Friday, July 18, 2025

கிரேக்க இறுதி ஊர்வலம்

 


கடந்த வாரம் காலமான எனது அண்டை வீட்டுக்காரர் கிரேக்க நண்பரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. நானும் சென்று வந்தேன். அது புது அனுபவமாக இருந்தது. 


லியோன்பெர்க் நகருக்கு அருகிலேயே நகருக்கு சற்று வெளியே இருக்கிறது கல்லறை தோட்டம். ஐரோப்பாவில் கல்லறைத் தோட்டம் என்பது பொதுவாகவே விரிவாக மிக அழகாக நேர்த்தியாக ஒரு பூங்காவை போல பாதுகாக்கப்படும் ஓர் இடமாக இருக்கும். அதேபோலத்தான் இந்தக் கல்லறை தோட்டமும். 


கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ முறையில் தான் இந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது. பொதுவாக இங்கு இறுதிச்சடங்கிற்குச் செல்பவர்கள் முழுமையாக கருப்பு நிற உடை அணிந்து செல்வது வழக்கம். கையில் வெள்ளை நிற ரோஜாப்பூ அல்லது வெள்ளை நிறத்தில்  ஏதாவது மலர்களைக் கொண்டு செல்வதும் வழக்கம். நானும் வெள்ளை ரோஜாக்களை வாங்கிக் கொண்டு சென்றிருந்தேன். 

நிகழ்ச்சி தொடங்கியவுடன் முழுமையும் கருப்பு உடையில் மேல் சட்டை பாவாடை போன்ற ஓர் உடை அணிந்து பாதிரியார் வழிபாட்டு பாடல்களைப் பாடத் தொடங்கினார். சவப்பெட்டி அருகில் வைக்கப்பட்டிருந்தது. 


கல்லறைத் தோட்டத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பக்கம் முழுவதும் உறவினர்கள் மறுபுறம் நண்பர்கள் என்ற வகையில் பிரித்து வைத்திருந்தார்கள். 


வந்திருந்தவர்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் கிரேக்கர்கள். ஏனையோர் ஜெர்மானியர், மற்ற பிற இனத்தவர்கள். 


45 நிமிடம் வாழ்த்து துதி பாடல்களைப் பாடி முடித்த பின்னர் சவப்பெட்டியை ராஜ மரியாதை போல ஆறு பேர் கொண்ட குழு சிறிய தேர் போன்ற  கையால் இழுத்துச் செல்லும் வண்டி ஒன்றில் வைத்து கல்லறை தோட்டத்தில் இழுத்துச் சென்றது. அவர்களும் தொப்பியும் கருப்பு நிற கோட்டும் சூட்டும் என அணிந்திருந்தார்கள். கல்லறைத் தோட்டம் மிகப்பெரியது என்பது நடந்து சென்ற போதுதான் தெரிந்தது. 

ஏறக்குறைய 10 நிமிடம் நடந்த பிறகு அவருக்கென்று வாங்கப்பட்ட ஒரு பகுதி இருந்தது. அப்பகுதி ஏற்கனவே நீள் சதுர வடிவில் வெட்டப்பட்டு குழி தோண்டப்பட்டு கருப்பு நிறத்தாலான ஒருவகை துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 


பொதுவாக ஜெர்மனிய இறுதிச் சடங்குகளில் யாரும் அழுவதில்லை. கண்ணீர் வந்தாலும் மெதுவாக அதனை துடைத்துக் கொண்டு அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்மணிகள் மட்டும் மனைவியும் மகளும் மட்டும் கதறி அழுதார்கள்.


அந்தப் பகுதிக்கு வந்த பின்னரும் மீண்டும் பாதிரியார் கிரேக்க மொழியில் அமைந்த துதி பாடல்களைப் பாடத் தொடங்கினார்.


சவப்பெட்டியை குழிக்குள் செலுத்தி அதனை நேராக வைத்தார்கள்.

அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கையில் வைத்திருந்த மலரை குழிக்குள் போட்டுவிட்டு வாளியில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணை அதில் இருந்த ஒரு கரண்டியால் எடுத்து அந்த சவப்பெட்டி மேல் தூவினார்கள். வரிசையில் நானும் நின்று எனது மரியாதையையும் செலுத்தினேன். 


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்தோருக்கு சிறிய தேநீர் விருந்து ஒன்றும் அங்கு ஏற்பாடாகியிருந்தது.  முதல் முறையாக ஒரு கிரேக்க இறுதி ஊர்வலத்தை நேரில் பார்த்த ஓர் அனுபவம் இது. 


இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஏறக்குறைய 200 பேர் வந்திருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களது செல்போனை எடுத்து புகைப்படம் ஒன்றும் எடுக்கவில்லை. 

  

ஒரு மனிதரின் இறுதிச்சடங்கு என்பது இயற்கையோடு அவர் இணைந்து கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்பதை இந்த நிகழ்ச்சி நேரில் உணர்த்தியது. உறவினர்களும் நண்பர்களும் சோகத்தோடு விடை கொடுத்தார்கள். அதில் போலி பந்தாக்கள் பெருமைகள் என்பதற்கெல்லாம் இடமில்லாமல் இறந்து போனவருக்கு மரியாதை செலுத்தி அவரை முறையாக மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.


