Sunday, June 2, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 52

பொதுவாகவே சமய நிறுவனங்களில் காலை தொடங்கி மாலை வரை நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடியும் நிகழ்வுகளின் வரிசையில் ஒழுங்கு குறையாமலும் நடைபெறும் . ஹிந்து சமயம் சார்ந்த நிறுவனங்களில் மட்டும் நடைபெறுகின்ற ஒரு விஷயம் அல்ல இது. வாட்டிக்கனில் நடைபெறும் சடங்குகளாகட்டும், ஆர்த்தடோக்ஸ் மடாலயமாகட்டும் அல்லது எந்த சமய குருமார்கள் இருந்து சமயம் வளர்க்கும்  இடமாக இருக்கட்டும்.. அங்கே ஒரு நாள் முழுதும் நடைபெறும் விஷயங்கள் என்பவை எப்போதும் நேரத்திற்கு ஏற்ப ஒரு ஒழுங்குடன் நடைபெற்றுக் கொடிருப்பதைக் காண முடியும்.

எனது அனுபவத்தில் சில நாட்கள் பேரூர் சைவ மடத்தில் தங்கியிருந்திருக்கின்றேன். அதிகாலை தொடங்கி இரவு வரை மடாதிபதியும் அவரைச் சார்ந்தவர்களும்  கலந்து கொள்ளும் விஷயங்கள் அதிகாலை பூஜை அதற்குத் தொடர்பான சடங்குகள், பிற அன்றாட நடவடிக்கைகள் என பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  எனது தமிழக பயணங்களின் அனுபவத்தில்  தருமபுர ஆதீனம், கோவிலூர் மடம், குன்றக்குடி சைவ மடம், திருவாவடுதுறை சைவ மடம் என இவ்வகையான சில இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரம் மடாதிபதிகள் பார்வையாளர்களுக்கு ஒதுக்குவது என்பதையும் அறிந்திருக்கின்றேன். இப்படி ஒவ்வொரு விஷயங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்து  அதற்கேற்றார்போல் அன்றாட விஷயங்களைக் கவனிப்பது இச்சமய நிறுவனத்தை ஒழுங்குடன் நடத்திச் செல்ல உதவுகின்றது.

திருவாவடுதுறை மடத்தின் சிறப்புக்கள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாக ஒரு விஷயத்தைக் கூறலாம். அதாவது, சைவ மடங்கள் ஒழுக வேண்டிய அன்றாட நடைமுறை கடமைகள் பற்றிய விஷயங்களை வரையறுத்து அதனை மடங்களுக்குள்ளே பயன்படுத்த வேண்டிய சட்டமாக்கி அறிமுகப்படுத்திய சிறப்பு இந்த மடத்திற்கு உரியதாகின்றது. இதனைப் பற்றி பின்னர் ஒருமுறை இதே தொடரில் விளக்க முயற்சிக்கின்றேன்.

குருபூஜை நிகழ்வு மட்டுமல்ல. திருவாவடுதுறை மடத்தின் சம்பிரதாயங்கள், ஆதீனகர்த்தரின் அன்றாட நடவடிக்கைகள் என பல முக்கிய விஷயங்களைப் பதிந்து வைத்துள்ள ஒரு ஆவணமாகவும் கூட  என் சரித்திரம் நூல் விளங்குகின்றது. மடத்தின் அன்றாட நிகழ்வுகளின் தன்மையில் தற்காலத்தில் சில மாற்றங்கள் காலத்தின் தேவைக்கேற்ப நடந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு 180 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறை மடத்தில் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த  அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடித்தார் போலக் காட்டும்  சில பகுதிகள்  வழி திருமடத்தின் அன்றாட விஷயங்களை அறிந்து கொள்ள வாசகர்களுக்கு இந்த நூல் உதவுகின்றது என்பதில் சந்தேகமில்லை.

அச்சமயத்தில் ஆதீனகர்த்தராக இருந்தவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள். இவரது பொழுது போக்கு என்பதே நூல்களை வைத்துக் கொண்டு பாடம் சொல்வது தானாம். காலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை  பெரும்பாலும் தம்பிரான்களுக்கும் பாடம் கேட்க வருவோருக்கும் பாடம் சொல்வதிலேயே இவரது பொழுதுகள் செல்லுமாம்.

சுப்பிரமணிய தேசிகரது  அன்றாட செயல்பாடுகள் என்பவை ஒரு வழக்கமான சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கின்றது. அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே  எழுந்து விடுவாராம். மடத்திலிருந்து ஏறக்குறைய அரை மைல் தூரத்திலிருக்கும் காவிரிக்கரைக்கு நடந்தேதான் செல்வாராம். இவர் செல்லும் போது இவருடன் தவசிப் பிள்ளைகள் உதவியாக ஆசனப் பலகை, மடி வஸ்திரப் பெட்டி, மற்றும் தேவையான பொருட்களுடன் செல்வார்களாம். காவிரிக்கரைக்குச் சென்று வரும் வழிப்பாதயில் மருத மரங்கள் இரு பகுதிகளிலும் நிறைந்திருக்குமாம். அச்சாலையில் தேசிகர் ஸ்நானம் செய்து முடித்து வரும் போது அவர் உடன் பேசிக் கொண்டு வருவதற்காகவே சிலர் சாலைகளில் காத்திருப்பராம்.

