின் மேலான பற்றும், திருவாவடுதுறை மடத்தின் மீதும்  அதன் ஆதீனகர்த்தர் சுப்ரமணிய தேசிகர் மீது அவர் கொண்டிருந்த பற்றும் ஆர்வமும் அளப்பறியதாகவே இருந்தது.

சுப்பிரமணிய தேசிகரின் மேல் பல செய்யுட்களை இவர் இயற்றியிருக்கின்றார். ஒரு கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர், அதிலும் பெரிய அரசாங்க உத்யோகத்தில் இருந்தவர், இந்த அளவு தீவிரமாக சைவ மடத்தோடு தனது உறவை பினைத்துக் கொண்டிருக்கின்றாரே என உ.வே.சா வியந்து போகின்றார். தனது வியப்பை அவர் தனது சரிதத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

ஒரு கிறிஸ்தவ கனவான் சைவ மடாதிபதியைப் புகழ்வதென்றால் அது மிகவும் அரிய செய்தி யன்றோ? அன்றியும் பொறுப்புள்ள அரசாங்க உத்தியோகம் ஒன்றை வகித்து வந்தவரும், பிறரை அதிகமாக லக்ஷியம் செய்யாதவருமான வேதநாயகம் பிள்ளை பாடினாரென்பது யாவருக்கும் வியப்பை உண்டாக்கியது.

பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய வேதநாயகம் பிள்ளை அப்புலவர் மூலமாகத் திருவாவடுதுறை மடத்தின் பெருமையையும், அதன் தலைவருடைய கல்வியறிவு ஒழுக்கச் சிறப்புக்களையும் உணர்ந்திருந்தார். தாமே நேரில் பார்த்தபோது அம்மடம் தமிழ் வளர்க்கும் நிலயமாக இருப்பதை அறிந்தார். இவற்றால் சுப்பிரமணிய தேசிகரிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டாயிற்று.

இன்று தமிழ்மொழியைப் பாதுகாக்கும், முறையாகப் பயன்படுத்தும் நிலை குறைந்து வருவதைப் பற்றி நாம் அடிக்கடி பேசிக் கொள்கின்றோம், உரையாடுகின்றோம். தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்களின் கலப்பு என்பது நிகழ்ந்து தமிழின் செம்மையைக் குலைப்பதை நினைத்து வருந்துகின்றோம்.  சிலர் ந்ன்கு தமிழறிந்தோராக இருந்தாலும் கூட ஆங்கில மோகத்தால் தமிழை பிறர் முன்னிலையில் பேசாது ஆங்கில மொழியில் உரையாட விரும்புவதைக் கண்டு வருந்துகின்றோம். 

மொழி என்பது ஒரு கருவி. எத்தனை மொழிகளைக் கற்கின்றோமே அத்தனையும் நாம் நமது அறிவை விரித்தி செய்து கொள்வதற்கும், அந்தந்த மொழி நூல்களையும் இலக்கியங்களையும் அறிவுக் கருவூலங்களையும் வாசித்து அறிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவும் தன்மையன. வேறொரு மொழி நல்ல வேலை வாய்ப்பையும் பொருளாதார பலத்தையும் தரும் என்பதற்காக மட்டுமே நமது தாய்மொழியை விட்டு விட்டு, மறந்து விட்டு வேறொரு மொழியைக் கற்க நினைப்பது நாமே நமது அடிப்படையை அழிப்பதற்கு காரணமாகிவிடும். ஆக இக்கால நிலையில் அதிலும் கணினி யுகத்தில் பல மொழிகள் கற்பது என்பது எவ்வகையில் சாத்தியமாகின்றதோ, அதே வகையில் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சிறியவர்களோ பெரியவர்களோ, தமிழை  கணினி, இணையம் வழி கற்று தம் தாய்மொழி மறக்காத தமிழர்களாக வாழலாம். 

இளம் பிராயத்தில் மொழிகள் கற்பது என்பது கற்றலை சுலபமாக்கும். ஆக தமிழ் மொழியோடு ஆங்கிலம், அதோடு தாம் வாழும் நாட்டில் உள்ள அரசாங்க மொழி, வேறு ஏதேனும் விருப்பப்படும் மொழி என பலமொழிகளைச் சிறு பிராயத்திலேயே குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆரம்பகாலத்தில் அமைக்கப்படும் அடிப்படையானது பலமாக இருக்கும் போது தொடர்ந்து குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது வெகு விரைவாக மொழிகளைக் கற்று தங்கள் வாழ்க்கை தேவையையும் திறம்பட அமைத்துக் கொள்ள வழி ஏற்படும்.

ஆங்கிலேய அரசின் கீழ் ஆங்கிலக்கல்வி விரிவாகி வந்த காலகட்டமது. இன்று எப்படி நாம் தமிழ் மொழியை மக்கள் மறந்து போகின்றனர் என்று சொல்லி வருந்துகின்றோமோ, அதே போலவே  உ.வே.சாவின் காலகட்டத்தில் திருவாவடுதுறை மடத்துடன் தொடர்பில் இருந்து அடிக்கடி வந்து செல்லும் வேதநாயகம் பிள்ளையவர்கள் மடத்தில் தொடர்ச்சியாக மிக நல்ல முறையில் தமிழ் வகுப்புக்கள் நடைபெறுவதை நினைத்து மனம் மகிழ்வாராம். இப்படி தமிழ் வளர்க்கும் சேவை செய்யும் தேசிகரைப் புகழ்ந்து பாடல்களும் இயற்றியிருக்கின்றார் வேதநாயகம் பிள்ளை. 66ம் அத்தியாயத்தில் உள்ள ஒரு செய்யுள் உதாரணமாக.

“வானென் றுதவ வருஞ்சுப்ர மண்ய வரோதயனே
தானென்று வெண்ணரன் பாஷையிந் நாட்டிற் றலையெடுக்க
ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை இனிதளிக்க
நானென்று கங்கணங் கட்டிக்கொண் டாயிந்த நானிலத்தே.” 

இப்படி வேதநாயகம் பில்ளையவர்கள் மடத்தைப் பற்றியும் தேசிகரைப் பற்றியும் பாடிய பாடல்கள் பல உண்டு. இவை திருமடத்தில் சுவடி நூல்களாக இப்போதும் இருக்க வேண்டும். மடத்திற்கு அவ்வப்போது வருபவர்கள் வேதநாயகம் பிள்ளையவர்கள் தேசிகர் மேல் இயற்றிய பாடல்களை கேட்க விரும்பினால் உடனே தேசிகர் உ.வே.சாவை அழைத்து இப்பாடல்களைப் பாடிக் காட்டச் சொல்வாராம். இசை ஞானமும் கைவரப்பெற்றிருந்த உ.வே.சா இசையுடன் பாடி பொருளும் உரைப்பாராம்.

விருந்தினர்களுக்கும் வருகையாளர்க்கும் இது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தந்திருக்கும் அனுபவமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தொடரும்...

No comments:

Post a Comment