-சுபா

18.7.2025

அப்துல் கலாம் நம்பிக்கை விருது 2025

 


அப்துல் கலாம் நம்பிக்கை விருது 2025. இது மனதிற்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கின்ற ஒரு விருது. தற்சமயம் ஜெர்மனியில் இருப்பதால் நான் இந்த விருதளிப்பு நிகழ்ச்சிக்கு நேரில் செல்ல இயலவில்லை. ஆயினும் என் அன்பிற்குரிய இணையர் முனைவர் கௌதம சன்னா அவர்களும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதால் எனக்கு வழங்கப்பட்ட விருதை அவர் பெற்றுக் கொள்ள முடிந்தது.


மகிழ்ச்சியான தருணம்.
- சுபா

Thursday, July 17, 2025

Dr.Kalaam visionary women of the year 2025 விருது

 


அப்துல் கலாம் அவர்களை 2003 ஆம் ஆண்டு நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று பாதுகாப்பு ஆவணப்படுத்தல் முயற்சிகளை பாராட்டி பேசினார். அப்போது இந்திய அரசு தொடங்கியிருந்த மில்லியன் நூல்கள் மின்னாக்கத் திட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையுய் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததன் பேரில் நூறு பழம் நூல்களை முதல் கட்டப் பணியாக நானும் நா. கண்ணனும் திட்டமிட்டு செயல்படுத்தினோம் என்பது இன்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.


இன்று சென்னையில் எனக்கு அப்துல் கலாம் அவர்கள் நினைவாக அவரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெய்தேன் புரொடக்ஷன் ஏற்பாட்டில் நடைபெறும் விருதளிப்பு விழாவில் Dr.Kalaam visionary women of the year 2025 விருது எனக்கு வழங்கப்படுகிறது. நேரில் கலந்து கொள்ள என்னால் இயலவில்லை. ஆயினும் டாக்டர் கலாம் அவர்களது பெயரில் வழங்கப்படும் இந்த விருது மனதிற்குப் பெருமை அளிக்கிறது.
-சுபா
27.7.2025

Saturday, July 12, 2025

ஃப்ராங்பர்ட் இந்திய தூதரகத்தில்

 ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்பர்ட் இந்திய தூதரகத்தில் கோன்சுலேட் ஜெனரல் திரு முபாரக் அவர்களுடன் ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. நமது பதிப்பகத்தின் வெளியீடான "மக்கள் வரலாறு தொகுதி 1" நூலை அன்பளிப்பு செய்தோம்.
















Friday, July 11, 2025

எளிய இனிய திருமணம்

 என் இனிய தோழி கட்டலினாவுக்குத் திருமணம் லியோன்பெர்க் கிராமத்து நகரான்மைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.



ஏறக்குறைய 20 பேர் கலந்து கொண்ட எளிமையான அழகான ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்தது. கட்டலினாவின் இரண்டு குழந்தைகளும் வளர்ந்தவர்கள். பொறியியலாளராகவும், ரியல் எஸ்டேட் நிபுணராகவும் இருவரும் பணிபுரிகிறார்கள். குழந்தைகளும் அவர்களது வாழ்க்கைத் துணையும் மற்றும் கட்டலினா- ஃபிராங்க் இருவரின் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வாக இது அமைந்தது.

 

வாழ்க்கையில் இணையர் இருவரும் தோழர்களாகவும் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் பாசத்துடனும் வாழ்க்கை பயணத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் திருமணத்தை நிகழ்த்தி வைத்த நகரான்மை கழக அதிகாரி சிறிய உரையை ஆற்றி தம்பதியர் தங்கள் ஒப்புதலை கொடுத்து கையப்பமிட்டு பின்னர் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர்.


மகிழ்ச்சியான, அதே வேளை எளிமையான திருமணமா






க மதிய உணவு விருந்தோடு இத்திருமண விழா நடைபெற்ற முடிந்தது.  நானும் இணையர்களை வாழ்த்தி பரிசளித்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.



Tuesday, July 8, 2025

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் திரைப்படங்களில் வில்லன்கள்


 

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் திரைப்படங்களில் வில்லன்களாகக் காட்ட வேண்டும் என்றால் ரஷ்யா தான் பின்னணியில் அனைத்து வில்லங்கமான விஷயங்களையும் செய்வதாக திரைப்படத்தை அமைப்பார்கள்.

இதில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்து சீனாவையும் வில்லனாக இணைத்துக் கொள்ளும் போக்கு அமெரிக்க பிரிட்டிஷ் திரைப்படங்களில் தொடங்கியது. தற்சமயம் இந்த ட்ரெண்ட் வலுவாக உருவாகி வருகிறது.
Red Eye என்ற பெயரில் netflix series ஒன்று அண்மையில் பார்த்தேன். அதில் சீனாகாரர்களை வில்லன்களாக சித்தரித்து படம் முழுக்க ஓட்டிவிட்டு இறுதியில் கதையை மாற்றி வேறு வகையாக முடித்து விட்டார்கள்.
அமெரிக்க பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் மட்டுமே திரைப்படங்களில் நல்லவர்கள் வல்லவர்கள். 🙂
இந்தப் புகைப்படத்திற்கும் இந்த சிந்தனைக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா.. ஒன்றுமில்லை. 🙂
சென்ற வார இறுதியில் Schwabisch Hall நகரில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம். அவ்வளவு தான்.
-சுபா