வரும் வழியிலேயே சமாதித் தோப்பு உள்ளது. இங்கு மடத்தின் முன்னாளையை தலைவர்களாக இருந்தவர்களின் சமாதிக் கோயில்கள் உள்ளன. இவற்றை நான் திருவாவடுதுறை மடம் சென்ற போது நேரில் சென்று பார்த்தேன். சமாதிக் கோயில்களில் வழிபட்டு விட்டு மாசிலாமணீஸ்வரர்  ஆலயம் வந்து சுவாமி தரிசனம் முடித்து பின்னர் மடத்திற்குச் செல்வாராம். இப்படிச் செல்கையில் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள துணைவந்த விநாயகருக் குசம்பிரதாயமாக சிதர் தேங்காய் உடைப்பார்களாம். இக்காட்சியை  இக்குறிப்புக்களைக் கொண்டு உருவகம் செய்து பார்க்கும் போது இதுவே ஒரு சிறிய விழா போலத் தோன்றுகின்றது. காலை  வேளையிலேயே உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் நடைப்பழக்கமும் தேசிகருக்கு அமைந்திருந்தது என்பதையும்  இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது.

இந்தச் சடங்குகள் முடிந்து மடத்திற்கு வந்ததும் முதலில் திருமாளிகைத்தேவர் தரிசனம், பின்னர் ஓதுவார்கள் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் அருளிய ஸ்ரீ பஞ்சாட்சர தேசிகர் மாலையிலிருந்து பத்துப் பாடல்களை ஓத ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் சன்னிதியில் தரிசனமும்  நடைபெறுமாம். ஒவ்வொரு பாடல்கள் சொல்லி முடிந்ததும் தேசிகர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவாராம், இப்படி பத்து பாடல்களுக்கும் 10 முறை என இச்சடங்கு நடைபெறுமாம். இதன் பின்னர் மடத்திலிருப்போர் அனைவருக்கும் தேசிகரே விபூதி வழங்கிவிட்டு தனது ஆசனமான ஒடுக்கத்திற்கு வந்து அமர்வாராம். இப்படி அவர் வந்து அமரும் போது காலை மணி எட்டாகிவிடும் என்ற குறிப்பையும் காண முடிகின்றது.

ஒடுக்கத்தில் வந்து அமர்ந்ததும் வந்திருக்கும் யாசகர்களுக்கு சன்மானம் அளித்து அனுப்பி வைப்பதும் தேசிகருக்கு ஒரு கடமையாக இருந்திருக்கின்றது. அன்றைய பொழுதில் யாரேனும் யாசித்து வரவில்லையென்றால் சற்று வருத்தமும் அவருக்கு ஏற்படுமாம். இவர் காலையில் உணவு உட்கொள்வதுமில்லை. யாசகர்களை அனுப்பி விட்ட பிறகு பாடம் சொல்லுதலை ஆரம்பித்து விடுவார்களாம்.

இடையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே யாரேனும் வித்துவான்கள் தேசிகரைப் பார்க்க வந்திருந்தால் அவர்களைத் தேசிகரைச் சந்திக்க அனுமதித்து வந்திருந்தவர் எந்த  விஷயத்தில் வல்லமை உள்ளவரோ அந்த விஷயத்தைப்பற்றி பேசச்சொல்லியோ, பாடச் சொல்லியோ கேட்டு தானும் சம்பாஷித்து மகிழ்வாராம் தேசிகர்.அப்படி வருபவர்கள் கலை ஞானமோ கல்வி ஞானமோ உள்ளவர்களாக இருந்தால் மடத்திலேயே  சில காலங்கள் தங்கியிருந்து செல்ல வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் மனமாரச் சொல்வாரம். இப்படிப் பல வித்துவான்களைப் பாராட்டி ஆதரித்து கலையும், இலக்கியமும், சைவமும், தமிழும் வளர சுப்பிரமணிய தேசிகர் ஆதரவளித்திருக்கின்றார் என்ற விஷயங்களை என் சரித்திரம் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய புரவலர்கள் பலரது ஆதரவினால் பல கல்வி மான்கள் உருவாகும் நிலையும், கல்வியும் ஞானமும் நிலைத்து செழித்தும் வளரும் நிலையும் அமைந்திருந்தது என்பதையும் கூட நன்கு உணர முடிகின்றது.


ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்

தொடரும்...

சுபா

1 comment:

  1. திருவாவடுதுறை மடத்தை பற்றியும் மடாதிபதி அவர்களின் நித்ய கடமைகளையும் இதனை விபரமாக நமக்கு தெரிவிக்கும் பசுபதிக்கு நாம் எல்லோரும் மிகவும் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம். அவர் தமிழுக்கு ஆற்றும் தொண்டு மென் மேலும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதே என் பிரார்த்தனை

    ReplyDelete